Monday, January 26, 2015

ஊரு சனம் தூங்கிடுச்சு - பாவி மனம் தூங்கலையே

வணக்கம் நண்பர்களே !!

மெல்லத் திறந்தது கதவு படத்துல வர "ஊரு சனம் தூங்கிடுச்சு" பாட்டுக் கேட்டுருக்கிங்களா ? அந்தப் பாட்டுதான் இன்னிக்கு நாம பாடு பொருள் :) முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை அப்பிடின்னு ஐந்திணைகள் இருக்கு ; பாலை = பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ; தலைவன் பக்கத்துல இல்ல, போருக்கோ, படிக்கவோ, தூது சொல்லவோ போயிருக்கான் ; இங்க அம்மிணிக்கு அவன் இல்லாம இருக்க முடியல ; எப்ப வருவன்னு தெரியல :( இரவு படுத்தா தூங்க முடியல ; அவனுடன் கூடி இருந்த நினைவுகள்தான் கண்ணை மூடினா ; ஆனா பாருங்க ஊர்ல எல்லாரும் நல்லாத் தூங்கறாங்க :)) இது போதுமே ; ஏண்டா நான் ஒருத்தி தூங்க முடியாம கிடக்கேன் இங்க நீங்கலாம் நல்லாத் தூங்ககிரிகளானு கடுப்பு ஆகுறா ;

அந்தக் கடுப்புல பாடுற மாதிரி வரும் குறுந்தொகையைப் பாடல்களைப் பார்ப்போம்.

"மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.. "

தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் தூங்குகின்ற இவ்வூர் மக்களை யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியதாக ஔவையாரால் பாடப்பட்டது.

பாட்டை கடைசில இருந்து படிங்க :

அலமரல் அசை வளி அலைப்ப = சுழலுதலை உடைய, அசைந்து வருகின்ற தென்றல் காற்று 
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே = எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை...

அதாவது, நல்ல தென்றல் காற்று வீசுது , அந்த காற்று தலைவனை பிரிவை/நினைவை அதிகமாக்குது... ஆனா ஊருல இருக்குரவங்கலாம் சந்தோசமா தூங்குறாங்க ; அவங்களாம் சேர்ந்துதான் இருக்காங்க போல ; நம்ம அம்மிணி கடுப்பில் என்ன செய்யப் போகுது தெரியுமா ?

மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் = என் உடம்பைக் கொண்டு முட்டுவேன் ; ஒரு கம்பு கிடைச்சா அத வைச்சு தாக்குவேன் 
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு = ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் = ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன்..

அவங்கள தூங்க விடாம முட்டுவேன் , அடிப்பேன் இல்லனா ஆ என்று கத்தி கூச்சலிட்டு அவங்கள எழுப்பி விடுவேன் ; ஐயோ எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலையே...

இதுதான் பாட்டு ; நம்ம சினிமாப் பாட்டு  இதுல இருந்துத்தான் வந்துச்சு :)


இத விட நல்ல இன்னொரு பாட்டு ; இதப் பாருங்க

"கேட்டிசின் வாழி தோழி யல்கற்      
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய     
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்     
தமளி தைவந் தனனே குவளை 
வண்டுபடு மலரிற் சா அய்த்      
தமியேன் மன்ற வளியேன் யானே, "

தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும் நான் தலைவனை கூடியாதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுற்றதாகக் கூறியது போல கச்சிப்பேட்டு நன்னாகையார் என்ற புலவரால் பாடப்பட்டது.

தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து Onsite :) சென்று விட்டான். அவளால் அந்த பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை ; கண்ணை மூடித் தூங்கினால் அவனுடன் கூடிய நினைவுகள் கனவில் வருகின்றன ; அந்தக் கனவுகளும் மெய் போலவே இருக்கின்றன ; அப்பிடி ஒரு கனவு அவனுடன் கூடியதை போலவே மயக்கத்தை உண்டாக்க அவன்தான் அருகில் இருக்கிறான் என்று எண்ணி படுக்கையைத் தடவிப் பார்த்தேன் ;

தலைவி மட்டுமே பிரிவை நினைத்து வருந்துவது இல்லை ; தலைவன் கூற்றும் உண்டு ; இவளை விட்டு வேறு எங்கும் போய்த் தேடும் பொருள் ஏதும் எனக்கு வேண்டாம் எனக் கூறும் ஒரு பாடல் இதோ..

"மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே      
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்     
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்     
கல்கெழு கானவர் நல்குறு மகளே"

 கீழ இருந்தது படிங்க :

கல்கெழு கானவர் நல்குறு மகளே = கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகளே ; தலைவியின் தந்தை கிரானைட் இருக்குற காடு வைச்சுருக்கார் போல :) ; அப்பிடி அல்ல, "man from forest with mountains"=குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ;

அரும்பிய சுணங்கின் அம் பகடு இள முலை => அரும்பிய சுணங்கின் = தேமலை உடைய ; அம் பகடு = அழகான பெருமையுடைய ;

பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் = பெரிய தோளையும் நுண்ணிதாகிய இடையையும் உடைய

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே = எதுக்கு மருந்து ? என் காம நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் ; இனிய வாழ்விற்கு தேவைப்படும் செல்வமாகவும் இருப்பவள் ;

இப்ப மறுபடியும் பாட்டைப் படிங்க :

செல்வம் தேட இவளைப் பிரிந்து onsite போகச் சொல்லுறியே என்னோட நெஞ்சே, கேட்டுக்க , அவ குறிஞ்சி நிலத் தலைவனின் மகள் ; மஞ்சள் புள்ளிகள் உடையத் தேமலுடன் கூடிய இள முலையையும் , பெரியத் தோளையும் ,சிறுத்த இடையயும்  கொண்டவள் ; நான் காம நோய்வாய்ப் படும்போதல்லாம் மருந்தாய் இருந்து அதை தீர்ப்பவள் ; என் செல்வமாய் இருப்பவள் ; அவளைப் பிரிந்து போய் சேர்க்கும் வேறு செல்வம் வேறு ஏதும் இல்லை ;

ஆக, பாலை = பிரிவு ; அதிலும் பல சுவையான பாடல்கள் இருக்கு சங்க இலக்கியத்துல,, வெறும் சோகம் மட்டும் இல்லை ; மீண்டும் சந்திப்போம்..

நன்றி !!

Wednesday, January 21, 2015

கற்பெனப்படுவது !!

வணக்கம் நண்பர்களே !!

புத்தாண்டு பிறந்ததும் வேலைப் பளு கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு; சுற்றுலாக் காலம் வேற ; அதுதான் பதிவு எழுத முடியாம போய்டுச்சு ; இப்ப வந்தாச்சு ஒரு புதுத் தலைப்போட...

வீட்டுல பசங்க, "அம்மா நேர்மைனா என்னாமானு" கேட்டா உடனே ஹமாம்னு சொல்லிடலாம் ; அதே பையனோ, பொண்ணோ "அம்மா கற்புனா என்னாமானு" கேட்டா என்ன சொல்லுவிங்க ? நம்மைச் சொல்லிக் குற்றம் இல்லை ;சங்க காலம் முதல் இருந்து வரும் ஒரு சொல்லை "பண்புப் பெயராக" மாற்றியதன் விளைவே இது; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு இதே சொல் பெண்ணை அடிமைப்படுத்த ஆகச் சிறந்த சொல்லாக இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது ?

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள் " படித்தால் முதல் அத்தியாயமே "கற்பு"தான் ... மிகத் தெளிவாக கற்பு என்பது பெண்ணை அடிமையாக்கும் சொல் என்பதைச் சொல்லி இருப்பார்..

சரி, இப்ப கேக்கலாம் கற்புனா என்னா? நம்ம இலக்கியங்கள் என்ன சொல்லுது ? பெண்ணடிமைத்தனத்துக்கு உதவி செய்கிறதா ? பெண்ணிற்கு மட்டும் உரியது என்று சொல்கிறதா ?

பாரதி "ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்" அப்பிடின்னு சொல்லுறாரு...சரி ? எதை ? எதைப் பொதுவில் வைப்பது ? இங்க நான் சொல்ல வருவது பாரதி காலத்துலேயே இதன் பொருள் மாறி விட்டது; பாரதியும் இத பண்புப் பெயராகத்தான் பார்க்கிறார்.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம் ;

நச்சினார்க்கினியர். தொல்காப்பிய உரையாசிரியர். தமிழ் மற்றும் வடமொழிப் புலமை கொண்டவர் ; ஒரே குறை ; வட மொழித் தாக்கம் மிகுந்தது இருக்கும் ; இவர் திருமணத்தைப் பற்றிக் கூறும்போது, திருமணம் முடிந்த முதல் நாள் தலைவியை சந்திரனுக்கும், இரண்டாம் நாள் கந்தர்வர்க்கும் (தேவர்கள்), மூன்றாம் நாள் அக்னி தேவனுக்கும் கொடுப்பார்களாம் ; இவர்களோடு கூடி இருந்த பின் நான்காம் நாள் அக்னி தேவன் தலைவியைத் தலைவனுக்குக் கொடுப்பனாம் ; so total family damage ; உரையாசிரியர் சொன்ன மாதிரி இருந்தா கற்பு மகாப் புனிதமானது :) அப்ப, உரையாசிரியர் காலத்துலையும் கற்பு என்பது வேறு ; Note : இன்றும் அய்யர் ஓதும் சம்ஸ்கிருத மந்திரம் இதனையேக் கூறுகிறது.. என்ன நமக்கு புரியாத மொழியில் சொல்வதால் நாம கேட்டுட்டு பேசாம இருக்கோம் :(( 

சரி, நம்ம வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் ?? அறத்துப்பால், பொருட்பால் இதுலாம் எதுனா சொல்லி இருக்காரா ? ஒன்னும் சொல்லல ; ஆனா மனைவி எப்பிடி இருக்கனும்னு சொல்லுறாரு;

1. "மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் 
   வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."

 இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள். ஓகே ; budget போட்டு குடும்பம் நடத்துனும் ;

இதப் பாருங்க : ஒரு point இருக்கு இதுல :

2. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின்." 

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? சரி ; எதோ கொஞ்சம் match ஆகிற மாதிரி இருக்குல ; ஆனா நமக்கு இன்னும் "கற்புனா" என்னனு தெரியுனுமே ;

3. "தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
 ‘பெய்’ என, பெய்யும் மழை."

  வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!  நம்ம கண்ணகி மாதிரி ; கணவனே கண் கண்ட தெய்வம் ; பிரச்சனை என்னான , இதப் படிச்சுட்டுதான் நம்ம அய்யா பெரியார் திருக்குறளில் பெண்ணடிமைக் கருத்துகள் இருக்குனு சொன்னார்.. உண்மை மாதிரித்தான் தெரியுது  கற்பின் பெயரால் பெண் அடிமைப் படுத்தப்படுகிறாள்..
உடனே வள்ளுவர் down down சொல்லிட்டுக் கிளம்பிடாதிங்க !! அவர் காலத்துல இப்பிடி நடைமுறை இருந்துருக்கு அதுனால இவர் எழுதி இருக்கிறார் ; அவ்வளவே !!

இப்ப எங்காதான் போய் "கற்பு" defination கண்டுபிடிக்கிறது?? இருக்கவே இருக்காரு நம்ம தமிழ் HOD Mr.தொல்காப்பியர் !! 2௦௦௦ வருசம் பின்னால போனாத்தான் நமக்கு உண்மை விளங்கும்..

சங்க காலத்துல என்ன பண்ணிட்டு இருந்தாங்க நம்ம மக்கள் ? ஆறு மாசம் போர் புரிந்தனர் ; அடுத்த ஆறு மாசம் காதல் புரிந்தனர் (ஒரே பெண்ணைத்தான்).. பெரும்பான்மையான திருமணங்கள் காதல் திருமணங்களே; தலைவன் , தலைவியைக் கண்டு, காதலில் விழுந்து
பெரிய போரட்டங்களுக்கு நடுவில் அவளை திருமணம் செய்வான் ; காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதாவர் இருப்போரோ ?சங்க காலமாய் இருந்தாலும் காதல் ரகசியமாய் வைக்க வேண்டிய ஒன்று ; யாருக்கும் தெரியாமல் தலைவியை தோழி, தோழன் துணை கொண்டு இரவிலோ , பகலிலோ சந்தித்து காதலை வளர்த்து வந்தனர் ; இதுனால் இதன் பெயர் "களவு". 

களவின் முடிவு திருமணம் !! இரகசியாமாய் வளர்த்த காதல் ஊரார்க்குத் தெரியும் முன்போ/தெரிந்த பின்போ இருவரும் திருமணம் செய்து கொள்வர் ; இதுவே கற்பு எனப்படும் ; வள்ளுவரின் காமத்துப்பால் இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது ; களவியல் , கற்பியல் ; தொல்காப்பியமும் பொருளதிகாரித்தில் களவியல் , கற்பியல் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது ;

களவு = திருமணத்திற்கு முன் தலைவன், தலைவி இடையேயான காதல் வாழ்க்கை ; 
கற்பு  = திருமணத்திற்கு பின் தலைவன், தலைவி இடையேயான திருமண வாழ்க்கை ; Thats All !!

சும்மா அடிச்சு விடாத ... Where is the proof ?? அதுதானே உங்க கேள்வி ? தொல்காப்பியம் தரும் தரவுகள் இதோ ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 1:

முதல் செய்யுளே கற்புனா என்னனு சொல்லிடுத்து

"கற்பு எனப்படுவது கரணமொடு புணர,
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே."

கரணம் = சடங்கு (திருமணச் சடங்கு ) ; இங்க நடக்குறது love cum arranged marriage ; காதல் இரு வீட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரு வீட்டு சம்மதத்துடன் சடங்கோடு நடைபெறுவது ; இன்னொரு விசயம் இதுல என்னனா ,

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை = இரண்டு பேரும் ஒத்த குலம் அல்லது திருமணம் செய்து கொள்ள தகுதி உடையவர்கள் ; இங்கு சாதி பற்றி பேசப் படவில்லை என்பது மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டியது ; கொடைக்கு உரி மரபினோர் = பெற்றோர்கள் ;

ஆக, கற்பு என்பது திருமணம் செய்து கொள்ள தகுதியான இருவர் அவர்தம் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் சடங்குகளோடு  சேர்வதே ; அதன் பின் அவர்கள் இணைந்தது வாழ்வதே...

காதலுக்கு வில்லன் இல்லனா எப்பிடி ? பெற்றோர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை ? தலைவி என்ன செய்வாள் ? தலைவன் என்ன செய்ய்வான் ? நீங்க சம்மதிக்கலனா என்ன ? நாங்களா திருமணம் செய்து கொள்கிறோம் என்று தாமாகவே செய்து கொள்வர்; இதுவும் கற்புதான் ;

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : கற்பியல்: செய்யுள் 2:

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான."

கொடுப்போர் இன்றியும் = பெற்றோர் சம்மதம் இல்லமால் ; அவர்களும் இல்லாம ; கரணம் உண்டே = still திருமணச் சடங்கு உண்டு ; புணர்ந்து உடன் போகிய காலையான = தலைவி தலைவனுடன் சேர்ந்து உடன்போக்கு மேற்கொண்டால் ;

அது என்னையா உடன் போக்கு ? : தலைவனுக்கும், தலைவிக்கும் காதல் ; முதல்ல இரகசியமா இருந்தாது மெதுவா வெளியவருது ; தலைவி வீட்டுல காதலுக்கு ஒப்புதல் தரல ; அவளும் ரொம்ப போராடிப் பாக்குறா ;ஒண்ணும் நடக்குற மாதிரி தெரியல ; தலைவனும் வந்து பேசிப் பாக்குறான் ; பெண் வீட்டுல NO சொல்லிடராங்கா ; தலைவிக்கோ அவனை மறக்க முடியல ; இருவரும் சேர்ந்தது ஒரு முடிவுக்கு வருகிறார்கள் ; தலைவி தலைவனுடன் சேர்ந்தது வீட்டை விட்டு அவனுடன் சென்று விடுகிறாள் ;

இதுதான் உடன்போக்கு ; எவ்வளவு அழகான வார்த்தை ; இப்ப நாம எப்பிடி சொல்லுறோம் இத "ஓடிப் போய்டா" :((

சரி, அப்பிடி அவன் உடன் சென்று பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணமும்  கற்புதான் !!

அது எல்லாம் சரிதான் !! கரணம் = சடங்கு ; அப்பவும் இதே மாதிரி மந்திரம் ஓதி, அம்மி மிதித்து, அனுஷ்காவப் (அருந்ததி) பார்த்துதான் திருமணம் நடந்துச்சா ? எதுக்காக இந்த சடங்கு ? அது தமிழ் பண்பாடா ??

அதுக்கும் பதில் சொல்லுறாரு Mr.தொல்.. ஊரெல்லாம் கூட்டி இந்த மாதிரி சடங்கு செய்யாம இருவர் மட்டுமே சேர்ந்து தெய்வம் சாட்சியாக நடைபெறும் திருமணத்திர்க்கு கந்தர்வ மணம் என்று பெயர் ; என்ன பிரச்சனைனா ? யாரும் சாட்சி இல்ல ; கொஞ்சம் நாள் இருந்துட்டு அப்புறம் நீ யாருனே எனக்குத் தெரியாது சொல்லிட்டு போக ஆரம்பிச்சுடாங்க ; அதுலாம் வராம இருக்கத்தான் இந்த சடங்கு வந்துச்சு ;

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.

ஐயர் = பெரியவர் ; இப்ப இருக்க அய்யர் இல்ல ; அது கடைச் சங்க காலம் ; மக்கள் நால் வகை வருனமாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர் ; அரசனும் , அந்தணனும் கந்தர்வ மணம் என்ற பெயரில் நிறைய advantage எடுத்ததால் வந்ததே இது என்று கருதலாம்...

சடங்குன்னு சொன்னா போதுமா ? திருமணம் எப்பிடி நடந்துச்சு ? கொஞ்ச நால் முன்னால என்னோட முகநூல் பக்கத்துல "சங்க இலக்கியத்தில் ஒரு முதலிரவுப் பாடல்" அப்பிடின்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன் ;அந்தப் பாட்ட பார்த்தா போதும் ;

"மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்

சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து – கடவுள் பேணி
படு மண முழவொடு – பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – விதுப்புற்று

பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகைப் – புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த பயம்பு – அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் – தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு – வெண் நூல் சூட்டி
தூஉடைப் பொலிந்து – மேவரத் துவன்றி
மழை பட்டன்ன, மணல் மலி பந்தர்"

மைப்பு அறப் புழுக்கின் – நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு – புரையோர்ப் பேணி

மைப்பு = கசடு ; வரையா வண்மை = வரம்பு இல்லாம; புரையோர் = உறவினர்கள் ;

புழுக்கல் அரிசி தான் இறைச்சிக்கு ஏற்றது; கசடு நீக்கிய இறைச்சி + வெண் சோற்றில் எள்-நெய்  ஊற்றி வரம்பு இல்லாம உறவினர்களுக்கு சோறு போட்டு.....




புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, 

விசும்பு = வானம் ; திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்காங்க! விடிகாலையில் பறவைகளின் ஒலி; விடியலின் ஒளி..

திங்கள் – சகடம் மண்டிய, துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுள் பேணி

திங்கள்-சகடம் = நிலவு-உரோகிணி என்னும் விண்மீனுடன் கூடிய ஓரையில்.. (Constellation) திருமணத்துக்கு நல்ல நாள்; “நல்ல நாள்”-ன்னா என்ன? = எரி நட்சத்திரம் & அனல் இல்லா நாட்கள்; கடவுள் பேணி = கடவுளை வணங்கி…

படு மண முழவொடு, பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர், விதுப்புற்று
பூக்கணும் இமையார் ,நோக்குபு மறைய

மண முழவு = கல்யாண மேளம்; பரூஉப் பணை = பெரிய முரசு
எல்லாரும் வைச்ச கண் வாங்காமல் “அவளையே” பார்க்க

மென் பூ வாகைப், புன் புறக் கவட்டிலை
பழங் கன்று கறித்த, பயம்பு அமல் அறுகைத்

கவட்டிலை = கவர்த்த இலை (இரட்டைக் கொத்தாய், இலை)
அறுகை = கன்றுகள் மேய விட்டுக் கடித்த அறுகம் புல்!

தழங்கு குரல் வானின், தலைப் பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன, மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு , வெண் நூல் சூட்டி

பருவ காலத்தின் முதல் மழை; அப்போ முளைச்ச மஞ்சள் கிழங்கு!
வாகை இலை + அறுகம் புல் + மஞ்சள் கிழங்கு
= மூனும், வெள்ளை நூலிலே, பூவோடு ஒன்னாக் கட்டி..  (பந்தக்கால்)


தூஉடைப் பொலிந்து, மேவரத் துவன்றி
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்
இழை அணி சிறப்பின்…

தூய ஆடை உடுத்தி, மணல் பரப்பிய பந்தலிலே… மழை படபட -ன்னு கொட்டுவது போல் கெட்டி மேள ஒலி
 இழை = Fibre; நூல் போன்ற அணிகலன் (பனை ஓலையால் செய்த அணிகலன் )
 இழை அணி சிறப்பின் = சிறப்பான “அணிவிப்பு”.. திருமண நாள் அன்றைக்கு மட்டும் அணிவிக்கப்பட்ட ஒரு மங்கல அணி; வாழ்நாள் முழுவதும் இல்லை

அவ்ளோ தான் திருமணம்; அக்னி  எல்லாம் ஒன்னுமில்ல; ! புரோகிதர் இல்லை!

so, தொல்காப்பியம் சொன்ன மாதிரிதான் பழந்தமிழர் திருமணம் நடந்து இருக்கு ; திருமண வாழ்வும் (கற்பு ) நடந்து இருக்கு ;

அதுவேதான் இன்னிக்கு வேற பொருளில் பெண்ணுக்கான ஒரு பண்பா ஆகிடுச்சு !! இனிமே யாரவது பெண்ணியம் பேசுறேன்னு வந்து கற்பு, கற்ப்புக்கரசினு பேசினா வேலையைப் பாத்துட்டு போனு சொல்லிடுங்க !!

ஆணும், பெண்ணும் திருமணம் புரிந்து மனம் ஒன்றி அன்பும் அறனுமே இல்வாழ்வின் பண்பும் பயனும் எனப் புரிந்து வாழ்வதே கற்பு ; அது பெண்ணின் உடலில் இல்லை ..நம் இலக்கியங்கள் அவ்வாறு கூறவும் இல்லை ; 

உங்கள் கருத்துக்களை commentடி விட்டுச் செல்லாம்..

நன்றி !!

உசாத்துணை : 
தொல்காப்பியம் - பாவலரேறு ச.பாலசுந்தரம் உரை - தமிழ் இணையக் கல்விக்கழகம் 
பெண் ஏன் அடிமையானாள் - தந்தைப் பெரியார்
தமிழ்க்காதல் - வ.சு.ப. மாணிக்கம் 
dosa365 - கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)

Tuesday, January 6, 2015

முக்கூடற் பள்ளு IV - மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

வணக்கம் நண்பர்களே !!

இன்று நானிருக்கும் இடத்தில் பனிப் பொழிவு ; இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு. முன் இரவே weather.com, weatherBug, போன்றவற்றைப் பார்த்து பனிப்பொழிவை எதிர்கொண்டாய்யிறு. அங்க நம்ம ஊர்ப் பக்கமும் இப்பலாம் இப்பிடித்தானே ; நம்ம ரமணன் சொன்னாத்தான் மழை வருதா ? புயல் வருதான்னு தெரியும் நமக்கு ; மனிதன் மட்டுமே பள்ளி, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொண்டுள்ளான் ; பறவைகள் , விலங்குகள் எப்பிடி மழை, புயலை அறிந்தது கொள்கின்றன? நம்ம முக்கூடல இருந்த பள்ளன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி என்ன பண்ணி இருந்துருப்பாங்க ?

Swadesனு ஒரு ஹிந்தி மொழிப் படம் ; நம்ம சாருக்கான் நாசால வேலை செய்வாரு ; ஒரு கிராமத்துக்கு வந்து இருக்கும் போது நீங்க என்ன வேலை செய்யுறிங்க அமெரிக்காவில் அப்பிடின்னு ஒரு கேள்வி வரும்; அவரு அதுக்கு நான் வானத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பி வானிலையைக் கணிக்கறேனு சொல்லுவாரு ; அப்ப அந்த கிராமத்துல இருக்க ஒருத்தரு வானத்தப் பார்த்தே மழை வரும் வாராதுன்னு கணிச்சு சொல்லிடுவாரு :) பட இணைப்பைப் பாருங்க :))




இன்னிக்கு நாம பாக்கப் போறது இததான் ; எப்பிடி குறிகளை வைத்துக் கொண்டு மழை, வெள்ளம் வரப் போறத கணித்தார்கள்  ; சுவையான பாடல் ; இசையோட பாடலாம் ; பாடிப் பாருங்க ..

"ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
      யாள மின்னல் ஈழமின்னல்
      சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
      நீர்ப்படு சொறித்த வளை
      கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
      தேடியொரு கோடி வானம்
      பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க் 
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
      துள்ளிக் கொள்வோமே."

விளக்கமே வேணாம் இந்தப் பாட்டுக்கு ; ஆனாலும் கொஞ்சம் பேசணும் ;

நாளைக்கு ஆத்துல வெள்ளம் வர மாதிரி இருக்கே... எத வைச்சு சொல்லுறான் ? மின்னல வைச்சு ; மலையாள மின்னல் , ஈழ மின்னல் - அப்பிடின்னா ? மலையாள மின்னல் => கேரளம் => மேற்கு பக்கம் ; 
ஈழ மின்னல் => தெற்கு பக்கம் ; 
பெருசா ஒண்ணும் இல்லைங்க ; தென்மேற்கு பருவ மழை வரப்போகுது ;
இதச் சொல்ல ரமணனன் வேணுமா இல்ல நாசா வேணுமா?  :)) ஒத்த வரில எப்பிடி சொல்லிட்டான் பாருங்க !!

மலையாள மின்னல் , ஈழ மின்னல் ; இப்பிடிலாம் நாம பேசுறது இல்ல ; காத்து பத்தியாவது கொஞ்சப் பேரு
பேசுறாங்க ; காற்று வீசும் திசையைப் பொறுத்து காத்துக்குப் பேரு இருக்கு ; வடக்கு = வாடை; தெற்கு = தென்றல்
கிழக்கு = கொண்டல்/கீழைக் ; மேற்கு = கோடை/மேலைக் காற்று ; சரி பாட்டுக்குப் போவோம்..

நேத்துக்கும் , இன்னிக்கும் கொம்பு சுத்தி காற்று அடிக்குதாம ;
காற்று அடிக்குது , சரி, அது என்ன கொம்பு சுத்தி ??

கொம்பு = நீளமான குழல் மாதிரி இருக்க வாத்தியம் ; கேரளாப் பக்கம் நிறைய வாசிப்பாங்க ; ஊதுனா நீண்டு ஒலிக்கும் ;ஊதி முடிச்ச அப்புறமும் உய்ய்ய்ய்ய்ங் ன்னு கொஞ்சம் நேரம் காதுல ஒலிச்சுடே இருக்கும் ; அதுமாதிரி உய்ய்ய்ய்ய்ங், உய்ய்ய்ய்ய்ங்ன்னு காற்று அடிக்குது !!


கேணி இங்க குளம் நம்ம வீட்டுக் கிணறு இல்ல; குளத்துல இருக்க சொறித்தவளைலாம் ஒரே சவுண்ட் கொடுக்குது ;எதுக்கு ? தென்மேற்கு பருவ மழை வரப்போகுது (ஆடி மாசம்)... தவளையோட இனப்பெருக்க காலம் ; அதோட சோடியக் கூப்பிடுது !!

நண்டுக்கு கொஞ்சம் பயம் ; வயல்ல வளை தோண்டி அதுல இருக்குது ; மழை பெருசா வந்து வெள்ளம் வந்துச்சுனா வளைக்குள்ள தண்ணி வந்துரும் ; அதுனாலா சேறு பூசி வளையை அடைக்குது ; safety first :)

நீர்த்துளியை உண்ணும் வானம்பாடிப் பறவைகள் ஒரு கோடிக்கணக்கான கூட்டம் மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றது;

கடைசி வரியை விட்டுருவோம் ; எல்லரும் ஆடி பாடுவோம்னு சொல்லுறாங்க அதுல ;

எவ்வளவு எளிமையான பாடல் ; ஆனா நுட்பம் பாருங்க ; தவளை, நண்டு , வானம்பாடி இதுபோதும் ;பெரிய மழை வரப் போகுது ; அதுனால வெள்ளம் வரப் போகுதுன்னு கண்டு பிடிச்சாச்சு !! நம்ம என்னடானா ????


நன்றி,
ஆசிப் 

முக்கூடற் பள்ளு - III - நீயா - நானா ?

வணக்கம் நண்பர்களே !!

முக்கூடற் பள்ளு என்னும் சிற்றிலக்கியம் தரும் பேரின்பத்தில் இருந்து இன்னும் வெளியேற முடியவில்லை ; கதை மாந்தர்களின் அறிமுகங்களைப் பார்த்தோம் ; இனி அடுத்து வருவனவற்றைப் பார்ப்போம் ; இங்கு அழகன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி அவர்களது குடிப் பெருமையைக் கூறுகிறனர் ; அதில் ஒரு சில பாடல்களைப் பார்த்துவிட்டுச் செல்வோம் ;

பள்ளன் தன் பெருமை கூறல்:

ஒருபோ தழகர்தாளைக்
கருதார் மனத்தைவன்பால் 
      உழப்பார்க்குந் தரிசென்று
      கொழுப்பாய்ச்சுவேன்
சுருதிஎண் ணெழுத்துண்மைப் 
பெரியநம் பியைக்கேளாத்
      துட்டர்செவி புற்றெனவே
      கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்றெட்டும்
மருவி வலம்செய்யார் தம்
      பேய்க்காலை வடம்பூட்டி
      ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால்மா டுகளாக்கித் 
      தீத்தீயென் றுழக்கொலால்
      சாத்துவே னாண்டே.”

பள்ளன் அழகர் அபிமானி. அழகர் அபிமானிகளாக இல்லாதவரை எவ்விதம் தண்டிப்பேன் என்பதற்குப் பாட்டுச் சொல்கிறான்... கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..

ஒப்பற்ற செந்தாமரைமலர் போன்ற அழகரின் திருவடிகளை நினையாதவர் மனத்தை முரம்பு நிலத்தில் உழுவதற்குக் காணப்படுகின்ற தரிசு நிலமென்று கருதிக் கொழுவினைப் பாய்ச்சி உழுவேன்; அரிய நூல்களிலுள்ள மதிப்பிற்கு உரிய இலக்கிய உண்மையை எங்கள் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத தீயோருடைய செவிகளைத் தரிசு நிலத்திலுள்ள புற்றுகளை யான் வெட்டுவது போலவே மண்வெட்டிக்கொட்டால் வெட்டுவேன்; பெருமாளுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளையும், மனத்தில் மருவி வலஞ்சுற்றி வராதவருடைய பேய்த்தன்மை வாய்ந்த கால்களை வடம்பூட்டி ஏர்க்காலிற் சேர்ப்பேன்; திருவாய்மொழியைப் படியாதவரை இரண்டு கால் மாடுகளாகக்கொண்டு தீத்தீ யென்று அதட்டித் தார்க் கோலால் சாத்துவேன் நயினாரே..

மூத்த பள்ளி தம் பெருமை கூறல்:

உத்தர பாக மான
சித்திர நதிக்குத் தென்பால்
ஓடும் பொருநையுடன் 
கூடும் போதே
அத்தனை காலமுந் தொட்டு
இத்தனை காலமுங் கண்டு
அடியடி வாழையாய்நான்
குடியில் வந்தேன்
பத்திலே பதினொன் றாக
வைத்தா னில்லைக் குடும்பன்
பண்டே சரடுகட்டிக் 
கொண்டான் என்னை
முத்தமிழ் நாட் டழகர்
கொத்தடி யானுக் கான
முக்கூடல் மூத்தபள்ளி
நானே யாண்டே.”

இந்த பழத்துல ஊசி ஏத்துறது தெரியுமா ? அதத்தான் செய்யுறா மூத்த பள்ளி ;

வடக்கே சித்தரா நதின்னு ஒரு சிற்றாறு ஓடுது ; அது தெக்கால இருக்க பொருநை நதிகூட கலக்குது. அது இன்னிக்கு, நேத்து நடக்குறது இல்ல ; காலங் காலமா நடக்குறது ; அந்தக் காலத்துல இருந்தது வர நல்ல குடும்பத்துல வாழையடி வாழையா வந்தவ நான் ; என்னை அழகன் பத்தோடு பதினொன்னா கூட்டிட்டு வந்து வைச்சுகல , என்னை முதலிலேயே தாலிகட்டித் தன் மனைவியாகக் கொண்டான் ; முத்தமிழ் நாடாகிய இந்தத் திருமுக்கூடலி லெழுந்தருளி யிருக்கும் அழகருக்குக் கொத்தடியானாகிய என் தலைவனுக்குப் பொருத்தமான முக்கூடல் மூத்தபள்ளி நானேஆண்டே ;



இளைய பள்ளி::

மூத்த பள்ளி தன் பெருமை கூறியதும் இளைய பள்ளி சும்மா இருப்பாளா ?

"செஞ்சிக்குங் கூடலுக்குந் 
தஞ்சைக்கும் ஆணை செல்லும்
      செங்கோல் வடமலேந்த்ரன்
      எங்கள் ஊரே
நெஞ்சிற் குறித்த குளம்
அஞ்சுக்குஞ் சக்கரக் *கால்
      நிலையிட்ட நாளிற்பண்ணைத்
      தலையிட் டேன்நான்
கஞ்சிக்குந் தன்னிலே தான்
கெஞ்சிப் புகுந் தவளல்ல
      கண்டாசைப் பட்டேகொள்ளும்
      பெண்டா னவள்
மஞ்சிற் கறுப் பழகர்
தஞ்சைப்பள் ளனுக் கேற்ற
      மருதூர் இளையபள்ளி
      நானே யாண்டே."

மதுரை யென்ன தஞ்சை யென்ன செஞ்சிக் கோட்டை யென்ன அங்கெல்லாந் தனது ஆணை செல்லும்படியான செங்கோல் முறைவழுவாத வடமைலையப்பப் பிள்ளையன் என் ஊர்தான். அவர் மனத்திற் குறிப்பிட்டுத் தோண்டிய ஐந்து குளத்திற்கும் திருவாழிக்கல் நட்டுக் கால்கொண்ட நாளிலேயே நான் இந்தப் பண்ணையில் வந்து சேர்ந்தேன். நான் மூத்தவ மாதிரி கஞ்சிக்கு ஆசைப்பட்டு கெஞ்சிட்டு வந்தவ இல்ல ; அவன் என்னப் பாத்து ஆசைப்பட்டு காதலித்து

மூத்த பள்ளி நகர் வளம் கூறல் :

இளையவ சீண்டி விட மூத்தவளுக்கு கோவம் வந்து அவ ஊருப் பெருமையைச் சொல்லுறா ;

"கொண்டல் கோபுரம் அண்டையிற் கூடும்
      கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டந் தண்டலை நாடும்
      கனக முன்றில் அனம்விளை யாடும்
விண்ட பூமது வண்டலிட் டோடும்
      வெயில்வெய் யோன்பொன் னெயில்வழிதேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
      அழகர் முக்கூடல் ஊரெங்கள் ஊரே."

கொண்டல்= மேகம் ; அவ ஊர்ல இருக்க கோபுரங்கள் மேகத்தைத் தொடுமம்மா ; அந்த கோபுரத்து மேல இருக்க கொடிகள் அந்த மேகத்துக்கு மேல போய் ஆடுமாம் ; தண்டலை = சோலை ; ஊர்ல இருக்க சோலைகளில் இருக்கும் மரங்கள் மேகத்தைத் தொடும் அளவு வளர்ந்தது அதற்கும் மேல உள்ள மேலுலகத்தை அடைய விரும்பி மேலும் வளரும் ; அந்தச் சோலையில் அன்னப் பறவைகள் சேவலும் , பேடையுமாக விளையாடும் ; இதழ் விரிந்தத பூக்களில் இருந்தது தேன் வழிந்தோடும் ; வெயில் வீசுகின்ற கதிரவன் அங்கு உள்ள பொன்வண்ணமான கோட்டைகளில் அம்பு எய்ய அமைத்துள்ள துளை வழியே நுழைந்து போவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கும்; தேவர்களுக்கெல்லாந் தலைவரும், செண்டு என்ற படைக்கலக் கருவியைக் கைப்பிடித்த அழகருமாகிய முக்கூடலழகரின் திருமுக்கூடல் ஊர் எங்கள் ஊராகும்...

உடனே இளைய பள்ளி, இது என்ன பிரமாதம் , எங்க ஊரு எப்பிடினானு ஆரம்பிக்கிறா

"சங்கம் மேடைகள் எங்கும் உலாவும்
      தரங்க மீன்பொன் னரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும்
      தெருக்கள் தோறும் மருக்களைத் தூவும் 
பொங்க ரூடிளம் பைங்கிளி மேவும்
      பூவை மாடப் புறாவினங் கூவும்
வங்க வாரிதி வெங்கடு உண்ட
      மருதீசர் மருதூ ரெங்கள் ஊரே."

சங்குகள் மேடைகள் முதலிய எல்லா இடங்களிலும் உலாவித் திரியும்; நீரில் கொந்தளிக்கின்ற அலைகளிலுள்ள மீன்கள் அழகிய பென்னரங்கங்களிலே தாவிப் பாயும்; நிலாவானது சோலையிலுள்ள மரங்களை அராவிக்கொண்டு செல்லும்; அத்தகைய உயர்ந்த சோலைகள் தெருக்கள் தோறும் மருவாகிய பூந்தாதுகளைத் தூவும்; பொங்கர் எனப்படும் சோலைகளினூடே பச்சைக் கிளிகள் துணையுடன் அமர்ந்திருக்கும்; அதைக் கண்ட நாகணவாய்ப்புட்களும்
மாடப் புறாக்களும் பிரிந்துசென்ற தங்கள் துணைப் பறவையைக் கூவும்; மரக்கலஞ் செல்லுங் கடலில் தோன்றிய வெப்பமான நஞ்சினையுண்டு
திருமால் முதலியவர்களைக் காத்த மருதீசருடைய திருமருதூர் எங்கள் ஊராகும்;

சும்மா விடுவாளா மூத்தவ !!

"கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
      கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
      திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
      குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
      வளமை ஆசூர் வடகரை நாடே."

வடகரையில் உள்ள, வளம் மிக்க ஆசூர் நாடு என் நாடு அது, பெருமை பெற்றது. அந்த நாட்டில் கறை என்பதைத் திங்களில் மட்டுமே காணலாம்.
கடம் பட்டிருப்பது = கட்டப்பட்டிருப்பது, மதங் கொண்ட யானை மட்டுமே. சிறைப்பட்டவை பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய் விளக்கு
ஏற்றுவதற்காகத் திரிக்கப்பட்ட திரி மட்டுமே, குறைப்பட்டிருப்பது கொத்தப்படுவதால் குறைபட்ட கம்மாளர்களின் அம்மி மட்டுமே.
குழைத்திருப்பது பூங்கொடிகளும் பூங்கொத்துக்களும் மட்டுமே, மறைக்கப் பட்டிருப்பது உயர் செய்யுள்களின் பொருள் மட்டுமே. இவையல்லால், பிற குறைகள் ஏதுமில்லா நாடு எங்கள் நாடு என்கிறாள் மூத்த பள்ளி... !!



அருமை , அருமைனு நாம சொல்லும் போதே இளைய பள்ளி மறுபடியும் ஆரம்பிக்குறா ;

"காயக் கண்டது சூரிய காந்தி
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
      மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
      தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடுஞ் சந்தனம்
      சீவல மங்கைத் தென்கரை நாடே."

தனது நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டில் சூரியன் மட்டுமே காய்வான், கட்டித் தயிர் மட்டுமே மத்தால் கடையப்பட்டுக் கலங்கும்.
அழிந்து போவது நாழிகைகளும் கிழமைகளுமே, சுழன்று வருவது வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே, சுமை தாங்காமல் சாய்ந்தது நெற்கதிர்
மட்டுமே, தவம் செய்வோர் மனம் மாட்டுமே ஆசைகள் ஒடுங்கி இருப்பது, தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே என்கிறாள்..

இவ்வாறே தமிழ் பாடி விளையாடுகிறார்கள் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும். அது பாட்டுக்கு ஒரு 25 பாட்டு இது மாதிரியே போகுது ;

நாம இந்த விளையாட்டை இதோட நிறுத்திட்டு அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம் ;

நன்றி
ஆசிப்