Saturday, October 3, 2015

மாதவி அலங்காரம் !!

மாதவி அலங்காரம் !!

வணக்கம் நண்பர்களே !!

சிலப்பதிகாரம் படிப்பதையோ, பேசுவதையோ "தேரா மன்னாவோடு" நிறுத்திக் கொள்ளக் கூடாது. முழுவதும் படித்து கதை மாந்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் பொருளோடு சுவையும் விளங்கும். எனக்கு எப்போது மாதவிதான் மனதிற்கு நெருக்கமான கதை மாந்தர். கலையரசி அவள். அகத்திய முனிவரின் சாபத்தால் தேவலோகத்திலிருந்த ஊர்வசி பெண்ணாகப் பூமியில் பிறக்க, அந்த வழியில் வந்தவள் மாதவி. ஊர்வசியைப் போன்றே அழகும், நடனக் கலை அறிவு நிரம்பப் பெற்றவள். கோவலனும் , மாதவியும் மனத்தால் ஒன்றினைந்து இல்லறம் நடத்திக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.

புகார் நகரில் இந்திர விழா நடைபெறுகிறது. இந்திர விழா என்றால் எதோ கோவில் திருவிழா என எண்ணிக் கொள்ள வேண்டாம். அது நடைபெறும் போது விண்ணுலகத் தேவர்கள் மாறுவேடமிட்டு ரகசியமாய் வந்து பார்ப்பார்களாம். அதில் மாதவி ஆடுகிறாள் எனக் கேள்விப்பட்டதும் அக்கம் பக்கம் இருக்கும் 18 பட்டி மக்களும் வண்டிக் கட்டிக் கொண்டு வந்து விட்டனர். மாதவி ஆடினாள், பார்ப்பவர் வியக்கும் அளவிற்கு ஆடினாள்.. பார்த்தவர்கள் பார்த்துட்டு சும்மா இல்லாம நகர் முழுக்க மாதவியின் நடனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கோவலன் காதுக்கு இந்த விஷயம் வருகிறது.மாதவி அடுத்தவர் முன் ஆடியதைக் கேட்டு கோவம் கொள்கிறான். நடனம் ஆடி முடித்து வந்த மாதவிக்கு கோவலனின் கோவத்திற்கான காரணம் புரியவில்லை. அவனது ஊடலைப் போக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து அவன் மகிழ்ச்சி கொள்ளுமாறு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்.

பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,
ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,
நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;
புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி

பத்து வகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய தன் மணம் கமழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடிய பின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாப் பிரித்து, கஸ்துரி குழம்பினையும், ஜவ்வாதையும் அப்பகுதிகளுக்குத் தடவினாள்.

அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,

சிறிய அடிகளிலே செம்பஞ்சு குழம்பினைப் பூசினாள். நன்மை பொருந்திய மெல்லிய விரல்களில் காலாழி, மகரவாய், மோதிரம், பீலி போன்ற அணிகளை அணிந்தாள். காலுக்குப் பொருத்தமான பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் முதலான அணிகலன்களை அணிந்து கொண்டாள்.





குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து;

திரண்ட தொடைகளுக்கு குறங்கு செறி என்னும் அணியை அணிந்து கொண்டாள்.

பிறங்கிய முத்தரை முப்பத்து-இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ;

அளவில் பெரிய முத்துக்கள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விரிசிகை என்னும் அணியினை தன் இடையை
அலங்கரித்த பூ வேலைப்பாடு செய்த நீலப் பட்டாடையின் மீது மேகலையாக உடுத்தினாள்.

காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து;

அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்து வளையைத் தன் தோளுக்கு அணிந்தாள்.

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை,
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை,
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து;

வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம்,
கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி,
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து;

மாணிக்க மணிகளுடன் வயிரங்கள் பதித்துவைத்த சித்திர
வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் ஆன வளையல்கள் , நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பலவகை பவழ வளையல்கள் ஆகிய அணிகலன்களை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள். வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம், செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் கிளர்மணி
மோதிரம், சுற்றிலும் ஒளிபரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றை காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுவதும் மறைக்கும்படி அணிந்தாள்.

சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை,
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து;
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு;

வீரச்சங்கிலி , நுண்ணியத் தொடர் சங்கிலி, பூணப்படும் சரடு, புனைவேலைகள் அமைந்த சவடி, சரப்பளி போன்ற அணிகளை கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்து கொண்டாள். சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாய் சரிந்து தொங்கிய, அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது.




இந்திர-நீலத்து இடை இடை திரண்ட
சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அணிந்து;

இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட, குதம்பை என்னும் அணியை வடிந்த இரு காதுகளில்
அழகுற அணிந்து கொண்டாள்.







தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி,
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து;

சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிசங்கு, தொய்யகம், புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள்.


கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து,
பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்-

இப்படியெல்லாம் அணிகள் பல பூண்டு வந்து, கூடலும், ஊடலுமாய் மாறி மாறி இன்பம் அளித்து, பள்ளியறையிலே, கோவலனுடன் மகிழுந்திருந்தாள்  மாதவி. சும்மாவா சொன்னான் வள்ளுவன் "ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம், கூடி முயங்கப் பெறினு !!"


நன்றி !!
























Sunday, September 20, 2015

இட ஒதுக்கீடு - யாருக்கு நன்மை ?

இட ஒதுக்கீடு - யாருக்கு நன்மை ? 

வணக்கம் நண்பர்களே !!

சமீப காலங்களில் இட ஒதுகீட்டுக்கு எதிரான பிரசாரத்தை இணையவெளி எங்கும் காண முடிகிறது. இட ஒதுக்கீடு மூலம் படித்து வந்தவர்களே அதைத் தவறு எனப் பேச வைத்து அந்தப் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் பொதுப் பிரிவு/மேற் சாதி  மக்களின் இடங்களைப் பறித்துக் கொள்வது போன்றும், 90% மதிபெண்ணுக்கு மேல இருந்தும் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்பது போலவும் கருத்துப் படங்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதன் உள்ளர்த்தம் புரியாமலேயே , உண்மை அறியாமலேயே  அனைவரும் அதைப் பகிர்ந்து வருகின்றனர். உண்மை என்ன? இட ஒதுக்கீடு ஒரு பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கிறதா என ஆராயவோ, கேள்வி எழுப்பவோ யாருக்கும் நேரம் இல்லை. இட ஒதுக்கீடு தவறு, அதை நீக்கிவிட்டால் இந்தியா வல்லரசு ஆகிவிடும், அனைவருமே கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடலாம் எனபதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இட ஒதுக்கீட்டின் வரலாறுக்குப் போகமால் நடைமுறையை மட்டும் பார்ப்போம்.



உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50% க்கு உள்ளேதான் இருக்க வேண்டும். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு. உடனே தமிழகம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை எனக் கிளம்பிவிட வேண்டாம். அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கூறவே இந்தப் பதிவு.

மற்ற மாநிலங்களிலுள்ள 50% ஒதுக்கீடு எப்பிடி பகுக்கப்பட்டுள்ளது என்றால்,


  • அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் (SC)    - 15%
  • அட்டவனை பழங்குடி வகுப்பினர் (ST)            - 7.5%
  • இதர பின்தங்கிய வகுப்பினர் (OBC)                -27%
  • பொதுப் பிரிவு                                        -50.5%


இதிலேயே உண்மை தெரிந்து விடும். அந்த 90% மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்கவில்லை என்பவர்கள் தங்களுக்கெனத் தனியே 50.5% இட ஒதுக்கீடு வைத்திருக்கின்றனர். அதுதான் உண்மை. அப்புறம் ஏன் இடம் கிடைப்பதில்லை. அதையும் பார்ப்போம். சரி, தமிழகத்தில் இட ஒதுக்கீடு எப்பிடி பகுக்கப்பட்டுள்ளது?

பிற்படுத்தப்பட்டோர் (BC)                              - 26.5 %
பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமியர்              - 3.5 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)                 - 20%
அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் (SC)              - 15%
அட்டவனைப் வகுப்பினர் (SC)-அருந்ததியினர்      - 3%
அட்டவனை பழங்குடி வகுப்பினர் (ST)                      - 1%
                                                            -------
                                                               69%
                                                             -------
பொதுப் பிரிவு                                               - 31%

ஆக தமிழகத்திலும் அதிக ஒதுக்கீடு பொதுப் பிரிவிர்க்கே. அந்த 19% எங்கனு கேட்டீங்கனா, ஒரு மாதிரியை வைத்துப் பார்ப்போம். ஒரு ஆண்டில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். அரசு முதலில் இரண்டு விதமான தர வரிசைப் பட்டியலைத் தயார் செய்யும்.

முதல் பட்டியல் 31%-69% விகிதத்தில் தயாரிக்கப்படும். அதாவது முதல் 31% = பொதுப் பிரிவு = எந்த ஒதுக்கீடும் இல்லை ; முதல் 31 ரேங்க் எடுத்தவர்கள். மீதி 69 இடங்கள் மேற்சொன்ன விகிதத்தில் தர வரிசையின் அடிப்படையில் இருக்கும். 

இன்னும் புரியும் படிச் சொன்னால் ; மொத்தம் 100 இடங்கள். அதில், தர வரிசையின் அடிப்படையில் முதல் 31 ரேங்க் எடுத்தவர்கள் (no caste based, just rank) + முதல் 26.5 பிற்படுத்தப்பட்டோர் + முதல் 3.5 பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமியர் + முதல் 20 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் + முதல் 15 அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் + முதல் 3 அருந்ததியினர் + முதல் 1 பழங்குடி வகுப்பினர்.

பாதிக்கப்பட்டேன் எனச் சொல்லும் முற்பட்ட சாதி மாணவர்கள் அந்த முதல் 31 பேரில் 15 பேர் இருக்கிறார்கள் எனக் கொள்வோம்.

இப்போது இதே போன்ற இன்னொரு பட்டியல் 50-50% விகிதத்தில் தயாரிக்கப்படும். தர வரிசையின் அடிப்படையில் முதல் 50 மாணவர்கள் + மேற்சொன்ன இட ஒதுக்கீட்டு விகித முறையில் 50 மாணவர்கள்.

முதல் பட்டியலில் 15/31 என வந்த முற்பட்ட சாதி மாணவர்கள், இரண்டாம் பட்டியலில் முதல் 50 மாணவர்கள் வரிசைப் படுத்தப்படும் போது 25  பேர் இருக்கிறார்கள் எனக் கொள்வோம்.

அதாவது பிற மாநிலங்கள் போல 50% இட ஒதுக்கீடு இருந்தால் 25  முற்பட்ட சாதி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். அனால் 69% இட ஒதுக்கீட்டில் 15 பேருக்குத்தான் கிடைக்கும். அனால் அரசு அவ்வாறு அவர்கள் பாதிக்கபடாமல் இருக்க அந்த மீதி 10 பேருக்கு மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என்னும் பிரிவில் இடம் கொடுக்கிறது. இந்த  மேல் அதீத இடங்களுக்கு முற்பட்ட சாதி மாணவர்கள் மட்டுமே தகுதி பெற முடியும். அதிக பட்சமாக மேல் அதீத இடங்கள் 19% வரை ஒதுக்க முடியும். ஆக 69% ஒதுக்கீடு இருந்தாலும் அதிலும் தனியே 19% மேல் அதீத இடங்கள் என முற்பட்ட சாதி மாணவர்களுக்கு மட்டுமே தருகிறது.

ஆக, முற்பட்ட சாதி மாணவர்கள் பொதுப் பிரிவு + மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என இரு பிரிவுகளில் இடங்களைப் பெற முடியும்.

ஆனாலும் ஏன் திரும்பத் திரும்ப நாம் இட ஒதுக்கீடு தகுதியற்ற மாணவர்களுக்கு இடம் கொடுத்து, 95% மதிப்பெண் பெற்ற தகுதியான முற்பட்ட சாதி மாணவனுக்கு இடம் தர மறுக்கிறது என்ற வாதத்தைக் கேட்கிறோம்?

உண்மை என்னவெனில் முற்பட்ட சாதி மாணவனுக்கு இடம் கிடைக்காமல் போவதற்கு இட ஒதுக்கீடு காரணம் இல்லை. எனதருமை பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட / அட்டவணை வகுப்பு மாணவர்கள்  முற்பட்ட சாதி மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்று முதல் 31 வரிசைக்குள் வந்து பொதுப் பிரிவில் இடம் பெற்று விடுகிறான். அதுதான் உண்மை !!

கடந்த 3-5 வருட 12 வகுப்பு முடிவுகளை எடுத்துப் பார்த்தால் இந்த உண்மை உங்களுக்கேத் தெரியும். தர வரிசைப் பட்டியலில் முதல் 31 ரேங்க்கும் முற்பட்ட சாதி மாணவர்கள் என்றால் அவர்கள் அனைவர்க்கும் கட்டாயம் இடம் கிடைக்கும்.

மக்கள் தொகை அடிப்படையில் முற்பட்ட சாதி மக்கள் அதிக பட்சம் 10% மட்டுமே. எனவே அவர்களுக்கு எந்த விதத்திலும் அநீதியோ, இரண்டாம் தரக் குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பதோ கடுகளவும்  உண்மையில்லை. தலைமுறை, தலைமுறையாக அடக்கி வைக்கப் பட்டிருந்தவர்கள் இன்று மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பொதுப் பிரிவில் இருப்பவர்களைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் தம் திறமையினால் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் மக்களே !!

ஓ , இன்னொரு விஷயம், ஐ.ஐ.டி / எ.ஐ.ம்.ஸ் போன்றவற்றில் மேற் சாதி மாணவர்களால் "இவன் கோட்டாவில் வந்தவன்" என இட ஒதுக்கீடு மூலம் தகுதியான மதிப்பெண் பெற்று வந்த ஒருவன் ஆண்டு முழுவதும் கிண்டல் செய்யப்படுவதைப் பற்றியோ, எல்லாத் தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காமல் நீதி மன்றம் சென்ற ஐ.ஐ.டி. ஆசிரியர் வசந்தா கந்தசாமி பற்றியோ எந்த மேற் சாதி மாணவனும் கவலைப் படுவதாகத் எனக்குத் தெரிய வில்லை.


நன்றி
ஆசிப்

Thursday, September 3, 2015

அனீக் பள்ளிக்கூடம் சேர்ந்த கதை.


அனீக் பள்ளிக்கூடம் சேர்ந்த கதை.

நான் பள்ளியில் சேர்ந்த நாள், இடம் கிடைத்த விதம் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்குச்  ஈரோடு செங்குந்தர் பள்ளிக்குச் சென்ற போது அப்போதைய பள்ளி முதல்வர் மாரிமுத்து திருக்குறளை எழுதியது யார் எனக் கேட்க நான் ஒளவையார் எனக்கூறி பள்ளியில் சேர்ந்தேன் (அப்பவே அப்பிடி!!). 12-ஆம் வகுப்பு, கல்லூரி இளம்கலை/முதுகலை படிப்பிற்கு  நானே தனியாய்ச் சென்று சேர்க்கைப் பெற்றேன். "அபியும் நானும்" படம் பார்த்த போது பின்னாளில் என் மகனையோ/மகளையோ  பள்ளியில் சேர்க்கும் போது பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எண்ணியிருந்தேன். சென்னையில்/மற்ற பிற நகரங்களில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது எவ்வளவு கடினம் என அறிந்தும் இருந்தேன். LKG -இல் சேர்த்தால்தான் உண்டு. முதல் வகுப்பில் வேறு பள்ளியில் இடம் வாங்குவதெல்லாம் யூனிகார்ன் கொம்பு. அதை இன்று எப்பிடி செய்தேன் என்பதே இப்பதிவு.

வட அமெரிக்காவில் பெரும்பான்மை அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகளும் உண்டு அவை பெரும்+பெரும் பணம் கொண்டவர் மட்டுமே சேர்வார்கள். அரசே மிகத் தரமான இலவசக்  கல்வியை கல்லூரி வரைக் கொடுக்கிறது. இந்தியா போல் இரண்டரை வயதில் புத்தக மூட்டையுடன் குழந்தைகளை பள்ளி அனுப்ப முடியாது. ஐந்து வயதில்தான் ஒரு வருட பாலர் வகுப்பு (kinder  Garden ), பின் 1-12 வகுப்புக்கள். சிறிய மாறுபாடுகளுடன் இவ்வாறு இந்திய பள்ளி வகுப்புடன் ஒப்பீட்டுக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் பாலர் வகுப்புச் செல்ல sep 30 அன்று 5 வயது ஆகி இருக்க வேண்டும். அப்பிடியெனில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வகுப்பில் சேரலாம். அனீக் நவம்பர் மாதம் பிறந்ததால் சென்ற வருடம் (2014-sept ) பாலர் வகுப்பை ஆரம்பிக்க முடியவில்லை. இன்று வரை அனீக் முறையான அரசுப் பள்ளிக்குச் செல்லவே இல்லை; ஐந்து வருடமும் ப்ளே ஸ்கூல் எனப்படும் பாலர் வகுப்பிருக்கு முன்னான நிலையில்தான் இருந்தான். என்னைப் பொறுத்த வரை எனக்கு அது மகிழ்ச்சியே. இதுநாள் வரை வாரம் ஐந்து நாட்கள் அரை நேரம் மட்டுமே ஒரு தனியார் montessori  பள்ளி சென்று கொண்டு இருந்தான்.

இப்போது கனடா வந்தாயிற்று. இந்த ஆண்டு பள்ளி சேர்க்க வேண்டுமே எனப் பார்த்த போது கனடாவில் இரு ஆண்டு பாலர் கல்வி (LKG & UKG pattern) எனத் தெரிந்துகொண்டோம். என்னடா  இது என எண்ணிக் கொண்டே பள்ளி சேர்க்கை வரவேற்பு நிலையத்திற்குச் இன்று சென்றோம். அங்கு உள்ள ஆசிரியர்கள் அனீக்கை பரிசோதித்து சேர்க்கை அளிப்பார்கள். நானும் அலெக்சாண்டர் குதிரை பேரேல்லாம் தெரிந்து கொண்டு தயாராய் சென்றேன்.

சரியாய் பத்து மணிக்குச் சென்று விட்டோம். சில பல
விண்ணப்பப் படிவங்களைத் தந்தார்கள். அனைத்திலும் தமிழ் மொழி இருந்தது. ஓ ! இது தமிழ்நாடு இல்லையென உறுதி படுத்திக்கொண்டு அவைகளை நிரப்பிக் கொடுத்தேன்.சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்து குடும்பம் பற்றியும் அனீக் பற்றிய விவரங்களைக் கேட்டார்கள். அதற்குப் பின் அனீக் தேர்வு எழுத அழைக்கப்பட்டான். கணிதம், ஆங்கிலம் (எழுத/படிக்க​), வரைதல், போன்றவற்றை செய்யச் சொன்னார்கள். நாங்கள் ஒரு 40 நிமிடம் வெளியேக் காத்து இருந்தோம். அனீக் அனைத்தையும்  மிகச் சிறப்பாக செய்து முடித்து விட்டான். அதன் பிறகு எங்களைச் சந்தித்த அந்த ஆசிரியை அனீக் முதல் வகுப்பிற்கே தயாராய் இருக்கிறான். அதிலே சேர்த்து விடலாம் என்று சொல்லி விட்டார்கள்.

என் வீட்டருகே இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுத்தார்கள்.அப்போதும் தமிழில் நிறைய புத்தகங்களைப் பார்த்தேன். இன்னொரு முக்கியத் தகவல் மாணவர்கள் பள்ளியில் ஆங்கிலம்/பிரெஞ்சு கற்றுக் கொள்வார்கள். அதன் பின்னும் வாரம் ஒரு நாள் (சனி) வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்களே வசதி பண்ணுகிறார்கள். தாய் மொழியையே எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அனீக் வாரா வாரம் சனிக்கிழமை மூன்று மணி நேரம் தமிழ் மொழி வகுப்பிற்கு செல்ல வேண்டும். வெளி நாட்டில் இருந்து வரும் குழந்தைகள் தங்களுடைய தாய் மொழியை மறவாமல் இருக்கவும், புலமை பெறவும் இந்த வகுப்பு. நான், எங்கள் தமிழ் நாட்டில் ஒரு குழந்தை தாய் மொழியைப் படிக்காமலேயே மருத்துவம் வரை படிக்க முடியும் என்றேன். அது எப்பிடி முடியும் என்றார்கள் ? அது அப்படித்தான் என்று கூறிவிட்டேன்.

பள்ளி பற்றிய விவரங்களைக் கொடுத்து விட்டு (குளிர் கால உடைகள், உணவு, நேர அட்டவணை, இன்ன பிற) செப்டம்பர் எட்டாம் தேதி அனீக் ஒன்றாம் வகுப்பில் (No LKG/UKG ) சேர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். அத்துடன் எங்கள் வேலை முடிந்து விட்டது. அங்கு இருந்தே பள்ளிக்கு மாணவர் சேர்க்கை எண்ணை அனுப்பி விட்டார்கள். இந்தியப் பெற்றோரின் அடங்க முடியா ஆவலின் காரணமாக பள்ளிக்குத் தேவையான புத்தங்கள், நோட், பேனா, பென்சில் என்றவுடன்  அதெல்லாம் தேவை இல்லாத ஆணிகள் எதுனா வேணும்னா நாங்களே கொடுப்போம் இல்லைனா ஆசிரியரே சொல்லி அனுப்புவார் என்றார்கள். கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அனீக் தன் மகனையோ/மகளையோ பள்ளிக்கு அனுப்பும் பொது "நாங்களெலாம் LKG/UKG படிக்காமையே ஸ்ட்ரைட்டா ஒண்ணாம் க்ளாஸ் போனேன் எனச் சொல்லிக் கொள்ள முடியும்.

நன்றி ! வணக்கம் !
ஆசிப் 

Monday, July 20, 2015

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் - II

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் - II

வணக்கம் நண்பர்களே !

நேற்று வெட்சித் திணையில் ஆநிரை கவர்தலைப்  பார்த்தோம். ஆநிரையை பறி கொடுத்தவனுக்கும் , கவர்ந்தவனுக்கும் ஒரே ஆசை இதன் மூலம் அந்த நாட்டினைப்  பிடிக்க வேண்டும் என்பதே. நாட்டை விரிவாக்கும் நோக்கோடு வேந்தன் போர் தொடுக்கும் செயல்களைத் தொல்காப்பியம் வஞ்சித்திணை எனக் குறிப்பிடுகிறது. இது அகத்திணையில் ஒன்றான முல்லைத் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது. வஞ்சித் திணை என்பது, அடங்காத மண்ணாசையினாலோ அல்லது தன்னை மதியாத பகையரசனின் செருக்கை அடக்கவோ ஒரு மன்னன் மற்றொருவன் மேல் போர் தொடுப்பது ஆகும். போர்தொடுத்துச் செல்பவர் வஞ்சிப் பூவை சூடிச்சென்றதால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது.

தொல்காப்பியத்திற்குப் பின் வந்த புறப் பொருள் வெண்பாமாலை ஆநிரை மீட்பதை மட்டுமே ஒரு தனித் திணையாக் கூறுகிறது. அதுவே கரந்தைத் திணை.தொல்காப்பியத்தில் கரந்தைத் திணை தனியே கிடையாது. ஆனாலும் கரந்தையும் வஞ்சியும் ஒன்றல்ல. கரந்தை = ஆநிரை மீட்பது மட்டுமே ; வஞ்சி = நிலம்/நாட்டினைப் பிடிப்பது. 

ஆநிரை கவர்வதையே பல்வேறு திட்டங்களுக்குப்பின் செய்வார்கள் எனும் போது நாட்டைப் பிடிக்க என்னென்ன செய்வார்கள். தொல்காப்பியர் வஞ்சிப் போர்க்களக் காட்சிகளைப் பதின்மூன்று துறைகளாகத் தருகிறார்.



"இயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமையானும்,
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழியானும்,
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்,
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்
,குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,
அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ,
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே"


1. ‘இயங்கு படை அரவம்’ – வலுவான பெரும் படை புறப்படலும் அதனால் எழும் ஓசையும்.

2. ‘எரி பரந்து எடுத்தல் ’ – பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல்.

3.‘வயங்கல் எய்திய பெருமை’ – தனக்குத் துணையாக வரும் வேறு அரசர்களால் போரிடும் அரசன் பெருமை கொள்ளல்.

4.‘கொடுத்தல் எய்திய கொடைமை’ – வீரர்களுக்கு அரசன் பலவிதமான கொடைகளைத் தரல்.

5. ‘அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம்’ – பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல்.

6. ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ – அரசன் வீரர்களுக்குப் பட்டங்கள் தந்து சிறப்புச் செய்தல்.(நெடு மொழி – புகழ் மொழி மாராயம் – சிறப்பு )

7. ‘ பொருளின்று உய்த்த பேராண் பக்கம் ’ – பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல்.

8. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை – வெள்ளத்தைத் தடுக்கும் கல்லணை போல தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல்.

9. ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ - படைஞர்களுக்குப் பேருணவு வழங்குதல்.
(பாரதப் போரில் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் தமிழ் மன்னன்’ என்று எழுதியுள்ளார்கள் )

10 . ‘வென்றோர் விளக்கம் ’- வெற்றி பெற்ற வீரர்கள் ஒளியுடன் கொண்டாடுதல்.(இதுவே வாண வேடிக்கை , ‘பட்டாசு’ வெடித்தலுக்கு தொன்மைச் சான்று.)

11. ‘தோற்றோர் தேய்வு ’- தோற்றவர்கள் களையிழந்து சோர்தல்.

12. ‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை ’ – போர் வெற்றியைக் கொண்டாடும் ‘வள்ளைப் பாட்டு’ப் பாடுதல். (வள்ளைப் பாட்டு – உலக்கைப் பாட்டு ; உரல் பாட்டு .)

13. ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’ – பகைவர் ஏவிய ஆயுதங்களைத் தடுத்ததால் புண்பட்டுப்போன வீரர்களைப் பார்த்து நலம் கேட்டல்.

இத்தனையும் ஒரு அரசனின் மன்னாசைக்காக !! இதுபோல உண்மையாகவே  நடந்தா? நமக்கு எப்பிடித் தெரியும் ? இருக்கவே இருக்கு புறநானூறு. இதற்கும் ஒரு புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.

பாடல் 16 : செவ்வானும் சுடு நெருப்பும் ! பாடியவர் - பாண்டரங்க கண்ணனார் - பாடப்பட்டோன் - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - திணை - வஞ்சி

"வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,

மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,

துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம ல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே"

இக்கிள்ளியிடத்தே ஆற்றல் மிக்க பெரும்படை ஒன்று இருந்தது. பகைவர் நாட்டை விரைந்து குதிரை மேற்சென்று வென்று அவர்தம் நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டி, காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழித்து கொடும் போர்புரியும் திறம் மிகுந்தது அப்படை. அது சென்ற பகைவர் நாடு சுடு நெருப்பால் வெந்து செக்கர் வானைப் போல செந்தீ ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும். துணை வேண்டாது தனித்தேப் போரிடும் பெரிய படையினது வலுவும், புலால் நாற்றம் நாறும் கொலை வாளும், பூசிப் புலர்ந்த சாந்தும், முருகனைப் போன்ற வெஞ்சினமும் உடைய அச்சம் ஊட்டுந் தலைவனே , நின்னோடு மாறுபட்டவர் நாடு என்பதால் இவ்வாறு எரியூட்டி கொடுமை செய்கிறாயே. நின் குதிரைப் படையோடு சேர்ந்து களிற்றுப் படையும் சேர்ந்து அழித்தவனே !! ஆனாலும் நீ புலவர்பால் மட்டும் அன்பாய் இருக்கிறாய்.

அரசனின் போர் வீரத்தைப் புகழ்வது போல் புகழ்ந்து அவன் வன்மத்தையும் பாடுவதாக அமைந்த பாட்டு. இதில் வரும் எரியூட்டுதல்தான் தொல்காப்பியம் கூறும் "எரி பரந்து எடுத்தல்"

பாகுபலியில் வரும் இன்னொரு காட்சி. போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சட்டென்று காளகேயர்களின் கை ஓங்கிவிடும். மகிழ்மதியின்  வீரர்கள் மரணத்தைக் கண்டது போல பின் வாங்குவர். அப்போது பாகுபலி அவர்களை நிறுத்தி ஊக்கம் கொடுத்து தனியே முன்னேறிச் சென்று காளகேயர்களைத் தாக்கி அழிப்பான். அதுதான் "வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை". வெள்ளமென வரும் பகைவர்களை தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல். இதுவும் நடந்தா? எனக் கேட்டால் மீண்டும் புறநானூறு வேண்டும்.

பாடல் 330: பாடியவர் - மதுரைக் கணக்காயனார் ; திணை - வஞ்சி

"வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே"

தன் வேந்தனின் படைமுனையானது, பகைவர் தாக்குதலால் உடைந்து போவது கண்டு, வலக்கையிலே வாள் ஏந்தியவனாக ஒரு வீரன் விரைந்து சென்று, தன்னைக் கடந்து பகைவர் எவரும் வாராதவாறு   தடுத்து நின்று பெரும் போரிட்டு காத்தனன். அலைஅடிக்கும் பெருங்கடலுக்குக் கரை போன்று விளங்குபவன் அவன். பாடிச் சென்றவர்களுக்கு வேண்டுவன வழங்குவது மட்டுமில்லாமல் அவற்றுக்கு இணையாக நிலங்களும் தந்து காக்கும் சிறந்த ஊரின் தலைவன். அதுமட்டுமின்றி தன் குடியின் பழம்பெருமை பேசி அவற்றுக்கு மேலும் வழங்கும் வன்மையை உடையவன் அவன். அவன்பால் நீயும் செல்க. !

அடுத்து உழிஞை, தும்பை, வாகை என வரிசையாகப் பார்ப்போம்.

நன்றி,
ஆசிப்







Wednesday, July 15, 2015

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும்

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் 

பாகுபலி பார்த்தாயிற்று (இரண்டு முறை). இணையப் பெருவெளி எங்கும் அதனைப் பற்றிய மதிப்பீடும், ஒப்பீடல்களும் நிறைந்துள்ளன. எனவே நான் சங்கர்/ராஜமௌலி பற்றியோ, படத்தின் காட்சியாக்கம் பற்றியோ இங்கே எழுதபோவதில்லை. இது திரை விமர்சனமும் இல்லை. என்னுடைய கேள்வி எல்லாம் அப்படத்தில் வரும் அந்த மிகப் பெரும் போர்க்காட்சி பற்றி மட்டுமே. நம் சங்க கால அரசர்கள் அவ்வாறுதான் போர் புரிந்தனரா ? போர் சொல்லும்முன் மந்திரம் ஓதி  பலி கொடுக்கப்பட்டதா ?

எந்த கேள்வி வந்தாலும் நம் தொல்காப்பியம் அதற்கு விடையளிக்கும். உலகம் கண்ட இலக்கணங்களிலே மக்கள் வாழ்விற்கு இலக்கணம் கண்ட ஒரே நூல் தொல்காப்பியம் மட்டுமே. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் அதைத்தான் சொல்லுகிறது. பொருளதிகாரத்தின் இரண்டாம் இயலான "புறத்திணையியல்" நம்முடைய வினாக்களுக்கு விடைதரும். அகத்திணையியல் மக்களின் அக வாழ்வைப் பற்றிக் கூறுகிறது. அதே போல இந்தப் பகுதி பேசுவது புறவாழ்வான வீரம் மற்றும் கொடை பற்றி. ஒவ்வொரு அகத்திணைக்கும் பொருத்தமான புறத்தினையைக் கூறுகிறார் இங்கே.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே;
வஞ்சிதானே முல்லையது புறனே;
உழிஞைதானே மருதத்துப் புறனே;
தும்பைதானே நெய்தலது புறனே;
வாகைதானே பாலையது புறனே;
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;

வெட்சி=அடுத்த நாட்டு அரசனின் எல்லைக்குள் புகுந்து அவனது ஆநிரைகளைக் கவர்ந்து வருதல். சும்மா எப்பிடி சண்டைக்கு வருவான்? எதுனா பண்ணி தூண்டி விடுறதுதான் இது.

வஞ்சி= கால்நடைகளைத் தூக்கிச் சென்றால் சும்மா இருப்பானா அரசன். தன் படைகளை அனுப்பி அந்த ஆநிரைகளை மீட்டு வரச் செய்தல். கார்கிலில் நுழைந்த பாகிஸ்தானை விரட்டிவிட்டு கொஞ்சம் POK நிலத்தை பிடித்தது போல இங்கும் நடக்கும். எனவே ஆநிரை மீட்டல் + நிலம் பிடித்தல் என இரண்டும் நடக்கும்.

உழிஞை=பெரும் படையுடன் சென்று எதிரி அரசனின் நாட்டை முற்றுகை இடலும், அதனை முறியடித்தாலும்.

தும்பை= இரு அரசர்களும் எதிர் எதிரே நின்று போர் செய்வது.

வாகை= போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவது.

காஞ்சி= செல்வம்,யாக்கை,இளமை  போன்ற நிலையாமையைப்  பாடுவது
பாடாண்=வீரம், கொடை, வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது

ஆக, வெட்சி முதல் வாகை உள்ள திணைகள் மட்டுமே நமக்குத் தேவை.

வெட்சி:

வெட்சி என்றால் ஆநிரை கவர்வது என்று சொல்லியாச்சு. வெட்சிதானே குறிஞ்சியது புறனே எனவும் சொல்லியாச்சு. ஏன் ? குறிஞ்சி மலையும், மலை சார்ந்த பகுதி. அங்குதான் கால்நடைகள் மிகுந்து காணப்படும். அடுத்த நாட்டு அரசனின் குறிஞ்சிப் பகுதிக்குள் சென்று ஆநிரை கவர்ந்து தனது குறிஞ்சிப் பகுதிக்குள் வைத்து பாதுகாப்பதால் இது குறிஞ்சிக்குப் புறனாகச் சொல்லப்பட்டது. சரி? ஏன் ஆநிரை கவர வேண்டும்?

ஆநிரைகள் அக்காலச் செல்வ இருப்பு. அதனால்தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் எழுந்தது. பெற்றம் (கால்நடைக்கூட்டம்) என்ற சொல் செல்வத்தைப் பெறுதல் என்ற சொல்லின் அடிப்படையாக அமைந்தது. எனவே ஆநிரைகவர்தல் என்பது இன்னொருவனுடைய செல்வத்தைத் திருடும் செயலே ஆகும். பசுக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கைவிட, எதிரியின் பசுக்கூட்டமாகிய செல்வத்தைக் கொள்ளையடித்தலே ஆநிரை கவர்தலின் நோக்கமாக இருந்தது. இது எதிரி அரசனுக்கு இந்த அரசன் படையெடுப்பதைக் குறிக்கும் சூசகமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அரசனுக்காக அன்றி, தனிமனித நிலையிலும் ஆநிரை கவர்தல் (கால்நடைத் திருட்டு) நடைபெற்றதைப் பிற்கால நூல்கள் காட்டுகின்றன.

களவு மேற்கொள்ளுதல் (ஆநிரை கவர்தல்) வெட்சி என்றால் அதற்கான அற அடிப்படை என்ன? அரசன் படையெடுக்கப்போகிறான், அதனால் அதற்கு முன் னோடியாக ஆநிரைகளை இன்னொரு நாட்டிற்குள் புகுந்து திருடுகிறான் என்பது அறவொழுக்கத்தின் பாற்பட்டதாகுமா?


தொல்காப்பியமோ சங்க இலக்கியங்களோ போர்ச்சம்பவங்களுக்கு அடிப்ப டையான விதிகளையும் கூறியிருக்கலாம். சான்றாக, வெட்சித்திணை என்பது வேற்றுப்புல அரசனின் ஆநிரை கவர்தல் பற்றியது என்பது புலனாகிறதே அன்றி, எந்தச் சந்தர்ப்பத்தில் அதை மேற்கொள்ளவேண்டும், எந்த விதிகளைப் பின்பற்றி வெட்சிப்படைகள் செல்ல வேண்டும், ஆநிரை மேய்ப்பவர்களை அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் விதிகள் இல்லை. சேர சோழ பாண்டிய அரசுகள் தோன்றுவதற்குமுன்பு, அக்கால அரசுகள் சிற்றரசுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு சிற்றரசின் சுற்றளவு நூறுமைல் வரை இருக்கலாம். குறுக்கு நெடுக்காக 20-25 மைல்கள் இருக்கலாம். சில நூறு கிராமங்கள் அப்பகுதியில் இருக்கக்கூடும். அவ்வாறாயின் ஆநிரை கவர வருபவர்கள் எல்லையிலே கண்ணில் படும் ஆநிரைகளைக் கவர்வார்களா, அல்லது அரசனைத் தேடிச்சென்று அவனுக்குரிய ஆநிரைகளைக் கவர்வார்களா என்பதும் தெரியவில்லை.

அதே போல் இது ஒன்றும் நினைத்தும் நடைபெறுவது இல்லை. "எதைச் செய்தாலும் பிளான் பண்ணிப் பண்ணனும்" என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. வெட்சித் திணை என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும் அதிலுள்ள செயல்பாடுகள் நிறைய. ஒரு அரசன் ஆநிரை கவர நினைத்து விட்டால் இவையனைத்தும் நடைபெற வேண்டும்.

படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,
புடை கெடப் போகிய செலவே, புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என
வந்த ஈர்-ஏழ் வகையிற்று ஆகும்

படை இயங்கு அரவம்= போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி. (ஸ்பார்டன்ஸ் நீங்க யாரு???)

பாக்கத்து விரிச்சி = குறி கேட்டல். 300 படத்தில் ஸ்பார்டன் நாட்டு மன்னனே ஆனாலும் குறிக் கேட்கச் செல்லுவான், அதே போல வெற்றிக்கான அறிகுறிகள் தெரிகிறதா என குறி கேட்டல்.

புடை கெடப் போகிய செலவே = ஒரு நாட்டிற்க்குள் நுழைவது என்பது எளிது அல்லவே. அந்நாட்டு வீரர்கள் இருப்பர், ஒற்றர்கள் இருப்பர். அந்த நாட்டு ஒற்றர்களின் கண்ணில் படாமல் ஒருவனை உளவு பார்க்க அனுப்புவது.

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே = அவ்வாறு சென்ற ஒற்றன் யார் கண்ணிலும்/கையிலும் சிக்காமல் திரும்பி வந்து செய்திகளைக் கொடுப்பது. (மகிழ்மதியின் போர் ரகசியங்களை காளகேயனுக்குக் கொடுப்பது போல)

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை = உளவாளி செய்தி கொண்டுவந்து கொடுத்துவிட்டான். அதைப் பயன்படுத்தி அந்த ஊரை சுற்றி முற்றுகை இடல்.

முற்றிய ஊர் கொலை = போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.

ஆ கோள் = ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்

பூசல் மாற்றே = கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.

நோய் இன்று உய்த்தல்= கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல். கவர்தலின் மூலம் போருக்கான செய்தி மட்டுமே சொல்லப்படுகிறது. கவரப்பட்ட ஆநிரைகளுக்கு எவ்வித அபாயமும் இல்லை.

நுவல்வழித் தோற்றம் = போருக்குச் சென்றவர் திரும்புவரோ எனத் தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்.

தந்து நிறை = கவர்ந்து வந்த ஆ நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல். (ஏய் பார்த்தேல, யாரு நாங்க?)

பாதீடு = வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்

 உண்டாட்டு = வெற்றி களிப்பில் கள் உண்டு ஆடுதல்.

கொடை= தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல்.

பக்கத்து ஊர்க்குச் சென்று மாடுகளை பிடித்து வருவதற்கு இத்தனை நடைமுறைகள் இருந்தன. இதுதான் போருக்கான ஆரம்பம்.

வெட்சித்திணையில் வரும் ஒரு புறநானூறு பாடலைப் பார்த்தால் தொல்காப்பியம் கூறுவது பொருந்தி வருவது தெரியும்.

பாடல் : 262. பாடியவர் : மதுரை பேராலவாயார் ; திணை : வெட்சி

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

போராற்றி வரும் வெட்சித் தலைவனுக்கும் அவன் வீர்ரகளுக்கும் உண்டாட்டடுச் செய்யுங்கள் என வரும் பாடல் இது.

பகைவர் தூசிப்படையை முறியடித்து முன்னேறும் தன் படைக்குப் பின்னே, அவர் நிறையினைக் கவர்ந்து வருகிறான் என் தலைவன். நிரை கொண்டு வருவதால் அவனினும் அவன் படைமறவர் மிகவும் களைத்திருக்கின்றனர். அவர் களைப்பினைப் போக்க மதுவைப் பிழியுங்கள், ஆட்டுக் கடாக்களை வெட்டுங்கள் ; தழை வேய்ந்த பூங்காற் பந்தலின் கீழ் அவர் இருந்து உண்டு மகிழ, நீரோடு வந்து கிடக்கும் இளமணலை நிறையப் பரப்புங்கள்.

என்னடா இது, தொல்காப்பியர் தண்ணி அடிக்கச் சொல்லுகிறார், அசைவம் உண்ணச் சொல்ல்கிறார், ரொம்பத் தப்பான ஆளா ? அப்பிடிலாம் இல்லைங்க. அவர் காலத்தில் கள் உண்ணுதல் பழக்கமாய் இருந்தது. அதற்குப் பின் கொஞ்சம் அதிகமாய் போனதால திருவள்ளுவர் காலத்தில் அவர் கள் உண்ணாமைனு  ஒரு அதிகாரம் வைத்தார். புலால் மறுப்பு எழுதினார். அவரவர் காலத்தில் எது நடைமுறைக்குத் தேவையோ அதை வலியுறுத்தினர்.





இன்னும் நான்கு திணைகள் மீதம் உள்ளன. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.



நன்றி,
ஆசிப்.







Monday, June 15, 2015

என்னவளே..அடி என்னவளே

என்னவளே..அடி என்னவளே...

இன்றோடு எங்கள் திருமண வாழ்வின் ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு தொடங்குகிறது. திரும்பிப் பார்த்தால் எங்கே/எப்படிப் போனது என்ற கேள்விதான் வருகிறது. 2008 மார்ச்சில் பார்த்து, ஏப்ரலில் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் 15 அன்று கோவையில் நடந்தது எங்கள் திருமணம். அன்று முதல் இன்று வரை சிறிய/பெரிய பகிர்வுகள், மகிழ்ச்சியான பல நிகழ்வுகள், அனீக் & அயான், ஊர் சுற்றல்கள், கோபம் கொப்பளிக்கும் பல சண்டைகள் மற்றும் அதன் பிறகான குரலை மௌனித்துக் கொண்டு செய்யும் சமாதான முயற்சிகள் எனச்  சொல்லிக்கொண்டே போகலாம்.


இங்க இதை நான் சொல்லியே ஆகனும் (ஆமா, சூரியாவேதான் )..
எங்கள் இருவர்க்கும் ஒத்த ரசனைகள் என்பதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறன். ஆனாலும் மகிழ்ச்சியாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்கை..

நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன், எதுக்கு புக் வாங்கி இடத்தை அடைக்கிற -> இது அவள். (திருமணத்திற்கு முன் நான் கொடுத்த Message In a Bottle  இன்னும் படிக்கவில்லையெனக் கேள்வி ), நான் மெலடி , அவள் டங்கா மாரி ; எனக்கு ஹோட்டல் சென்று வித விதமாய் சாப்பிடப் பிடிக்கும் அவள் -> I only eat Indian food ; எனக்கு தமிழ் சினிமா, அவளுக்கு ஹிந்தி சினிமா ;எதுவும் perfect-ஆக இருக்க வேண்டும் அவளுக்கு, எனக்கு எங்கயாவது இருந்தால் சரி (கொஞ்சம் சோம்பேறி நான்) ; கிடைக்கும் நேரத்தில் தூங்கலாமா நான்? அப்போ வேற பண்ணலாம் அவள் ; சிறிய பயணமோ, இந்தியா பயணமோ ஒரு மாதத் திட்டமிடல், ஷாப்பிங், packing  என checklist போட்டு மிகச் சரியாய் செய்பவள் அவள். நான்லாம் ஆபீஸ் போயிட்டு ஹி..ஹி மொபைல வீட்டுல வைச்சுட்டேன் என்பேன், டிபன் பாக்சை ஆபீஸிலோ/ ட்ரைனிலோ விட்டு விட்டு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வேன் ; ஓவ்வொரு முறையும் வெளியூர் பயணத்தின் போது ஹோட்டல் அறைக்கு தலைவலியுடன் திரும்பி வரும் போது, எனக்குத் தெரியும் அதுதான் மாத்திரை எடுத்து வைத்தேன் உன்னோட பெட்டில என்பாள். சிறிய பிரச்சனை - சளி பிடித்துக் கொண்டு விக்ஸ் தேடிக்கொண்டு இருப்பேன் இந்தியாவில் இருந்து அந்த செல்பில் கிரே டப்பாவில் இருக்கு எடுத்துக்கோ என்று கேசுவலாகச் சொல்வாள். அப்பிடி ஒரு பெர்பெக்ட்..பசங்க விசயத்தில் ரொம்பக் காறார் , நான் நிறைய செல்லம் கொடுப்பேன். உன்னால்தான் பசங்க கேட்டுப் போறாங்க என்பது எனக்கு அடிக்கொருமுறை கிடைக்கும் பாராட்டு.

அனீக்கின் படிப்பு, குமான், நீச்சல் இன்னபிற முயற்சிகளுக்கும்/வெற்றிக்கும் நிச்சயம் ஷபனாதான் காரணம்.  வாரநாட்களில் பசங்களைத் தயார் செய்து பள்ளியில் விட்டு என்னை மெட்ரோ ஸ்டேஷனில் விட்டு மாலை வகுப்புக்கு அழைத்துச் சென்று, என பல நூறு வேலைகளைச்  செய்தாலும் வாக்கிங், ஜிம் என ஆரோயோக்கியசாமியாக இருப்பாள் (நான் நாள் முழுவதும் உட்கார்ந்துவிட்டு ரொம்ப tired என அலுத்துக் கொள்வேன்.). வார இறுதியில் பாஸ்கெட்பால் விளையாடக் கூட்டிப் போவது மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டது.

பல்வேறு ஆசைகள், கனவுகள் உண்டு அவளுக்கு..ஆனாலும் அது வேண்டும், இதை வாங்கு என்றேல்லாம்  கேட்பது இல்லை..ஆசையாய் ஏதேனும் வாங்குவாள், இரண்டு நாள் போனதும், இல்லை எனக்கு வேண்டாம் எனத் திருப்பிக்கொடுத்து விடுவாள். சரியான பட்ஜெட் பத்மாவதி :)). பசங்க விசயத்தில் மட்டும் சமரசம் கிடையாது.

ஆபீசிலிருந்து பேசும் போது ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க என்ற கேள்விக்கு,  அங்க இருந்து என் முகம் உனக்கு எப்பிடித் தெரியும் எனக் கேட்டால் அதுதான் உன் குரலே சொல்லுதே என பதில் வரும். ஏதேனும் யோசித்துக் கொண்டிருத்தால் என்ன யோசிச்சிட்டே இருக்க? எதுனா பிரச்னையா ? என்ன ஹெல்ப் வேணும் ? என வரிசையாக் கேள்வி வரும். எப்பிடித்தான் கண்டுபிடித்து விடுகிறார்களோ !!

தி.மு பல்வேறு கனவுகளுடன் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து கூட்டுக்குள் அடைத்து விட்டேனோ என அடிக்கடி நினைப்பதுண்டு. அவள் அது பற்றிலாம் கவலை இல்லாமல் தனக்கென்று நண்பர் குழு அமைத்துக் கொண்டு சுகந்திராமய் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே  சொல்லுவாள். Surely she is an independent..நான்தான் ரொம்ப dependent.. அவளின்றி ஒரு வேலையும் ஓடாது என்றே நினைக்கிறேன். வாழ்க்கையின் இறுதியில் நான் அவளுக்கு முன்னே போய் விடவேண்டும் என்ற சுயநலச் சிந்தனையும் உண்டு.

இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து  இந்தப் பதிவைப் பார்க்கும் போதாவது நான் கொஞ்சம் மாறி இன்னும் equal partner ஆகவேண்டும் என்பதே என் ஆசை. அவள் கெட்டிக்காரி, சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாள். நாங்கள் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்போம் வரும் காலங்களில்...

அன்புடன்,
ஆசிப்.

Wednesday, June 3, 2015

ஒர் பாடலும் 99 பூக்களும்

                        ஒர் பாடலும் 99 பூக்களும்

சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப்பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்டது. அது ஆற்றுப்படையோ, மதுரைக் காஞ்சியோ, இல்லை பட்டினப் பாலையோ. ஆனால் இந்தக் குறிஞ்சிப் பாட்டு மட்டும் தமிழ் மொழியின் சிறப்பைக் காட்டுவதற்காகப் பாடப்பட்டது. குறிஞ்சிப் பாட்டுன்னு தலைப்பிலேயே இருப்பது போல இது குறிஞ்சித் திணையில் பாடப்பட்டது. குறிஞ்சித் திணை என்றால் தலைவன், தலைவி கூடி காதல் இன்பம் கொள்வது. இதைப் பாடியவர் "குறிஞ்சிக்கோர் கபிலர்" என்ற சிறப்பு பெயருடைய கபிலர்.

ஏன் பாடினார் என்றால், பிரகத்தன் என்னும் ஒரு ஆரிய மன்னன். சங்கத் தமிழ் வாழ்வியல் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாமல் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் இலக்கணம் கூறியவாறு பின்பற்றப்படுவதில்லை. பெயர்தான் களவு ஒழுக்கம் ஆனால் அது வெறும் திருட்டு வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவனின் எண்ணத்தை மாற்றவும், தமிழரின் களவு வாழ்க்கை கற்பில்தான் (திருமண வாழ்க்கை) முடியும் எனக் காட்டவும் கபிலர் பாடியதே குறிஞ்சிப் பாட்டு.


"பூவெல்லாம் கேட்டுப் பார்" படத்தில் சூரியா ஜோதிகாவிடம் நூறு வகையான பூக்களின் பெயரைச் சொல்வாரே அது போன்று இதில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை 35 அடிகளில் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனைதான். அந்தப் பாட்டைத்தான் நான் இங்கே காட்ட உள்ளேன். ஜோதிகாவும் (தலைவி), தோழிகளும் நெல்லைக் கொத்திக் கொண்டு போகாமலிருக்க பறவைகளை விரட்டிக் கொண்டிருகின்றனர். நல்ல மழை வேறு பெய்திருக்கிறது. அருகில் தெளிந்த நீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஓர் அருவி. மேகம் கருக்குது, மின்னல் சிரிக்குது, சாரல் அடிக்குது என்று பாடியவாறே அருவியில் குளித்த அவர்கள் அடுத்து பூக்களைச் சேகரித்து விளையாடுகிறார்கள். இதைச் சொல்ல வரும்போதுத்தான் அவர்கள் 99 வகையான பூக்களைச் சேகரித்ததாக கபிலர் பாடுகிறார்.



அந்தப் பாடல்:

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,                     (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,                       (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,                      (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,         (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,                             (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,                        (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,           (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,                            (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,                       (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,                             (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,                             (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,                   (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,                      (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,                  (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,                          (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை                         (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம்,                               (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,                            (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை,                         (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,                    (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,                               (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,           (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,           (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,                         (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,           (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,            (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,                          (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,                                    (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,                     (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,                                 (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,                                   (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,                         (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,                                (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,             (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,                 (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

பாடலை ரசித்துக் கொண்டே இன்னொரு முறை பாடல் பாடப்பட்ட களத்தை நினைத்துப் பாருங்கள். அருவியில் குளித்து முடித்தவர்கள் இத்தனை வகையானப் பூக்களைச் சேகரிக்கிறனர் எனில் அத்தனை வகையான மரங்களும், செடிகளும் அருகருகே நிறைந்த இயற்கைச் சூழலாக இருந்திருக்கிறது குறிஞ்சி நிலம். இன்றைய நிலையில் நாம் நூறு கிலோ மீட்டர் சுற்றினாலும் இத்தனை வகையான பூக்கள் கிடைக்குமா? எப்பேர்ப்பட்ட சூழலை நாம் இழந்திருக்கிறோம்/ அழித்திருக்கிறோம். “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதையை மெய்யாக்காமல்  வரும் தலைமுறை மிச்சம் இருக்கும் இயற்கைச் சூழலையும் அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொண்டு, இயற்கைச் சூழலைக் காப்போம்.               

நன்றி, 
ஆசிப்