Sunday, September 20, 2015

இட ஒதுக்கீடு - யாருக்கு நன்மை ?

இட ஒதுக்கீடு - யாருக்கு நன்மை ? 

வணக்கம் நண்பர்களே !!

சமீப காலங்களில் இட ஒதுகீட்டுக்கு எதிரான பிரசாரத்தை இணையவெளி எங்கும் காண முடிகிறது. இட ஒதுக்கீடு மூலம் படித்து வந்தவர்களே அதைத் தவறு எனப் பேச வைத்து அந்தப் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் பொதுப் பிரிவு/மேற் சாதி  மக்களின் இடங்களைப் பறித்துக் கொள்வது போன்றும், 90% மதிபெண்ணுக்கு மேல இருந்தும் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்பது போலவும் கருத்துப் படங்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதன் உள்ளர்த்தம் புரியாமலேயே , உண்மை அறியாமலேயே  அனைவரும் அதைப் பகிர்ந்து வருகின்றனர். உண்மை என்ன? இட ஒதுக்கீடு ஒரு பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கிறதா என ஆராயவோ, கேள்வி எழுப்பவோ யாருக்கும் நேரம் இல்லை. இட ஒதுக்கீடு தவறு, அதை நீக்கிவிட்டால் இந்தியா வல்லரசு ஆகிவிடும், அனைவருமே கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடலாம் எனபதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இட ஒதுக்கீட்டின் வரலாறுக்குப் போகமால் நடைமுறையை மட்டும் பார்ப்போம்.



உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50% க்கு உள்ளேதான் இருக்க வேண்டும். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு. உடனே தமிழகம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை எனக் கிளம்பிவிட வேண்டாம். அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கூறவே இந்தப் பதிவு.

மற்ற மாநிலங்களிலுள்ள 50% ஒதுக்கீடு எப்பிடி பகுக்கப்பட்டுள்ளது என்றால்,


  • அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் (SC)    - 15%
  • அட்டவனை பழங்குடி வகுப்பினர் (ST)            - 7.5%
  • இதர பின்தங்கிய வகுப்பினர் (OBC)                -27%
  • பொதுப் பிரிவு                                        -50.5%


இதிலேயே உண்மை தெரிந்து விடும். அந்த 90% மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்கவில்லை என்பவர்கள் தங்களுக்கெனத் தனியே 50.5% இட ஒதுக்கீடு வைத்திருக்கின்றனர். அதுதான் உண்மை. அப்புறம் ஏன் இடம் கிடைப்பதில்லை. அதையும் பார்ப்போம். சரி, தமிழகத்தில் இட ஒதுக்கீடு எப்பிடி பகுக்கப்பட்டுள்ளது?

பிற்படுத்தப்பட்டோர் (BC)                              - 26.5 %
பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமியர்              - 3.5 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)                 - 20%
அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் (SC)              - 15%
அட்டவனைப் வகுப்பினர் (SC)-அருந்ததியினர்      - 3%
அட்டவனை பழங்குடி வகுப்பினர் (ST)                      - 1%
                                                            -------
                                                               69%
                                                             -------
பொதுப் பிரிவு                                               - 31%

ஆக தமிழகத்திலும் அதிக ஒதுக்கீடு பொதுப் பிரிவிர்க்கே. அந்த 19% எங்கனு கேட்டீங்கனா, ஒரு மாதிரியை வைத்துப் பார்ப்போம். ஒரு ஆண்டில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். அரசு முதலில் இரண்டு விதமான தர வரிசைப் பட்டியலைத் தயார் செய்யும்.

முதல் பட்டியல் 31%-69% விகிதத்தில் தயாரிக்கப்படும். அதாவது முதல் 31% = பொதுப் பிரிவு = எந்த ஒதுக்கீடும் இல்லை ; முதல் 31 ரேங்க் எடுத்தவர்கள். மீதி 69 இடங்கள் மேற்சொன்ன விகிதத்தில் தர வரிசையின் அடிப்படையில் இருக்கும். 

இன்னும் புரியும் படிச் சொன்னால் ; மொத்தம் 100 இடங்கள். அதில், தர வரிசையின் அடிப்படையில் முதல் 31 ரேங்க் எடுத்தவர்கள் (no caste based, just rank) + முதல் 26.5 பிற்படுத்தப்பட்டோர் + முதல் 3.5 பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமியர் + முதல் 20 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் + முதல் 15 அட்டவனைப் சாதிப்பிரிவு வகுப்பினர் + முதல் 3 அருந்ததியினர் + முதல் 1 பழங்குடி வகுப்பினர்.

பாதிக்கப்பட்டேன் எனச் சொல்லும் முற்பட்ட சாதி மாணவர்கள் அந்த முதல் 31 பேரில் 15 பேர் இருக்கிறார்கள் எனக் கொள்வோம்.

இப்போது இதே போன்ற இன்னொரு பட்டியல் 50-50% விகிதத்தில் தயாரிக்கப்படும். தர வரிசையின் அடிப்படையில் முதல் 50 மாணவர்கள் + மேற்சொன்ன இட ஒதுக்கீட்டு விகித முறையில் 50 மாணவர்கள்.

முதல் பட்டியலில் 15/31 என வந்த முற்பட்ட சாதி மாணவர்கள், இரண்டாம் பட்டியலில் முதல் 50 மாணவர்கள் வரிசைப் படுத்தப்படும் போது 25  பேர் இருக்கிறார்கள் எனக் கொள்வோம்.

அதாவது பிற மாநிலங்கள் போல 50% இட ஒதுக்கீடு இருந்தால் 25  முற்பட்ட சாதி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். அனால் 69% இட ஒதுக்கீட்டில் 15 பேருக்குத்தான் கிடைக்கும். அனால் அரசு அவ்வாறு அவர்கள் பாதிக்கபடாமல் இருக்க அந்த மீதி 10 பேருக்கு மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என்னும் பிரிவில் இடம் கொடுக்கிறது. இந்த  மேல் அதீத இடங்களுக்கு முற்பட்ட சாதி மாணவர்கள் மட்டுமே தகுதி பெற முடியும். அதிக பட்சமாக மேல் அதீத இடங்கள் 19% வரை ஒதுக்க முடியும். ஆக 69% ஒதுக்கீடு இருந்தாலும் அதிலும் தனியே 19% மேல் அதீத இடங்கள் என முற்பட்ட சாதி மாணவர்களுக்கு மட்டுமே தருகிறது.

ஆக, முற்பட்ட சாதி மாணவர்கள் பொதுப் பிரிவு + மேல் அதீத இடங்கள்[super-numerary seats] என இரு பிரிவுகளில் இடங்களைப் பெற முடியும்.

ஆனாலும் ஏன் திரும்பத் திரும்ப நாம் இட ஒதுக்கீடு தகுதியற்ற மாணவர்களுக்கு இடம் கொடுத்து, 95% மதிப்பெண் பெற்ற தகுதியான முற்பட்ட சாதி மாணவனுக்கு இடம் தர மறுக்கிறது என்ற வாதத்தைக் கேட்கிறோம்?

உண்மை என்னவெனில் முற்பட்ட சாதி மாணவனுக்கு இடம் கிடைக்காமல் போவதற்கு இட ஒதுக்கீடு காரணம் இல்லை. எனதருமை பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட / அட்டவணை வகுப்பு மாணவர்கள்  முற்பட்ட சாதி மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்று முதல் 31 வரிசைக்குள் வந்து பொதுப் பிரிவில் இடம் பெற்று விடுகிறான். அதுதான் உண்மை !!

கடந்த 3-5 வருட 12 வகுப்பு முடிவுகளை எடுத்துப் பார்த்தால் இந்த உண்மை உங்களுக்கேத் தெரியும். தர வரிசைப் பட்டியலில் முதல் 31 ரேங்க்கும் முற்பட்ட சாதி மாணவர்கள் என்றால் அவர்கள் அனைவர்க்கும் கட்டாயம் இடம் கிடைக்கும்.

மக்கள் தொகை அடிப்படையில் முற்பட்ட சாதி மக்கள் அதிக பட்சம் 10% மட்டுமே. எனவே அவர்களுக்கு எந்த விதத்திலும் அநீதியோ, இரண்டாம் தரக் குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள் என்பதோ கடுகளவும்  உண்மையில்லை. தலைமுறை, தலைமுறையாக அடக்கி வைக்கப் பட்டிருந்தவர்கள் இன்று மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பொதுப் பிரிவில் இருப்பவர்களைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் தம் திறமையினால் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் மக்களே !!

ஓ , இன்னொரு விஷயம், ஐ.ஐ.டி / எ.ஐ.ம்.ஸ் போன்றவற்றில் மேற் சாதி மாணவர்களால் "இவன் கோட்டாவில் வந்தவன்" என இட ஒதுக்கீடு மூலம் தகுதியான மதிப்பெண் பெற்று வந்த ஒருவன் ஆண்டு முழுவதும் கிண்டல் செய்யப்படுவதைப் பற்றியோ, எல்லாத் தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காமல் நீதி மன்றம் சென்ற ஐ.ஐ.டி. ஆசிரியர் வசந்தா கந்தசாமி பற்றியோ எந்த மேற் சாதி மாணவனும் கவலைப் படுவதாகத் எனக்குத் தெரிய வில்லை.


நன்றி
ஆசிப்

1 comment:

  1. Mudincha Ena ungalukku caste kidaiyathe nalla panam sampathikingale ellam therinchitha eluthuringala

    ReplyDelete