Wednesday, July 15, 2015

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும்

பாகுபலியும் சங்க கால அரசர்களின் போர் முறையும் 

பாகுபலி பார்த்தாயிற்று (இரண்டு முறை). இணையப் பெருவெளி எங்கும் அதனைப் பற்றிய மதிப்பீடும், ஒப்பீடல்களும் நிறைந்துள்ளன. எனவே நான் சங்கர்/ராஜமௌலி பற்றியோ, படத்தின் காட்சியாக்கம் பற்றியோ இங்கே எழுதபோவதில்லை. இது திரை விமர்சனமும் இல்லை. என்னுடைய கேள்வி எல்லாம் அப்படத்தில் வரும் அந்த மிகப் பெரும் போர்க்காட்சி பற்றி மட்டுமே. நம் சங்க கால அரசர்கள் அவ்வாறுதான் போர் புரிந்தனரா ? போர் சொல்லும்முன் மந்திரம் ஓதி  பலி கொடுக்கப்பட்டதா ?

எந்த கேள்வி வந்தாலும் நம் தொல்காப்பியம் அதற்கு விடையளிக்கும். உலகம் கண்ட இலக்கணங்களிலே மக்கள் வாழ்விற்கு இலக்கணம் கண்ட ஒரே நூல் தொல்காப்பியம் மட்டுமே. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் அதைத்தான் சொல்லுகிறது. பொருளதிகாரத்தின் இரண்டாம் இயலான "புறத்திணையியல்" நம்முடைய வினாக்களுக்கு விடைதரும். அகத்திணையியல் மக்களின் அக வாழ்வைப் பற்றிக் கூறுகிறது. அதே போல இந்தப் பகுதி பேசுவது புறவாழ்வான வீரம் மற்றும் கொடை பற்றி. ஒவ்வொரு அகத்திணைக்கும் பொருத்தமான புறத்தினையைக் கூறுகிறார் இங்கே.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே;
வஞ்சிதானே முல்லையது புறனே;
உழிஞைதானே மருதத்துப் புறனே;
தும்பைதானே நெய்தலது புறனே;
வாகைதானே பாலையது புறனே;
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;

வெட்சி=அடுத்த நாட்டு அரசனின் எல்லைக்குள் புகுந்து அவனது ஆநிரைகளைக் கவர்ந்து வருதல். சும்மா எப்பிடி சண்டைக்கு வருவான்? எதுனா பண்ணி தூண்டி விடுறதுதான் இது.

வஞ்சி= கால்நடைகளைத் தூக்கிச் சென்றால் சும்மா இருப்பானா அரசன். தன் படைகளை அனுப்பி அந்த ஆநிரைகளை மீட்டு வரச் செய்தல். கார்கிலில் நுழைந்த பாகிஸ்தானை விரட்டிவிட்டு கொஞ்சம் POK நிலத்தை பிடித்தது போல இங்கும் நடக்கும். எனவே ஆநிரை மீட்டல் + நிலம் பிடித்தல் என இரண்டும் நடக்கும்.

உழிஞை=பெரும் படையுடன் சென்று எதிரி அரசனின் நாட்டை முற்றுகை இடலும், அதனை முறியடித்தாலும்.

தும்பை= இரு அரசர்களும் எதிர் எதிரே நின்று போர் செய்வது.

வாகை= போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவது.

காஞ்சி= செல்வம்,யாக்கை,இளமை  போன்ற நிலையாமையைப்  பாடுவது
பாடாண்=வீரம், கொடை, வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது

ஆக, வெட்சி முதல் வாகை உள்ள திணைகள் மட்டுமே நமக்குத் தேவை.

வெட்சி:

வெட்சி என்றால் ஆநிரை கவர்வது என்று சொல்லியாச்சு. வெட்சிதானே குறிஞ்சியது புறனே எனவும் சொல்லியாச்சு. ஏன் ? குறிஞ்சி மலையும், மலை சார்ந்த பகுதி. அங்குதான் கால்நடைகள் மிகுந்து காணப்படும். அடுத்த நாட்டு அரசனின் குறிஞ்சிப் பகுதிக்குள் சென்று ஆநிரை கவர்ந்து தனது குறிஞ்சிப் பகுதிக்குள் வைத்து பாதுகாப்பதால் இது குறிஞ்சிக்குப் புறனாகச் சொல்லப்பட்டது. சரி? ஏன் ஆநிரை கவர வேண்டும்?

ஆநிரைகள் அக்காலச் செல்வ இருப்பு. அதனால்தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் எழுந்தது. பெற்றம் (கால்நடைக்கூட்டம்) என்ற சொல் செல்வத்தைப் பெறுதல் என்ற சொல்லின் அடிப்படையாக அமைந்தது. எனவே ஆநிரைகவர்தல் என்பது இன்னொருவனுடைய செல்வத்தைத் திருடும் செயலே ஆகும். பசுக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கைவிட, எதிரியின் பசுக்கூட்டமாகிய செல்வத்தைக் கொள்ளையடித்தலே ஆநிரை கவர்தலின் நோக்கமாக இருந்தது. இது எதிரி அரசனுக்கு இந்த அரசன் படையெடுப்பதைக் குறிக்கும் சூசகமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அரசனுக்காக அன்றி, தனிமனித நிலையிலும் ஆநிரை கவர்தல் (கால்நடைத் திருட்டு) நடைபெற்றதைப் பிற்கால நூல்கள் காட்டுகின்றன.

களவு மேற்கொள்ளுதல் (ஆநிரை கவர்தல்) வெட்சி என்றால் அதற்கான அற அடிப்படை என்ன? அரசன் படையெடுக்கப்போகிறான், அதனால் அதற்கு முன் னோடியாக ஆநிரைகளை இன்னொரு நாட்டிற்குள் புகுந்து திருடுகிறான் என்பது அறவொழுக்கத்தின் பாற்பட்டதாகுமா?


தொல்காப்பியமோ சங்க இலக்கியங்களோ போர்ச்சம்பவங்களுக்கு அடிப்ப டையான விதிகளையும் கூறியிருக்கலாம். சான்றாக, வெட்சித்திணை என்பது வேற்றுப்புல அரசனின் ஆநிரை கவர்தல் பற்றியது என்பது புலனாகிறதே அன்றி, எந்தச் சந்தர்ப்பத்தில் அதை மேற்கொள்ளவேண்டும், எந்த விதிகளைப் பின்பற்றி வெட்சிப்படைகள் செல்ல வேண்டும், ஆநிரை மேய்ப்பவர்களை அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் விதிகள் இல்லை. சேர சோழ பாண்டிய அரசுகள் தோன்றுவதற்குமுன்பு, அக்கால அரசுகள் சிற்றரசுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு சிற்றரசின் சுற்றளவு நூறுமைல் வரை இருக்கலாம். குறுக்கு நெடுக்காக 20-25 மைல்கள் இருக்கலாம். சில நூறு கிராமங்கள் அப்பகுதியில் இருக்கக்கூடும். அவ்வாறாயின் ஆநிரை கவர வருபவர்கள் எல்லையிலே கண்ணில் படும் ஆநிரைகளைக் கவர்வார்களா, அல்லது அரசனைத் தேடிச்சென்று அவனுக்குரிய ஆநிரைகளைக் கவர்வார்களா என்பதும் தெரியவில்லை.

அதே போல் இது ஒன்றும் நினைத்தும் நடைபெறுவது இல்லை. "எதைச் செய்தாலும் பிளான் பண்ணிப் பண்ணனும்" என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. வெட்சித் திணை என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும் அதிலுள்ள செயல்பாடுகள் நிறைய. ஒரு அரசன் ஆநிரை கவர நினைத்து விட்டால் இவையனைத்தும் நடைபெற வேண்டும்.

படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,
புடை கெடப் போகிய செலவே, புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என
வந்த ஈர்-ஏழ் வகையிற்று ஆகும்

படை இயங்கு அரவம்= போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி. (ஸ்பார்டன்ஸ் நீங்க யாரு???)

பாக்கத்து விரிச்சி = குறி கேட்டல். 300 படத்தில் ஸ்பார்டன் நாட்டு மன்னனே ஆனாலும் குறிக் கேட்கச் செல்லுவான், அதே போல வெற்றிக்கான அறிகுறிகள் தெரிகிறதா என குறி கேட்டல்.

புடை கெடப் போகிய செலவே = ஒரு நாட்டிற்க்குள் நுழைவது என்பது எளிது அல்லவே. அந்நாட்டு வீரர்கள் இருப்பர், ஒற்றர்கள் இருப்பர். அந்த நாட்டு ஒற்றர்களின் கண்ணில் படாமல் ஒருவனை உளவு பார்க்க அனுப்புவது.

புடை கெட ஒற்றின் ஆகிய வேயே = அவ்வாறு சென்ற ஒற்றன் யார் கண்ணிலும்/கையிலும் சிக்காமல் திரும்பி வந்து செய்திகளைக் கொடுப்பது. (மகிழ்மதியின் போர் ரகசியங்களை காளகேயனுக்குக் கொடுப்பது போல)

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை = உளவாளி செய்தி கொண்டுவந்து கொடுத்துவிட்டான். அதைப் பயன்படுத்தி அந்த ஊரை சுற்றி முற்றுகை இடல்.

முற்றிய ஊர் கொலை = போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.

ஆ கோள் = ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்

பூசல் மாற்றே = கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.

நோய் இன்று உய்த்தல்= கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல். கவர்தலின் மூலம் போருக்கான செய்தி மட்டுமே சொல்லப்படுகிறது. கவரப்பட்ட ஆநிரைகளுக்கு எவ்வித அபாயமும் இல்லை.

நுவல்வழித் தோற்றம் = போருக்குச் சென்றவர் திரும்புவரோ எனத் தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்.

தந்து நிறை = கவர்ந்து வந்த ஆ நிரைகளை தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல். (ஏய் பார்த்தேல, யாரு நாங்க?)

பாதீடு = வீரர்கள் அப்பசுக்களை தம்முள் பகிர்ந்து கொளல்

 உண்டாட்டு = வெற்றி களிப்பில் கள் உண்டு ஆடுதல்.

கொடை= தாம்பெற்ற பசுக்களை பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல்.

பக்கத்து ஊர்க்குச் சென்று மாடுகளை பிடித்து வருவதற்கு இத்தனை நடைமுறைகள் இருந்தன. இதுதான் போருக்கான ஆரம்பம்.

வெட்சித்திணையில் வரும் ஒரு புறநானூறு பாடலைப் பார்த்தால் தொல்காப்பியம் கூறுவது பொருந்தி வருவது தெரியும்.

பாடல் : 262. பாடியவர் : மதுரை பேராலவாயார் ; திணை : வெட்சி

நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்
பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப்
புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉ மென்னைக்
குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

போராற்றி வரும் வெட்சித் தலைவனுக்கும் அவன் வீர்ரகளுக்கும் உண்டாட்டடுச் செய்யுங்கள் என வரும் பாடல் இது.

பகைவர் தூசிப்படையை முறியடித்து முன்னேறும் தன் படைக்குப் பின்னே, அவர் நிறையினைக் கவர்ந்து வருகிறான் என் தலைவன். நிரை கொண்டு வருவதால் அவனினும் அவன் படைமறவர் மிகவும் களைத்திருக்கின்றனர். அவர் களைப்பினைப் போக்க மதுவைப் பிழியுங்கள், ஆட்டுக் கடாக்களை வெட்டுங்கள் ; தழை வேய்ந்த பூங்காற் பந்தலின் கீழ் அவர் இருந்து உண்டு மகிழ, நீரோடு வந்து கிடக்கும் இளமணலை நிறையப் பரப்புங்கள்.

என்னடா இது, தொல்காப்பியர் தண்ணி அடிக்கச் சொல்லுகிறார், அசைவம் உண்ணச் சொல்ல்கிறார், ரொம்பத் தப்பான ஆளா ? அப்பிடிலாம் இல்லைங்க. அவர் காலத்தில் கள் உண்ணுதல் பழக்கமாய் இருந்தது. அதற்குப் பின் கொஞ்சம் அதிகமாய் போனதால திருவள்ளுவர் காலத்தில் அவர் கள் உண்ணாமைனு  ஒரு அதிகாரம் வைத்தார். புலால் மறுப்பு எழுதினார். அவரவர் காலத்தில் எது நடைமுறைக்குத் தேவையோ அதை வலியுறுத்தினர்.





இன்னும் நான்கு திணைகள் மீதம் உள்ளன. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.



நன்றி,
ஆசிப்.







3 comments:

  1. Anna Sema Sema...Tamil Tholkappiam indraiya nadaimuraiku thevaiyanathai miga miga alagaga solli explanation thanthurukeenga...Superb !! Vazthukhal..

    ReplyDelete
  2. வெட்சி நிறை கவர்தல்
    மீட்டல் கரந்தையம்
    வட்கார் மேல் செல்வது வஞ்சியாம்
    உட்காது எதிரூன்றல் காஞ்சி
    எயில் காத்தல் நொச்சி
    அது வலித்தலாகும் உழிங்கை
    அதிர பொருவது தும்பை
    போர்களத்து மிக்கார் செருவென்ற்றது வாகையம்

    ReplyDelete