Tuesday, January 6, 2015

முக்கூடற் பள்ளு IV - மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது

வணக்கம் நண்பர்களே !!

இன்று நானிருக்கும் இடத்தில் பனிப் பொழிவு ; இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு. முன் இரவே weather.com, weatherBug, போன்றவற்றைப் பார்த்து பனிப்பொழிவை எதிர்கொண்டாய்யிறு. அங்க நம்ம ஊர்ப் பக்கமும் இப்பலாம் இப்பிடித்தானே ; நம்ம ரமணன் சொன்னாத்தான் மழை வருதா ? புயல் வருதான்னு தெரியும் நமக்கு ; மனிதன் மட்டுமே பள்ளி, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொண்டுள்ளான் ; பறவைகள் , விலங்குகள் எப்பிடி மழை, புயலை அறிந்தது கொள்கின்றன? நம்ம முக்கூடல இருந்த பள்ளன் , மூத்த பள்ளி, இளைய பள்ளி என்ன பண்ணி இருந்துருப்பாங்க ?

Swadesனு ஒரு ஹிந்தி மொழிப் படம் ; நம்ம சாருக்கான் நாசால வேலை செய்வாரு ; ஒரு கிராமத்துக்கு வந்து இருக்கும் போது நீங்க என்ன வேலை செய்யுறிங்க அமெரிக்காவில் அப்பிடின்னு ஒரு கேள்வி வரும்; அவரு அதுக்கு நான் வானத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பி வானிலையைக் கணிக்கறேனு சொல்லுவாரு ; அப்ப அந்த கிராமத்துல இருக்க ஒருத்தரு வானத்தப் பார்த்தே மழை வரும் வாராதுன்னு கணிச்சு சொல்லிடுவாரு :) பட இணைப்பைப் பாருங்க :))




இன்னிக்கு நாம பாக்கப் போறது இததான் ; எப்பிடி குறிகளை வைத்துக் கொண்டு மழை, வெள்ளம் வரப் போறத கணித்தார்கள்  ; சுவையான பாடல் ; இசையோட பாடலாம் ; பாடிப் பாருங்க ..

"ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
      யாள மின்னல் ஈழமின்னல்
      சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
      நீர்ப்படு சொறித்த வளை
      கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
      தேடியொரு கோடி வானம்
      பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க் 
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
      துள்ளிக் கொள்வோமே."

விளக்கமே வேணாம் இந்தப் பாட்டுக்கு ; ஆனாலும் கொஞ்சம் பேசணும் ;

நாளைக்கு ஆத்துல வெள்ளம் வர மாதிரி இருக்கே... எத வைச்சு சொல்லுறான் ? மின்னல வைச்சு ; மலையாள மின்னல் , ஈழ மின்னல் - அப்பிடின்னா ? மலையாள மின்னல் => கேரளம் => மேற்கு பக்கம் ; 
ஈழ மின்னல் => தெற்கு பக்கம் ; 
பெருசா ஒண்ணும் இல்லைங்க ; தென்மேற்கு பருவ மழை வரப்போகுது ;
இதச் சொல்ல ரமணனன் வேணுமா இல்ல நாசா வேணுமா?  :)) ஒத்த வரில எப்பிடி சொல்லிட்டான் பாருங்க !!

மலையாள மின்னல் , ஈழ மின்னல் ; இப்பிடிலாம் நாம பேசுறது இல்ல ; காத்து பத்தியாவது கொஞ்சப் பேரு
பேசுறாங்க ; காற்று வீசும் திசையைப் பொறுத்து காத்துக்குப் பேரு இருக்கு ; வடக்கு = வாடை; தெற்கு = தென்றல்
கிழக்கு = கொண்டல்/கீழைக் ; மேற்கு = கோடை/மேலைக் காற்று ; சரி பாட்டுக்குப் போவோம்..

நேத்துக்கும் , இன்னிக்கும் கொம்பு சுத்தி காற்று அடிக்குதாம ;
காற்று அடிக்குது , சரி, அது என்ன கொம்பு சுத்தி ??

கொம்பு = நீளமான குழல் மாதிரி இருக்க வாத்தியம் ; கேரளாப் பக்கம் நிறைய வாசிப்பாங்க ; ஊதுனா நீண்டு ஒலிக்கும் ;ஊதி முடிச்ச அப்புறமும் உய்ய்ய்ய்ய்ங் ன்னு கொஞ்சம் நேரம் காதுல ஒலிச்சுடே இருக்கும் ; அதுமாதிரி உய்ய்ய்ய்ய்ங், உய்ய்ய்ய்ய்ங்ன்னு காற்று அடிக்குது !!


கேணி இங்க குளம் நம்ம வீட்டுக் கிணறு இல்ல; குளத்துல இருக்க சொறித்தவளைலாம் ஒரே சவுண்ட் கொடுக்குது ;எதுக்கு ? தென்மேற்கு பருவ மழை வரப்போகுது (ஆடி மாசம்)... தவளையோட இனப்பெருக்க காலம் ; அதோட சோடியக் கூப்பிடுது !!

நண்டுக்கு கொஞ்சம் பயம் ; வயல்ல வளை தோண்டி அதுல இருக்குது ; மழை பெருசா வந்து வெள்ளம் வந்துச்சுனா வளைக்குள்ள தண்ணி வந்துரும் ; அதுனாலா சேறு பூசி வளையை அடைக்குது ; safety first :)

நீர்த்துளியை உண்ணும் வானம்பாடிப் பறவைகள் ஒரு கோடிக்கணக்கான கூட்டம் மழையைத் தேடிப் பாடி ஆடுகின்றது;

கடைசி வரியை விட்டுருவோம் ; எல்லரும் ஆடி பாடுவோம்னு சொல்லுறாங்க அதுல ;

எவ்வளவு எளிமையான பாடல் ; ஆனா நுட்பம் பாருங்க ; தவளை, நண்டு , வானம்பாடி இதுபோதும் ;பெரிய மழை வரப் போகுது ; அதுனால வெள்ளம் வரப் போகுதுன்னு கண்டு பிடிச்சாச்சு !! நம்ம என்னடானா ????


நன்றி,
ஆசிப் 

19 comments:

  1. Hello Asif எப்போதெல்லாம் இடி மின்னலுடன் மழை வர சாற்றுகிறதோ அப்போதெல்லாம் எனது மனதில் இந்த பாடல் ஜதியோடு ரீங்கரிக்கும். சிறு வயதில் ரசித்த்ப்படித்த இந்தப் பாடலை என்னால் மறக்க இயலவில்லை. ஏனெனில் இந்தப் பாடலின் ராக தாள சுருதி அப்படி.பால்ய நினைவலைகளில் நீந்த செய்து மகழ்வித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நானும் இதைப்போலவே எப்போதெல்லாம் மழை வர அறிகுறி தென்படுகிறதோ அப்போது ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி என்ற ராகத்துடன் பாட ஆரம்பித்து விடுவேன். நெஞ்சின் நினைவலைகளை மீட்டெடுக்கும் ஓர் ஆகச்சிறந்த பாடல்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மிகமிக நன்று ஆசிப்,என் சிறு வயதில் என் தாயும் உடன்பிறப்புகளும் பாடிய பாடல்.

    ReplyDelete
  5. ஐயா இதுதான் தென்றல் தமிழ்

    ReplyDelete
  6. உங்களுக்கு மிக்க நன்றி; எத்தனை நாள் தேடல் இது . ஆம் சிறு வயதில் என் அக்கா சொல்லி கொடுத்த பாடல் . அதை முழு வரியுடன் எனக்கு மீட்டுக் கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  7. எதிரும் புதிரும்

    ReplyDelete
  8. மிக நன்று....
    மகிழ்ச்சி....‌

    ReplyDelete
  9. என் மனதில் அடிக்கடி ஒளித்துக் கொண்டிருந்த வரிகள் இன்று என் கண்ணுக்கு விருந்தாக காட்சியளித்தது இவ்வலைதளத்தில் மிக்க நன்றி சகோ....!!!!

    ReplyDelete
  10. ஆசிப் மிக்க நன்றி

    ReplyDelete
  11. நன்றி ஆசிப்... என்னுடைய தமிழ் மனப்பாட பாடல்....

    ReplyDelete
  12. அருமையான பதிவு எனது பள்ளி வகுப்புகள் நினைவில் வருகிறது.. இப்போ கூட இந்த பாடல் எனக்கு மனப்பாடமாக தெரியும்..

    ReplyDelete
  13. திடீரெ ன்று 65 வயதில் எனக்கும் கவி எழுத ஆசை வந்து எழுதவும் ஆரம்பித்துவிட்டே ன்.. கிராமத்தில் சிறு வயதில் பள்ளிக்கூடம் செ ல்லும் சிறார்களில் மழை யை அனுபவிக்காதார் யார்? இந்தப் பாடலை... ஆமாம்.. பலர் கூறியிருப்பது மாதிரி.. அந்தக் கால ஆசிரியர்கள் செ ய்யுள்களை ராகத்துடன் கற்பித்து... நம் மனதில் பதியச் செ ய்தனர்... ஆற்று வெ ள்ளம் நாளை வர என்ற பாடல் என்றும் நினை வில் நிற்கும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பாடலை கேட்டு கிட்டதட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் நினவு இருக்கிறது என் தமிழ் ஐய்யாவுக்கு மிக்க நன்றி.

      Delete
  14. மிக்க நன்றி.என் பள்ளி பருவம் நினைவில் வந்தது.நான் மனப்பாடம் செய்வதை காதில் வாங்கிய என் தந்தை முதல் வரி கேட்டதுமே பாட்டாக பாடியவர் புத்தகத்தை கூட பார்க்கவில்லை....இன்றும் தந்தை ராகம் ஒலி கேட்கிறது கண்டதுமே

    ReplyDelete
  15. ஆம்!யானும் பள்ளி காலத்தில்
    பாடிய வரிகள்...
    கார் மேகம் கீழ் பக்கம் காண்கையில்..
    உள்ளத்தில் ஊறி வரும் வரிகள்..

    ReplyDelete
  16. அக்காலத்து weatherman

    ReplyDelete