Wednesday, April 15, 2015

யார் இந்தப் பெரியார் என்னும் ராமசாமி?


வணக்கம் நண்பர்களே,

பதிவு எழுதி நாள் ஆகிவிட்டது என எண்ணிக் கொண்டிருக்கும்போதே நண்பரின் முக நூல் பதிவிற்க்கு பதில் எழுதப் போய் அதை பதிவாய் எழுதினால் எளிது எனத் தோன்றியதால் எழுதப்படும் பதிவு இது. அனைத்தும் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கேதும் இல்லை ;உண்மையில்லாத விமர்சனம் என்பது வெறும் வெறுப்பைக் கொட்டுவதே. கொஞ்ச நாட்களாகவே பேசப் பட்டுவரும் பெரியார் பற்றிய விமர்சனங்களும் அப்பிடியே உள்ளன (என் பார்வையில்). அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?விமர்சிக்கக் கூடாதா? தாராளமாக !! அதன் பின் உண்மையும், தரவுகளும் இருக்க வேண்டும் என்பதே என் அவா. அப்பிடி என்ன சொல்லிட்டாங்க? 1. பெரியார் வெறுமனே கடவுள் மறுப்பாளர் ; சாதியை மறுக்கவில்லை; 2. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றார். 3. திருக்குறளை எதிர்த்தார்; இன்னும் பல. எதோ என்னால் ஆன மறுப்புக்களை இங்கே முன் வைக்கிறேன்.

பெரியார் வெறுமனே கடவுள் மறுப்பாளர் மட்டுமா?

இவரது புரட்சி கடவுள் மறுப்பு என இல்லாமல் சாதி ஒழிப்பு என இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்பது நண்பரின் கருத்து.
பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்பு மட்டுமல்ல. அது சமூக நீதி, சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும் (Root Cause). இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இதுதான் பெரியாரியல். முக்கியமாய் கவனிக்க வேண்டியது ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாகவும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார். உங்களுக்கேத் தெரியும், ஆரம்பத்தில் அவர் ஒரு காங்கிரஸ்காரர். அவர் அதிலிருந்து வெளியேறியதற்கு காரணமே காங்கிரஸ் மாநாட்டில் அவரின் வகுப்புவாரி தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்பதுதான். இது சாதி மறுப்பு இல்லையா? ரொம்ப முன்ன இல்ல , 1953-இல் முதல்வராய் இருந்த
சி. ராஜகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டம் கொண்டுவந்தார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதை யாரு எதிர்த்தது ? இதே பெரியார்தான்.இது சாதி மறுப்பு இல்லையா? சேரன்மாதேவி குருகுல எதிர்ப்பு எந்த வகை? தீண்டாமை/சாதி மறுப்பு இல்லையா ? வைக்கம் போராட்டம் சாதி மறுப்பு இல்லையா ? எல்லாவற்றுக்கும் மேலாக அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்ற அவரின் அவா சாதி மறுப்பு இல்லையா?

பெரியார் தமிழுக்கு எதிரானவரா?

நண்பர் மட்டுமல்ல பலரும் கூறும் கருத்துக்கள் இவைதான். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார், திருக்குறளை அவமதித்தார், தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்க வில்லை. முதலில் பெரியார் மொழியை ஒரு  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்றுதான் பார்க்கிறார். மதத்தின் பெயரால் மொழியின் தொன்மங்களைச் சிதைத்து போலி தரவுகளையும் , புராணக் குப்பைகளையும் சேர்ப்பதை எதிர்த்தார். தமிழ் பற்றி என்னலாம் கூறி இருக்கிறார் எனப் பார்க்கலாம்.

1. என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப் படுகிறேன்.

2. நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில் தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.

3. வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக்குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ் தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது.

4. அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.

5. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால் தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல.

இவ்வளவு சொன்னவர் ஏன் காட்டுமிராண்டி மொழி என்றார்?? சிறந்த மொழியாக இருந்த தமிழ் மொழி சீரழிந்து போனதற்கு காரணம் மதம் அதில் புகுந்ததுதான் என்று கூறுகிறார்.

6. தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வட மொழிக்கலப்பால் இடது கைப்போல் பிற்படுத்தப் பட்டது. இந்நோய்க்கு முக்கிய காரணம் மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாயிருந்து வருவன வெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய தமிழ் மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையயன்பது இங்கு கவனிக் கத்தக்கது.

7. தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இந்தத் தமிழ்ப்பண்டிதர்களும், அவர்களின் சைவமும்தான். பண்டிதர்கள் பார்ப்பானைப் போல் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, பட்டை, விபூதியும் பூசிக்கொண்டு “கவைக் குதவாத” கட்டுக் கதைகளை நம் குழந்தைகளுக்குப் போதித்து விட்டனர். திருக்குறள் அறிவைப் பரப்புவதை விட்டு, திருவாசக அறிவையும் பாரத, இராமாயண அறிவையும் பரப்பி விட்டனர். சிந்திக்கத்
தவறினார்கள்.

8. தமிழில் ஆரீயம் புகுந்ததால் தான், மற்ற மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிகம் நடத்திய தமிழர் மரபில், இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மறுப்பு கூற முடியுமா நண்பர்களே ??

9. மக்கள்,தேவர்,நரகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தை விடப் புராண ஞானங்கள்தானே அதிகமாய் இருக்கின்றன.

தமிழறிஞர்களைத்தான் பெரியார் சாடுகிறார். ஆனால் தமிழறிஞர்கள் சாமார்த்தியமாக தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பி தமிழை பெரியார் சாடுகிறார் என்று கூறி திசை திருப்பி விட்டனர்.

1924-ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30-வது காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் தலைமை தாங்கி பேசிய போது தன் முன்னுரையில் என்ன சொன்னார் என்றால் ?

ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்துத் தேசப் பற்றிராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருகவேண்டுமென்பது எனது பிராத்தனை. தமிழ்மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களிற் காணலாம். தமிழரசர்கள் யவனதேசம், ரோமாபுரி, பாலஸ்தீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும் அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்ததும், பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச் செய்யும் அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது...தமிழ்நாட்டிற் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று என்று சொல்கிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு. மகாராஷ்டிரனுக்கு மகாராஷ்டிரா மொழியில் பற்றுண்டு. ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. இது பொய்யோ? தமிழ்நாட்டில் தமிழ்ப்புலமை மிகுந்த தமிழர்கள் எத்தனை பேர்? ஆங்கிலப் புலமையுடைய தமிழர்கள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்தால் உண்மை விளங்கிப் போகும். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.

கடைசியில் ஒன்றே ஒன்று - 1937-ல் தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியது பெரியார்தான். 1960-ல் தமிழ் நாட்டின்
பிரிவினையை வலியுறுத்தி, இந்திய தேசப்படத்தை (தமிழ்நாடு நீங்களாக) தமிழ் நாடெங்கும் எரிக்கச் செய்தார். தடுப்புக்காவல் சட்டம் 151-ன்படி பெரியார் கைது செய்யப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

பெண் விடுதலை:

நண்பர் "பெண் விடுதலை பற்றி இங்கு பேச வேண்டாம். அது பெரியாரின் சொந்த விருப்பம்." என்று கூறி இருந்தார். எனக்கு என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. பெண் விடுதலை பற்றி பெரியார் போல பேசிய வேறு யாருனும் உண்டா??? எனக்குத் தெரிந்து இல்லவே இல்லை;

திரைச்சீலை போராட்டம் என்று கேள்விப் பட்டதுண்டா? ஒரு காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிய உரிமை இல்லாமல் திரைச்சீலை போராட்டம் நடத்தினார்கள். நடக்க உரிமை இல்லை, படிக்க உரிமை இல்லை, போராட உரிமை இல்லை. அதை மாற்றியதும் பெரியாரின் இயக்கம்தான்.

இன்று தேவதாசிகள் இல்லை ; பொட்டு கட்டி விடும் பழக்கம் இல்லை; தமிழகத்தின் அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு இருக்கிறதா? கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட இனத்துப் பெண்களை, உண்டு கொழுத்த பணக்காரக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தொடர்கதையாக நடந்துவந்ததைத் தட்டிக்கேட்க யாருமில்லாதிருந்தது. இந்த அடிமைப் பிரிவைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர்தான் ராமாமிர்தம் அம்மையார். அவரது அன்னை அவரை பத்து ரூபாய் மற்றும் ஒரு பழைய சேலைக்கு ஒருவரிடம் விற்றார். ராமாமிர்தம் அம்மையாரைத் திருமணம் என்ற போர்வையில் வேட்டையாடக் காத்திருந்தது 80 வயது அடைந்த கொழுத்த கிழம். ஆனால், அதை எதிர்த்து கடுமையாகப் போராடிய ராமாமிர்தம் அம்மையார், தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பேரளம் சுயம்புப்பிள்ளை என்பரை எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர். தேவதாசி வழக்கை ஒழிக்க இவர் பெரியாருடன் களம் கண்டது வரலாறு.தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரசின் தலைவர் ஆச்சாரியார்,“தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டுவிடும்” என்று கொதித்தார். அப்போது, அந்த அவையில் இருந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, “தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக, இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்” என்றார். இதனால் சர்வமும் ஒடுங்கிப்போனார் அவர். டாக்டர் முத்துலெட்சுமியை இவ்வாறு அதிரடியாகப் பேசும்படி ஆலோசனை வழங்கியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், பெரியாரும்தான். இதன் பின்னர், நீதிக்கட்சி காலத்தில் 1929ல் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் கொண்டுவரப்பட்டது. பெரியாரின் நண்பர்களும் தேவதாசி பெண்களை மணந்து கொண்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்தனர்.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” என்று கூறுவார் பெரியார். - (குடிஅரசு 16-06-1935). 1928-இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில்நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தாலே போதும்.

சொத்துரிமை பற்றிய தீர்மானங்கள்:

1.குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
2.புருஷன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
3.பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தங்களை நாகரிக நாரிமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும்,
நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர -
ஆண்களுக்குச் சரி நிகர் சமானனாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை” (‘விடுதலை’ 11.10.1948).

பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டா என்றெல்லாம் பெண்கள் மத்தியிலே வினா எழுப்பியிருக்கிறார். பெண்கள் பிள்ளை பெறும் எந்திரமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

16 முழத்தில் புடவைகளை உடல் முழுவதும் சுற்றிச் சுற்றிக் கட்டுவது என்பது பெண்களுக்கு வசதிக் குறைவு. ஒரு அவசர நேரத்தில் தப்பிப் பிழைக்க, வேகமாக வெளியேறிட இது தடையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களைப்போல உடை உடுத்த வேண்டும். ஆண் - பெண் வித்தியாசம் காட்டத் தேவையில்லை; பெயரை வைத்தேகூட ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறார். இதை இங்கு நான் ஏன் கூறுகிறேன் தெரியுமா?

1997-இல் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குட முழக்குக்காக யாகங்கள் செய்தபோது பந்தல் தீ பற்றி எரிந்து, தீயில் சிக்கி 41 பேர் பரிதாபகரமாக
மரணமடைந்தனர். இந்த 41-இல் 31 பேர் பெண்கள். இதற்கான காரணம் என்ன? சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் விபத்துக் கட்டுப்பாடு மையம் (centre for disaster mitigation) ஒன்று இருக்கிறது. அது ஆய்வு செய்து பெண்கள் உடுத்திய புடவைதான் அவர்களால் விரைந்து ஓடி தப்பிக்க முடியவில்லை (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 10.6.1997) என்று அந்த மையம் கூறியுள்ளது. பெரியார் சரியாத்தானே சொல்லி இருக்கிறார்.

பாரதி பெண்களைப் பற்றி என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?

கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|?

வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’

ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்

இன்னும் பலப் பல செய்திகளை தரவுகளோடு காட்ட முடியும். ஆனாலும் படித்து விட்டு குற்றம்தான் சொல்ல போகிறார்கள் என்பதால் இங்கயே
நிறுத்துகிறேன்.

நன்றி
ஆசிப்

உசாத் துணை:
1. தோழர் கவியின் கட்டுரைகள் (nakkeran)
2. பெரியார்.org

4 comments:

  1. my goodness. after reading stupid hate-mongering religious-division inducing pathetic write-ups in the past few days, how nice to read this awesome article. thank u. feel happy to know there are still level-headed rational-minded people here!

    ReplyDelete
    Replies
    1. இம்சை அரசியின் கருத்துக்கு நன்றிகள் :))

      Delete
  2. எடுத்துரைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  3. எடுத்துரைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete