Friday, April 29, 2016

இராவண காவியம் - 2 - தமிழகக் காண்டம் - தமிழகப் படலம்

இராவண காவியம் - 2 - தமிழகக் காண்டம் - தமிழகப் படலம்


இராவண காவியத்தில் முதல் காண்டம் - தமிழகக் காண்டம். இதில் தமிழகப் படலம் ,மக்கட்ப் படலம், தலைமக்கட்ப் படலம், ஒழுக்கப் படலம், தாய்மொழிப் படலம், கடல் கோட் படலம், இலங்கைப் படலம் என 7 படலங்கள் உள்ளன. முதல் படலமான தமிழகப் படலம் 97 பாடல்களுடன் தமிழத்தின் அமைப்பு, பெருவள நாடு, தென்பாலி நாடு, திராவிட நாடுகளின் எல்லைகளையும் அதில் அமைந்துள்ள ஐந்திணை நிலங்களின் வளங்களையும் கூறுகிறது. 

தமிழகம்:

பழந்தமிழ் காலத்தில் தமிழகம் இன்றுள்ளது போல குறிகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கவில்லை. வடக்கி பனி மலை (இமயம்) வரை விரிந்திருந்த தமிழகம் 
பின்னர் ஆரியர் வந்த பின் விந்திய மலையை வடக்கு எல்லையாகக்
கொண்டிருந்தது.தென் எல்லை, தென்கடல் நிலமாய் இருந்ததால் இன்றுள்ள குமரி முனைக்கு தெற்கே ஆயிரம் கல் தொலைவுக்கு மேல் நீண்டிருந்தது, கிழக்கில் வங்கக் கடலும், சாவகத் தீவுகளும் ஒரே நிலப் பரப்பாயிருந்தது. அட்தென்னிலத்தில் குமரி மலையும், பனி மலையும் ஓங்கி உயர்ந்திருந்தது.குமரி மலையில் குமரியாறும், பனி மலையில் பஃறுளியாறும் ஓடி அந்நிலப் பகுதியை வளமாக்கியிருந்தன. இந்த இரு ஆறுகளுக்கும் இடையே இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை அமைந்திருந்தது.

பெருவள நாடு:

குமரியாறுக்கும், பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட பகுதி பெருவள நாடு எனப்பட்டது. செழித்து இருந்தது. பெருவள நாடானது 1000 கல் தொலைவு அளவு பரப்புடையதாய் பெயருக்கேற்றார் போல பிற நாடுகள் செல்வம் கடன் கேட்க்கும் அளவிற்கு செல்வ வளம் தாங்கிய குமரி மலையைக் கொண்டிருந்தது. வின்முகிலில் மோதும் அளவு உயந்திருந்த அக்குமரி மலையிலிருந்து தோன்றிய குமரியாறு குமரி முனையிலிருந்து 200 கல் தொலைவுக்கு பாய்ந்து வளம் செய்து கொண்டிருந்ததது. குமரியாரிலிருந்து தெற்க்கே 500 கல் தொலைவில் மழை வளம் பெற்று பஃறுளி என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. 

ஏழ்குணகரை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குறும்பனை நாடு, ஏழ் தொங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு என 49 நாடுகளைக் கொண்டிருந்தது பெருவள நாடு. 

தென்பாலி நாடு:

பஃறுளி ஆறுக்கும், தென் கடலுக்கும் இடைப்பட்ட 500 தொலை கல் பரப்பளவில் பவழங்கள், முத்துக்கள், மற்றும் வளமான பொருட்களோடு இருந்த நாடு 
தென்பாலி நாடு ஆகும். இந்த மூன்று பகுதிகள் சேர்ந்ததே குமரிக் கண்டம் என அழைக்கப்பட்டது. 

திராவிடம்:

பெருவள நாட்டிற்கும், விந்திய மலைக்கும் இடையே உள்ள பகுதி 'திராவிடம்' என அழைக்கப்பட்டு அது தென்னகத்தின் வட எல்லையாக விளங்கியது. கோதாவரி, கிருட்டினா, பெண்ணை, பாலாறு, அகண்ட காவிரி, பாவனி, வையை, பொருநை போன்ற ஆறுகள் ஓடிய நாட்டில் மலை வளம், காட்டு வளம்,வயல்கள் நிறைந்த மருத நிலம், கடல் வளம் என அனைத்தும் செழிப்பாய் இருந்தன.

குறிஞ்சி:

மலையும் மலை சார்ந்த பகுதிகளும். அம்மலையில், பசுங் கிளி இனிய இசை பாட, அதைக்கேட்டு மயில் தோகை விரித்தாட, கிளைகளிலிருந்து குரங்குக் கூட்டம் மருண்டு பார்க்கும். மலையிலே பொழியும் மழை மிகுதியால் குளிர் வாட்டுவதனால் தத்தம் துணைவர்களோடு உயிர் மகிழும் வண்ணம் நள்ளிரவில் மெய்கலந்து உறவாடி இன்பமுற, அன்பு மிகு காதலர்கள் இருக்கும் இடமாய் இருந்தது.

முல்லை:

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். மைனாவும் குயில்களும் அழகிய சிறகுகள் உடைய வண்டுகளும் பரவும் இசை ஒலிக்க, மா, பலா, வாழை 
ஆகிய முக்கனிகளும், தேனும் தரும் இனிமையை நல்கிப் புகழ் பெறும் காட்டு இடையர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகிய மூன்று குழல்களினால் இசைத்து மேய்கின்ற பசுக் கூட்டங்கள் அனைத்தையும் ஒன்றாய் மேய்ப்பார்கள். கார் காலம் நெருங்க, மாலையில் காடு சென்ற தலைவர்களின் வரவினை எதிர்நோக்கி ஆயர் குலப் பெண்டிர் வீட்டின் முன்பகுதியில் இருந்து காத்திருக்கும் 
காட்சிகள் நிறைந்தாய் இருக்கும் முல்லை நிலம்.

பாலை: 

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்தது பாலை நிலம். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். அவ்வெப்பத்தில் ஆண் யானையின் தும்பிக்கையைப் பிடித்தவாறே பாதங்கள் வெப்பத்தால் பதை பதைப்ப பெண் யானை நடந்து வரும். இளைப்பாற இடம்மில்லாத சென்னாயின் இளங்குட்டி தன் தாயின் நிழலியே நிற்கும். புறாக் கூட்டம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பருக்கைக் கல்லை விழுங்கும். 

மருதம்:
வயலும், வயல் சார்ந்த இடமும். மலையிடை பிறந்த ஆறுகள் விளையும் நெல்லையும், கரும்பையும் காப்பாற்றும்.கால்வாய்க்கிடையில் காஞ்சி, வஞ்சி, மருதம் ஆகிய பூக்கள் பூத்து இருக்கும்.

கம்பன், "தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண் விழித்து நோக்கத்"-னு கோசல நாட்டு மருத நிலத்தைப் பாடியிருப்பான். அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலவரும், 

"சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல்
நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல்
தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும்
ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி யுழுநர் வாழ்வே
." ஆறு சீர் விருத்தத்தில் பாடியிருக்கிறார். 

வயலின் கண் சேற்றினை உழுது பண்படுத்துவர் ; அங்கே செந்நெல் விதைப்பர், நாற்று நடுவர், நாற்றின் நடுவே முளைத்த களைகளைக் களைவர். 
விளைத்து முற்றியபின் கதிர் அறுப்பர் ; தூற்று முடிகளைக் கட்டாகக் கட்டி அதனை சுமத்து செல்வர், பின் எருதுகளை விட்டுச் சுற்றிவரச் செய்து 
போரடித்து நெல்மணி சேர்ப்பர். 

நெய்தல்: 

கடலும் கடல் சார்ந்த இடமும். பொன் போன்ற நிறமுள்ள மலர் பூக்கும் தூய புன்னை மரங்கள் நிறைந்து கடற்கரையின் கண்ணே நீர்ப்பகுதியில் வலிய
முதலை நிறைந்து வாழும். உப்பங்கழியில் இணைபிரியாத வாழும் "மகன்றில்" என்னும் ஒருவகைப் நீர்ப்பறவை தன் துணையோடு தாழை மடலிலே அமர்ந்து 
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். 

(தொடரும்)

Wednesday, April 27, 2016

இராவண காவியம் - 1 - பாயிரம்:

இராவண காவியம் - 1 - பாயிரம்:

கமபனைப் போல் கடவுள் வாழ்த்துப் பாடாமல் தமிழ்த் தாயையும், தமிழகத்தையும், தமிழரையும், தமிழ் மொழிக்கு அரும் பணி செய்த புலவர்களையும்,வாழ்த்திவிட்டு காவியத் தோற்றம் பாடுகிறார் புலவர் குழந்தை. எந்த ஒரு காப்பியமும் உலகம் என்று தொடங்குவதே மரபு. அதன் படியே

"உலகம் ஊமையாய் உள்ள அக்காலையே 
பலகலைப் பயன் பாங்குறத் தங்கியே
இலகி இன்றுநான் எ. மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயை வாழ்த்துவாம்"

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்த பேச்சு மொழியில்லாமல் சைகை மொழியால் பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே பலவேறு கலைச் செல்வங்களோடு விளங்கி, இன்று பேசப்படும் மொழிகளுக்கெல்லாம் தலைமையாய் இருக்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

யாரும் வந்தேறிகள் இல்லை. திராவிட மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து பிறந்தவையே.

"கன்னடந் தெலுங்கந் துளுவம் புயல்
மன்னி மேவு மணிமலை யாளமாம்
பொன்னின் மேனி திரிந்து பொலிவறு
தன்னை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்."

பெண் ஒருத்தி நான்கு குழந்தைகளைப் பெற்ற பின்னும் அழகு குன்றாமல் இருப்பது போல தன்னிலிருந்து கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் எனப் பல மொழிகள் பிரிந்து வளர்ந்தாலும் தன் பொழிவு குறையாமல், தனக்குத் தானே நிகர் என விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

"இனித்த பாலினுந் தேனினும் இன்சுவைக்
கனித் தொகையினுங் கட்டிங் கரும்பினும் 
நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் 
தனித் தமிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்."

ஜாமூனை சக்கரைப் பாகில் போட்டப் பின்தான் இனிப்புச் சுவை வரும். அது போல பால், தேன், பழங்களைக் கலந்து சுவைதால்த்தான் இனிக்கும். ஆனால் தமிழை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும், பேசினாலே வாய் இனிக்கும். அந்தச் சிறப்பு வாய்ந்த தமிழன்னையைப் போற்றுவோம்.

அடுத்தப்படியாக தமிழகத்தை வாழ்த்தும் போது:

பண்டு நம்மவர் பாத்துப் பலவளங்
கண்டு சுற்றங் கலந்து கரவிலாது
உண்டு வாழ வுதவி யுலகவாந்
தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம்.

அன்றையத் தமிழகம் வடக்கே விந்திய மலையையும், தெற்கே இன்றுள்ள குமரிமுனையிலிருந்து 1000 கல் தொலைவு நீண்டும், கிழக்கில் வங்கக் கடலும்,சாவக முதலய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாயிருந்தது. தென்னிலத்தில் குமரிமலையும், பனி மலையும் ஓங்கி உயர்ந்திருந்தது. குமரி மலையில் குமரியாறும், பனி மலையில் பஃறுளியாரும் ஓடி அந்நிலத்தை வளமாக்கிக் கொண்டிருந்தன. குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட நிலம் பெறுவள நாடு.பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலி நாடு. பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. இக்குமரிக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதியே திராவிடம் எனப்பட்டது.

இவ்வளமான நாட்டில் பழந்த்தமிழர் ஒற்றுமையாய் சுற்றத்தோடு, பகுந்துண்டு, ஒளிவு மறைவு இல்லாமல் தாமும் இன்புற்று வாழ்ந்து பிறர் வாழவும் உதவி, உலக மக்கள் அனைவரும் தம்மை விரும்பும் வண்ணம் வாழ்ந்து வந்தனர். அந்தத் தண்டமிழகத்தை வாழ்த்துவோம்.

"நினைத்த நெஞ்சு நெகிழநந் தாயகம்
அனைத்தும் உண்டுநீ யாழியோ டாரியம்
இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள
தனித் தமிழகந் தாயினைப் போற்றுவாம்."

அத்துனை பெரிய தமிழகத்தை கொடிய கடல் உண்டது போல் ஆரியம் சூழ்ந்து விட்ட போதும், இப்போது இருக்கும் தனித் தமிழகத்தையும் வாழ்த்துவோம்.

தமிழ் மக்களை வாழ்த்துவோம்:

ஆரியம் புகுந்து தமிழர்களைத் தாழ்த்தி அடிமைப் படுத்திய போதும் தம் உரிமையை விடாமல் ஆரியத்தை எதிர்த்துப் போரிடும் தமிழரைப் போற்றுவோம் எனப் பாடுகிறார்.

"ஒழுக்க மென்பது உயிரினு மேலதன்
இழுக்கம் போல் இழிவில்லை யெனுஞ்சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்."

ஒழுக்கம் உயிரினும் மேல். அதைத் தவறுவது போல் வேறு இழிவு ஏதுமில்லை என்னும் வள்ளுவன் வாக்கினையே வாழ்வின் வழக்கமாக்கிக் கொண்ட தமிழரைப் போற்றுவோம்.

"குன்றும் ஆரியக் கொள்கை மறுத்தெதிர்
நின்று தாழ்ந்த நிலையினை எய்தியும்
குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா
வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம்."

இழிந்த ஆரியக் கோட்பாட்டை ஏற்க மறுத்து ஆரியர் சூழ்ச்சியால் தம் நிலை தாழ்ந்து நின்றாலும் ஆரிய எதிர்ப்புக் கொள்கையை சிறிதும் கைவிட்டு விடாத
தமிழ் மறவர்களை வாழ்த்துவோம்.

"கள்ள ரென்று மறவரென் றெள்ளுறு
பள்ள ரென்றும் பறைய ரென்றும்பழித்
தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா
மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம்."

ஆரியப் பார்ப்பனர்களால் கள்ளர், மறவர், பள்ளர், பறையர் என்று தமிழர்கள் பழிக்கப்பட்டு உள்ளம் நொந்து இருந்தாலும் தனக்கே உள்ள சிறப்பியல்புகளை விட்டு விடாமல் வாழ்கின்ற வீரர்களாகிய தமிழர்களை வாழ்த்துவோம்.

புலவரை வாழ்த்துமிடத்து தொல்காப்பியரையும் வள்ளுவரையும் வாழ்த்துகிறார்.

"கள்ளு கப்பக் கமழ்நறும் பூவினைப்
புள்ளு வக்குறல் போலமுப் பாலினை
உள்ளு வக்குற வொண்குறள் வாக்குறு
வள்ளு வப்பெரி யாரை வழுத்துவாம்."

தேனை விரும்பி மணம் கமழும் பூவினை தேனீக்கள் விரும்பி மகிழ்வது போல, அறம், பொருள், காமம் என்னும் முப்பாலினை, உள்ளம் உவக்கும் வகையில் ஒளி பொருந்திய குறள் வெண்பாவால் மொழிந்த திருவள்ளுவ பெரியாரை போற்றுவோம்.

காவியத் தோற்றம் : 

ஏன் இராவண காவியம் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக:

திருக்கு லாந்தமிழ் மக்களைத் தீக்குண
அரக்க ரென்றும் அஃறிணை யல்லவோர்
குரக்கி னமென்றுங் கூறிவான் மீகியும்
பரக்க நாத்தழும் பேறப் பழித்தனன்.

தமிழரை தீக் குணம் கொண்ட அரக்கரென்றும், குரங்கென்றும் என்று பரப்பி பழி உரைத்த ஆரியக் கூட்டம்.

"தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம் முழுப்பொய் அதைஎந் தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாம்என
அம்மவோ நம்பிடச் செய்து விட்டனன்."

தமிழனப் பகைவனான வால்மீகி  சொன்ன முழுப் பொய்யை, உண்மையான உயர்வான கதை என சிலர் நம்பும்படி காவியம் செய்து விட்டான் கம்பன்.

"கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென 
நம்பி அய்யகோ நந்தமிழ் மக்களும்
தம் பழம்பெருந் தாய்க்குல மக்களை
வெம் பகைபோல் வெறுத்திட லாயினர்."

கம்பன் செய்த பொய்க் காவியத்தை மெய் என நம்பிய நம் தமிழர்கள், பெருமைக்குரிய நம் பழந்த்தமிழ் மறக்குடி மக்களை கொடிய பகைவர் போல எண்ணி வெறுத்தனர்.

"அம் மயக்கம் அகன்று தமிழர்கள் 
தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல்
எம் இனத்தி னிருங்கட னாகுமால்."

அந்த மயக்கத்தை நீக்குவதொடு தமிழன தலைவனாகிய இராவணனின் பெருமையை உணரச் செய்து தமிழரின் நல்ல உள்ளத்தினை தெளிவடையச் செய்வதுமே நம் கடமையாகும்.

"கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென 
விரும்பி வாழுமெய் யாமை வெருவுற
அரும்பி யுண்மை யருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்."

இனிக்கும் கரும்பை கசக்கும் வேம்பாகவும், வேம்பை கரும்பாகவும் விரும்பி வாழும் தமிழரை அறியாமை விலக்கி தமிழர்கள் உண்மை அறிந்து மான வாழ்வு  வாழச் செய்வதே இக்காவியத்தின் நோக்கமாகும்.

(தொடரும்) 












Friday, April 22, 2016

இராவண காவியம் - முன்னுரை


இராவண காவியம் புலவர் குழந்தை அவர்களால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்தப்பட்டக் காப்பியம். 1946 இல் வெளிவந்த இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம்,பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு படைக்கப்பட்டது. அறிஞர் அண்ணா இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதியுள்ளார். அது எப்பிடி இராமயணத்திற்கு எதிராக இராவணனைத் தலைவனாகக் கொண்டு காப்பியம் படைக்கலாம் என்று சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியால் 1948 ஜூன் 2 - ஆம் தேதி விற்கவோ, வாங்கவோ, IPC 153 A & 295 A ஆகிய பிரிவுகளின்படி ஆட்சேபகர மான அம்சங்கள் இருப்பதாகத் தடை செய்ததது. பிரதிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.  
IPC 153A- மதம்,இனம்,பிறந்த இடம்,வாழுமிடம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பட்ட குழுக் களிடையே பகையை வளர்ப்பது. தண்டனை=3 ஆண்டுகள் சிறை. 
295ஏ- எந்த ஒரு பிரிவு மக்களின் மதத் தையோ, மத நம்பிக்கை களையோ இழிவுபடுத்தி, அவர்களின் மத உணர்வு களைப் புண்படுத்துவது. தண்டனை=3 ஆண்டுகள் சிறை.
பின் 1971-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் இத்தடை நீக்கப்பட்டு புதிய பதிப்பு வெளியாகியது.

எதற்கு இந்த 'இராவண காவியம்' என அண்ணா தன் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார். "இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது. இராமதாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது. சுருங்கக் கூறுமிடத்து இந்நூல், பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு;"

இராவண காவியத்தை புலவர் குழந்தை கம்ப இராமாயண அமைப்பிலேயே (காண்டம்/படலம்) எழுதியிருக்கார்.  








வெண்பாவிற்கு புகழேந்தி ; விருத்தத்திற்கு கம்பன் எனக் கூறுவார்களே, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலவர் குழந்தையும் பாடியுள்ளார்.

இராவண காவியத்தில் விருத்தம்: அறுசீர் விருத்தம் அறுசீர்க் கட்டளை விருத்தம் எழுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் கலி விருத்தம் வஞ்சி விருத்தம் பாயிரம் - இரண்டிலும் உண்டு. 

கம்பன் பாயிரம் பாடும் போது "உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்" எனக் கடவுளை வாழ்த்தித் தொடங்க.. குழந்தையோ 
"உலகம் ஊமையாய் உள்ள அக்காலையே 
பலகலைப் பயன் பாங்குறத் தங்கியே
இலகி இன்றுநான் எ. மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ்த் தாயை வாழ்த்துவாம்எனத் தமிழ்த் தாயை வாழ்த்தித் தொடங்குகிறார்.
கம்பன் நூல் கம்ப இராமாயணத்தின் நூல் வரலாறு சொல்லும் போது,

தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில் இந்த இராம கதையை இயற்றிய வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள் முதன்மையாராகியவரும் வாக்கிற் சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே தமிழ்ப் பாடல்களால் இந்த இராமாவதாரத்தை நான் சொல்கிறேன் எனக் கூற,

புலவரும் "காவியத் தோற்றம்" பகுதியில் ஏன் இராவண காவியம் எனக் கூறுகிறார். தமிழ் மக்களை தீக்குண அரக்கரென்றும், குரங்கென்றும் கூறிய வால்மீகி பொய்க் கதையை கம்பன் பரப்பியதால் நம் தமிழ் மக்கள் தன் பழம்பெருந்தாய்க்குல மக்களை பகையாய் எண்ணினர். அந்த மயக்கத்திலிருந்து நீக்கி நம்மினத் தலைவர் பெருமையை தெளிவு படுத்திக் காட்டவே இக்காப்பியம் என்கிறார்.

(தொடரும்)