Sunday, March 8, 2015

மீனு வாங்கலையோ மீனு !! - பகுதி II


வணக்கம் நண்பர்களே !!

வாளை மீன் பார்த்தாச்சு ; இன்னைக்கு அயிரை மீன் ; சாரதா மெஸ் அயிரை மீன் குழம்பை நினைச்சுட்டே இதப் படிச்சுருங்க ; ஐங்குறுநூறுல ஒரே ஒரு பாட்டுலதான் அயிரை மீன் வருது, சிறுவெண் காக்கைப் பத்துல வர பாடல் எண் 164. அது என்னடா வெண் காக்கை ? கடற்கரை அருகிலோ, பெரிய நீர் நிலை அருகிலோ காணப்படும் ஒரு விதமான பறவையினம். கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழும். மீன்தான் பிரதான உணவு, நீரினுள் மூழ்கி மீன் பிடிக்கும். நீர்க்கோழி என்றும் அழைப்பர் இதனை. வெள்ளை காக்கானு பேரு இருந்தாலும் கருப்புத்தான் நிறம். இது வர பத்து பாட்டைத் தொகுக்கும் போது சிறுவெண் காக்கைப் பத்து பெயரிட்டனர். அதுதான் சிறுவெண் காக்கைப் பத்து.

"பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை யாரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு டமையா தலர்பயந் தன்றே!"


துறை: தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைவன் பரத்தையின் மீது நாட்டம் கொண்டு
அதனாலே மனம் வாடி நலன் அழிந்த தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.

பொருள் : பெருங் கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள அயிரை மீன்களைப் பற்றி உண்ணுகின்ற குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவன் தலைவன். அவன் தகுதியானது, நம்மை நலிந்து வாடி நலனழியச் செய்தலோடும் நில்லாதே ஊரிடத்தும் அவர் பயப்பதாக ஆயிற்றே!. அதாவது தலைவனின் செயலால் நம்மை வாடிவருந்தி நலனழியச் செய்த்தோடும் நில்லாது, அவன் ஒழுக்கம் ஊரும் அறிந்ததாய், பழித்துப் பேசும் பேச்சினையும் தந்துவிட்டதே, தன் துயரைத் தாங்கியதே போதும், பிறர் பழிப்பேச்சை நினைந்து வருந்தும் நிலையும் வந்து விட்டதே என மனவேதனை கொள்கிறாள் தலைவி. இது straight meaning.

மேல சொன்ன மாதிரி சிறுவெண் காக்கை பெரிய கடற்கரை பக்கத்துல இருக்கும். அப்பிடி இருந்தும் பெரிய பெரிய கடல் மீன்களை பிடிச்சு
சாப்பிடாம அங்க இருக்க தண்ணி தேங்கி நிற்கும் கருங்கழிப் பாங்கிலேயுள்ள சிறுமீன்களாகிய அயிரைகளைப் (சேத்து மீன் ) பற்றித் தின்னும் வெண் காக்கைனு சொன்னதால நல்ல தகுதியுடைய, விரும்பத்தக்க தலைவி இருக்கும் அவளை விட்டு தனக்கு நிகரில்லாத பரத்தையையே அவன் விரும்பித் திரிந்தான். இதுக்குப் பேருதான் உள்ளுறை உவமம். உரிப் பொருள் புரிந்தது படித்தால்தான் புரியும் ; சங்கப் பாடலின் இன்பமே இதுதான்.


அப்பிடியே இந்த இறால் மீனையும் பாத்துரலாம் ; 3 பாட்டுல வருது ; முதல் பாட்டு தொண்டிப் பத்துல வர 179ஆவது பாட்டு ; அது என்ன தொண்டிப் பத்து? பாண்டியர்க்குக் கொற்கையும், சோழர்க்குப் புகாரும் போன்று, சேரர்க்குரிய புகழ் பெற்ற கடற்கரைப் பேரூராக அந்நாளிலே விளங்கியது தொண்டிப் பட்டினமாகும். இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும் தொண்டியினை உவமையாக எடுத்துக் கூறுவதால் இதற்கு தொண்டிப் பத்துனு பேர் ;

"நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே,
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே."

துறை: குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரவு கடாயது.

முதல்ல குறினா என்ன ? வேற ஓரு பதிவுல களவு , கற்பு பத்தி சொல்லி இருக்கேன் ; களவு என்பது தலைவனும், தலைவியும் ஊர் அறியாமல் காதல் கொள்வது. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் காதலை எப்பிடி வளர்ப்பது ?? ஆனால் இந்த காதல் யாருக்கும் தெரியாது ; தோழியும் , தோழனும் மட்டுமே அறிவார்கள் ; அவர்கள் உதவியுடனே சந்திப்பு நிகழ முடியும் ; இருவரும் பகல் பொழுதில் சந்திக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பர். இரவில் சந்திக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பர். அதுவே பகற் குறி மற்றும் இரவுக் குறி ; பகற் குறி பெரும்பாலும் மக்கள் நடமாடாத இடமகா இருக்கும் ; இரவுக் குறி லைவியின் வீட்டருகில் இருக்கும்.தலைவி சென்று வர ஏதுவாக; அப்பிடி பகற் குறியீடத்தே கூடி மகிழும் காதலர் இருவர். தலைவனும் பிரியா விடை கொண்டு பிரிகின்றான். பிரிந்து போகும் அவனைத் தனியே வழியில் எதிர்ப்படும் தோழி, விரைவிலே அவர்கள் மணத்துக்கு முயலுமாறு வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.

நளி = பெருமை; நல்குமதி = விரைந்து மணங்கொண்டு அருள்வாயாக ; அலவன் = நண்டு ; பிறழும் = துயருற்றுப் புரளும் ; இன்னொலி = இனிய இசையொலிகள்.

பெருநீரான கடலின் கரையிடத்தோனாகிய சேர்ப்பனே! அலவன் தாக்குதலினாலே நீர்த்துறையிடத்தேயுள்ள இறால்மீன்கள் புரள்கின்றதும், இனிதான ஒலியைக் கொண்டதுமான தொண்டியின் எழில்போலும் இவளது சிறுநுதலின் அழகானது, நின்னைத் தன் அருகாமையிலேயே எப்போதும் பெறின் அல்லது இல்லையாகிப் போகும். அதனை யுணர்ந்து, நீயும் இவளுக்கு
அருளினையாய் வாழ்வாயாக!

ஒரு மாதிரி புரியதா ? அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும் ==> நண்டு, இறாலை தாக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை ; அப்பிடி இருந்தும் அது இறாலைத் தாக்கி அதற்குத் துன்பத்தைத் தருகிறது. அது மாதிரி , உங்கள் காதல் ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரிந்து விட்டது ; ஊர் மக்கள் எங்க அவசியமும் இல்லாமல் தலைவியை பழித் தூற்ற ஆரம்பித்து விட்டனர் ;உன்னுடன் இருக்கும் போது ஒளி வீசும் அவளது அழகிய சிறு கண்கள் (சிறு நுதலே) நீ சென்றததும் ஒளி மங்கிப் போவது போல ஆகி விடுகிறது ;
இத்தோடு நிறுத்தாமல் தலைவனை விரைந்து முடிவெடுக்கவைக்க, இது இப்பிடியே போனால் அவளே இல்லாமல் போய் விடுவாள், எனவே விரைந்து அவளை மணம் முடித்துக் கொள் என்று சொல்லும் பாடல் இது.

இதுல உள்ளறை ரொம்ப சுலபம் ; அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும் - இதுதான் ; நண்டுத் தாக்கியதால் துயரப்படும் இறால் ; இது straight meaning; உள்ளுறை ஊர் மக்களின் அலர் தலைவியைத் துயரப்படுத்துகிறது.


அடுத்தப் பாடல் 188ஆவது பாடல் ; இது நெய்தற் பத்து என்னும் பகுதியில் இருக்கும் பாடல் ; இந்த பத்துப் பாடல்களும் நெய்தல் திணைக்குரிய கருப் பொருள்களை கொண்டு பாடப்பட்டத்தால் இது நெய்தற் பத்து.

"இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரி துடைய காதலி கண்ணே."

துறை: விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன், தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு மகிழ்ந்து சொல்லியது.

இந்தத் துறை பற்றிய சிறிய விளக்கம் ; தலைவனுக்கு பரத்தையுடன் தொடர்பு ஏற்படுகிறது ; தலைவிக்கு தலைவன் மீது வருத்தமும் கோவமும் ; சிறிது காலம் சென்று தலைவனும் மனம் மாறி தலைவியிடம் திரும்ப எண்ணுகிறான் ; தலைவிக்கு பல முறை , பல வழியில் செய்தி அனுப்புகிறான். ஆனாலும் தலைவி அவனுக்கு வாயில் மறுக்கிறாள் (வீட்டுக்குள்ள விட மாட்டிங்குறா ). கடைசி முயற்சியாய் தலைவன் விருந்தினன் ஒருவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான் ; விருந்தோம்பல் மனைமாட்சியின் பண்பாயிற்றே ; தன் கோவத்தை உள்ளே மறைத்துக் கொண்டு வந்த விருந்தினனையும் , தலைவனையும் நன்கு உபசரிக்கிறாள் ; அது கண்டு வியந்த தலைவன், தலைவியின் குணம் கண்டு மகிழ்ந்து சொல்வாதாகப் பாடப்பட்ட பாடல் இது.

வைகறை = விடியல் ; தகை = தகுதிப்பாடு;

கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் பற்றியுண்ணும், கொற்கைக் கோமானது கொற்கை நகரத்தின் அழகிய பெரிய துறையிடத்தே, வைகறைப் போதிலே மலரும் நெய்தலைப் போல, எம் காதலியின் கண்கள், பெரிதான தகைமைகளைக் கொண்டன வாகுமே.

என்னலாம் சொல்லுறான் ?
1. வைகறை மலரும் நெய்தல் போல==> விடியலில் மலரும் நெய்தல் பூ போல பெரிய கண்ணையுடையவள் என் காதலி.
2. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை ==> அறத்திற்கு பெயர் பெற்ற பாண்டிய மன்னனின் கொற்கை நகரத்தில் மகளிரும் தம் மனையறத்திலே குறையாது இருப்பர். இவளும் அப்பிடித்தான் ;
3.இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும் ==> கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் (கடற்பறவை) பற்றியுண்ணும் ; முதல் இரண்டும் சரி ; இது எதுக்கு ? இனப்புள் அப்பிடின்னு சொல்லுது பாட்டு ; அந்தப் பறவைகள் கூட்டம் கூட்டமாக அங்கு இருக்கும் இறால் மீன்களைப் பிடித்து உண்ணும் ; அது போல நானும் பாணரோடு கூட்டமாகச் சென்று அழகிய பரத்தைகளை விரும்பிச் சேர்ந்தேன் (உள்ளுறை);

இதுலாம் எதுக்குச் சொல்லுறான் ? விருந்து வரக்கண்டதும் மகிழ்ந்த முகத்தோடு வரவேற்ற, தன்னைக் குறித்த இனத்தையும் வெறுப்பையும் உள்ளடக்கி இன்முகம் காட்டிய தலைவியின் கண்ணழகினை, கதிர்வர மலரும் நெய்தலோடு உவமித்துப் போற்றுகின்றான். தன்னை வெறுத்தாற் போன்ற குறிப்பு எதுவும் பார்வையிற் கூடக் காட்டாதே, தன்பால் அன்பும் கனிவுமே அவர்முன் காட்டிய அந்தச் அழகை வியப்பான்,'தகைபெரிதுடைய' என்றான். தான் அவட்குத் துயரிழைத்தாலும், அவள் தன் காதன்மையும் கடமையுணர்வும் மாறாதாள் என்பான், 'காதலி' என்றான். அவள் கோவம் விரைவில் போய் தன்னையும் ஒதுக்காது ஏற்றருள்வாள் என்று புரிந்து மனநிறைவாய் இவ்வாறு சொல்வாதாக பாடப்பட்ட பாடல் இது.


அடுத்த பாடல் 196ஆவது பாடல் ; இது வளைப் பத்து என்னும் பகுதியில் வருவது ; வளை = சங்கால் ஆன வளை ; மகளிர் வளை அணிதல் இயல்பான ஒன்றே ; காதலன் பிரிந்து சென்று இருக்கும் போது தலைவி உடல் மெலிந்து
கையிலிருந்து வளை கழன்று விழும் எனப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதில் உள்ள பத்துப் பாடல்களும் வளை, வளையொலியைக் காட்டிப் பாடப்பட்டுளாதால் இது வளைப் பத்து எனப்படுகிறது.

"கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ!"

துறை: குறை மறுக்கப்பட்ட தலைமகன், பின்னும் குறை வேண்டியவழித் தோழி சொல்லியது.

தலைவனும், தலைவியும் களவில் இருக்கிறார்கள் ; நீண்ட காலத்திற்குப் பின்னும் தலைவன் மணம் குறித்துப் பேசவோ , மணம் முடிக்க முயலவோ இல்லை. தலைவி வருத்தமுற்று தலைவனைச் சந்திக்க மறுக்கிறாள்.அந்தக் குறையை தலைவன் அவளின் தோழியிடம் கூறி அவளைச் சந்திக்க வருமாறு கூறுகிறாள். அதற்கு தோழி, இனி களவுக்குத் துணை போக முடியாது விரைந்து நீ அவளை மணமுடிக்க முயற்சி செய் எனக் கூறிவிட்டாள்; ஆனாலும் தலைவன் விடவில்லை. மீண்டும் தோழியைக் கண்டு தலைவியைச் சந்திக்க வருமாறு கூறுகிறாள் ; அதற்கு தோழி கூறும் பதிலே இந்தத் துறை.

சங்கை அறுத்துச் செய்த ஒளியுடைய வளைவினையும், கொழுவிய பலவான கூந்தலையும், பொருத்தம் ஆய்ந்து அணிந்த தோளின் தொடியினையும் உடைய மடவரலான அவளை அடைதற்கு விரும்புகின்றனையானால், தெளிந்த நீருள்ள கழியிடத்தே சிறந்த இறா மீன்கள் அகப்படும் குளிர்ந்த கடல் நிலச் சேர்ப்பனே! இவளை வரைவொடு வந்தனையாகி மணங்கொள்ளுலை உடனே செய்வாயாக !. இதுதான் பாடலின் உரை ;

சிரமம் ஒன்னும் இல்லை ; துறை விளக்கத்தையும், பாடலின் உறையும் சேர்த்துப் படித்துப் பாருங்க ; தோழி கொஞ்சம் கோவமாகக் கூறுகிறாள் ; அனால் அவள் நோக்கம் இதைக் கேட்ட தலைவன் விரைந்து உறவினர் சூழ தலைவியைப் பெண் கேட்டு வந்து மணம் முடிக்கம் வேண்டும் என்பதே ;


சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன் ; தலைவன் நெய்தல் நிலத் தலைவன். நெய்தல்= கடலும், கடல் சார்ந்த பகுதியும். இவன் இருக்கும் இடத்தில் இறால் மீன்கள் அதிகம் இருக்குதாம் ; தலைவி = கையில் வளை அணிந்து இருக்கிறாள் ; நீளமான கூந்தலை பலவாக முடிந்துருக்கிறாள் ; தோளில் தோடி என்னும் அணிகலன் அணிந்து இருக்கிறாள். தோழி என்ன சொல்லுறாள் ; இவ உனக்கு வேணும் என்றால் விரைந்து மணம் கொள் ; சும்மா களவிலேயே காலம் கடத்திக் கொண்டு இருக்காதே. இதுக்கும் இறாலுக்கும் என்ன சம்பந்தம் ? தெண்கழிச் சேயிறாப் படூஉம் = > உனக்கு நல்ல இறால் வேண்டும் என்றால் தெளிந்த நீரில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் பிடிக்க வேண்டும் ;அதுமாதிரி இவ உனக்கு வேண்டும்னா கொஞ்சம் சிரமப்பட்டாவது விரைவில் மணம் முடித்துக் கொள் ;

இனி நீங்க இறால் தொக்கு சாப்பிடப் போலாம் :) நான் மத்த மீன்களைப் பத்திப் படிக்கப் போறேன் ; அடுத்தப் பகுதியில் கெண்டை, வாரல் மீன் பற்றியப் பாடல்களைப் பாக்கலாம்.

நன்றி !
ஆசிப்




Tuesday, March 3, 2015

மீனு வாங்கலையோ மீனு !!

வணக்கம் நண்பர்களே !!

நான் ஒரு மீன் பிரியன் ; குழம்போ, பொறித்தோ, வறுத்தோ எப்பிடி இருந்தாலும் "நான் அப்பிடியே சாப்பிடுவேன்" :).  தாராபுரத்தில் இருக்கும் வரை மீன் மிக அரிதாகத்தான் கிடைக்கும் ; அதும் ஆற்று மீனோ , அணைக்கட்டு மீனோ மட்டுமே கிடைக்கும் ; ஜிலேபி கெண்டைனு ஒரு மீன் , ஏகப்பட்ட முள் இருக்கும். பெரும்பாலும்அதுதான் ; அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் இரண்டும் செய்வாங்க. சாப்பாடு ஆகும் முன்னமே சில பல மீன் வறுவல்கள் தனியா வயித்துக்குள உள்ள போகும் :). சென்னை வந்தப் பின் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி. எட்டுற தூரத்துல கடல், பொடி நடையா நடந்து போய் வித விதமான கடல் மீன்களை சாப்பிடலாம். நம் கண் முன்னவே மசாலாத் தடவி வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் ; வஞ்சிரம் , பாறை , இறால் , இன்னும் பல.. நானும் என் தோழி சுபாவும் அங்கு சாப்பிட்டக் கணக்கைப் பார்த்தால் யாரவாது ஒரு கடைக்காரர் இலட்சாதிபதி ஆகி இருப்பார் ; நாங்கள் இருவரும் சேர்ந்தது கடற்கரையில் மீன் மற்றும்
சென்னையின் அனேக இடங்களில் பிரியாணி சாப்பிட்டதை "வேலை தேடிய பொழுதுகள்" அப்பிடின்னு ஒரு படமே எடுக்கலாம் ; உணவுப் பிரியர்கள் நூறு நாட்கள் ஓட வைப்பார்கள் :)  அட, அமெரிக்கா வந்துத்தான் விட்டேனா நானு ? இங்க சென்னைய விட செம ஜோர் ; எதோ இன்னிக்கு வரை வீட்டம்மா புண்ணியத்துல அடிக்கடி நானும் மீனும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குது ;

இப்ப எதுக்கு இந்தக் கதைனா , சங்க இலக்கியத்துல என்ன என்ன மீன்கள் வருதுன்னு தேடிட்டு இருக்கும் போது தோன்றியதே மேற்கூறிய மலரும் நினைவுகள். எட்டுத் தொகையில் ஒண்ணு ஐங்குறுநூறு, மூன்று முதல் ஆறு அடி வரையிலுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை, என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார், என்னும் ஐவராவர். எல்லா சங்க இலக்கியப் பாடல்களும் முதல் , கருப் பொருள், உரி பொருள்களை அடிப்படையாக் கொண்டுப் பாடப்பட்டவையே. மீன் ஒரு உரி பொருள். அத ஐங்குறுநூறுல யார் யார், எந்த எந்த மீன்களை எப்பிடிலாம் பாடி இருக்காங்க சொல்லத்தான் இந்தப் பதிவு.

முதல்ல என்ன என்ன மீன்கள் ஐங்குறுநூறுல வருது அப்பிடின்னு பாத்துருவோம்.

அயிரை: ஆத்து மீனு , குளத்து மீனு அப்பிடின்னு யாரவது சொன்னா அது அயிரை மீனுதான் ; ரொம்ப பொடியா இருக்கும் ; சாப்பிட ரொம்ப வசதி ; முள் எடுக்கலாம் வேணாம் ; அப்பிடியே சாபிட்டுரலாம் ; சமையலும் சுலபம்தான் ; உப்பு போட்டு ரெண்டு தேய் தேய்ச்சு அப்பிடியே குழம்புல போட்டுறலாம் (மதுரை சாரதா மெஸ் ஸ்பெஷல் ).


இறால்: இறால் , இறவு, சேயிறா என்ற பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பெரிய மீசை, பெரிய கண், நல்ல நீர், கடல் நீர் இரண்டிலும் இருக்கும் ; சுத்தம் செய்ய கொஞ்சம் மெனக்கெடனும் ; முதல்ல தோல் நீக்கி, பின்னே முதுகில் இருக்கும் நரம்பை எடுக்க வேண்டும் ; அப்புறம் தொக்கு செய்து சாப்பிட வேண்டியதுதான் ;




வரால் / விரால் மீன் (Channa striata): நன்னீரில் வாழும் மீன் வகை. அயிரை போல இல்லாமல் பெரிய அளவு மீன். கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்தது. இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும். விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.

கெளுத்தி மீன் (கெடிற்று மீன்) (Cat Fish): நீரின் அடித்தளத்தில் வாழும் நன்னீர் மீன் வகை . இதைக் கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. வாய்கிட்ட பெரிய மீசை இருக்கும் ; அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படும் மீன் இது. சில இடங்களில் மிகப் பெரியதாக வளரும் ;

கெண்டை மீன் : தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படும் கெண்டை மீன்களில் பல வகைகள் [கட்லா (தோப்பா மீன், கங்கைக் கெண்டை), வெள்ளிக்கெண்டை,புற்கெண்டை,மிர்கால்,ரோகு] உண்டு. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். கெண்டைமீன் தனது மேலுதட்டின் மீதுள்ள, இரண்டு இணை குட்டைமீசைகளின் உதவியால், ஆற்றின் வண்டல் அடித்தளத்தின் மேல், இரை தேடியவாறு, அவசரமின்றி மெதுவாக நீந்தி கொண்டு இருக்கும்.

வாளை மீன் : அறிமுகம் ஏதும் தேவை இல்லை ; மாளவிகா ஆடின அதே வாள மீனுதான் ; நீளமா இருக்கும் ; கடல் மீன் ; சுத்தம் செய்து சமைக்குறது ரொம்ப கஷ்டம் ; மற்ற மீன்களைப் போல இல்லாமல் இது சிறிய மீன்களை உண்டு வாழும் மீனாகும்.

கயல் மீன் (Grey Mullet) : வயலில் வாழும் மீன் ; காவிரி நீருக்கு எந்தத் தடையும் இல்லாத காரணத்தால் சோழ நாட்டு வயல்களில் நீர் எப்போதும் நிறைந்த நிலையிலேயே இருந்தன. அதனால் ஆற்று மீனும், குளத்து மீனும் வாழ்ந்து செழித்த இடம் நீர் நிறைந்த வயல்களேயாகும். பெண்களின் கண்கள் பற்றி பாடல் வரும் போதெல்லாம் அங்கு கயல் மீன்களே வரும்.

மீன் சமையல் குறிப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் பாத்தாச்சு ; கொஞ்சம் ஐங்குறுநூறு பாட்டையும் பார்ப்போம் ; முதல்ல வாளை மீன் ; ஒரே ஒரு பாட்டுலதான் வாளை மீன் வருது ;

ஐங்குறுநூறுல இருக்கு "கிழத்திகூற்றுப் பத்துல" இருக்க பாட்டு இது:

"பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!"

துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. அதாவது , பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் கோவித்துக் கொண்டு கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.

பள்ளி = வாழும் இடம் ; நாளிரை = அந்நாளுக்கான இரை ; துன்னல்= பொருந்தத் தழுவல். பிறர் = உரிமையற்றவரான பரத்தையர்.

பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், மீன் நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே (தழுவி அணைக்க) மாட்டோம்!

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு பழக்கிக் கொண்ட ஒருவகைப் விலங்கு. (இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது). வாளைமீன் இதற்கு விருப்புணவு.

நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் செல்கிறாய். காதல் செய்யும் போது உனக்கு இருந்த அக்கறை திருமணத்திற்கு பின் நான் என்ன ஆனால் என்ன (எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து) என்பதாக மாறி விட்டது.

இதுல சில நுட்ப்பமான கருத்துக்கள் உண்டு ; கொஞ்சம் மெதுவா இரண்டு முறை படித்தால் புரியும்.

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் => ஒரு நீர் நாய், அது குளத்திற்கு அருகில் வசித்து வருகிறது ; முதல்ல நல்லாத்தான் இருக்கு ; ஆனா ஒரு நாள் ஒரு வாளை மீனைச் சாப்பிட்டதும், அந்த மீன் நாற்றம் பிடித்துப் போய், தினம் தினம் அந்த நாற்றத்தையே தேடிப் போய் உண்கிறது; அது போல தலைவன் முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே தினம் ஒரு பரத்தையைத் தேடிச் செல்கிறான்.

நாலே வரில எப்பிடிப் போட்டு வாங்குறாங்க பாருங்க ;
அதுதான் சங்கப் பாட்டு ;

மற்ற மீன்களை நாளைப் பார்க்கலாம் ; உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிடு போங்க ;

நன்றி,
ஆசிப்