Wednesday, June 3, 2015

ஒர் பாடலும் 99 பூக்களும்

                        ஒர் பாடலும் 99 பூக்களும்

சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப்பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்டது. அது ஆற்றுப்படையோ, மதுரைக் காஞ்சியோ, இல்லை பட்டினப் பாலையோ. ஆனால் இந்தக் குறிஞ்சிப் பாட்டு மட்டும் தமிழ் மொழியின் சிறப்பைக் காட்டுவதற்காகப் பாடப்பட்டது. குறிஞ்சிப் பாட்டுன்னு தலைப்பிலேயே இருப்பது போல இது குறிஞ்சித் திணையில் பாடப்பட்டது. குறிஞ்சித் திணை என்றால் தலைவன், தலைவி கூடி காதல் இன்பம் கொள்வது. இதைப் பாடியவர் "குறிஞ்சிக்கோர் கபிலர்" என்ற சிறப்பு பெயருடைய கபிலர்.

ஏன் பாடினார் என்றால், பிரகத்தன் என்னும் ஒரு ஆரிய மன்னன். சங்கத் தமிழ் வாழ்வியல் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாமல் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் இலக்கணம் கூறியவாறு பின்பற்றப்படுவதில்லை. பெயர்தான் களவு ஒழுக்கம் ஆனால் அது வெறும் திருட்டு வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவனின் எண்ணத்தை மாற்றவும், தமிழரின் களவு வாழ்க்கை கற்பில்தான் (திருமண வாழ்க்கை) முடியும் எனக் காட்டவும் கபிலர் பாடியதே குறிஞ்சிப் பாட்டு.


"பூவெல்லாம் கேட்டுப் பார்" படத்தில் சூரியா ஜோதிகாவிடம் நூறு வகையான பூக்களின் பெயரைச் சொல்வாரே அது போன்று இதில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை 35 அடிகளில் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனைதான். அந்தப் பாட்டைத்தான் நான் இங்கே காட்ட உள்ளேன். ஜோதிகாவும் (தலைவி), தோழிகளும் நெல்லைக் கொத்திக் கொண்டு போகாமலிருக்க பறவைகளை விரட்டிக் கொண்டிருகின்றனர். நல்ல மழை வேறு பெய்திருக்கிறது. அருகில் தெளிந்த நீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஓர் அருவி. மேகம் கருக்குது, மின்னல் சிரிக்குது, சாரல் அடிக்குது என்று பாடியவாறே அருவியில் குளித்த அவர்கள் அடுத்து பூக்களைச் சேகரித்து விளையாடுகிறார்கள். இதைச் சொல்ல வரும்போதுத்தான் அவர்கள் 99 வகையான பூக்களைச் சேகரித்ததாக கபிலர் பாடுகிறார்.



அந்தப் பாடல்:

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,                     (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,                       (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,                      (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,         (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,                             (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,                        (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,           (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,                            (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,                       (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,                             (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,                             (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,                   (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,                      (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,                  (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,                          (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை                         (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம்,                               (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,                            (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை,                         (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,                    (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,                               (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,           (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,           (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,                         (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,           (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,            (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,                          (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,                                    (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,                     (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,                                 (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,                                   (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,                         (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,                                (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,             (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,                 (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

பாடலை ரசித்துக் கொண்டே இன்னொரு முறை பாடல் பாடப்பட்ட களத்தை நினைத்துப் பாருங்கள். அருவியில் குளித்து முடித்தவர்கள் இத்தனை வகையானப் பூக்களைச் சேகரிக்கிறனர் எனில் அத்தனை வகையான மரங்களும், செடிகளும் அருகருகே நிறைந்த இயற்கைச் சூழலாக இருந்திருக்கிறது குறிஞ்சி நிலம். இன்றைய நிலையில் நாம் நூறு கிலோ மீட்டர் சுற்றினாலும் இத்தனை வகையான பூக்கள் கிடைக்குமா? எப்பேர்ப்பட்ட சூழலை நாம் இழந்திருக்கிறோம்/ அழித்திருக்கிறோம். “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதையை மெய்யாக்காமல்  வரும் தலைமுறை மிச்சம் இருக்கும் இயற்கைச் சூழலையும் அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொண்டு, இயற்கைச் சூழலைக் காப்போம்.               

நன்றி, 
ஆசிப்                      

No comments:

Post a Comment