Wednesday, April 22, 2015

உலகப் புத்தக தின குறும் பதிவு

வணக்கம் நண்பர்களே,

புத்தக தினமாம் இன்று. நானும் புத்தகங்களும் எப்பிடி இணைந்தோம் என்ற பதிவுதான் இது. என் பால்யம் புத்தகங்களாலேயே நிரம்பிக் கிடந்தது. அப்போது நான் இருந்தது ஈரோடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. மொத்தமும் என் வயதையொத்த நண்பர்களே. முதலில் ஆரம்பித்தது சிறுவர் மலர்தான் என நினைக்கேறேன். "பல முக மன்னன் ஜோ" அப்போதைய  பிரபலம். அதே சிறுவர் மலரில் தொடர் கதையாக வந்தது "உயிரைத் தேடி". கிட்டத்தட்ட இப்போதைய "Resident Evil" மாதிரியான கதை.

என் ஐந்து வயதில் "பூந்தளிர்" முதல் காமிக்ஸ் புத்தகமாக அறிமுகமானது. பூந்தளிர் என்றதும் வேற என்ன நினைவிற்கு வரும் ?? மந்திர வால் குரங்கு கபிஷ் :))))). கபிஷின் நண்பர்கள் கரடி பபூச்சா, மான் பிந்து, கழுகு பஞ்சா, யானை பந்திலா மற்றும் வில்லனாக ஒரு நரி (பெயர் நினைவில்லை), புலி (பீலு ??), வேட்டைக்காரன் தோப்பையா. இவர்களிடம் இருந்து வன நண்பர்களைக் காப்பதுத்தான் கபிஷின் வேலை; விலை 2 ரூபாய். வாண்டுமாமா கதைகள்  அருமையாக இருக்கும் (அவர்தான் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார் என்பதெல்லாம் அப்போ தெரியாது). பூந்தளிரின் இன்னொரு மிகப் பெரிய நாயகன் காக்கை காளி (இன்னொரு நரி, முதலை பாத்திரங்கள் வரும். பெயர்கள் நினைவு இல்லை). ஒவ்வொரு மாதமும் விடாமல் படித்துக் கொண்டிருந்தேன்.கூடவே அம்புலிமாமா, பாலமித்திரா, இரத்னபாலா அறிமுகம் ஆகின. அம்புலிமாமா = விக்கிரமாதித்தன் கதைகள். வேதாளம் போல என் முதுகிலும் புத்தகங்கள் எறிக் கொண்டன.

நான்காவது/ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டில் மாலை மலர் நிருபர் குடும்பம் குடி வந்தது. அவர் பெயர் திருமால்துரை. ராஜா, ராஜி என்று என்னை விட வயது குறைந்த இரு குழந்தைகள் அவர்களுக்கு. அதே நேரத்தில் இந்த காமிக்ஸ் எனப்படும் படக்கதை படிப்பதில் அடுத்த படிக்குச் சென்றிருந்தேன். என்னையும், என் நண்பர்களையும் வேறு ஒரு உலகத்திற்கு கூடிச் செல்ல வந்தது "லயன் காமிக்ஸ்", "முத்து காமிக்ஸ்", "மினி லயன் காமிக்ஸ்". லயன் காமிக்ஸ்தான் முதலில்.. அப்பப்பா... குற்றச் சக்கரவர்த்தி சிலந்தி மனிதன் (Spider man), இரும்புக் கை மாயாவி, ஆர்ச்சி ரோபோ. நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர் என்றால் தெரியும் லயன் காமிக்ஸ் அருமை. மாலை மலர் நிருபர் என்று சொன்னேன் அல்லவா, அது ஏன் என்றால் மாலை மலர் தினத் தந்தி நிறுவனத்தில் ஒன்று. அதே நிறுவனம் "ராணி காமிக்ஸை" அப்போது அறிமுகப் படுத்தியது. ராணி காமிக்ஸ் புத்தகம் கடைக்கு வரும் இரண்டு நாட்கள் முன்னே என் கைக்கு வந்துவிடும். அவர் வீட்டிலும் என்னை விட சிறிய குழந்தைகள் எனவே ஒரு காலத்தில் நான்தான் ராணி காமிக்ஸின் ஒவ்வொரு பதிப்பையும் முதலில் படித்தது நான்தான். :)) ராணி காமிக்ஸில் யார் வருவார் ? ஜேம்ஸ் பாண்ட் :)). பிறகு, மாடாஸ்தி பிளைசி (பெண் புலி) மற்றும் அவர் நண்பர் வில்லி கார்வின் (கத்தி வீச்சு ஸ்பெஷலிஸ்ட்), மந்திரவாதி மாண்ட்ரேக் இன்னும் பலர்.

ஒரு  வருடம் கழித்து காமிக்ஸ் உலகின் மாபெரும் நாயகன் எனக்கு அறிமுகம் ஆனார். "டெக்ஸ் வில்லர்". நவஜோ இனத் தலைவர், ரேஞ்சர்,
குறிதவறாமல் சுடுவதில் வல்லவர். காமிக்ஸ் உலகின் ரஜினிகாந்த் டெக்ஸ் வில்லர் எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு வெறி பிடித்துப் போய் படித்துக் கொண்டு இருந்தேன். மினி லயன் வண்ண அச்சில் வேறு மாதிரியான கலவையாக வரும். கேட்கவே வேண்டாம். லக்கி லுக்தான் என் கனவு கண்ணன் :)) லக்கி லுக்கும் அவன் குதிரை ஜாலியும் செய்யம் சாகசங்கள் ஒவ்வொன்றும் ரண களம் :) வருடம் ஒருமுறை ஆண்டு மலர், தீபாவளி மலர்
என கலந்து கட்டி படித்துக் கொண்டுருந்த நான் ஈரோட்டில் இருந்து தாராபுரம் சென்றது விதியின் விளையாட்டு. ஈரோடு போல இல்லாமல் அது ஒரு சிறு நகரம். புத்தகம் கிடப்பது இல்லை அது போல; தேடி தேடி கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே அடுத்த படிக்குச் சென்றேன்.

வீட்டில் குமுதம் (கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் - தொடர்), ஆனந்த விகடன், நக்கீரன், ஜூனியர் விகடன் என் தந்தையார் படிக்க. சிலது புரியாது இருந்ததாலும் படித்து வைத்துக் கொண்டேன்.

அப்போது கோவையில் இருந்து அசோகன் என்ற மனிதர் நாவல்களை பிரசுரம் செய்து கொண்டு இருந்தார். பாக்கெட் நாவல், கிரைம் நாவல் என்ற பெயரில்.  அதுவரை எனக்கு படக் கதை மட்டுமே. நாவல்களில் படம் இருக்காது :( அனால் ராஜேஷ் குமார் என்பவர் எனக்கு இன்னொரு நாயகனைக் காட்டினார்
விவேக் என்ற பெயரில். விவேக், ரூபாலா, இன்ஸ்பெக்டர் கோகுல்நாத், துப்பறியும் கதைகள் இயல்பாகவே வசீகரித்தன. போத குறைக்கு பட்டுக் கோட்டை பிரபாகரரின் நரேன், வைஜயந்தி.. அம்மாவின் சில சென்சார்களுடன் படிக்க கிடைத்தது.

கெட்ட நண்பர்களின் சக வாசம் நூலகத்தை வேறு காட்டியது.
துப்பறியும் கதைகளை அங்கே தேடியதில் "தேவன்" கிடைத்தார். "துப்பறியும் சாம்பு" விவேக்/நரேன் போல இல்லாமல் காமெடி detective. எட்டாவது வரும் போது அடுத்த அதிர்ச்சி தமிழ்வாணன் என்ற மனிதரால். "இன்னொரு செருப்பு எங்கே" எனப் பார்க்கப் போய் "சங்கர்லால் துப்பறியும்" கதைகளைத் திகட்ட படித்தேன். அப்போது எனக்கு ஷெர்லாக் ஹோம்ஸ்லாம் தெரியாது. அனால் தமிழ்நாட்டின் ஷெர்லாக் சங்கர்லாலாய்த்தான் இருந்த்திருக்க முடியும்.

கெட்ட நண்பர்கள் சகவாசம் என்றேன் அல்லவா :))) ஒன்பதாவது படிக்கும்போது "கியூபா - புரட்ச்சிகர யுத்தத்தில் கதை" சே குவாராவின் வரலாறு. பாதிக்கும் மேல் புரியவில்லை; ஆனாலும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் பக்கம் அடிக்கடி போக வைத்தது. அப்போதெல்லாம் ஒரு பஸ் போன்ற வண்டியில் நடமாடும் புத்தகக் கடைதான் இருக்கும். சும்மாவது எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். "இவான்" படித்து முடித்ததும் ஒரு சோக மனநிலைக்கு கொண்டு சென்ற முதல் புத்தகம். சோவியத் புத்தகங்கள் சிலவற்றை இன்னும் வைத்திருக்கிறேன்.

கல்லூரி விடுதி வேறு ஒரு புத்தக உலகையும் காமித்தது. இரண்டாம் ஆண்டு தமிழ் ஆசிரியர் "இரா.இரகுபதி" பாரதிதாசனை அறிமுகப் படுத்தினார்.
சட்டென்று மனதில் ஒட்டியர் கவிஞர் புரட்சி கவிஞர்தான். பாரதி, பாரதிதாசன், வள்ளுவர் மூன்றும் இரண்டாம் ஆண்டு முழுக்க. சிலப்பதிகாரம் கூட
படித்தேன் அனால் சரியான் உரை கிடைக்கவில்லை நூலகத்தில். இதைத் தவிர நான் இயற்பியல் படிக்கவே இல்லை. நண்பர்களுக்குத்தான் தெரியும் அது :))

மூன்றாம் ஆண்டு = மிக முக்கியமான ஆண்டு. கொஞ்சம் திமிர் வேற. கல்லூரியின் எதிரில் பெரியார் திடல். பெரியார் நூலகம், தி.க கூட்டங்கள். நான் ஒருவன் மட்டுமே பெரியார் நூலகத்திற்கு போகும் விடுதி மாணவன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு சின்ன புத்தகங்கள் விற்பார்கள். வார விடுமுறையின் போது ஊர்க்குச் செல்ல பஸ் ஏறும் போது வாங்குவேன் ஊரில் இறங்கும் போது கிழித்துப் போட்டுவிட்டு வந்து விடுவேன். வீட்டில் ஒரு முறை பார்த்து திட்டும் வாங்கினேன் :)

முதுகலை படிக்கும் போது ஒரு பயத்தோடு படித்தேன் (வேலை பயம்) பாலகுருசாமி, RS அகர்வால்தான் படித்தேன் இரண்டு வருடமும்.

வேலைக்காக சென்னை திருவைல்லிக்கேணி விடுதியில் தங்கியதுதான் நான் செய்த பாக்கியம். பழையப் புத்தகக் கடைகள், புத்தகக் கடைகள்,
மூர் மார்கெட் புத்தகக் கடைகள் (நாவல்கள்). 1. சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்சேர், ஹாரி பாட்டர் அனைத்தும் மூர் மார்க்கெட்தான். ஒரு புத்தகம் பத்து ரூபாய். அதே புத்தகம் லேன்ட் மார்க்கில் 15௦ - 2௦௦ ருபாய். பொன்னியின் செல்வன், சாரு நிவேதா, ஜெய காந்தன், லாசாரா, புலியூர் கேசிகன், ஊ.வே.சா, கலிங்கத்துப் பரணி என அனைத்தும் கிடைத்தது. போதாகுறைக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் முது கலை தமிழ் சேர்ந்து விட்டேன். தொல் காப்பியமும், சங்க இலக்கியமும் எப்பவும் ஒட்டிக் கொண்டது (இன்று வரை), சென்னை புத்தக கண்காட்சி அறிமுகமானது. வேலை வேறு கிடைத்திருந்ததால் மிகப் பெரும் சுகந்திரம் கண்ணா பிண்ணனு புத்தகம் வாங்கினேன். கவிதைகள் அறிமுகமானதும் அப்போதுத்தான்.. அறிவு மதி, தபு சங்கர், பழனி பாரதி, (வைரமுத்து கல்லூரிக் காலம் இருந்தே).

ஒருவாறு படிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது வேறு வேறு எல்லைகளில். புது புது அறிமுகங்கள், புத்தகங்கள். எல்லாம் எழுதத் தேவையில்லை. அமெரிக்க வந்து இழந்தது இது ஒன்றுதான். நினைக்கும் போதேலெல்லாம் கிடைப்பதில்லை/வாங்க முடியவில்லை. ஆனாலும் இணையம் உதவுகிறது.

கேட்பது ஒன்றே ஒன்றுதான். நிறையப் படியுங்கள். எதை வேண்டுமானாலும் ஆர்வம் வந்ததும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.


நன்றி,
ஆசிப்



1 comment:

  1. உங்களது வாசிப்பு பற்றிய பதிவை இப்போதுதான் படித்தேன்.

    அருமை. சிறப்பு.

    ஒருசில விஷயங்கள் மட்டும் மாறி இருக்கின்றன. மாற்றி விடுங்கள்.

    குற்றச் சக்கரவர்த்தி சிலந்தி மனிதன் (Spider man) = இது ஸ்பைடர்தான். ஸ்பைடமேன் என்பவர் அமெரிக்க காமிக்ஸ் சூப்பர் ஹீரோ.

    கோவையில் இருந்து அசோகன் என்ற மனிதர் = அசோகன் சென்னையிலிருந்து, “இப்போதும்” அந்த நாவல்களைப் பிரசுரம் செய்து வருகிறார். ராஜேஷ்குமார்தான் கோவை.

    பட்டுக் கோட்டை பிரபாகரரின் நரேன், வைஜயந்தி = சுபாவின் ஜோடிதான் நரேன் வைஜ். பிகேபியின் ஜோடி பரத் சுசீலா.

    ReplyDelete