Saturday, October 3, 2015

மாதவி அலங்காரம் !!

மாதவி அலங்காரம் !!

வணக்கம் நண்பர்களே !!

சிலப்பதிகாரம் படிப்பதையோ, பேசுவதையோ "தேரா மன்னாவோடு" நிறுத்திக் கொள்ளக் கூடாது. முழுவதும் படித்து கதை மாந்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் பொருளோடு சுவையும் விளங்கும். எனக்கு எப்போது மாதவிதான் மனதிற்கு நெருக்கமான கதை மாந்தர். கலையரசி அவள். அகத்திய முனிவரின் சாபத்தால் தேவலோகத்திலிருந்த ஊர்வசி பெண்ணாகப் பூமியில் பிறக்க, அந்த வழியில் வந்தவள் மாதவி. ஊர்வசியைப் போன்றே அழகும், நடனக் கலை அறிவு நிரம்பப் பெற்றவள். கோவலனும் , மாதவியும் மனத்தால் ஒன்றினைந்து இல்லறம் நடத்திக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.

புகார் நகரில் இந்திர விழா நடைபெறுகிறது. இந்திர விழா என்றால் எதோ கோவில் திருவிழா என எண்ணிக் கொள்ள வேண்டாம். அது நடைபெறும் போது விண்ணுலகத் தேவர்கள் மாறுவேடமிட்டு ரகசியமாய் வந்து பார்ப்பார்களாம். அதில் மாதவி ஆடுகிறாள் எனக் கேள்விப்பட்டதும் அக்கம் பக்கம் இருக்கும் 18 பட்டி மக்களும் வண்டிக் கட்டிக் கொண்டு வந்து விட்டனர். மாதவி ஆடினாள், பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு ஆடினாள்.. பார்த்தவர்கள் பார்த்துட்டு சும்மா இல்லாம நகர் முழுக்க மாதவியின் நடனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கோவலன் காதுக்கு இந்த விஷயம் வருகிறது.மாதவி அடுத்தவர் முன் ஆடியதைக் கேட்டு கோவம் கொள்கிறான். நடனம் ஆடி முடித்து வந்த மாதவிக்கு கோவலனின் கோவத்திற்கான காரணம் புரியவில்லை. அவனது ஊடலைப் போக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து அவன் மகிழ்ச்சி கொள்ளுமாறு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்.

பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,
ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,
நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி

பத்து வகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய தன் மணம் கமழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடிய பின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாப் பிரித்து, கஸ்துரி குழம்பினையும், ஜவ்வாதையும் அப்பகுதிகளுக்குத் தடவினாள்.

அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,

சிறிய அடிகளிலே செம்பஞ்சு குழம்பினைப் பூசினாள். நன்மை பொருந்திய மெல்லிய விரல்களில் காலாழி, மகரவாய், மோதிரம், பீலி போன்ற அணிகளை அணிந்தாள். காலுக்குப் பொருத்தமான பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் முதலான அணிகலன்களை அணிந்து கொண்டாள்.





குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;

திரண்ட தொடைகளுக்கு குறங்கு செறி என்னும் அணியை அணிந்து கொண்டாள்.

பிறங்கிய முத்தரை முப்பத்து-இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;

அளவில் பெரிய முத்துக்கள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விரிசிகை என்னும் அணியினை தன் இடையை
அலங்கரித்த பூ வேலைப்பாடு செய்த நீலப் பட்டாடையின் மீது மேகலையாக உடுத்தினாள்.

காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து;

அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்து வளையைத் தன் தோளுக்கு அணிந்தாள்.

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;

வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம்,
கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;

மாணிக்க மணிகளுடன் வயிரங்கள் பதித்துவைத்த சித்திர
வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் ஆன வளையல்கள் , நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பலவகை பவழ வளையல்கள் ஆகிய அணிகலன்களை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள். வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம், செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் கிளர்மணி
மோதிரம், சுற்றிலும் ஒளிபரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றை காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுவதும் மறைக்கும்படி அணிந்தாள்.

சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து;
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;

வீரச்சங்கிலி , நுண்ணியத் தொடர் சங்கிலி, பூணப்படும் சரடு, புனைவேலைகள் அமைந்த சவடி, சரப்பளி போன்ற அணிகளை கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்து கொண்டாள். சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாய் சரிந்து தொங்கிய, அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது.




இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து;

இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட, குதம்பை என்னும் அணியை வடிந்த இரு காதுகளில்
அழகுற அணிந்து கொண்டாள்.







தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;

சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிசங்கு, தொய்யகம், புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள்.


கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்-

இப்படியெல்லாம் அணிகள் பல பூண்டு வந்து, கூடலும், ஊடலுமாய் மாறி மாறி இன்பம் அளித்து, பள்ளியறையிலே, கோவலனுடன் மகிழுந்திருந்தாள்  மாதவி. சும்மாவா சொன்னான் வள்ளுவன் "ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம், கூடி முயங்கப் பெறினு !!"


நன்றி !!