Thursday, September 3, 2015

அனீக் பள்ளிக்கூடம் சேர்ந்த கதை.


அனீக் பள்ளிக்கூடம் சேர்ந்த கதை.

நான் பள்ளியில் சேர்ந்த நாள், இடம் கிடைத்த விதம் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. ஆறாம் வகுப்புச் சேர்க்கைக்குச்  ஈரோடு செங்குந்தர் பள்ளிக்குச் சென்ற போது அப்போதைய பள்ளி முதல்வர் மாரிமுத்து திருக்குறளை எழுதியது யார் எனக் கேட்க நான் ஒளவையார் எனக்கூறி பள்ளியில் சேர்ந்தேன் (அப்பவே அப்பிடி!!). 12-ஆம் வகுப்பு, கல்லூரி இளம்கலை/முதுகலை படிப்பிற்கு  நானே தனியாய்ச் சென்று சேர்க்கைப் பெற்றேன். "அபியும் நானும்" படம் பார்த்த போது பின்னாளில் என் மகனையோ/மகளையோ  பள்ளியில் சேர்க்கும் போது பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எண்ணியிருந்தேன். சென்னையில்/மற்ற பிற நகரங்களில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பது எவ்வளவு கடினம் என அறிந்தும் இருந்தேன். LKG -இல் சேர்த்தால்தான் உண்டு. முதல் வகுப்பில் வேறு பள்ளியில் இடம் வாங்குவதெல்லாம் யூனிகார்ன் கொம்பு. அதை இன்று எப்பிடி செய்தேன் என்பதே இப்பதிவு.

வட அமெரிக்காவில் பெரும்பான்மை அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகளும் உண்டு அவை பெரும்+பெரும் பணம் கொண்டவர் மட்டுமே சேர்வார்கள். அரசே மிகத் தரமான இலவசக்  கல்வியை கல்லூரி வரைக் கொடுக்கிறது. இந்தியா போல் இரண்டரை வயதில் புத்தக மூட்டையுடன் குழந்தைகளை பள்ளி அனுப்ப முடியாது. ஐந்து வயதில்தான் ஒரு வருட பாலர் வகுப்பு (kinder  Garden ), பின் 1-12 வகுப்புக்கள். சிறிய மாறுபாடுகளுடன் இவ்வாறு இந்திய பள்ளி வகுப்புடன் ஒப்பீட்டுக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் பாலர் வகுப்புச் செல்ல sep 30 அன்று 5 வயது ஆகி இருக்க வேண்டும். அப்பிடியெனில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வகுப்பில் சேரலாம். அனீக் நவம்பர் மாதம் பிறந்ததால் சென்ற வருடம் (2014-sept ) பாலர் வகுப்பை ஆரம்பிக்க முடியவில்லை. இன்று வரை அனீக் முறையான அரசுப் பள்ளிக்குச் செல்லவே இல்லை; ஐந்து வருடமும் ப்ளே ஸ்கூல் எனப்படும் பாலர் வகுப்பிருக்கு முன்னான நிலையில்தான் இருந்தான். என்னைப் பொறுத்த வரை எனக்கு அது மகிழ்ச்சியே. இதுநாள் வரை வாரம் ஐந்து நாட்கள் அரை நேரம் மட்டுமே ஒரு தனியார் montessori  பள்ளி சென்று கொண்டு இருந்தான்.

இப்போது கனடா வந்தாயிற்று. இந்த ஆண்டு பள்ளி சேர்க்க வேண்டுமே எனப் பார்த்த போது கனடாவில் இரு ஆண்டு பாலர் கல்வி (LKG & UKG pattern) எனத் தெரிந்துகொண்டோம். என்னடா  இது என எண்ணிக் கொண்டே பள்ளி சேர்க்கை வரவேற்பு நிலையத்திற்குச் இன்று சென்றோம். அங்கு உள்ள ஆசிரியர்கள் அனீக்கை பரிசோதித்து சேர்க்கை அளிப்பார்கள். நானும் அலெக்சாண்டர் குதிரை பேரேல்லாம் தெரிந்து கொண்டு தயாராய் சென்றேன்.

சரியாய் பத்து மணிக்குச் சென்று விட்டோம். சில பல
விண்ணப்பப் படிவங்களைத் தந்தார்கள். அனைத்திலும் தமிழ் மொழி இருந்தது. ஓ ! இது தமிழ்நாடு இல்லையென உறுதி படுத்திக்கொண்டு அவைகளை நிரப்பிக் கொடுத்தேன்.சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்து குடும்பம் பற்றியும் அனீக் பற்றிய விவரங்களைக் கேட்டார்கள். அதற்குப் பின் அனீக் தேர்வு எழுத அழைக்கப்பட்டான். கணிதம், ஆங்கிலம் (எழுத/படிக்க​), வரைதல், போன்றவற்றை செய்யச் சொன்னார்கள். நாங்கள் ஒரு 40 நிமிடம் வெளியேக் காத்து இருந்தோம். அனீக் அனைத்தையும்  மிகச் சிறப்பாக செய்து முடித்து விட்டான். அதன் பிறகு எங்களைச் சந்தித்த அந்த ஆசிரியை அனீக் முதல் வகுப்பிற்கே தயாராய் இருக்கிறான். அதிலே சேர்த்து விடலாம் என்று சொல்லி விட்டார்கள்.

என் வீட்டருகே இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்வதற்குத் தேவையான ஆவணங்களைக் கொடுத்தார்கள்.அப்போதும் தமிழில் நிறைய புத்தகங்களைப் பார்த்தேன். இன்னொரு முக்கியத் தகவல் மாணவர்கள் பள்ளியில் ஆங்கிலம்/பிரெஞ்சு கற்றுக் கொள்வார்கள். அதன் பின்னும் வாரம் ஒரு நாள் (சனி) வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்களே வசதி பண்ணுகிறார்கள். தாய் மொழியையே எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அனீக் வாரா வாரம் சனிக்கிழமை மூன்று மணி நேரம் தமிழ் மொழி வகுப்பிற்கு செல்ல வேண்டும். வெளி நாட்டில் இருந்து வரும் குழந்தைகள் தங்களுடைய தாய் மொழியை மறவாமல் இருக்கவும், புலமை பெறவும் இந்த வகுப்பு. நான், எங்கள் தமிழ் நாட்டில் ஒரு குழந்தை தாய் மொழியைப் படிக்காமலேயே மருத்துவம் வரை படிக்க முடியும் என்றேன். அது எப்பிடி முடியும் என்றார்கள் ? அது அப்படித்தான் என்று கூறிவிட்டேன்.

பள்ளி பற்றிய விவரங்களைக் கொடுத்து விட்டு (குளிர் கால உடைகள், உணவு, நேர அட்டவணை, இன்ன பிற) செப்டம்பர் எட்டாம் தேதி அனீக் ஒன்றாம் வகுப்பில் (No LKG/UKG ) சேர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள். அத்துடன் எங்கள் வேலை முடிந்து விட்டது. அங்கு இருந்தே பள்ளிக்கு மாணவர் சேர்க்கை எண்ணை அனுப்பி விட்டார்கள். இந்தியப் பெற்றோரின் அடங்க முடியா ஆவலின் காரணமாக பள்ளிக்குத் தேவையான புத்தங்கள், நோட், பேனா, பென்சில் என்றவுடன்  அதெல்லாம் தேவை இல்லாத ஆணிகள் எதுனா வேணும்னா நாங்களே கொடுப்போம் இல்லைனா ஆசிரியரே சொல்லி அனுப்புவார் என்றார்கள். கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அனீக் தன் மகனையோ/மகளையோ பள்ளிக்கு அனுப்பும் பொது "நாங்களெலாம் LKG/UKG படிக்காமையே ஸ்ட்ரைட்டா ஒண்ணாம் க்ளாஸ் போனேன் எனச் சொல்லிக் கொள்ள முடியும்.

நன்றி ! வணக்கம் !
ஆசிப் 

2 comments:

  1. So nice. All the best and may god bless his studies

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், வாழ்க நலமுடன்

    ReplyDelete