Wednesday, April 22, 2015

உலகப் புத்தக தின குறும் பதிவு

வணக்கம் நண்பர்களே,

புத்தக தினமாம் இன்று. நானும் புத்தகங்களும் எப்பிடி இணைந்தோம் என்ற பதிவுதான் இது. என் பால்யம் புத்தகங்களாலேயே நிரம்பிக் கிடந்தது. அப்போது நான் இருந்தது ஈரோடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. மொத்தமும் என் வயதையொத்த நண்பர்களே. முதலில் ஆரம்பித்தது சிறுவர் மலர்தான் என நினைக்கேறேன். "பல முக மன்னன் ஜோ" அப்போதைய  பிரபலம். அதே சிறுவர் மலரில் தொடர் கதையாக வந்தது "உயிரைத் தேடி". கிட்டத்தட்ட இப்போதைய "Resident Evil" மாதிரியான கதை.

என் ஐந்து வயதில் "பூந்தளிர்" முதல் காமிக்ஸ் புத்தகமாக அறிமுகமானது. பூந்தளிர் என்றதும் வேற என்ன நினைவிற்கு வரும் ?? மந்திர வால் குரங்கு கபிஷ் :))))). கபிஷின் நண்பர்கள் கரடி பபூச்சா, மான் பிந்து, கழுகு பஞ்சா, யானை பந்திலா மற்றும் வில்லனாக ஒரு நரி (பெயர் நினைவில்லை), புலி (பீலு ??), வேட்டைக்காரன் தோப்பையா. இவர்களிடம் இருந்து வன நண்பர்களைக் காப்பதுத்தான் கபிஷின் வேலை; விலை 2 ரூபாய். வாண்டுமாமா கதைகள்  அருமையாக இருக்கும் (அவர்தான் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பதெல்லாம் அப்போ தெரியாது). பூந்தளிரின் இன்னொரு மிகப் பெரிய நாயகன் காக்கை காளி (இன்னொரு நரி, முதலை பாத்திரங்கள் வரும். பெயர்கள் நினைவு இல்லை). ஒவ்வொரு மாதமும் விடாமல் படித்துக் கொண்டிருந்தேன்.கூடவே அம்புலிமாமா, பாலமித்திரா, இரத்னபாலா அறிமுகம் ஆகின. அம்புலிமாமா = விக்கிரமாதித்தன் கதைகள். வேதாளம் போல என் முதுகிலும் புத்தகங்கள் எறிக் கொண்டன.

நான்காவது/ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் மாலை மலர் நிருபர் குடும்பம் குடி வந்தது. அவர் பெயர் திருமால்துரை. ராஜா, ராஜி என்று என்னை விட வயது குறைந்த இரு குழந்தைகள் அவர்களுக்கு. அதே நேரத்தில் இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை படிப்பதில் அடுத்த படிக்குச் சென்றிருந்தேன். என்னையும், என் நண்பர்களையும் வேறு ஒரு உலகத்திற்கு கூடிச் செல்ல வந்தது "லயன் காமிக்ஸ்", "முத்து காமிக்ஸ்", "மினி லயன் காமிக்ஸ்". லயன் காமிக்ஸ்தான் முதலில்.. அப்பப்பா... குற்றச் சக்கரவர்த்தி சிலந்தி மனிதன் (Spider man), இரும்புக் கை மாயாவி, ஆர்ச்சி ரோபோ. நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர் என்றால் தெரியும் லயன் காமிக்ஸ் அருமை. மாலை மலர் நிருபர் என்று சொன்னேன் அல்லவா, அது ஏன் என்றால் மாலை மலர் தினத் தந்தி நிறுவனத்தில் ஒன்று. அதே நிறுவனம் "ராணி காமிக்ஸை" அப்போது அறிமுகப் படுத்தியது. ராணி காமிக்ஸ் புத்தகம் கடைக்கு வரும் இரண்டு நாட்கள் முன்னே என் கைக்கு வந்துவிடும். அவர் வீட்டிலும் என்னை விட சிறிய குழந்தைகள் எனவே ஒரு காலத்தில் நான்தான் ராணி காமிக்ஸின் ஒவ்வொரு பதிப்பையும் முதலில் படித்தது நான்தான். :)) ராணி காமிக்ஸில் யார் வருவார் ? ஜேம்ஸ் பாண்ட் :)). பிறகு, மாடாஸ்தி பிளைசி (பெண் புலி) மற்றும் அவர் நண்பர் வில்லி கார்வின் (கத்தி வீச்சு ஸ்பெஷலிஸ்ட்), மந்திரவாதி மாண்ட்ரேக் இன்னும் பலர்.

ஒரு  வருடம் கழித்து காமிக்ஸ் உலகின் மாபெரும் நாயகன் எனக்கு அறிமுகம் ஆனார். "டெக்ஸ் வில்லர்". நவஜோ இனத் தலைவர், ரேஞ்சர்,
குறிதவறாமல் சுடுவதில் வல்லவர். காமிக்ஸ் உலகின் ரஜினிகாந்த் டெக்ஸ் வில்லர் எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு வெறி பிடித்துப் போய் படித்துக் கொண்டு இருந்தேன். மினி லயன் வண்ண அச்சில் வேறு மாதிரியான கலவையாக வரும். கேட்கவே வேண்டாம். லக்கி லுக்தான் என் கனவு கண்ணன் :)) லக்கி லுக்கும் அவன் குதிரை ஜாலியும் செய்யம் சாகசங்கள் ஒவ்வொன்றும் ரண களம் :) வருடம் ஒருமுறை ஆண்டு மலர், தீபாவளி மலர்
என கலந்து கட்டி படித்துக் கொண்டுருந்த நான் ஈரோட்டில் இருந்து தாராபுரம் சென்றது விதியின் விளையாட்டு. ஈரோடு போல இல்லாமல் அது ஒரு சிறு நகரம். புத்தகம் கிடப்பது இல்லை அது போல; தேடி தேடி கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே அடுத்த படிக்குச் சென்றேன்.

வீட்டில் குமுதம் (கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் - தொடர்), ஆனந்த விகடன், நக்கீரன், ஜூனியர் விகடன் என் தந்தையார் படிக்க. சிலது புரியாது இருந்ததாலும் படித்து வைத்துக் கொண்டேன்.

அப்போது கோவையில் இருந்து அசோகன் என்ற மனிதர் நாவல்களை பிரசுரம் செய்து கொண்டு இருந்தார். பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்ற பெயரில்.  அதுவரை எனக்கு படக் கதை மட்டுமே. நாவல்களில் படம் இருக்காது :( அனால் ராஜேஷ் குமார் என்பவர் எனக்கு இன்னொரு நாயகனைக் காட்டினார்
விவேக் என்ற பெயரில். விவேக், ரூபாலா, இன்ஸ்பெக்டர் கோகுல்நாத், துப்பறியும் கதைகள் இயல்பாகவே வசீகரித்தன. போத குறைக்கு பட்டுக் கோட்டை பிரபாகரரின் நரேன், வைஜயந்தி.. அம்மாவின் சில சென்சார்களுடன் படிக்க கிடைத்தது.

கெட்ட நண்பர்களின் சக வாசம் நூலகத்தை வேறு காட்டியது.
துப்பறியும் கதைகளை அங்கே தேடியதில் "தேவன்" கிடைத்தார். "துப்பறியும் சாம்பு" விவேக்/நரேன் போல இல்லாமல் காமெடி detective. எட்டாவது வரும் போது அடுத்த அதிர்ச்சி தமிழ்வாணன் என்ற மனிதரால். "இன்னொரு செருப்பு எங்கே" எனப் பார்க்கப் போய் "சங்கர்லால் துப்பறியும்" கதைகளைத் திகட்ட படித்தேன். அப்போது எனக்கு ஷெர்லாக் ஹோம்ஸ்லாம் தெரியாது. அனால் தமிழ்நாட்டின் ஷெர்லாக் சங்கர்லாலாய்த்தான் இருந்த்திருக்க முடியும்.

கெட்ட நண்பர்கள் சகவாசம் என்றேன் அல்லவா :))) ஒன்பதாவது படிக்கும்போது "கியூபா - புரட்ச்சிகர யுத்தத்தில் கதை" சே குவாராவின் வரலாறு. பாதிக்கும் மேல் புரியவில்லை; ஆனாலும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் பக்கம் அடிக்கடி போக வைத்தது. அப்போதெல்லாம் ஒரு பஸ் போன்ற வண்டியில் நடமாடும் புத்தகக் கடைதான் இருக்கும். சும்மாவது எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். "இவான்" படித்து முடித்ததும் ஒரு சோக மனநிலைக்கு கொண்டு சென்ற முதல் புத்தகம். சோவியத் புத்தகங்கள் சிலவற்றை இன்னும் வைத்திருக்கிறேன்.

கல்லூரி விடுதி வேறு ஒரு புத்தக உலகையும் காமித்தது. இரண்டாம் ஆண்டு தமிழ் ஆசிரியர் "இரா.இரகுபதி" பாரதிதாசனை அறிமுகப் படுத்தினார்.
சட்டென்று மனதில் ஒட்டியர் கவிஞர் புரட்சி கவிஞர்தான். பாரதி, பாரதிதாசன், வள்ளுவர் மூன்றும் இரண்டாம் ஆண்டு முழுக்க. சிலப்பதிகாரம் கூட
படித்தேன் அனால் சரியான் உரை கிடைக்கவில்லை நூலகத்தில். இதைத் தவிர நான் இயற்பியல் படிக்கவே இல்லை. நண்பர்களுக்குத்தான் தெரியும் அது :))

மூன்றாம் ஆண்டு = மிக முக்கியமான ஆண்டு. கொஞ்சம் திமிர் வேற. கல்லூரியின் எதிரில் பெரியார் திடல். பெரியார் நூலகம், தி.க கூட்டங்கள். நான் ஒருவன் மட்டுமே பெரியார் நூலகத்திற்கு போகும் விடுதி மாணவன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு சின்ன புத்தகங்கள் விற்பார்கள். வார விடுமுறையின் போது ஊர்க்குச் செல்ல பஸ் ஏறும் போது வாங்குவேன் ஊரில் இறங்கும் போது கிழித்துப் போட்டுவிட்டு வந்து விடுவேன். வீட்டில் ஒரு முறை பார்த்து திட்டும் வாங்கினேன் :)

முதுகலை படிக்கும் போது ஒரு பயத்தோடு படித்தேன் (வேலை பயம்) பாலகுருசாமி, RS அகர்வால்தான் படித்தேன் இரண்டு வருடமும்.

வேலைக்காக சென்னை திருவைல்லிக்கேணி விடுதியில் தங்கியதுதான் நான் செய்த பாக்கியம். பழையப் புத்தகக் கடைகள், புத்தகக் கடைகள்,
மூர் மார்கெட் புத்தகக் கடைகள் (நாவல்கள்). 1. சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்சேர், ஹாரி பாட்டர் அனைத்தும் மூர் மார்க்கெட்தான். ஒரு புத்தகம் பத்து ரூபாய். அதே புத்தகம் லேன்ட் மார்க்கில் 15௦ - 2௦௦ ருபாய். பொன்னியின் செல்வன், சாரு நிவேதா, ஜெய காந்தன், லாசாரா, புலியூர் கேசிகன், ஊ.வே.சா, கலிங்கத்துப் பரணி என அனைத்தும் கிடைத்தது. போதாகுறைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் முது கலை தமிழ் சேர்ந்து விட்டேன். தொல் காப்பியமும், சங்க இலக்கியமும் எப்பவும் ஒட்டிக் கொண்டது (இன்று வரை), சென்னை புத்தக கண்காட்சி அறிமுகமானது. வேலை வேறு கிடைத்திருந்ததால் மிகப் பெரும் சுகந்திரம் கண்ணா பிண்ணனு புத்தகம் வாங்கினேன். கவிதைகள் அறிமுகமானதும் அப்போதுத்தான்.. அறிவு மதி, தபு சங்கர், பழனி பாரதி, (வைரமுத்து கல்லூரிக் காலம் இருந்தே).

ஒருவாறு படிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது வேறு வேறு எல்லைகளில். புது புது அறிமுகங்கள், புத்தகங்கள். எல்லாம் எழுதத் தேவையில்லை. அமெரிக்க வந்து இழந்தது இது ஒன்றுதான். நினைக்கும் போதேலெல்லாம் கிடைப்பதில்லை/வாங்க முடியவில்லை. ஆனாலும் இணையம் உதவுகிறது.

கேட்பது ஒன்றே ஒன்றுதான். நிறையப் படியுங்கள். எதை வேண்டுமானாலும் ஆர்வம் வந்ததும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.


நன்றி,
ஆசிப்



Saturday, April 18, 2015

ஓ காதல் கண்ணகி !!

வணக்கம் நண்பர்களே !!

நேத்து ஓ காதல் கண்மணி பார்த்தது முதல் ஒரே காதல் mood. அதே பீலிங்ஸ்லேயே ஆபீஸ் போனா என்னத்த வேலை ஓடும் ?
நான் பாட்டுக்கு சிலப்பதிகாரம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிலம்போட ஆரம்பமே கோவலன், கண்ணகி திருமணம்தான். அதுக்கு அடுத்த அதிகாரத்தைத்தான் இங்க பகிரப் போகிறேன். அதிகாரத்தோட பேரு "மனையறம் படுத்த காதை". அதாவது நாம இப்ப கோவலன், கண்ணகி முதல் இரவில் என்ன நடந்துச்சுன்னு பாக்கப் போறோம். என்னது first night சீனான்னு ஆர்வமாகிட்டிங்களா? இளங்கோ அடிகள் சமணத் துறவி. அதுனால நீங்க எதிர்பார்க்குறது இங்க இருக்காது :). பின்ன என்ன "வா வா பக்கம் வா, பக்கம் வர வெட்கமா " பாட்டையா பாடி இருப்பாரு? நீ போங்கு ஆட்டம் ஆடுறனு நினைச்சு கோவபட்டுறாதிங்க. அழகன் படத்துல மம்முட்டி பானுப்ப்ரியாவுக்கு பாரதிதாசனோடகுடும்ப விளக்குல வர ஒரு கவிதை மாதிரி ஒண்ணு எழுதி பாடி காமிப்பாரே (சாதி மல்லி பூச்சரமே) கிட்டத்தட்ட் அந்த மாதிரி ஒரு காட்சிதான் இப்ப..


ஒரு சின்ன முன்னுரை..ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. தனிக் குடித்தனம் வைச்சுட்டாங்க. ஒரு தனி மாளிகை,கண்ணகிக்கு உதவியாகப் பனிப் பெண்கள் பலர். அதுக்கு பேரு இன்ப மாளிகை :). அது ஒரு இரண்டு அடுக்கு மாளிகை; அதுக்கும் மேல ஒரு தளம் (open Terrace). நிலாக் காலங்களில் பொழுது போக்க அருமையான இடம் அது; இரண்டு பேரும் சந்தோசாமா இருக்குறாங்க அங்க.

சரி, மேட்டர்க்கு (என்னது ???) வருவோம். கோவலன் அருகில் இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறான். இவள்தான் என் கண்மணி எனத் தோன்றுகிறது அவனுக்கு. அவளின் நாணத்தைப் போக்க வேண்டும். என்ன பண்ணலாம் ? சரி மானே, தேனேனு கவிதை சொல்லலாம் அவள் அழகைக் கொண்டுனு முடிவு செய்றான்.

குழவித் திங்கள் இமையவர் ஏத்த,
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னொடு பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகு என

குழவித் திங்கள் = குழந்தை நிலா (பிறை நிலா) ; இமையவர் = இமய மலையின் மீது இருக்கும் சிவன் ;

இரவுப் பொழுது. அறைக்குள் ஒளி குறைவாத்தான் இருக்கு. சின்ன விளக்கு மட்டுமே இருக்குது அங்க. உள்ளே வரும் கண்ணகியைப் பார்க்கிறான். முதலில் அவள் நெற்றியைப் பார்க்கிறான். சிவனின் சடையில் அழகாகப் பொலிந்து இருக்கும் நிலா நிச்சயம் உன்னோடதான் பிறந்து இருக்க முடியும் என எண்ணி அவன் அந்த பிறை நிலவை உன் நெற்றியாகத் தந்தான். அதாவது நிலா, பாற்கடலில் திருமகளான (கண்ணகி) உன்னோடு கூடப் பிறந்தது. ஆகவே, சிவன் தனது பிறை நிலாவை உன்னுடைய நெற்றியாகக் கொடுத்துவிட்டான்.

அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டாகலின்
உருவு இலன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவமாக ஈக்க

அடையார் முனை= போர் முனை ; உருவு இலன் = உருவம் இல்லாதவன். ;

நெத்தியைப் பாத்தானா, அடுத்து புருவம். எல்லா கவிஞரும் சொன்னதுதான். புருவம் வில் மாதிரி இருக்குனு சொல்லுறான். அதக் கொஞ்சம் ரொமாண்டிக்கா சொல்லுறான். போரில் கலந்துகொள்ளும் வீரர்களுக்குப் படைக்கருவிள் வேண்டும். என்னோடு காதல் போர் செய்ய வரும் உனக்குத் தன்னுடைய பெரிய கரும்பு வில்லை இரண்டு கருத்த புருவங்களாகச் செய்து கொடுத்தான் உருவம் இல்லாத மன்மதன். அது என்ன உருவம் இல்லாத மன்மதன் ? பழைய கதைதான். சிவன் கோவப்பட்டு மன்மதனை
எரித்து விடுகிறார். ரதியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவள் மட்டும் கானும்  மாறும் மற்றவர் கண்ணிருக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு உருவம் கொடுக்கிறார் சிவன்.அந்த மன்மதனைத்தான் உருவம் இல்லாத மன்மதன் எனச் சொல்ல்கிறார்.


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படை நினக்கு அளிக்க அதனை நினக்கு இடையென

மூவா மருந்து = அமுதம் ;

புருவத்துக்கு அப்புறம் கண்ணைப் பார்ப்பான்னு நினைப்பிங்க ; அவன் கொஞ்சம் வேகமா கீழ வந்தது இடுப்பப் பாக்குறான். (கெட்ட பையன் சார்)..
இந்த தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியும்ல. அப்பிடி பண்ணும் போது அந்த அமுதம் வருவதற்கு முன்னால பல வேறு பொருட்கள் வந்தனவாம். அப்பிடி வந்து இந்திரனுக்கு கிடைத்தது வச்சிரம் எனும் ஆயுதம். அதோட கைப் பிடி சிறுத்திருக்கிறது.
அத இந்திரன் கண்ணகிக்கு கொடுத்துவிட்டான். அதை அவள் மெலிந்த இடையாகச் செய்துகொண்டு விட்டாள். (உஸ்ஸ்ஸ்.. சின்ன இடை, அதைத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கான். :))) )


அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்
இறு முறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது

அறுமுக ஒருவன் = ஆறுமுகன் / முருகன் ; இறுமுறை காணும் = இறுதி பண்ணிப் பார்க்க (முடித்து கட்டிவிடப் பார்க்கும் )

இடையைப் பார்த்தவன் கொஞ்சம் மேல பார்க்குறான். இருங்க இருங்க. அவன் இப்பத்தான் கண்ணைப் பார்க்கிறான்.

இந்த ஆறுமுகன் இருக்கானே அவனுக்கு என் மேல என்ன கோவமோத் தெரியல. ஆறு முகம் = 12 கண்கள். ஆனா ஒன்றில் கூட அவனுக்கு என் துன்பம் தெரியல ; என்ன துன்பம் கோவலனுக்கு ?? முருகன் அவனுடைய அழகிய சுடர் மிகுந்த நெடுவேலை இரண்டாக்கி ஒன்றை கண்ணகியின் குளிர்ச்சியான இரண்டு கண்களாக மாறும்படி செய்துவிட்டான். இப்போது அந்த வேல் போன்ற உன் கண்கள் என்னைக் குத்திக் கொல்கின்றன..


மா இரும் பீலி மணிநிற மஞ்சை நின்
சாயல் குடைந்து தண்காண் அடையவும்
அன்னம் நன்னுதல் மென் நடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்

மா இரும் பீலி மணிநிற மஞ்சை = கருத்த பெரிய தோகையையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய மயில்

நீல நிற மயில் ஒன்று தன் பெரிய கருத்த தோகையை விரித்து ஆடும் போது எப்பிடி இருக்கும் ? ரொம்ப அழகா இருக்கும்ல.. அப்பிடிப்பட்ட மயில்களாம்
உன் அழகிற்கு முன் தோற்று காட்டிற்குள் ஓடிப் போய் விட்டன. மயில்கள் மட்டுமில்லை இந்த அன்னப் பறவைகள் நீ நடப்பதைப் பார்த்து விட்டு உன்னோட போட்டியிடமுடியாது என்று நல்ல நீரை உடைய வயல்களில் நிறைந்திருக்கும் மலர்களுக்கு நடுவே சென்று பதுங்கிக்கொண்டன.


அளிய தாமே சிறு பசும் கிளியே,
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
மடநடை நின் மலர்க்கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின

இந்த மயில்கள், அன்னப் பறவைகள் இதுக கூட பராவாயில்லை. ஆனா இந்த பச்சைக் கிளிகள்தான் ரொம்பப் பாவம். குழலும் யாழும் அமுதமும்
சேர்ந்து குழைத்த உன்னுடைய மழலைப் பேச்சுக்குமுன்னால் அந்தக் கிளிகளின் பேச்சு எடுபடவில்லை. ஆனாலும் உன்னைவிட்டுட்டு போக அவைகளுக்கு மனம் இல்லை. மலர் போன்ற உன் கையிலேயே தங்கியிருந்து உன்னுடைய பேச்சைக் கேட்டுப் பழகிக்கொள்ளலாம் என்று திட்டமிடுகின்றன


நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்!

நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் = மணம் மிகுந்த மலர்களை அணிந்த கோதையே, உனக்கு அலங்காரம் செய்கிற பெண்கள்

இது முதல் இரவு. எனவே கண்ணகிக்கு பணிப் பெண்கள் அலங்காரம் செய்து இருக்கிறனர். கோவலனுக்கு அதைப் பார்த்ததும் கோவம் வருகிறது. நல்ல மணம் மிகுந்த பூக்களை அணிதிருக்கும் கண்ணகியே, யார் உனக்கு இவ்வளவு அலங்காரம் செய்தார்கள்? உன்னுடைய இயற்க்கை அழகே ஏதும் குற்றம் சொல்ல முடியாததது. அதன் மேல் எதுக்கு செயற்கை அழகு கூட்ட இந்த நகைகளை அணிவிக்கிறார்கள் ? அதனால் ஒரு பயனும் கிடையாது.


பல்லிரும் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என்னுற்றனர் கொல்!

அடர்த்தியான உன்னுடைய கூந்தலில் ஒன்றிரண்டு மலர்களைச் சூடினால் போதாதா? இத்தனை பெரிய மாலையைச் சுமத்தவேண்டுமா?

நானம் நல் அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்!

உன் கூந்தலுக்கு மணம் நிறைந்த நல்ல அகில் புகையை ஊட்டினார்கள். சரி. அதற்குமேல் கஸ்தூரிச் சாந்து பூசியது எதற்காக?

திருமுலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்!
திங்கள் முத்து அரும்பவும் சிறு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என்னுற்றனர் கொல்!

அழகிய உன் மார்புகளில் தொய்யில் (சந்தனக் கோலம்) வரைந்தார்கள். சரி. அதற்குமேல் ஓர் ஒற்றை வட முத்துமாலையை அணிவித்திருப்பது எதற்காக?
அவர்கள் இத்தனை நகைகளையும் உனக்கு அணிவித்துவிட்டதால், உன்னுடைய சிறு இடை பாரம் தாங்காமல் நோகிறது. நிலா போன்ற உன் முகத்தில் முத்துபோல் வியர்வை அரும்புகிறது. இப்படி உன்னை வருந்தச் செய்த அவர்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது!. கண்ணகியின் இடை அவ்வளவு மேல்லியது. நகைகளின் பாரம் தாங்காமல் இடை நோகிறதாம்.


மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலைஇடைப் பிறவா மணியே என்கோ!
அலைஇடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழ்இடைப் பிறவா இசையே என்கோ!

குற்றம் இல்லாத பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே,
என் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில்
பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா?

முக்கியாம ஒன்ன சொல்ல மறந்துட்டேன். அந்த மாளிகையில் நிறைய ஓவியங்கள் மாட்டப்பட்டு இருந்தன. இதன் பின் அதுல ஒரு ஓவியத்தை
மிக அருகில் காட்டுகிறோம்...A Close up shot..Cut !!!




Wednesday, April 15, 2015

யார் இந்தப் பெரியார் என்னும் ராமசாமி?


வணக்கம் நண்பர்களே,

பதிவு எழுதி நாள் ஆகிவிட்டது என எண்ணிக் கொண்டிருக்கும்போதே நண்பரின் முக நூல் பதிவிற்க்கு பதில் எழுதப் போய் அதை பதிவாய் எழுதினால் எளிது எனத் தோன்றியதால் எழுதப்படும் பதிவு இது. அனைத்தும் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கேதும் இல்லை ;உண்மையில்லாத விமர்சனம் என்பது வெறும் வெறுப்பைக் கொட்டுவதே. கொஞ்ச நாட்களாகவே பேசப் பட்டுவரும் பெரியார் பற்றிய விமர்சனங்களும் அப்பிடியே உள்ளன (என் பார்வையில்). அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?விமர்சிக்கக் கூடாதா? தாராளமாக !! அதன் பின் உண்மையும், தரவுகளும் இருக்க வேண்டும் என்பதே என் அவா. அப்பிடி என்ன சொல்லிட்டாங்க? 1. பெரியார் வெறுமனே கடவுள் மறுப்பாளர் ; சாதியை மறுக்கவில்லை; 2. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றார். 3. திருக்குறளை எதிர்த்தார்; இன்னும் பல. எதோ என்னால் ஆன மறுப்புக்களை இங்கே முன் வைக்கிறேன்.

பெரியார் வெறுமனே கடவுள் மறுப்பாளர் மட்டுமா?

இவரது புரட்சி கடவுள் மறுப்பு என இல்லாமல் சாதி ஒழிப்பு என இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்பது நண்பரின் கருத்து.
பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்பு மட்டுமல்ல. அது சமூக நீதி, சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும் (Root Cause). இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல். முக்கியமாய் கவனிக்க வேண்டியது ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார். உங்களுக்கேத் தெரியும், ஆரம்பத்தில் அவர் ஒரு காங்கிரஸ்காரர். அவர் அதிலிருந்து வெளியேறியதற்கு காரணமே காங்கிரஸ் மாநாட்டில் அவரின் வகுப்புவாரி தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்பதுதான். இது சாதி மறுப்பு இல்லையா? ரொம்ப முன்ன இல்ல , 1953-இல் முதல்வராய் இருந்த
சி. ராஜகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டம் கொண்டுவந்தார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதை யாரு எதிர்த்தது ? இதே பெரியார்தான்.இது சாதி மறுப்பு இல்லையா? சேரன்மாதேவி குருகுல எதிர்ப்பு எந்த வகை? தீண்டாமை/சாதி மறுப்பு இல்லையா ? வைக்கம் போராட்டம் சாதி மறுப்பு இல்லையா ? எல்லாவற்றுக்கும் மேலாக அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்ற அவரின் அவா சாதி மறுப்பு இல்லையா?

பெரியார் தமிழுக்கு எதிரானவரா?

நண்பர் மட்டுமல்ல பலரும் கூறும் கருத்துக்கள் இவைதான். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார், திருக்குறளை அவமதித்தார், தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. முதலில் பெரியார் மொழியை ஒரு  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்றுதான் பார்க்கிறார். மதத்தின் பெயரால் மொழியின் தொன்மங்களைச் சிதைத்து போலி தரவுகளையும் , புராணக் குப்பைகளையும் சேர்ப்பதை எதிர்த்தார். தமிழ் பற்றி என்னலாம் கூறி இருக்கிறார் எனப் பார்க்கலாம்.

1. என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப் படுகிறேன்.

2. நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.

3. வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது.

4. அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

5. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

இவ்வளவு சொன்னவர் ஏன் காட்டுமிராண்டி மொழி என்றார்?? சிறந்த மொழியாக இருந்த தமிழ் மொழி சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

6. தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது.

7. தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத்
தவறினார்கள்.

8. தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மறுப்பு கூற முடியுமா நண்பர்களே ??

9. மக்கள்,தேவர்,நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன.

தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர்.

1924-ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30-வது காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் தலைமை தாங்கி பேசிய போது தன் முன்னுரையில் என்ன சொன்னார் என்றால் ?

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்துத் தேசப் பற்றிராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருகவேண்டுமென்பது எனது பிராத்தனை. தமிழ்மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களிற் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், ரோமாபுரி, பாலஸ்தீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்ததும், பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச் செய்யும் அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது...தமிழ்நாட்டிற் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று என்று சொல்கிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு. மகாராஷ்டிரனுக்கு மகாராஷ்டிரா மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப்புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

கடைசியில் ஒன்றே ஒன்று - 1937-ல் தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது பெரியார்தான். 1960-ல் தமிழ் நாட்டின்
பிரிவினையை வலியுறுத்தி, இந்திய தேசப்படத்தை (தமிழ்நாடு நீங்களாக) தமிழ் நாடெங்கும் எரிக்கச் செய்தார். தடுப்புக்காவல் சட்டம் 151-ன்படி பெரியார் கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

பெண் விடுதலை:

நண்பர் "பெண் விடுதலை பற்றி இங்கு பேச வேண்டாம். அது பெரியாரின் சொந்த விருப்பம்." என்று கூறி இருந்தார். எனக்கு என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. பெண் விடுதலை பற்றி பெரியார் போல பேசிய வேறு யாருனும் உண்டா??? எனக்குத் தெரிந்து இல்லவே இல்லை;

திரைச்சீலை போராட்டம் என்று கேள்விப் பட்டதுண்டா? ஒரு காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிய உரிமை இல்லாமல் திரைச்சீலை போராட்டம் நடத்தினார்கள். நடக்க உரிமை இல்லை, படிக்க உரிமை இல்லை, போராட உரிமை இல்லை. அதை மாற்றியதும் பெரியாரின் இயக்கம்தான்.

இன்று தேவதாசிகள் இல்லை ; பொட்டு கட்டி விடும் பழக்கம் இல்லை; தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு இருக்கிறதா? கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட இனத்துப் பெண்களை, உண்டு கொழுத்த பணக்காரக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தொடர்கதையாக நடந்துவந்ததைத் தட்டிக்கேட்க யாருமில்லாதிருந்தது. இந்த அடிமைப் பிரிவைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர்தான் ராமாமிர்தம் அம்மையார். அவரது அன்னை அவரை பத்து ரூபாய் மற்றும் ஒரு பழைய சேலைக்கு ஒருவரிடம் விற்றார். ராமாமிர்தம் அம்மையாரைத் திருமணம் என்ற போர்வையில் வேட்டையாடக் காத்திருந்தது 80 வயது அடைந்த கொழுத்த கிழம். ஆனால், அதை எதிர்த்து கடுமையாகப் போராடிய ராமாமிர்தம் அம்மையார், தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பேரளம் சுயம்புப்பிள்ளை என்பரை எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர். தேவதாசி வழக்கை ஒழிக்க இவர் பெரியாருடன் களம் கண்டது வரலாறு.தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் தலைவர் ஆச்சாரியார்,“தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார். அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார். இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் அவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாகப் பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், பெரியாரும்தான். இதன் பின்னர், நீதிக்கட்சி காலத்தில் 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது. பெரியாரின் நண்பர்களும் தேவதாசி பெண்களை மணந்து கொண்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தனர்.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்று கூறுவார் பெரியார். - (குடிஅரசு 16-06-1935). 1928-இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில்நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தாலே போதும்.

சொத்துரிமை பற்றிய தீர்மானங்கள்:

1.குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
2.புருஷன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
3.பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தங்களை நாகரிக நாரிமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும்,
நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர -
ஆண்களுக்குச் சரி நிகர் சமானனாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை” (‘விடுதலை’ 11.10.1948).

பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டா என்றெல்லாம் பெண்கள் மத்தியிலே வினா எழுப்பியிருக்கிறார். பெண்கள் பிள்ளை பெறும் எந்திரமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

16 முழத்தில் புடவைகளை உடல் முழுவதும் சுற்றிச் சுற்றிக் கட்டுவது என்பது பெண்களுக்கு வசதிக் குறைவு. ஒரு அவசர நேரத்தில் தப்பிப் பிழைக்க, வேகமாக வெளியேறிட இது தடையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களைப்போல உடை உடுத்த வேண்டும். ஆண் - பெண் வித்தியாசம் காட்டத் தேவையில்லை; பெயரை வைத்தேகூட ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறார். இதை இங்கு நான் ஏன் கூறுகிறேன் தெரியுமா?

1997-இல் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குட முழக்குக்காக யாகங்கள் செய்தபோது பந்தல் தீ பற்றி எரிந்து, தீயில் சிக்கி 41 பேர் பரிதாபகரமாக
மரணமடைந்தனர். இந்த 41-இல் 31 பேர் பெண்கள். இதற்கான காரணம் என்ன? சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் விபத்துக் கட்டுப்பாடு மையம் (centre for disaster mitigation) ஒன்று இருக்கிறது. அது ஆய்வு செய்து பெண்கள் உடுத்திய புடவைதான் அவர்களால் விரைந்து ஓடி தப்பிக்க முடியவில்லை (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 10.6.1997) என்று அந்த மையம் கூறியுள்ளது. பெரியார் சரியாத்தானே சொல்லி இருக்கிறார்.

பாரதி பெண்களைப் பற்றி என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|?

வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’

ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்

இன்னும் பலப் பல செய்திகளை தரவுகளோடு காட்ட முடியும். ஆனாலும் படித்து விட்டு குற்றம்தான் சொல்ல போகிறார்கள் என்பதால் இங்கயே
நிறுத்துகிறேன்.

நன்றி
ஆசிப்

உசாத் துணை:
1. தோழர் கவியின் கட்டுரைகள் (nakkeran)
2. பெரியார்.org

Wednesday, April 1, 2015

கீ. வீரமணி - ரங்கராஜ் பாண்டே விவாதமும் சில கேள்விகளும் !!

கீ. வீரமணி - ரங்கராஜ் பாண்டே விவாதமும் சில கேள்விகளும் !!

வணக்கம் நண்பர்களே !!

கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிதான் இது. திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் மீதும் மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. ஏனோ சென்ற இரண்டு மூன்று வாரங்களா வரும் விவாதங்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்துகின்றன. திரு. வீரமணி அவர்களுடான விவாதம் எனக்கு சற்று ஏமாற்றமே.. நீ ஏன் வீரமணிக்கு வக்காலத்து வாங்குற ?
நீ என்ன பெரியார்க்குப் பேரனா ? கழகப் போர்வாளா ? மழுங்கின கத்தியா ? அப்பிடினுலாம் யாரும் கேக்காதிங்க..சிறு வயதில் இருந்தே பெரியார்
தொண்டர்களுடனான நட்பு, பெரியார் திடல் எதிரில் கல்லூரி, சென்னை பல்கலை கழகத்தில் முதுகலை தமிழ் படிக்கும் படிக்கும் போது சிறப்புத் தாளாக பெரியாரியியல் படிப்பு, எல்லாவற்றுக்கும் மேல் பெரியார் மேல் இருக்கும் மதிப்பும், மரியாதையும்.. தமிழ் சமுதாயத்திற்க்கு மாபெரும் பணி பெரியார் அவர்களால் மட்டுமே செய்யப்பட்டது என உறுதியாக நம்புகிறவன் நான்.. அதுனாலதான் இந்தப் பதிவு. இதுக்கும் மேல நீங்க காரணம் கேட்டா கேரள மாந்திரீக முறையில் பில்லி சூனியம் வைக்கப்படும் :)

அதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் இது பெரியத் தீனியாகிவிட்டது. அவன் அவன் பெரியாரைப் பற்றியும், வீரமணியைப்  பற்றியும் தூற்ற ஆரம்பித்துவிட்டனர்.. வீரமணி அவர்களின் செயல்பாடுகள் குறித்து  எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததாலும் இந்தப் பதிவுக்கு அவர் எந்த விதத்திலும் காரணம் அல்ல. என் விருப்பம் இந்த விவாதம் நடுநிலையோடு நடைபெற்று இருக்க வேண்டும் என்பதுதான். வீரமணியைத் திட்டமிட்டு கோபப்படுத்தி சரியான பதில்களைக் கூற விடவில்லை என்பதுதான் என் எண்ணம்.

1. எல்லாரும் வைசியரா ??


 காட்சியைப் பாருங்கள். திரு. பாண்டே அவர்கள் இன்று எல்லாரும் வைசியர் ஆகிவிட்டனர் என்கிறார். இன்று எல்லோரும் கணிப்பொறி படிப்பத்தால் வைசியர் ஆகிவிட்டோமா ? அப்புறம் ஏன் இன்னும் ஒரு பிரிவினர் மட்டுமே துப்புறவு தொழிலில் இருக்கின்றனர்.? அதை வசதியாக மறந்து/மறைத்து விட்டார்.


2. பாம்பு/பார்ப்பனர் யாரை அடிக்கச் சொன்னார் ?


நடமாடும் சுகந்திரமே இல்லை என்ற கருத்திற்கு துணையாக இதை மேற்கோள் காட்டினார். அதற்க்கு வீரமணி அவர்கள் அது ஒரு வட இந்தியப் பழமொழி என்றும் ஆனால் பெரியார் அதை எங்குமே எழுத வில்லை , குடியரசு, விடுதலை இதில் எங்கேயாவது குறிப்பிடப்பட்டு இருந்தால் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்க்கு ஆதாராமாகக் காண்பித்தவை எவையும் குடியரசு/விடுதலை இல்லை. எனவே வீரமணி பதவி விலகவேண்டியது இல்லை (சமுக வலைத்தளக் கோரிக்கைகள்) எனவே நான் கருதுகிறேன். ஆனால் இதைப் பெரியார் சொன்னாரா எனக் கேட்டால் நான் ஆம் என்றே சொல்லுவேன். சொன்ன இடம், பொருள், காரணம் வேறு ஏதேனும் இருக்கலாம். சாகும் வரை நண்பனாக இருந்த ஆச்சாரியாரை அவர் அடித்தாரா ? இல்லை வேறு யாரை அடித்தார்? ஆனால் பெரியாரின் கூட்டத்தில் பாம்பை விட்டு கலவரம் ஏற்படுத்திய வரலாறு உண்டு.



3. தமிழகத்தில் ஏன் வைக்கம் போல போராடவில்லை ?
வைக்கம் சென்று ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார் ஏன் தமிழ்நாட்டில் நடத்தவில்லை என ஒரு கேள்வி ? என்னைப் பொறுத்தவரை இது ஒன்றுதான் இந்த விவாதத்திற்கு தேவையில்லாத கேள்வி. தமிழ்நாட்டில் வைக்கம் போன்று நூறு மடங்கு பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் அவர். அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால் இன்று வீரமணியே இல்லை. விவாதமும் இல்லை.


4. பெரியார் vs இராமசாமி நாயக்கர்


இந்தக் கேள்விலதான் மரியாதை மல்லலாகப் படுத்துருச்சு Mr.பாண்டே. பெரியார் 45 வயது வரை நாயக்கர் என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். யாரும் மறுக்கப் போவது இல்லை. ஆச்சாரியார் இராஜாஜி அவர் சாகும் வரை பெரியாரை நாயக்கர் என்றுதான் அழைத்தார். செங்கல்ப்பட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானம்தான் இன்றுவரை ஜாதிப் பெயரை பெயரோடு சேர்ப்பது கேவலம் என்று என்ன வைக்கிறது தமிழனை. மற்ற மாநிலங்களுக்கும்,பெரியாரின் தமிழ்நாட்டிற்கும் அதுதான் வேறுபாடு.


5.அம்பேத்கர் என்ன சொன்னார் ?

இதுவும் தவறான ஆதாரம் காட்டப்பட்ட ஒரு கேள்வி. அவர் கூறியது அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று கூறினார். அனால் காட்டியது "இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணக் கூடாது". More like புலால் உண்ணாமை. மறுப்பே தேவையில்லை இதுக்கு.



இன்னும் சிலவற்றை மேற்கோள் காட்டத் தேவை இல்லையென்றே நினைக்கிறேன். பெரும்பாலும் வீரமணி அவர்கள் சரியாகவே பேசினார். சிலவற்றை இன்னும் ஆதாரத்தோடு அவர் கூறியிருக்கக் கூடும். இன்னும் ஒரு முறை இதே விவாதம் வரவேண்டும். பெரியாரின் பாதையில் தி.க. எப்பிடிப் பயணிக்கிறது என்று பேசலாம். பாண்டே அவர்கள் இன்னும் நல்ல கேள்விகளைக் கேட்க்கலாம். முயற்சி செய்யுங்கள் திரு.பாண்டே.

நன்றி,
ஆசிப்