Monday, June 15, 2015

என்னவளே..அடி என்னவளே

என்னவளே..அடி என்னவளே...

இன்றோடு எங்கள் திருமண வாழ்வின் ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு தொடங்குகிறது. திரும்பிப் பார்த்தால் எங்கே/எப்படிப் போனது என்ற கேள்விதான் வருகிறது. 2008 மார்ச்சில் பார்த்து, ஏப்ரலில் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் 15 அன்று கோவையில் நடந்தது எங்கள் திருமணம். அன்று முதல் இன்று வரை சிறிய/பெரிய பகிர்வுகள், மகிழ்ச்சியான பல நிகழ்வுகள், அனீக் & அயான், ஊர் சுற்றல்கள், கோபம் கொப்பளிக்கும் பல சண்டைகள் மற்றும் அதன் பிறகான குரலை மௌனித்துக் கொண்டு செய்யும் சமாதான முயற்சிகள் எனச்  சொல்லிக்கொண்டே போகலாம்.


இங்க இதை நான் சொல்லியே ஆகனும் (ஆமா, சூரியாவேதான் )..
எங்கள் இருவர்க்கும் ஒத்த ரசனைகள் என்பதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறன். ஆனாலும் மகிழ்ச்சியாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்கை..

நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன், எதுக்கு புக் வாங்கி இடத்தை அடைக்கிற -> இது அவள். (திருமணத்திற்கு முன் நான் கொடுத்த Message In a Bottle  இன்னும் படிக்கவில்லையெனக் கேள்வி ), நான் மெலடி , அவள் டங்கா மாரி ; எனக்கு ஹோட்டல் சென்று வித விதமாய் சாப்பிடப் பிடிக்கும் அவள் -> I only eat Indian food ; எனக்கு தமிழ் சினிமா, அவளுக்கு ஹிந்தி சினிமா ;எதுவும் perfect-ஆக இருக்க வேண்டும் அவளுக்கு, எனக்கு எங்கயாவது இருந்தால் சரி (கொஞ்சம் சோம்பேறி நான்) ; கிடைக்கும் நேரத்தில் தூங்கலாமா நான்? அப்போ வேற பண்ணலாம் அவள் ; சிறிய பயணமோ, இந்தியா பயணமோ ஒரு மாதத் திட்டமிடல், ஷாப்பிங், packing  என checklist போட்டு மிகச் சரியாய் செய்பவள் அவள். நான்லாம் ஆபீஸ் போயிட்டு ஹி..ஹி மொபைல வீட்டுல வைச்சுட்டேன் என்பேன், டிபன் பாக்சை ஆபீஸிலோ/ ட்ரைனிலோ விட்டு விட்டு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வேன் ; ஓவ்வொரு முறையும் வெளியூர் பயணத்தின் போது ஹோட்டல் அறைக்கு தலைவலியுடன் திரும்பி வரும் போது, எனக்குத் தெரியும் அதுதான் மாத்திரை எடுத்து வைத்தேன் உன்னோட பெட்டில என்பாள். சிறிய பிரச்சனை - சளி பிடித்துக் கொண்டு விக்ஸ் தேடிக்கொண்டு இருப்பேன் இந்தியாவில் இருந்து அந்த செல்பில் கிரே டப்பாவில் இருக்கு எடுத்துக்கோ என்று கேசுவலாகச் சொல்வாள். அப்பிடி ஒரு பெர்பெக்ட்..பசங்க விசயத்தில் ரொம்பக் காறார் , நான் நிறைய செல்லம் கொடுப்பேன். உன்னால்தான் பசங்க கேட்டுப் போறாங்க என்பது எனக்கு அடிக்கொருமுறை கிடைக்கும் பாராட்டு.

அனீக்கின் படிப்பு, குமான், நீச்சல் இன்னபிற முயற்சிகளுக்கும்/வெற்றிக்கும் நிச்சயம் ஷபனாதான் காரணம்.  வாரநாட்களில் பசங்களைத் தயார் செய்து பள்ளியில் விட்டு என்னை மெட்ரோ ஸ்டேஷனில் விட்டு மாலை வகுப்புக்கு அழைத்துச் சென்று, என பல நூறு வேலைகளைச்  செய்தாலும் வாக்கிங், ஜிம் என ஆரோயோக்கியசாமியாக இருப்பாள் (நான் நாள் முழுவதும் உட்கார்ந்துவிட்டு ரொம்ப tired என அலுத்துக் கொள்வேன்.). வார இறுதியில் பாஸ்கெட்பால் விளையாடக் கூட்டிப் போவது மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டது.

பல்வேறு ஆசைகள், கனவுகள் உண்டு அவளுக்கு..ஆனாலும் அது வேண்டும், இதை வாங்கு என்றேல்லாம்  கேட்பது இல்லை..ஆசையாய் ஏதேனும் வாங்குவாள், இரண்டு நாள் போனதும், இல்லை எனக்கு வேண்டாம் எனத் திருப்பிக்கொடுத்து விடுவாள். சரியான பட்ஜெட் பத்மாவதி :)). பசங்க விசயத்தில் மட்டும் சமரசம் கிடையாது.

ஆபீசிலிருந்து பேசும் போது ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க என்ற கேள்விக்கு,  அங்க இருந்து என் முகம் உனக்கு எப்பிடித் தெரியும் எனக் கேட்டால் அதுதான் உன் குரலே சொல்லுதே என பதில் வரும். ஏதேனும் யோசித்துக் கொண்டிருத்தால் என்ன யோசிச்சிட்டே இருக்க? எதுனா பிரச்னையா ? என்ன ஹெல்ப் வேணும் ? என வரிசையாக் கேள்வி வரும். எப்பிடித்தான் கண்டுபிடித்து விடுகிறார்களோ !!

தி.மு பல்வேறு கனவுகளுடன் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து கூட்டுக்குள் அடைத்து விட்டேனோ என அடிக்கடி நினைப்பதுண்டு. அவள் அது பற்றிலாம் கவலை இல்லாமல் தனக்கென்று நண்பர் குழு அமைத்துக் கொண்டு சுகந்திராமய் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே  சொல்லுவாள். Surely she is an independent..நான்தான் ரொம்ப dependent.. அவளின்றி ஒரு வேலையும் ஓடாது என்றே நினைக்கிறேன். வாழ்க்கையின் இறுதியில் நான் அவளுக்கு முன்னே போய் விடவேண்டும் என்ற சுயநலச் சிந்தனையும் உண்டு.

இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து  இந்தப் பதிவைப் பார்க்கும் போதாவது நான் கொஞ்சம் மாறி இன்னும் equal partner ஆகவேண்டும் என்பதே என் ஆசை. அவள் கெட்டிக்காரி, சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாள். நாங்கள் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்போம் வரும் காலங்களில்...

அன்புடன்,
ஆசிப்.

Wednesday, June 3, 2015

ஒர் பாடலும் 99 பூக்களும்

                        ஒர் பாடலும் 99 பூக்களும்

சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப்பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்டது. அது ஆற்றுப்படையோ, மதுரைக் காஞ்சியோ, இல்லை பட்டினப் பாலையோ. ஆனால் இந்தக் குறிஞ்சிப் பாட்டு மட்டும் தமிழ் மொழியின் சிறப்பைக் காட்டுவதற்காகப் பாடப்பட்டது. குறிஞ்சிப் பாட்டுன்னு தலைப்பிலேயே இருப்பது போல இது குறிஞ்சித் திணையில் பாடப்பட்டது. குறிஞ்சித் திணை என்றால் தலைவன், தலைவி கூடி காதல் இன்பம் கொள்வது. இதைப் பாடியவர் "குறிஞ்சிக்கோர் கபிலர்" என்ற சிறப்பு பெயருடைய கபிலர்.

ஏன் பாடினார் என்றால், பிரகத்தன் என்னும் ஒரு ஆரிய மன்னன். சங்கத் தமிழ் வாழ்வியல் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாமல் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் இலக்கணம் கூறியவாறு பின்பற்றப்படுவதில்லை. பெயர்தான் களவு ஒழுக்கம் ஆனால் அது வெறும் திருட்டு வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவனின் எண்ணத்தை மாற்றவும், தமிழரின் களவு வாழ்க்கை கற்பில்தான் (திருமண வாழ்க்கை) முடியும் எனக் காட்டவும் கபிலர் பாடியதே குறிஞ்சிப் பாட்டு.


"பூவெல்லாம் கேட்டுப் பார்" படத்தில் சூரியா ஜோதிகாவிடம் நூறு வகையான பூக்களின் பெயரைச் சொல்வாரே அது போன்று இதில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை 35 அடிகளில் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனைதான். அந்தப் பாட்டைத்தான் நான் இங்கே காட்ட உள்ளேன். ஜோதிகாவும் (தலைவி), தோழிகளும் நெல்லைக் கொத்திக் கொண்டு போகாமலிருக்க பறவைகளை விரட்டிக் கொண்டிருகின்றனர். நல்ல மழை வேறு பெய்திருக்கிறது. அருகில் தெளிந்த நீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஓர் அருவி. மேகம் கருக்குது, மின்னல் சிரிக்குது, சாரல் அடிக்குது என்று பாடியவாறே அருவியில் குளித்த அவர்கள் அடுத்து பூக்களைச் சேகரித்து விளையாடுகிறார்கள். இதைச் சொல்ல வரும்போதுத்தான் அவர்கள் 99 வகையான பூக்களைச் சேகரித்ததாக கபிலர் பாடுகிறார்.



அந்தப் பாடல்:

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,                     (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,                       (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,                      (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,         (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,                             (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,                        (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,           (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,                            (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,                       (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,                             (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,                             (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,                   (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,                      (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,                  (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,                          (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை                         (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம்,                               (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,                            (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை,                         (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,                    (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,                               (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,           (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,           (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,                         (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,           (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,            (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,                          (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,                                    (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,                     (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,                                 (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,                                   (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,                         (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,                                (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,             (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,                 (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

பாடலை ரசித்துக் கொண்டே இன்னொரு முறை பாடல் பாடப்பட்ட களத்தை நினைத்துப் பாருங்கள். அருவியில் குளித்து முடித்தவர்கள் இத்தனை வகையானப் பூக்களைச் சேகரிக்கிறனர் எனில் அத்தனை வகையான மரங்களும், செடிகளும் அருகருகே நிறைந்த இயற்கைச் சூழலாக இருந்திருக்கிறது குறிஞ்சி நிலம். இன்றைய நிலையில் நாம் நூறு கிலோ மீட்டர் சுற்றினாலும் இத்தனை வகையான பூக்கள் கிடைக்குமா? எப்பேர்ப்பட்ட சூழலை நாம் இழந்திருக்கிறோம்/ அழித்திருக்கிறோம். “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதையை மெய்யாக்காமல்  வரும் தலைமுறை மிச்சம் இருக்கும் இயற்கைச் சூழலையும் அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொண்டு, இயற்கைச் சூழலைக் காப்போம்.               

நன்றி, 
ஆசிப்                      

Tuesday, June 2, 2015

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா

பதிப்புச் செம்மல் சி.வை. தா - மறக்கப்பட்ட தமிழ்த்தாத்தா 

வணக்கம் நண்பர்களே !!

பொதுவாய் ஒருவரைத் தாத்தா என்று அழைத்தால் அவர் தாய் வழித் தாத்தாவாகவோ இல்லை தந்தை வழித் தாத்தாவாகவோ இருப்பார். அப்பிடித் தாய்வழித் தாத்தாவான உ.வே.சா அவர்களை நாம் நன்கு அறிவோம். தந்தை வழித் தாத்தாவாய் இன்னொருவர் இருந்தார் அவரை நாம் யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக மறந்து விட்டோம். அவர்தாம் சி.வை. தாமோதரம் பிள்ளை.


இவரும் உ.வே.சா அவர்களைப் போலவே சுவடித் திரட்டி உ.வே.சாவிற்கு  முன்னவே அதனைப் பதிப்பித்தவர். பதிப்புச் செம்மல் என அழைக்கபடுபவர். இன்னும் சொல்லப் போனால்உ.வே.சா அவர்கள் சிந்தாமணியைப் பதிப்பில் கொண்டுவர ஊக்குவித்து அவர்க்குப் பதிப்புத் துறையை அறிமுகப் படுத்தியவர் சி.வை.தா அவர்கள்.இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

தாமோதரனார் யாழ்ப்பாணம் அருகேயுள்ள சிறுப்பிட்டி எனும் ஊரில் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு செப்டம்பர் 12, 1832 அன்று மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகியன கற்று பின்  கோப்பாய் எனும் ஊரில் இருந்த போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். அவரின் 21 வயதில் (1853 ஆம் ஆண்டு) நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.அதன்பின் சென்னை வந்த இவர் சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கானத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பிறகு சட்டம் படித்து வக்கீல், நீதிபதி போன்ற பதவிகளை வகித்தார்.

நாம் அன்னாரின் பதிப்புச் சாதனைக்கு வருவோம். அதே நேரத்தில் ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைஆய்வுசெய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து அவருடன் இணைந்து தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை ஆராய்ந்து அதனைப் பதிப்பித்தார். ஆங்கில மோகத்தின் காரணாமாய் தமிழ் நூல்கள் அருகி வருவதைக் கண்டு மனம் வெதும்பி தொல்காப்பியம் முழுக்க பதிப்பிக்க முனைந்தார்.

நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்தார். சொல்லும், பொருளும் பதித்த பிறகு தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரையைப் பதிப்பித்தார்.

அத்தோடு நில்லாமல்  வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), போன்ற பண்டைய இலக்கண நூல்களை உரையோடு பதிபித்தார்.

தொல்காப்பியத்தை (சொல், எழுத்து, பொருள்) முழுக்க பதிப்பித்து மக்களிடையே சேர்த்தது சி.வை.தா அவர்கள்தாம். அத்தோடு நில்லாமல் இன்னும் பல இலக்கண நூல்களைத் தேடிப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்கள் :


  • நீதிநெறி விளக்கம் (1953)
  • தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  • வீரசோழியம் (1881)
  • திருத்தணிகைப் புராணம்
  • இறையனார் அகப்பொருள்
  • தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  • கலித்தொகை
  • இலக்கண விளக்கம்
  • சூளாமணி
  • தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை


அன்னார் இயற்றிய நூல்கள்


  • கட்டளைக் கலித்துறை
  • சைவ மகத்துவம்
  • வசன சூளாமணி
  • நட்சத்திர மாலை
  • ஆறாம் வாசகப் புத்தகம்
  • ஏழாம் வாசகப் புத்தகம்
  • ஆதியாகம கீர்த்தனம்
  • விவிலிய விரோதம்
  • காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)


அந்தத் தாத்தா பழம் பெரும் இலக்கியங்களைத் தேடி பதிப்பித்தார் அதே போல இந்தத் தாத்தா தமிழரின் அடையாளமான பழம் பெரும் இலக்கணங்களைத் தேடி, ஆராய்ந்து பதிப்பித்தார். இது உ.வே.சாவின் சாதனைக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி,
ஆசிப்