Tuesday, March 3, 2015

மீனு வாங்கலையோ மீனு !!

வணக்கம் நண்பர்களே !!

நான் ஒரு மீன் பிரியன் ; குழம்போ, பொறித்தோ, வறுத்தோ எப்பிடி இருந்தாலும் "நான் அப்பிடியே சாப்பிடுவேன்" :).  தாராபுரத்தில் இருக்கும் வரை மீன் மிக அரிதாகத்தான் கிடைக்கும் ; அதும் ஆற்று மீனோ , அணைக்கட்டு மீனோ மட்டுமே கிடைக்கும் ; ஜிலேபி கெண்டைனு ஒரு மீன் , ஏகப்பட்ட முள் இருக்கும். பெரும்பாலும்அதுதான் ; அம்மா மீன் குழம்பு, மீன் வறுவல் இரண்டும் செய்வாங்க. சாப்பாடு ஆகும் முன்னமே சில பல மீன் வறுவல்கள் தனியா வயித்துக்குள உள்ள போகும் :). சென்னை வந்தப் பின் தங்கி இருந்தது திருவல்லிக்கேணி. எட்டுற தூரத்துல கடல், பொடி நடையா நடந்து போய் வித விதமான கடல் மீன்களை சாப்பிடலாம். நம் கண் முன்னவே மசாலாத் தடவி வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பார்கள் ; வஞ்சிரம் , பாறை , இறால் , இன்னும் பல.. நானும் என் தோழி சுபாவும் அங்கு சாப்பிட்டக் கணக்கைப் பார்த்தால் யாரவாது ஒரு கடைக்காரர் இலட்சாதிபதி ஆகி இருப்பார் ; நாங்கள் இருவரும் சேர்ந்தது கடற்கரையில் மீன் மற்றும்
சென்னையின் அனேக இடங்களில் பிரியாணி சாப்பிட்டதை "வேலை தேடிய பொழுதுகள்" அப்பிடின்னு ஒரு படமே எடுக்கலாம் ; உணவுப் பிரியர்கள் நூறு நாட்கள் ஓட வைப்பார்கள் :)  அட, அமெரிக்கா வந்துத்தான் விட்டேனா நானு ? இங்க சென்னைய விட செம ஜோர் ; எதோ இன்னிக்கு வரை வீட்டம்மா புண்ணியத்துல அடிக்கடி நானும் மீனும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்குது ;

இப்ப எதுக்கு இந்தக் கதைனா , சங்க இலக்கியத்துல என்ன என்ன மீன்கள் வருதுன்னு தேடிட்டு இருக்கும் போது தோன்றியதே மேற்கூறிய மலரும் நினைவுகள். எட்டுத் தொகையில் ஒண்ணு ஐங்குறுநூறு, மூன்று முதல் ஆறு அடி வரையிலுள்ள நானூறு பாடல்களைக் கொண்டது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை, என்ற வரிசையில் இதன் ஐந்து பகுதிகளும் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் முறையே ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார், என்னும் ஐவராவர். எல்லா சங்க இலக்கியப் பாடல்களும் முதல் , கருப் பொருள், உரி பொருள்களை அடிப்படையாக் கொண்டுப் பாடப்பட்டவையே. மீன் ஒரு உரி பொருள். அத ஐங்குறுநூறுல யார் யார், எந்த எந்த மீன்களை எப்பிடிலாம் பாடி இருக்காங்க சொல்லத்தான் இந்தப் பதிவு.

முதல்ல என்ன என்ன மீன்கள் ஐங்குறுநூறுல வருது அப்பிடின்னு பாத்துருவோம்.

அயிரை: ஆத்து மீனு , குளத்து மீனு அப்பிடின்னு யாரவது சொன்னா அது அயிரை மீனுதான் ; ரொம்ப பொடியா இருக்கும் ; சாப்பிட ரொம்ப வசதி ; முள் எடுக்கலாம் வேணாம் ; அப்பிடியே சாபிட்டுரலாம் ; சமையலும் சுலபம்தான் ; உப்பு போட்டு ரெண்டு தேய் தேய்ச்சு அப்பிடியே குழம்புல போட்டுறலாம் (மதுரை சாரதா மெஸ் ஸ்பெஷல் ).


இறால்: இறால் , இறவு, சேயிறா என்ற பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பெரிய மீசை, பெரிய கண், நல்ல நீர், கடல் நீர் இரண்டிலும் இருக்கும் ; சுத்தம் செய்ய கொஞ்சம் மெனக்கெடனும் ; முதல்ல தோல் நீக்கி, பின்னே முதுகில் இருக்கும் நரம்பை எடுக்க வேண்டும் ; அப்புறம் தொக்கு செய்து சாப்பிட வேண்டியதுதான் ;




வரால் / விரால் மீன் (Channa striata): நன்னீரில் வாழும் மீன் வகை. அயிரை போல இல்லாமல் பெரிய அளவு மீன். கெண்டை மீன்களை விட, முள் குறைந்த, சுவை மிகுந்தது. இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும். விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.

கெளுத்தி மீன் (கெடிற்று மீன்) (Cat Fish): நீரின் அடித்தளத்தில் வாழும் நன்னீர் மீன் வகை . இதைக் கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. வாய்கிட்ட பெரிய மீசை இருக்கும் ; அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படும் மீன் இது. சில இடங்களில் மிகப் பெரியதாக வளரும் ;

கெண்டை மீன் : தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படும் கெண்டை மீன்களில் பல வகைகள் [கட்லா (தோப்பா மீன், கங்கைக் கெண்டை), வெள்ளிக்கெண்டை,புற்கெண்டை,மிர்கால்,ரோகு] உண்டு. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். கெண்டைமீன் தனது மேலுதட்டின் மீதுள்ள, இரண்டு இணை குட்டைமீசைகளின் உதவியால், ஆற்றின் வண்டல் அடித்தளத்தின் மேல், இரை தேடியவாறு, அவசரமின்றி மெதுவாக நீந்தி கொண்டு இருக்கும்.

வாளை மீன் : அறிமுகம் ஏதும் தேவை இல்லை ; மாளவிகா ஆடின அதே வாள மீனுதான் ; நீளமா இருக்கும் ; கடல் மீன் ; சுத்தம் செய்து சமைக்குறது ரொம்ப கஷ்டம் ; மற்ற மீன்களைப் போல இல்லாமல் இது சிறிய மீன்களை உண்டு வாழும் மீனாகும்.

கயல் மீன் (Grey Mullet) : வயலில் வாழும் மீன் ; காவிரி நீருக்கு எந்தத் தடையும் இல்லாத காரணத்தால் சோழ நாட்டு வயல்களில் நீர் எப்போதும் நிறைந்த நிலையிலேயே இருந்தன. அதனால் ஆற்று மீனும், குளத்து மீனும் வாழ்ந்து செழித்த இடம் நீர் நிறைந்த வயல்களேயாகும். பெண்களின் கண்கள் பற்றி பாடல் வரும் போதெல்லாம் அங்கு கயல் மீன்களே வரும்.

மீன் சமையல் குறிப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் பாத்தாச்சு ; கொஞ்சம் ஐங்குறுநூறு பாட்டையும் பார்ப்போம் ; முதல்ல வாளை மீன் ; ஒரே ஒரு பாட்டுலதான் வாளை மீன் வருது ;

ஐங்குறுநூறுல இருக்கு "கிழத்திகூற்றுப் பத்துல" இருக்க பாட்டு இது:

"பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!"

துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. அதாவது , பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் கோவித்துக் கொண்டு கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.

பள்ளி = வாழும் இடம் ; நாளிரை = அந்நாளுக்கான இரை ; துன்னல்= பொருந்தத் தழுவல். பிறர் = உரிமையற்றவரான பரத்தையர்.

பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், மீன் நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே (தழுவி அணைக்க) மாட்டோம்!

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு பழக்கிக் கொண்ட ஒருவகைப் விலங்கு. (இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது). வாளைமீன் இதற்கு விருப்புணவு.

நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் செல்கிறாய். காதல் செய்யும் போது உனக்கு இருந்த அக்கறை திருமணத்திற்கு பின் நான் என்ன ஆனால் என்ன (எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து) என்பதாக மாறி விட்டது.

இதுல சில நுட்ப்பமான கருத்துக்கள் உண்டு ; கொஞ்சம் மெதுவா இரண்டு முறை படித்தால் புரியும்.

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் => ஒரு நீர் நாய், அது குளத்திற்கு அருகில் வசித்து வருகிறது ; முதல்ல நல்லாத்தான் இருக்கு ; ஆனா ஒரு நாள் ஒரு வாளை மீனைச் சாப்பிட்டதும், அந்த மீன் நாற்றம் பிடித்துப் போய், தினம் தினம் அந்த நாற்றத்தையே தேடிப் போய் உண்கிறது; அது போல தலைவன் முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே தினம் ஒரு பரத்தையைத் தேடிச் செல்கிறான்.

நாலே வரில எப்பிடிப் போட்டு வாங்குறாங்க பாருங்க ;
அதுதான் சங்கப் பாட்டு ;

மற்ற மீன்களை நாளைப் பார்க்கலாம் ; உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிடு போங்க ;

நன்றி,
ஆசிப்











Sunday, February 15, 2015

காதல் !! காதல் !! காதல் !!

வணக்கம் நண்பர்களே !!

உலகெங்கும் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது !! தமிழ் காதலர்கள் தபு சங்கரை பதிவுயிறக்கியோ , புத்தகமாகவோ காதலர்தின பரிசாகக் கொடுத்திருப்பார்கள்..இன்னும் சில பல கவிதை புத்தகங்கள்  விற்பனை ஆகி இருக்கும்.. வாழ்த்து அட்டைகள் , பரிசு பொருள்கள் இன்னும் பல விற்று தீர்ந்திருக்கும் !! யாரேனும் திருக்குறள் பரிசளித்தீர்களா ? என்னது ? காதலர் தினத்திற்கு திருக்குறளா ?? இது என்ன லூசுத்தனமா இருக்கு ..       குறள் = அறம் + பொருள் + இன்பம் ; அதுல இருக்க அந்த மூணாவது மேட்டர் முழுக்கக் காதல்தான் !! இப்போத்தான் காதல் , காமம் இரண்டும் வேற வேற அர்த்தம் ; காமம் என்பது கெட்ட வார்த்தை ; ஆனா அப்ப காமம் = விருப்பம் ; thats all !!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! = கற்றவரைத்தான் கற்றவர் விரும்புவர் ; சரியா ? இல்லையே , அப்ப காமத்துப் பால் ?? மலரினும் மெல்லிது காமம் ; அதுல வர காமம் ? அதுவும் விருப்பம்தான் ; காதலில் விளையும் உடல் விருப்பம் ; மெய்யுறு புணர்ச்சின்னு பேரு ; உள்ளத்தால் கலந்து பின் உடலால் கலப்பது ; இவ்வளவு இருக்குற திருக்குறளை ஏன் காதலர்தின பரிசாக் கொடுக்கக்கூடாது ?

மறைந்த பெரியார்தாசன் அவர்கள் கவிதை வடிவில் காமத்துப்பாலுக்கு மட்டும் உரை எழுதி உள்ளார் ; கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்.
அடுத்த வருடம் பரிசாகக் கொடுக்கலாம் ;

காமத்துப் பால் = களவியல் + கற்ப்பியல் ; களவியல் = அவனும், அவளும் கண்டு காதல் கொள்வது முதல் திருமணத்திற்கு முன் வரை ;அதில் இருந்து எனக்கு பிடித்தப் பத்துக் குறள்களை இங்கே கொடுத்துள்ளேன் ;

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் - என பாரதி கூறியது போல காதல் செய்வோம் வாருங்கள் !!



அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-
மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு.

ஒரு சோலை, அவன் மட்டும் தனியே வந்து கொண்டு இருக்கிறான். அப்போது அங்கே ஒரு அழகிய பெண் ; பார்த்ததும் அவனுக்கு ஒரே ஆச்சரியம் ! யாரடா இது ? வானத்தில் இருந்து வந்த தேவதைப் பெண்ணோ ? அவ்வளவு அழகாய் இருக்காளே..நம்ம ஊர்லலாம் இந்த மாதிரி பொண்ணு இல்லையே .. ஒரு வேலை அழகு நிறைந்த மயிலோ ? இல்லையே !! காதுல தோடுலாம் போட்டு இருக்காளே ..யாரா இருந்தா என்ன ? பார்த்ததும் என்னோடு மனசு என்கிட்டே இல்ல ; அவகிட்டயே போய்டுச்சு !!


கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்
பேதைக்கு, அமர்த்தன கண்.

முதல் பாட்டுல அந்தப் பெண்ணை கொஞ்சம் தூரத்தில பார்த்துட்டு யாருன்னு குழம்பியவன் பக்கத்துல போய் அவளைப் பார்க்கிறான். அவளே செம அழகு ; பார்த்ததும் மனசு அவகிட்ட போய்டுச்சு. ஆனா அவ கண்ணு இருக்கு பாருங்க, அது எப்பிடி இருக்குனா பார்த்ததும் நம்மோட உயிரை எடுக்கிற மாதிரி இருக்காம்.. அவளோட பெண்மையின் அழகுக்கு எப்பிடி உயிரை எடுக்கும் கண்கள் இருக்க முடியும் ?


யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்,
தான் நோக்கி, மெல்ல நகும்.

அவளைப் பார்த்ததும் இருந்த ஐயமெல்லாம் இப்போப் போய்டுச்சு ; அவளுக்கும் அவன் மேல காதல் வந்த மாதிரி சில குறிப்புகள் தெரியது அவகிட்ட; நான் அவளைப் பார்க்கும் போது வெட்கப்பட்டுத் தலையைக் கீழ போட்டுட்டு கால் விரலால் கோலம் போடுறா..சரினு அந்தப் பக்கம் பார்த்தா என்னை நிமிர்ந்து பார்த்துட்டு சின்னதாச் சிரிச்சுட்டே வெட்கப்படுறா.. அப்ப அதுதானே ??


கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.

இப்போ உறுதி ஆகிடுச்சு !! "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்றே அர்த்தம்", இது வைரமுத்து புதுசா எழுதினது இல்ல ; அவனோட கண்ணும் , அவளோட கண்ணனும் சேர்ந்தது கண்களால் காதல் பேச ஆரம்பித்தால் வாயினால் பேசப்படும் சொற்களால் ஒரு பயனும் இல்லை ;அவை வெறும் நேரம் கடத்தவே ; அந்த கண்களே காதல் ஆயிரம் பேசுகின்றன..


பிணிக்கு மருந்து பிறம னணியிழை 
தன்னோய்க்குத் தானே மருந்து.

அவன் அவளுடன் சேர்ந்து காதல் இன்பத்தில் மூழ்கி இருக்கிறான் ; எதுவும் அளவுக்கு அதிகமானால் என்ன ஆகும்? அவளின் சிறிய பிரிவு கூட அவனுக்கு பெரிய நோயைத் தருகிறது ; பொதுவாக ஒரு நோய்க்கு மருந்தாக அந்த நோய்க்கு எதிரான மருந்துதான் கொடுக்கப்படும். ஆனால் அவள் எனக்கு கொடுக்கும் காதல் நோய்க்கு அவளேதான் மருந்தாவாள் ; அவளுடன் கூடுவதே அவள் தரும் காதல் நோய்க்கு மருந்தாகும் ;


தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்-
தாமரைக்கண்ணான் உலகு?.

அவள் வந்துவிட்டாள் அவன் நோய்க்கு மருந்தாகி விட்டாள் ; இந்த தேவலோகம் , சொர்க்கம் என்றெல்லாம் சொல்லுறாங்களே ; அங்கெல்லாம் போனா பெரிய இன்பம் கிடைக்குமுனு சொல்லுறாங்களே ; இவள் தோளில் சாய்ந்து கண் மூடி இருக்கும் அந்த இன்பத்தை விடவா அதுலாம் பெரிய இன்பம் ; அடப் போங்கப்பா !! எனக்கு இதுவே போதும் ;


வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை
போழப் படாஅ முயக்கு.

அட , சொர்கத்தை விட என்ன பெரிய இன்பம் கிடைக்கப் போகுது ? அப்பிடி என்ன இருக்கு ? அவனும், அவளும் இறுக கட்டி அணைத்து , அதுவும் காற்று கூட போகும் இடைவெளி இல்லாமல் இறுகி கட்டி அணைத்து இருப்பதே அந்த இன்பம் ஆகும் ? அதற்கு முன் சொர்காமாவது ஒன்னாவது ..நாம கட்டிப்பிடி வைத்தியமே பார்ப்போம் !!


அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ, மாதர் முகத்து!.

அவன் அவளுடன் காதல் கொண்டிருப்பதைக் கண்ட அவனின் நண்பன், ரொம்ப மகிழ்ச்சி நண்பா ! உன் காதலி வெண்ணிலாவைப் போல இருக்கிறாள்,  அப்பிடி சொன்னத்தும் அவனுக்கு செம கோவம் வந்துருச்சு ; என்ன சொன்ன நீ ? அவ நிலா மாதிரியா இருக்கா ? நிலாவைப் பார்த்திருக்கியா நீ ?அதன் முகத்தில் ஏகப்பட்ட மருக்கள் (நிலவில் இருக்கும் மலைகள் இங்கிருத்து பார்க்கும் போதும் ) இருக்கும் ; அவளின் முகம் அப்பிடியா இருக்கு ?எந்த குற்றமும் இல்லாதா எந்த மருவும் இல்லாத மாசாற்ற அழகிய முகம் அது ; நிலவை அதனுடன் பொருத்திக் கூறாதே !! அப்பிடின்னு கோவமாச் சொல்லிட்டான் ;


பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்!.

அவன் அப்பிடிச் சொன்னதும் அவளுக்கு வெக்கமும் , மகிழ்ச்சியும் பொங்கி வருகிறது ; அதனால் அவனை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்கிறாள் ;அதுவும் சாதா உம்மா இல்லை ; A french Kiss ; அந்த மயக்கத்திலேயே அவன் சொல்லுறான் , என்பா , இந்த இனிய பாலில் தேனைக் கலந்து கொடுத்தால் ஒரு இனிய சுவையான உணர்வு கிடைக்குமே அத விட சுவையானது அவள் முத்துப் பற்களுக்கு இடையில் இருந்து வரும் அவள் உமிழ் நீர் !!


வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கு மிடத்து.


காதல் கை கூடி விட்டது ; ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்பிடி யாரும் அறியாமல் சிறிது நேரம் மட்டும் கூடி இருப்பது ; நீ இல்லாமல் இருப்பது ஒன்றும் சிறிய விசயம் இல்லையே ; உயர்ந்த பண்புகளை உடையவள் நீ ; அப்பிடிப்பட்ட உன்னோடு கூடும் போதுதான் நான் உயிர் உடலோடு கூடுவது போல உணர்கிறேன் ; உன்னை விட்டு விலகி இருக்கும் போது உயிர் உடலை விட்டு பிரிந்து இருப்பது போல நான் இருக்கிறேன் ; சீக்கரம் சொல்லு ?நாம் எப்போது திருமணம் செய்து கொண்டு உன்னைவிட்டு நான் விலகாதிருப்பது ?


உலகக் காதலர்க்கு காதலர்தின வாழ்த்துக்கள் !!

நன்றி
ஆசிப்

Sunday, February 8, 2015

வழக்குரை காதை - சிலம்பு - கண்ணகி vs பாண்டியன்

வணக்கம் நண்பர்களே !!

ஐம்பெருங்காப்பியங்களுனு படிச்சிருப்பிங்க
1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி ; இதில் கடைசி இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.. எனவே பாடத்தில் வைக்க முடியாது ; 3. சீவக சிந்தாமணி.. எழுதினது என்னமோ திருத்தக்க தேவர்தான் ஆனாப் படிச்சா.. சரி விடுங்க ... 2. மணிமேகலை - எழுதினது சீத்தலைச் சாத்தனார் ; சிலம்பின் நாயகி மாதவியின் மகள் பற்றிய கதை ; கதை முழுக்க புத்த சமய விஷயங்கள் ; நம்மோட கொஞ்சம்தான் ஒட்டும்..சிலம்பும் & மணிமேகலை = இரட்டைக் காப்பியங்கள் ; இதுலாம் இருந்தாலும் சிலப்பதிகாரம்தான் தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த காப்பியம் ; இது ராமாயணம் போலவோ மகாபாரதம் போலவோ கடவுள் மீது பாடப்பட்டவை இல்லை ; மன்னர் மீது பாடப்பட்டவை இல்லை ; சாதாரண குடிமகன் மீது பாடப்பட்டது ; காப்பியத்தின் நாயகன் ஒரு சாதாரண குடிமகன் ; அதுனாலதான் சிலம்புக்கு இன்னொரு பெயர் குடிமக்கள் காப்பியம் ;

என்னோட வரலாறைப் புரட்டினா இதுல வர "தேரா மன்னா"தான் பாடத்துக்கு வெளிய நான் படித்த முதல் பாட்டு ; எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியர்தினக் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னே நான் மனப்பாடம் செய்து பொருள் புரியாமல் உளறியப் பாடல் :) கிடைத்ததென்னமோ ஆறுதல் பரிசுதான் ; அனால் ஒரு சிறு பொறி கிளம்பியது  அதில் இருந்து ; அடுத்த ஆண்டு தமிழ்ப் பாடத்தில் சிலப்பதிகாரம் இருந்தது ;
அதே தேரா மன்னா மனப்பாடப் பகுதி ; கொஞ்சம் புரிய ஆரம்பித்தது ; அதன் பின் வகுப்பில் , மேடையில் பேச நிறைய வாய்ப்புகள் ; கிடைக்கும் போதெல்லாம் சிலம்பு, கண்ணகி, கோவலன் என மேற்கோள் காட்ட ஆரம்பித்தேன் ; கல்லூரி வாழ்கை இலக்கியத்தின் மேலே ஒரு புதிய பார்வையைக் காட்டியது ; தமிழ் ஆசிரியர் இரகுபதி அவர்கள் ஓரு நாள் வகுப்பில் இருந்த தமிழ் மாணவர்களை (கொஞ்சம் பேர் french, sanskirt) இரண்டாகப் பிரித்து "கற்ப்பில் சிறந்தவள் சிலம்பு காட்டும் கண்ணகியா , கம்பன் காட்டும் சீதையா" அப்பிடினு ஒரு விவாதம் வைத்தார் ; நான் அப்போது சிலம்பின் எல்லைகளைத் தொட்டு இருந்தேன் ; நான் கண்ணகி அணி ; மூன்று பேர் பேசிய பிறகு நான் பேச வேண்டும் ; கண்ணகியும் இல்லை ; சீதையும் இல்லை ; மாதவியே அப்பிடின்னு பேசிட்டேன் ; சுமார் 2௦ நிமிடங்கள் :) பசங்க கொஞ்சம் பேருக்கு சுத்தமாப் புரியல :) ;அதே தமிழ் ஆசிரியர்தான் எனக்கு விடுதிக் காப்பாளர் ; பார்க்கும்போதெல்லாம் அதை குறிப்பிடுவார் ;

சரி விடுங்க ; என் கதை இப்போ எதுக்கு ? ரொம்ப நாளாக அந்த வழக்குரை காதையை ஒரு பதிவா எழுதனும்னு ஒரு ஆசை ; அதைத்தான் இப்ப செய்யப் போறேன் :) அதுக்கு முன்னாடி வழக்கம் போல சிலம்பு - ஒரு அறிமுகம் ; எழுதினது = இளங்கோவடிகள் ; இது கற்பனைக் கதை இல்லை ; தயைகூர்ந்து யார்னேனும் அப்பிடிக் கூறினால் திருப்பிச் சொல்லுங்கள் ; கண்ணகி, கோவலன், மாதவி வாழ்ந்ததிற்கு நிறைய தரவுகள் இருக்கு ;

சிலம்பு = 3 காண்டங்கள் புகார் , மதுரை , வஞ்சி ;

புகார்க் காண்டத்தில் கண்ணகி , கோவலன் திருமணம் , மாதவி அரங்கேற்றம் , கோவலன் மாதவியுடன் கூடல் , இந்திர விழா , கோவலன் - மாதவி பிரிவு ,கோவலன் கண்ணகியிடம் திரும்புதல் , இருவரும் புகாரை விட்டு மதுரை செல்ல தீர்மானித்தல் ; இதுலாம்தான் புகார்க் காண்டம் ;

மதுரைக் காண்டம் முழுக்க மதுரைக்கு வருவது மற்றும் மதுரையில் நடப்பது ; கண்ணகியும் கோவலனும் மதுரை செல்லுதல், ஊர் கானல் , அடைக்கலக் காதை , ஆய்ச்சியர் குரவை , கோவலன் கொலைப்படல் , கண்ணகி வழக்குரைத்தல் , வஞ்சின மாலை இதுலாம்

வஞ்சிக் காண்டம் => சேரன் கண்ணகி பற்றி அறிந்து கொள்ளுதல், கண்ணகிக்கு நடுகல் வைக்கும் காதை, கண்ணகி வாழ்த்துக் காதை , வரந்தரு காதை..



நான் சொல்ல வருவது கண்ணகி வழக்குரைத்தல் காதை in மதுரைக் காண்டம்.. கண்ணகி கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டு ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி மதுரை நகர் புகுந்து அரசனைச் சந்தித்து கோவலன் குற்றமற்றவன் என நிறுவுவதே  வழக்குரை காதை..

மதுரைக்கு வந்த பின் கண்ணகியின் சிலம்பை விற்று வரச் செல்கிறான் கோவலன் ; கடைத் தெருவில் போர்க்கொல்லனைப் பார்த்து சிலம்பைக் காட்டி விற்கச் சொல்ல்கிறான் ; அவனோ இது சிறப்புடைய சிலம்பு அரசர் குல மகளிர் அணிவது ; நான் சென்று அவர்களிடம் காட்டி வருகிறேன் என்று கூறிவிட்டு சிலம்புடன் செல்ல்கிறான் ; அங்க அரண்மனையில் மன்னன், பட்டத்து இராணியுடன் "ஆடலும் பாடலும்" :) பார்த்துக் கொண்டிருக்கிறான்.. தாம் உடன் இருக்கும் போதே ஆடல் மகளிரை அரசன் ரசிப்பதாகக் கருதி அரசி கோவித்துக் கொண்டு சென்று விடுகிறாள் ; அவள் கோவம் தணிக்க வேண்டும் என்ற கவலையில் மன்னன் செல்ல அந்நேரம் அங்க வந்த பொற்கொல்லன் சிலம்பைத் திருடிய கள்வன் கிடைத்து விட்டான் எனக் கூற , அவன் அருகே இருந்த காவலனை அழைத்து "கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்" அப்பிடின்னு சொல்லிட்டான் ; அதாவது சிலம்போடு அவனைக் கொண்டு வருக என்பதற்கு பதில் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக அப்பிடின்னு சொல்லிட்டான்  ; காவலனும் அங்கே போய் கோவலனைப் பார்த்து அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவந்து விடுகிறான் ; செய்தி கண்ணகிக்குப் போகிறது .. கண்ணகித் துடித்துப்  போய் மதுரை மாநகர் புகுகிறாள் .. இனி .........


ஆங்கு,
‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’

கண்ணகி அங்கே வரும் போது அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீக் கனவை அவள் தோழிக்குச் சொல்கிறாள் ; தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை நான் கனவில் கண்டேன் ; திசை இரு-நான்கும் = எட்டுத் திசையும் அதிரக் கண்டேன் ; அது மட்டும் இல்லை ; கதிரவனை இருள் விழுங்கக் கண்டேன் ; இரவில் வானவில் தோன்றும் , பகலில் மிக்க ஒளியினையுடைய மீன்கள் எரிந்து கீழே விழும் ; இது போன்ற தீய சகுனங்கள் தோன்றும்மாறு கனவு கண்டதாக தேவி தன் தோழியிடம் கூறினாள் ;

கருப்பம
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-

செங்கோலும், வெண் கொற்றக் குடையும் முறிந்து நிலத்தில் விழ , மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும் ; இரவில் வானவில் தோன்றவும், பகலில் எரி நட்ச்சித்திரம் விழுமாறும், எட்டுத் திசையும் அதிர ஒரு துன்பம் வருவதாக நான் கானாக் கண்டேன் ; இதை நான் மன்னனுக்கு சொல்ல வேண்டும் ;

கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்: 

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,

வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;

ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை ,கண்ணாடியையும் அணிகலன்களையும், புதிய நூலாடையையும் பட்டாடையையும், கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தியும் ,பல்வகை நிறங்களையும் பொற்பொடி முதலிய பொடிகளையும், கத்தூரிக் குழம்பினையும் , மாலையினையும், கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய் குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ அரண்மனைக்குள் நுழைகிறாள் தேவி..


நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;

கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

இது உள்ளே வரும் தேவியை வாழ்த்தி கட்டியங் கூறுவது (ராஜாதி ராஜ .....).. நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர் (அறிவு மிகுந்த பெண்கள் not aged women) பலர் இருக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்க என தேவியை பின் தொடர்ந்து வரும் தோழியரும், காவல் பெண்களும் வாழ்த்துகிறார்கள் ;

திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த அரியணையின் மீது அமர்ந்து இருக்க , அங்க சென்ற தேவி தான் கண்ட தீக்கனாவைக் கூறுகிறாள்..

"கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல" (கண்ணகி entry)

‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-

ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் ; அது மாதிரி ஒரே அடி அடிக்குறா
 "அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே"...அறிவு கீழிறங்கி போன , நெஞ்சத்தில் அறமே இல்லாத, அரச நீதியற்ற அரசனின் அரண்மனை வாயில் காப்பவனே :)) உள்ளே போய் கணவனை இழந்த பெண்ணொருத்தி கற்களை உடைய இரண்டு சிலம்பில் ஒன்றைக் கையில் கொண்டு வந்து இருக்கிறாள் என்று கூறு ... (இணை அரிச் சிலம்பு = ஒரு சிலம்பை நீ கோவலன்கிட்ட இருந்து வாங்கிகிட்ட அதற்க்கு இணையான இன்னொரு சிலம்பு )

அவன் பயந்து போய்ட்டான் ; யார்துடா இது ? நம்ம பாண்டிய மன்னனை இப்பிடி சொல்லுறதுன்னு யோசிச்சிட்டே உள்ள போறான் ;

"கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்"

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!

நேராப் போய் மன்னனைப் பார்த்தவன் அப்பிடியே எதையும் சொல்ல முடியாதது ; அவனை முதலில் வாழ்த்துறான் ; மன்னா நீ வாழ்க , கொற்கை நகரத்து அரசனே நீ வாழ்க , தென் எல்லையாக பொதிகை மலையை உடையவனே நீ வாழ்க , செழியனே வாழ்க, பாண்டியனே வாழ்க , மன்னன்.. போதும்யா.. வந்த விசயத்தைச் சொல்லு என்க ..

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

அரசே ஒரு பொண்ணு வந்து இருக்கா , அவளைப் பார்த்தா அப்பதான் வெட்டி குருதி கொட்டும் தலையை கையில் பிடித்துக் கொண்டு, பெரிய பிடரியுடன் கூடிய சிங்கத்தின் மேல் அமர்ந்து வெற்றி தரும் வேலினைக் கொண்டு இருக்கும் கொற்றவை தேவி மாதிரியும் இல்ல.. கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரி, இறைவனை நடனமாடச் செய்த பத்திரகாளியும், அச்சம் விளைக்கும் காட்டினை தனக்கு இடமாக விரும்பிய காளி, தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை இவிங்கள மாதிரியும் இல்ல , வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு பொற்சிலம்பை கையினில் கொண்டு உள்ளத்தில் கறுவு கொண்டு, மிகுந்த சினம் கொண்டு கணவனை இழந்த பெண்ணொருத்தி நம் அரண்மனை வாயிலில் நிற்கிறாள்..


‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
 
அதைக் கேட்ட மன்னன், சரிப்பா அவளை உள்ள கூட்டிட்டு வா !! கண்ணகியும் உள்ளே வந்து மன்னனைப் பார்க்கிறாள்

"பாண்டியன் வினா"

‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-

மன்னன் மு வந்து நிற்கும் கண்ணகியைப் பார்க்கிறான் , அவள் கண்களில் நீர், கையில் சிலம்பு , மன்னன்னுக்கு ஒன்றும் புரியல.. இப்பிடி அழுதுகொண்டு என் முன் வந்து நிக்குறியே யாருமா நீ அப்பிடின்னு கேக்குறான் .. அவ்வளவுதான் சும்மா
பொரிஞ்சு தள்ளிட்டா !!

"கண்ணகியின் மறுமொழி"


‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

மறுபடியும் ஓங்கி ஒரு அடி !! தேரா மன்னா - எதையும் ஆய்ந்து பாராமல் அவசரப்பட்டு முடிவெடுக்கும் மன்னனனே , நான் சொல்லுறதக் கேளு !! இமையவர் = தேவர்கள் ; எந்த விதமான குற்றமும் சொல்ல முடியாத தேவர்கள் வியக்குமாறு ஆட்சி செய்து ஒரு புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த (சிபி), அத்தோடு வாயிலில் கட்டப்பட்டு இருந்த ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் புத்திர சோகத்தை போக்க தான் பெற்ற மகனைத் தேர்க் காலில் இட்ட (மனுநீதிச் சோழன்) சோழனும் ஆண்டு பெரும்
பெயர் பெற்ற புகார் என்னும் ஊரைச் சேர்ந்தவள் நான் ; அந்த ஊரில் இருந்த குற்றமே கூற முடியாதவாறு வணிகம் செய்து வந்த மாசாத்துவான் என்னும் பெரிய வணிகனின் மகனைத் திருமணம் புரிந்து வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்த, முன் ஜென்ம தீவினைத் துரத்த உன்னுடைய மதுரை மாநகர் வந்து , என்னுடைய கால் சிலம்பை விற்க முயலும் போது உன்னால் கொலை செய்யப்பட கோவலனின் மனைவி நான் ;
கண்ணகி என்பது என் பெயர் ;

"மன்னவன் உரைத்த விடை"

கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,

ஒருத்தி மூச்சு விடாம இப்பிடி பேசும் போதே அவன் உசார் ஆகிருக்க வேணும் ; ஆனா அத விட்டுட்டு , கள்வனைத்தான் தண்டித்தேன் ; அது கொடுங்கோல் ஆட்சி இல்லை ; அதுவே அரச நீதி ; அப்பிடின்னு சொல்ல.


"கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்"

நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-

அற வழியில் செல்லாத கொற்கை நகர மன்னனே..என் கணவன் கள்வன் அல்ல ; என் சிலம்பை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு வணிகம் துவங்கவே என் சிலம்பை விற்க வந்தான்  , என் கால் சிலம்பில் இருப்பவை மாணிக்கப் பரல்கள்.. அத நீ பாத்தியான்னு கண்ணகி கேக்குறா


தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-

உடனே மன்னன் , நல்லாச் சொன்னமா , இத இப்பயே பாத்துரலாம் ; என்னுடைய அரசியின் சிலம்பில் இருப்பவை முத்து பரல்கள் அப்பிடின்னு சொல்லி கோவலன்கிட்ட இருந்த வாங்கின சிலம்பை காவலனக் கொண்டுவந்து வைக்கச் சொன்னான் ;
 

கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,

கண்ணகி சிலம்பை எடுத்து உடைக்க, மன்னவன் முகத்தில் மாணிக்க மணி தெறித்து விழுந்தது !!
 

"மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்"

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்..

என்னதான் பெரிய அரசனா இருந்தாலும் அவன் நீதி தவறா பாண்டிய மன்னன் ; மாணிக்க பரலைப் பார்த்ததும் குற்ற உணர்வு அவனைக் கொல்கிறது.
என் பொற்கொடை சாய்ந்து போயிற்று ; என் செங்கோல் தளர்ந்து போயிற்று ; ஆராய்ந்தது பாராமல் ஒரு பொற்கொல்லனின் சொல் கேட்ட நானா அரசன் ?
நான்தான் கள்வன்..பாண்டிய நாட்டின் பெருமையே என்னால் போயிற்று ; என் ஆயுள் இன்றோடு முடிந்தது போகட்டும் எனக் தன்னைத்தானே சபித்துக் கொண்டு
மயங்கி விழுந்தது தன் உயிரை மாய்த்துக் கொண்டான் !!

"கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்"

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும்..ஆனால் கணவனை இழ்ந்தோர்க்கு  அப்பிடி காட்டும் முறை ஏதும் இல்லை ; நானும் அவருடனே செல்கிறேன் எனச் சொல்லி பாண்டியனின் பாதம் தொட்டு வணங்கி
தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் !!


வழக்குரை காதை இத்துடன் முடிகிறது ; அப்புறம் கண்ணகி மதுரையை எரித்து விட்டு தானும் மேலுலகம் சென்று கோவலனுடன் சேர்கிறாள் ; இதை பின்னாளில் சேரன் செங்குட்டுவன் கதையாய்க் கேட்டு கண்ணகிக்கு கோவில் காட்டுகிறான் ;


நன்றி !! வழக்கம் போல கருத்துகள் இட்டுவிட்டுச் செல்லவும் !!

Monday, January 26, 2015

ஊரு சனம் தூங்கிடுச்சு - பாவி மனம் தூங்கலையே

வணக்கம் நண்பர்களே !!

மெல்லத் திறந்தது கதவு படத்துல வர "ஊரு சனம் தூங்கிடுச்சு" பாட்டுக் கேட்டுருக்கிங்களா ? அந்தப் பாட்டுதான் இன்னிக்கு நாம பாடு பொருள் :) முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை அப்பிடின்னு ஐந்திணைகள் இருக்கு ; பாலை = பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ; தலைவன் பக்கத்துல இல்ல, போருக்கோ, படிக்கவோ, தூது சொல்லவோ போயிருக்கான் ; இங்க அம்மிணிக்கு அவன் இல்லாம இருக்க முடியல ; எப்ப வருவன்னு தெரியல :( இரவு படுத்தா தூங்க முடியல ; அவனுடன் கூடி இருந்த நினைவுகள்தான் கண்ணை மூடினா ; ஆனா பாருங்க ஊர்ல எல்லாரும் நல்லாத் தூங்கறாங்க :)) இது போதுமே ; ஏண்டா நான் ஒருத்தி தூங்க முடியாம கிடக்கேன் இங்க நீங்கலாம் நல்லாத் தூங்ககிரிகளானு கடுப்பு ஆகுறா ;

அந்தக் கடுப்புல பாடுற மாதிரி வரும் குறுந்தொகையைப் பாடல்களைப் பார்ப்போம்.

"மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.. "

தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் தூங்குகின்ற இவ்வூர் மக்களை யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியதாக ஔவையாரால் பாடப்பட்டது.

பாட்டை கடைசில இருந்து படிங்க :

அலமரல் அசை வளி அலைப்ப = சுழலுதலை உடைய, அசைந்து வருகின்ற தென்றல் காற்று 
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே = எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை...

அதாவது, நல்ல தென்றல் காற்று வீசுது , அந்த காற்று தலைவனை பிரிவை/நினைவை அதிகமாக்குது... ஆனா ஊருல இருக்குரவங்கலாம் சந்தோசமா தூங்குறாங்க ; அவங்களாம் சேர்ந்துதான் இருக்காங்க போல ; நம்ம அம்மிணி கடுப்பில் என்ன செய்யப் போகுது தெரியுமா ?

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் = என் உடம்பைக் கொண்டு முட்டுவேன் ; ஒரு கம்பு கிடைச்சா அத வைச்சு தாக்குவேன் 
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு = ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் = ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன்..

அவங்கள தூங்க விடாம முட்டுவேன் , அடிப்பேன் இல்லனா ஆ என்று கத்தி கூச்சலிட்டு அவங்கள எழுப்பி விடுவேன் ; ஐயோ எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலையே...

இதுதான் பாட்டு ; நம்ம சினிமாப் பாட்டு  இதுல இருந்துத்தான் வந்துச்சு :)


இத விட நல்ல இன்னொரு பாட்டு ; இதப் பாருங்க

"கேட்டிசின் வாழி தோழி யல்கற்      
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய     
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்     
தமளி தைவந் தனனே குவளை 
வண்டுபடு மலரிற் சா அய்த்      
தமியேன் மன்ற வளியேன் யானே, "

தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும் நான் தலைவனை கூடியாதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுற்றதாகக் கூறியது போல கச்சிப்பேட்டு நன்னாகையார் என்ற புலவரால் பாடப்பட்டது.

தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து Onsite :) சென்று விட்டான். அவளால் அந்த பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை ; கண்ணை மூடித் தூங்கினால் அவனுடன் கூடிய நினைவுகள் கனவில் வருகின்றன ; அந்தக் கனவுகளும் மெய் போலவே இருக்கின்றன ; அப்பிடி ஒரு கனவு அவனுடன் கூடியதை போலவே மயக்கத்தை உண்டாக்க அவன்தான் அருகில் இருக்கிறான் என்று எண்ணி படுக்கையைத் தடவிப் பார்த்தேன் ;

தலைவி மட்டுமே பிரிவை நினைத்து வருந்துவது இல்லை ; தலைவன் கூற்றும் உண்டு ; இவளை விட்டு வேறு எங்கும் போய்த் தேடும் பொருள் ஏதும் எனக்கு வேண்டாம் எனக் கூறும் ஒரு பாடல் இதோ..

"மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே      
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்     
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்     
கல்கெழு கானவர் நல்குறு மகளே"

 கீழ இருந்தது படிங்க :

கல்கெழு கானவர் நல்குறு மகளே = கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகளே ; தலைவியின் தந்தை கிரானைட் இருக்குற காடு வைச்சுருக்கார் போல :) ; அப்பிடி அல்ல, "man from forest with mountains"=குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ;

அரும்பிய சுணங்கின் அம் பகடு இள முலை => அரும்பிய சுணங்கின் = தேமலை உடைய ; அம் பகடு = அழகான பெருமையுடைய ;

பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் = பெரிய தோளையும் நுண்ணிதாகிய இடையையும் உடைய

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே = எதுக்கு மருந்து ? என் காம நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் ; இனிய வாழ்விற்கு தேவைப்படும் செல்வமாகவும் இருப்பவள் ;

இப்ப மறுபடியும் பாட்டைப் படிங்க :

செல்வம் தேட இவளைப் பிரிந்து onsite போகச் சொல்லுறியே என்னோட நெஞ்சே, கேட்டுக்க , அவ குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ; மஞ்சள் புள்ளிகள் உடையத் தேமலுடன் கூடிய இள முலையையும் , பெரியத் தோளையும் ,சிறுத்த இடையயும்  கொண்டவள் ; நான் காம நோய்வாய்ப் படும்போதல்லாம் மருந்தாய் இருந்து அதை தீர்ப்பவள் ; என் செல்வமாய் இருப்பவள் ; அவளைப் பிரிந்து போய் சேர்க்கும் வேறு செல்வம் வேறு ஏதும் இல்லை ;

ஆக, பாலை = பிரிவு ; அதிலும் பல சுவையான பாடல்கள் இருக்கு சங்க இலக்கியத்துல,, வெறும் சோகம் மட்டும் இல்லை ; மீண்டும் சந்திப்போம்..

நன்றி !!

Wednesday, January 21, 2015

கற்பெனப்படுவது !!

வணக்கம் நண்பர்களே !!

புத்தாண்டு பிறந்ததும் வேலைப் பளு கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு; சுற்றுலாக் காலம் வேற ; அதுதான் பதிவு எழுத முடியாம போய்டுச்சு ; இப்ப வந்தாச்சு ஒரு புதுத் தலைப்போட...

வீட்டுல பசங்க, "அம்மா நேர்மைனா என்னாமானு" கேட்டா உடனே ஹமாம்னு சொல்லிடலாம் ; அதே பையனோ, பொண்ணோ "அம்மா கற்புனா என்னாமானு" கேட்டா என்ன சொல்லுவிங்க ? நம்மைச் சொல்லிக் குற்றம் இல்லை ;சங்க காலம் முதல் இருந்து வரும் ஒரு சொல்லை "பண்புப் பெயராக" மாற்றியதன் விளைவே இது; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இதே சொல் பெண்ணை அடிமைப்படுத்த ஆகச் சிறந்த சொல்லாக இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது ?

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள் " படித்தால் முதல் அத்தியாயமே "கற்பு"தான் ... மிகத் தெளிவாக கற்பு என்பது பெண்ணை அடிமையாக்கும் சொல் என்பதைச் சொல்லி இருப்பார்..

சரி, இப்ப கேக்கலாம் கற்புனா என்னா? நம்ம இலக்கியங்கள் என்ன சொல்லுது ? பெண்ணடிமைத்தனத்துக்கு உதவி செய்கிறதா ? பெண்ணிற்கு மட்டும் உரியது என்று சொல்கிறதா ?

பாரதி "ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்" அப்பிடின்னு சொல்லுறாரு...சரி ? எதை ? எதைப் பொதுவில் வைப்பது ? இங்க நான் சொல்ல வருவது பாரதி காலத்துலேயே இதன் பொருள் மாறி விட்டது; பாரதியும் இத பண்புப் பெயராகத்தான் பார்க்கிறார்.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் ;

நச்சினார்க்கினியர். தொல்காப்பிய உரையாசிரியர். தமிழ் மற்றும் வடமொழிப் புலமை கொண்டவர் ; ஒரே குறை ; வட மொழித் தாக்கம் மிகுந்தது இருக்கும் ; இவர் திருமணத்தைப் பற்றிக் கூறும்போது, திருமணம் முடிந்த முதல் நாள் தலைவியை சந்திரனுக்கும், இரண்டாம் நாள் கந்தர்வர்க்கும் (தேவர்கள்), மூன்றாம் நாள் அக்னி தேவனுக்கும் கொடுப்பார்களாம் ; இவர்களோடு கூடி இருந்த பின் நான்காம் நாள் அக்னி தேவன் தலைவியைத் தலைவனுக்குக் கொடுப்பனாம் ; so total family damage ; உரையாசிரியர் சொன்ன மாதிரி இருந்தா கற்பு மகாப் புனிதமானது :) அப்ப, உரையாசிரியர் காலத்துலையும் கற்பு என்பது வேறு ; Note : இன்றும் அய்யர் ஓதும் சம்ஸ்கிருத மந்திரம் இதனையேக் கூறுகிறது.. என்ன நமக்கு புரியாத மொழியில் சொல்வதால் நாம கேட்டுட்டு பேசாம இருக்கோம் :(( 

சரி, நம்ம வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் ?? அறத்துப்பால், பொருட்பால் இதுலாம் எதுனா சொல்லி இருக்காரா ? ஒன்னும் சொல்லல ; ஆனா மனைவி எப்பிடி இருக்கனும்னு சொல்லுறாரு;

1. "மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் 
   வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."

 இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள். ஓகே ; budget போட்டு குடும்பம் நடத்துனும் ;

இதப் பாருங்க : ஒரு point இருக்கு இதுல :

2. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்." 

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? சரி ; எதோ கொஞ்சம் match ஆகிற மாதிரி இருக்குல ; ஆனா நமக்கு இன்னும் "கற்புனா" என்னனு தெரியுனுமே ;

3. "தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
 ‘பெய்’ என, பெய்யும் மழை."

  வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!  நம்ம கண்ணகி மாதிரி ; கணவனே கண் கண்ட தெய்வம் ; பிரச்சனை என்னான , இதப் படிச்சுட்டுதான் நம்ம அய்யா பெரியார் திருக்குறளில் பெண்ணடிமைக் கருத்துகள் இருக்குனு சொன்னார்.. உண்மை மாதிரித்தான் தெரியுது  கற்பின் பெயரால் பெண் அடிமைப் படுத்தப்படுகிறாள்..
உடனே வள்ளுவர் down down சொல்லிட்டுக் கிளம்பிடாதிங்க !! அவர் காலத்துல இப்பிடி நடைமுறை இருந்துருக்கு அதுனால இவர் எழுதி இருக்கிறார் ; அவ்வளவே !!

இப்ப எங்காதான் போய் "கற்பு" defination கண்டுபிடிக்கிறது?? இருக்கவே இருக்காரு நம்ம தமிழ் HOD Mr.தொல்காப்பியர் !! 2௦௦௦ வருசம் பின்னால போனாத்தான் நமக்கு உண்மை விளங்கும்..

சங்க காலத்துல என்ன பண்ணிட்டு இருந்தாங்க நம்ம மக்கள் ? ஆறு மாசம் போர் புரிந்தனர் ; அடுத்த ஆறு மாசம் காதல் புரிந்தனர் (ஒரே பெண்ணைத்தான்).. பெரும்பான்மையான திருமணங்கள் காதல் திருமணங்களே; தலைவன் , தலைவியைக் கண்டு, காதலில் விழுந்து
பெரிய போரட்டங்களுக்கு நடுவில் அவளை திருமணம் செய்வான் ; காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதாவர் இருப்போரோ ?சங்க காலமாய் இருந்தாலும் காதல் ரகசியமாய் வைக்க வேண்டிய ஒன்று ; யாருக்கும் தெரியாமல் தலைவியை தோழி, தோழன் துணை கொண்டு இரவிலோ , பகலிலோ சந்தித்து காதலை வளர்த்து வந்தனர் ; இதுனால் இதன் பெயர் "களவு". 

களவின் முடிவு திருமணம் !! இரகசியாமாய் வளர்த்த காதல் ஊரார்க்குத் தெரியும் முன்போ/தெரிந்த பின்போ இருவரும் திருமணம் செய்து கொள்வர் ; இதுவே கற்பு எனப்படும் ; வள்ளுவரின் காமத்துப்பால் இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது ; களவியல் , கற்பியல் ; தொல்காப்பியமும் பொருளதிகாரித்தில் களவியல் , கற்பியல் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது ;

களவு = திருமணத்திற்கு முன் தலைவன், தலைவி இடையேயான காதல் வாழ்க்கை ; 
கற்பு  = திருமணத்திற்கு பின் தலைவன், தலைவி இடையேயான திருமண வாழ்க்கை ; Thats All !!

சும்மா அடிச்சு விடாத ... Where is the proof ?? அதுதானே உங்க கேள்வி ? தொல்காப்பியம் தரும் தரவுகள் இதோ ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 1:

முதல் செய்யுளே கற்புனா என்னனு சொல்லிடுத்து

"கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே."

கரணம் = சடங்கு (திருமணச் சடங்கு ) ; இங்க நடக்குறது love cum arranged marriage ; காதல் இரு வீட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு வீட்டு சம்மதத்துடன் சடங்கோடு நடைபெறுவது ; இன்னொரு விசயம் இதுல என்னனா ,

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை = இரண்டு பேரும் ஒத்த குலம் அல்லது திருமணம் செய்து கொள்ள தகுதி உடையவர்கள் ; இங்கு சாதி பற்றி பேசப் படவில்லை என்பது மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டியது ; கொடைக்கு உரி மரபினோர் = பெற்றோர்கள் ;

ஆக, கற்பு என்பது திருமணம் செய்து கொள்ள தகுதியான இருவர் அவர்தம் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் சடங்குகளோடு  சேர்வதே ; அதன் பின் அவர்கள் இணைந்தது வாழ்வதே...

காதலுக்கு வில்லன் இல்லனா எப்பிடி ? பெற்றோர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை ? தலைவி என்ன செய்வாள் ? தலைவன் என்ன செய்ய்வான் ? நீங்க சம்மதிக்கலனா என்ன ? நாங்களா திருமணம் செய்து கொள்கிறோம் என்று தாமாகவே செய்து கொள்வர்; இதுவும் கற்புதான் ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 2:

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான."

கொடுப்போர் இன்றியும் = பெற்றோர் சம்மதம் இல்லமால் ; அவர்களும் இல்லாம ; கரணம் உண்டே = still திருமணச் சடங்கு உண்டு ; புணர்ந்து உடன் போகிய காலையான = தலைவி தலைவனுடன் சேர்ந்து உடன்போக்கு மேற்கொண்டால் ;

அது என்னையா உடன் போக்கு ? : தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ; முதல்ல இரகசியமா இருந்தாது மெதுவா வெளியவருது ; தலைவி வீட்டுல காதலுக்கு ஒப்புதல் தரல ; அவளும் ரொம்ப போராடிப் பாக்குறா ;ஒண்ணும் நடக்குற மாதிரி தெரியல ; தலைவனும் வந்து பேசிப் பாக்குறான் ; பெண் வீட்டுல NO சொல்லிடராங்கா ; தலைவிக்கோ அவனை மறக்க முடியல ; இருவரும் சேர்ந்தது ஒரு முடிவுக்கு வருகிறார்கள் ; தலைவி தலைவனுடன் சேர்ந்தது வீட்டை விட்டு அவனுடன் சென்று விடுகிறாள் ;

இதுதான் உடன்போக்கு ; எவ்வளவு அழகான வார்த்தை ; இப்ப நாம எப்பிடி சொல்லுறோம் இத "ஓடிப் போய்டா" :((

சரி, அப்பிடி அவன் உடன் சென்று பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணமும்  கற்புதான் !!

அது எல்லாம் சரிதான் !! கரணம் = சடங்கு ; அப்பவும் இதே மாதிரி மந்திரம் ஓதி, அம்மி மிதித்து, அனுஷ்காவப் (அருந்ததி) பார்த்துதான் திருமணம் நடந்துச்சா ? எதுக்காக இந்த சடங்கு ? அது தமிழ் பண்பாடா ??

அதுக்கும் பதில் சொல்லுறாரு Mr.தொல்.. ஊரெல்லாம் கூட்டி இந்த மாதிரி சடங்கு செய்யாம இருவர் மட்டுமே சேர்ந்து தெய்வம் சாட்சியாக நடைபெறும் திருமணத்திர்க்கு கந்தர்வ மணம் என்று பெயர் ; என்ன பிரச்சனைனா ? யாரும் சாட்சி இல்ல ; கொஞ்சம் நாள் இருந்துட்டு அப்புறம் நீ யாருனே எனக்குத் தெரியாது சொல்லிட்டு போக ஆரம்பிச்சுடாங்க ; அதுலாம் வராம இருக்கத்தான் இந்த சடங்கு வந்துச்சு ;

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.

ஐயர் = பெரியவர் ; இப்ப இருக்க அய்யர் இல்ல ; அது கடைச் சங்க காலம் ; மக்கள் நால் வகை வருனமாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர் ; அரசனும் , அந்தணனும் கந்தர்வ மணம் என்ற பெயரில் நிறைய advantage எடுத்ததால் வந்ததே இது என்று கருதலாம்...

சடங்குன்னு சொன்னா போதுமா ? திருமணம் எப்பிடி நடந்துச்சு ? கொஞ்ச நால் முன்னால என்னோட முகநூல் பக்கத்துல "சங்க இலக்கியத்தில் ஒரு முதலிரவுப் பாடல்" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன் ;அந்தப் பாட்ட பார்த்தா போதும் ;

"மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்

சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து – கடவுள் பேணி
படு மண முழவொடு – பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – விதுப்புற்று

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகைப் – புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த பயம்பு – அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் – தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு – வெண் நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து – மேவரத் துவன்றி
மழை பட்டன்ன, மணல் மலி பந்தர்"

மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி

மைப்பு = கசடு ; வரையா வண்மை = வரம்பு இல்லாம; புரையோர் = உறவினர்கள் ;

புழுக்கல் அரிசி தான் இறைச்சிக்கு ஏற்றது; கசடு நீக்கிய இறைச்சி + வெண் சோற்றில் எள்-நெய்  ஊற்றி வரம்பு இல்லாம உறவினர்களுக்கு சோறு போட்டு.....




புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, 

விசும்பு = வானம் ; திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்காங்க! விடிகாலையில் பறவைகளின் ஒலி; விடியலின் ஒளி..

திங்கள் – சகடம் மண்டிய, துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணி

திங்கள்-சகடம் = நிலவு-உரோகிணி என்னும் விண்மீனுடன் கூடிய ஓரையில்.. (Constellation) திருமணத்துக்கு நல்ல நாள்; “நல்ல நாள்”-ன்னா என்ன? = எரி நட்சத்திரம் & அனல் இல்லா நாட்கள்; கடவுள் பேணி = கடவுளை வணங்கி…

படு மண முழவொடு, பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர், விதுப்புற்று
பூக்கணும் இமையார் ,நோக்குபு மறைய

மண முழவு = கல்யாண மேளம்; பரூஉப் பணை = பெரிய முரசு
எல்லாரும் வைச்ச கண் வாங்காமல் “அவளையே” பார்க்க

மென் பூ வாகைப், புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த, பயம்பு அமல் அறுகைத்

கவட்டிலை = கவர்த்த இலை (இரட்டைக் கொத்தாய், இலை)
அறுகை = கன்றுகள் மேய விட்டுக் கடித்த அறுகம் புல்!

தழங்கு குரல் வானின், தலைப் பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன, மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு , வெண் நூல் சூட்டி

பருவ காலத்தின் முதல் மழை; அப்போ முளைச்ச மஞ்சள் கிழங்கு!
வாகை இலை + அறுகம் புல் + மஞ்சள் கிழங்கு
= மூனும், வெள்ளை நூலிலே, பூவோடு ஒன்னாக் கட்டி..  (பந்தக்கால்)


தூஉடைப் பொலிந்து, மேவரத் துவன்றி
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின்…

தூய ஆடை உடுத்தி, மணல் பரப்பிய பந்தலிலே… மழை படபட -ன்னு கொட்டுவது போல் கெட்டி மேள ஒலி
 இழை = Fibre; நூல் போன்ற அணிகலன் (பனை ஓலையால் செய்த அணிகலன் )
 இழை அணி சிறப்பின் = சிறப்பான “அணிவிப்பு”.. திருமண நாள் அன்றைக்கு மட்டும் அணிவிக்கப்பட்ட ஒரு மங்கல அணி; வாழ்நாள் முழுவதும் இல்லை

அவ்ளோ தான் திருமணம்; அக்னி  எல்லாம் ஒன்னுமில்ல; ! புரோகிதர் இல்லை!

so, தொல்காப்பியம் சொன்ன மாதிரிதான் பழந்தமிழர் திருமணம் நடந்து இருக்கு ; திருமண வாழ்வும் (கற்பு ) நடந்து இருக்கு ;

அதுவேதான் இன்னிக்கு வேற பொருளில் பெண்ணுக்கான ஒரு பண்பா ஆகிடுச்சு !! இனிமே யாரவது பெண்ணியம் பேசுறேன்னு வந்து கற்பு, கற்ப்புக்கரசினு பேசினா வேலையைப் பாத்துட்டு போனு சொல்லிடுங்க !!

ஆணும், பெண்ணும் திருமணம் புரிந்து மனம் ஒன்றி அன்பும் அறனுமே இல்வாழ்வின் பண்பும் பயனும் எனப் புரிந்து வாழ்வதே கற்பு ; அது பெண்ணின் உடலில் இல்லை ..நம் இலக்கியங்கள் அவ்வாறு கூறவும் இல்லை ; 

உங்கள் கருத்துக்களை commentடி விட்டுச் செல்லாம்..

நன்றி !!

உசாத்துணை : 
தொல்காப்பியம் - பாவலரேறு ச.பாலசுந்தரம் உரை - தமிழ் இணையக் கல்விக்கழகம் 
பெண் ஏன் அடிமையானாள் - தந்தைப் பெரியார்
தமிழ்க்காதல் - வ.சு.ப. மாணிக்கம் 
dosa365 - கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)

Tuesday, January 6, 2015

முக்கூடற் பள்ளு IV - மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

வணக்கம் நண்பர்களே !!

இன்று நானிருக்கும் இடத்தில் பனிப் பொழிவு ; இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு. முன் இரவே weather.com, weatherBug, போன்றவற்றைப் பார்த்து பனிப்பொழிவை எதிர்கொண்டாய்யிறு. அங்க நம்ம ஊர்ப் பக்கமும் இப்பலாம் இப்பிடித்தானே ; நம்ம ரமணன் சொன்னாத்தான் மழை வருதா ? புயல் வருதான்னு தெரியும் நமக்கு ; மனிதன் மட்டுமே பள்ளி, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொண்டுள்ளான் ; பறவைகள் , விலங்குகள் எப்பிடி மழை, புயலை அறிந்தது கொள்கின்றன? நம்ம முக்கூடல இருந்த பள்ளன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி என்ன பண்ணி இருந்துருப்பாங்க ?

Swadesனு ஒரு ஹிந்தி மொழிப் படம் ; நம்ம சாருக்கான் நாசால வேலை செய்வாரு ; ஒரு கிராமத்துக்கு வந்து இருக்கும் போது நீங்க என்ன வேலை செய்யுறிங்க அமெரிக்காவில் அப்பிடின்னு ஒரு கேள்வி வரும்; அவரு அதுக்கு நான் வானத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பி வானிலையைக் கணிக்கறேனு சொல்லுவாரு ; அப்ப அந்த கிராமத்துல இருக்க ஒருத்தரு வானத்தப் பார்த்தே மழை வரும் வாராதுன்னு கணிச்சு சொல்லிடுவாரு :) பட இணைப்பைப் பாருங்க :))




இன்னிக்கு நாம பாக்கப் போறது இததான் ; எப்பிடி குறிகளை வைத்துக் கொண்டு மழை, வெள்ளம் வரப் போறத கணித்தார்கள்  ; சுவையான பாடல் ; இசையோட பாடலாம் ; பாடிப் பாருங்க ..

"ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
      யாள மின்னல் ஈழமின்னல்
      சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
      நீர்ப்படு சொறித்த வளை
      கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
      தேடியொரு கோடி வானம்
      பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க் 
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
      துள்ளிக் கொள்வோமே."

விளக்கமே வேணாம் இந்தப் பாட்டுக்கு ; ஆனாலும் கொஞ்சம் பேசணும் ;

நாளைக்கு ஆத்துல வெள்ளம் வர மாதிரி இருக்கே... எத வைச்சு சொல்லுறான் ? மின்னல வைச்சு ; மலையாள மின்னல் , ஈழ மின்னல் - அப்பிடின்னா ? மலையாள மின்னல் => கேரளம் => மேற்கு பக்கம் ; 
ஈழ மின்னல் => தெற்கு பக்கம் ; 
பெருசா ஒண்ணும் இல்லைங்க ; தென்மேற்கு பருவ மழை வரப்போகுது ;
இதச் சொல்ல ரமணனன் வேணுமா இல்ல நாசா வேணுமா?  :)) ஒத்த வரில எப்பிடி சொல்லிட்டான் பாருங்க !!

மலையாள மின்னல் , ஈழ மின்னல் ; இப்பிடிலாம் நாம பேசுறது இல்ல ; காத்து பத்தியாவது கொஞ்சப் பேரு
பேசுறாங்க ; காற்று வீசும் திசையைப் பொறுத்து காத்துக்குப் பேரு இருக்கு ; வடக்கு = வாடை; தெற்கு = தென்றல்
கிழக்கு = கொண்டல்/கீழைக் ; மேற்கு = கோடை/மேலைக் காற்று ; சரி பாட்டுக்குப் போவோம்..

நேத்துக்கும் , இன்னிக்கும் கொம்பு சுத்தி காற்று அடிக்குதாம ;
காற்று அடிக்குது , சரி, அது என்ன கொம்பு சுத்தி ??

கொம்பு = நீளமான குழல் மாதிரி இருக்க வாத்தியம் ; கேரளாப் பக்கம் நிறைய வாசிப்பாங்க ; ஊதுனா நீண்டு ஒலிக்கும் ;ஊதி முடிச்ச அப்புறமும் உய்ய்ய்ய்ய்ங் ன்னு கொஞ்சம் நேரம் காதுல ஒலிச்சுடே இருக்கும் ; அதுமாதிரி உய்ய்ய்ய்ய்ங், உய்ய்ய்ய்ய்ங்ன்னு காற்று அடிக்குது !!


கேணி இங்க குளம் நம்ம வீட்டுக் கிணறு இல்ல; குளத்துல இருக்க சொறித்தவளைலாம் ஒரே சவுண்ட் கொடுக்குது ;எதுக்கு ? தென்மேற்கு பருவ மழை வரப்போகுது (ஆடி மாசம்)... தவளையோட இனப்பெருக்க காலம் ; அதோட சோடியக் கூப்பிடுது !!

நண்டுக்கு கொஞ்சம் பயம் ; வயல்ல வளை தோண்டி அதுல இருக்குது ; மழை பெருசா வந்து வெள்ளம் வந்துச்சுனா வளைக்குள்ள தண்ணி வந்துரும் ; அதுனாலா சேறு பூசி வளையை அடைக்குது ; safety first :)

நீர்த்துளியை உண்ணும் வானம்பாடிப் பறவைகள் ஒரு கோடிக்கணக்கான கூட்டம் மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றது;

கடைசி வரியை விட்டுருவோம் ; எல்லரும் ஆடி பாடுவோம்னு சொல்லுறாங்க அதுல ;

எவ்வளவு எளிமையான பாடல் ; ஆனா நுட்பம் பாருங்க ; தவளை, நண்டு , வானம்பாடி இதுபோதும் ;பெரிய மழை வரப் போகுது ; அதுனால வெள்ளம் வரப் போகுதுன்னு கண்டு பிடிச்சாச்சு !! நம்ம என்னடானா ????


நன்றி,
ஆசிப் 

முக்கூடற் பள்ளு - III - நீயா - நானா ?

வணக்கம் நண்பர்களே !!

முக்கூடற் பள்ளு என்னும் சிற்றிலக்கியம் தரும் பேரின்பத்தில் இருந்து இன்னும் வெளியேற முடியவில்லை ; கதை மாந்தர்களின் அறிமுகங்களைப் பார்த்தோம் ; இனி அடுத்து வருவனவற்றைப் பார்ப்போம் ; இங்கு அழகன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி அவர்களது குடிப் பெருமையைக் கூறுகிறனர் ; அதில் ஒரு சில பாடல்களைப் பார்த்துவிட்டுச் செல்வோம் ;

பள்ளன் தன் பெருமை கூறல்:

ஒருபோ தழகர்தாளைக்
கருதார் மனத்தைவன்பால் 
      உழப்பார்க்குந் தரிசென்று
      கொழுப்பாய்ச்சுவேன்
சுருதிஎண் ணெழுத்துண்மைப் 
பெரியநம் பியைக்கேளாத்
      துட்டர்செவி புற்றெனவே
      கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்றெட்டும்
மருவி வலம்செய்யார் தம்
      பேய்க்காலை வடம்பூட்டி
      ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால்மா டுகளாக்கித் 
      தீத்தீயென் றுழக்கொலால்
      சாத்துவே னாண்டே.”

பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்... கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..

ஒப்பற்ற செந்தாமரைமலர் போன்ற அழகரின் திருவடிகளை நினையாதவர் மனத்தை முரம்பு நிலத்தில் உழுவதற்குக் காணப்படுகின்ற தரிசு நிலமென்று கருதிக் கொழுவினைப் பாய்ச்சி உழுவேன்; அரிய நூல்களிலுள்ள மதிப்பிற்கு உரிய இலக்கிய உண்மையை எங்கள் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத தீயோருடைய செவிகளைத் தரிசு நிலத்திலுள்ள புற்றுகளை யான் வெட்டுவது போலவே மண்வெட்டிக்கொட்டால் வெட்டுவேன்; பெருமாளுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளையும், மனத்தில் மருவி வலஞ்சுற்றி வராதவருடைய பேய்த்தன்மை வாய்ந்த கால்களை வடம்பூட்டி ஏர்க்காலிற் சேர்ப்பேன்; திருவாய்மொழியைப் படியாதவரை இரண்டு கால் மாடுகளாகக்கொண்டு தீத்தீ யென்று அதட்டித் தார்க் கோலால் சாத்துவேன் நயினாரே..

மூத்த பள்ளி தம் பெருமை கூறல்:

உத்தர பாக மான
சித்திர நதிக்குத் தென்பால்
ஓடும் பொருநையுடன் 
கூடும் போதே
அத்தனை காலமுந் தொட்டு
இத்தனை காலமுங் கண்டு
அடியடி வாழையாய்நான்
குடியில் வந்தேன்
பத்திலே பதினொன் றாக
வைத்தா னில்லைக் குடும்பன்
பண்டே சரடுகட்டிக் 
கொண்டான் என்னை
முத்தமிழ் நாட் டழகர்
கொத்தடி யானுக் கான
முக்கூடல் மூத்தபள்ளி
நானே யாண்டே.”

இந்த பழத்துல ஊசி ஏத்துறது தெரியுமா ? அதத்தான் செய்யுறா மூத்த பள்ளி ;

வடக்கே சித்தரா நதின்னு ஒரு சிற்றாறு ஓடுது ; அது தெக்கால இருக்க பொருநை நதிகூட கலக்குது. அது இன்னிக்கு, நேத்து நடக்குறது இல்ல ; காலங் காலமா நடக்குறது ; அந்தக் காலத்துல இருந்தது வர நல்ல குடும்பத்துல வாழையடி வாழையா வந்தவ நான் ; என்னை அழகன் பத்தோடு பதினொன்னா கூட்டிட்டு வந்து வைச்சுகல , என்னை முதலிலேயே தாலிகட்டித் தன் மனைவியாகக் கொண்டான் ; முத்தமிழ் நாடாகிய இந்தத் திருமுக்கூடலி லெழுந்தருளி யிருக்கும் அழகருக்குக் கொத்தடியானாகிய என் தலைவனுக்குப் பொருத்தமான முக்கூடல் மூத்தபள்ளி நானேஆண்டே ;



இளைய பள்ளி::

மூத்த பள்ளி தன் பெருமை கூறியதும் இளைய பள்ளி சும்மா இருப்பாளா ?

"செஞ்சிக்குங் கூடலுக்குந் 
தஞ்சைக்கும் ஆணை செல்லும்
      செங்கோல் வடமலேந்த்ரன்
      எங்கள் ஊரே
நெஞ்சிற் குறித்த குளம்
அஞ்சுக்குஞ் சக்கரக் *கால்
      நிலையிட்ட நாளிற்பண்ணைத்
      தலையிட் டேன்நான்
கஞ்சிக்குந் தன்னிலே தான்
கெஞ்சிப் புகுந் தவளல்ல
      கண்டாசைப் பட்டேகொள்ளும்
      பெண்டா னவள்
மஞ்சிற் கறுப் பழகர்
தஞ்சைப்பள் ளனுக் கேற்ற
      மருதூர் இளையபள்ளி
      நானே யாண்டே."

மதுரை யென்ன தஞ்சை யென்ன செஞ்சிக் கோட்டை யென்ன அங்கெல்லாந் தனது ஆணை செல்லும்படியான செங்கோல் முறைவழுவாத வடமைலையப்பப் பிள்ளையன் என் ஊர்தான். அவர் மனத்திற் குறிப்பிட்டுத் தோண்டிய ஐந்து குளத்திற்கும் திருவாழிக்கல் நட்டுக் கால்கொண்ட நாளிலேயே நான் இந்தப் பண்ணையில் வந்து சேர்ந்தேன். நான் மூத்தவ மாதிரி கஞ்சிக்கு ஆசைப்பட்டு கெஞ்சிட்டு வந்தவ இல்ல ; அவன் என்னப் பாத்து ஆசைப்பட்டு காதலித்து

மூத்த பள்ளி நகர் வளம் கூறல் :

இளையவ சீண்டி விட மூத்தவளுக்கு கோவம் வந்து அவ ஊருப் பெருமையைச் சொல்லுறா ;

"கொண்டல் கோபுரம் அண்டையிற் கூடும்
      கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டந் தண்டலை நாடும்
      கனக முன்றில் அனம்விளை யாடும்
விண்ட பூமது வண்டலிட் டோடும்
      வெயில்வெய் யோன்பொன் னெயில்வழிதேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
      அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே."

கொண்டல்= மேகம் ; அவ ஊர்ல இருக்க கோபுரங்கள் மேகத்தைத் தொடுமம்மா ; அந்த கோபுரத்து மேல இருக்க கொடிகள் அந்த மேகத்துக்கு மேல போய் ஆடுமாம் ; தண்டலை = சோலை ; ஊர்ல இருக்க சோலைகளில் இருக்கும் மரங்கள் மேகத்தைத் தொடும் அளவு வளர்ந்தது அதற்கும் மேல உள்ள மேலுலகத்தை அடைய விரும்பி மேலும் வளரும் ; அந்தச் சோலையில் அன்னப் பறவைகள் சேவலும் , பேடையுமாக விளையாடும் ; இதழ் விரிந்தத பூக்களில் இருந்தது தேன் வழிந்தோடும் ; வெயில் வீசுகின்ற கதிரவன் அங்கு உள்ள பொன்வண்ணமான கோட்டைகளில் அம்பு எய்ய அமைத்துள்ள துளை வழியே நுழைந்து போவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கும்; தேவர்களுக்கெல்லாந் தலைவரும், செண்டு என்ற படைக்கலக் கருவியைக் கைப்பிடித்த அழகருமாகிய முக்கூடலழகரின் திருமுக்கூடல் ஊர் எங்கள் ஊராகும்...

உடனே இளைய பள்ளி, இது என்ன பிரமாதம் , எங்க ஊரு எப்பிடினானு ஆரம்பிக்கிறா

"சங்கம் மேடைகள் எங்கும் உலாவும்
      தரங்க மீன்பொன் னரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும்
      தெருக்கள் தோறும் மருக்களைத் தூவும் 
பொங்க ரூடிளம் பைங்கிளி மேவும்
      பூவை மாடப் புறாவினங் கூவும்
வங்க வாரிதி வெங்கடு உண்ட
      மருதீசர் மருதூ ரெங்கள் ஊரே."

சங்குகள் மேடைகள் முதலிய எல்லா இடங்களிலும் உலாவித் திரியும்; நீரில் கொந்தளிக்கின்ற அலைகளிலுள்ள மீன்கள் அழகிய பென்னரங்கங்களிலே தாவிப் பாயும்; நிலாவானது சோலையிலுள்ள மரங்களை அராவிக்கொண்டு செல்லும்; அத்தகைய உயர்ந்த சோலைகள் தெருக்கள் தோறும் மருவாகிய பூந்தாதுகளைத் தூவும்; பொங்கர் எனப்படும் சோலைகளினூடே பச்சைக் கிளிகள் துணையுடன் அமர்ந்திருக்கும்; அதைக் கண்ட நாகணவாய்ப்புட்களும்
மாடப் புறாக்களும் பிரிந்துசென்ற தங்கள் துணைப் பறவையைக் கூவும்; மரக்கலஞ் செல்லுங் கடலில் தோன்றிய வெப்பமான நஞ்சினையுண்டு
திருமால் முதலியவர்களைக் காத்த மருதீசருடைய திருமருதூர் எங்கள் ஊராகும்;

சும்மா விடுவாளா மூத்தவ !!

"கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
      கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
      திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
      குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
      வளமை ஆசூர் வடகரை நாடே."

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு என் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம்.
கடம் பட்டிருப்பது = கட்டப்பட்டிருப்பது, மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு
ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே.
குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி... !!



அருமை , அருமைனு நாம சொல்லும் போதே இளைய பள்ளி மறுபடியும் ஆரம்பிக்குறா ;

"காயக் கண்டது சூரிய காந்தி
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
      மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
      தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனம்
      சீவல மங்கைத் தென்கரை நாடே."

தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும்.
அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர்
மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள்..

இவ்வாறே தமிழ் பாடி விளையாடுகிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும். அது பாட்டுக்கு ஒரு 25 பாட்டு இது மாதிரியே போகுது ;

நாம இந்த விளையாட்டை இதோட நிறுத்திட்டு அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம் ;

நன்றி
ஆசிப்