Sunday, February 8, 2015

வழக்குரை காதை - சிலம்பு - கண்ணகி vs பாண்டியன்

வணக்கம் நண்பர்களே !!

ஐம்பெருங்காப்பியங்களுனு படிச்சிருப்பிங்க
1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி ; இதில் கடைசி இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.. எனவே பாடத்தில் வைக்க முடியாது ; 3. சீவக சிந்தாமணி.. எழுதினது என்னமோ திருத்தக்க தேவர்தான் ஆனாப் படிச்சா.. சரி விடுங்க ... 2. மணிமேகலை - எழுதினது சீத்தலைச் சாத்தனார் ; சிலம்பின் நாயகி மாதவியின் மகள் பற்றிய கதை ; கதை முழுக்க புத்த சமய விஷயங்கள் ; நம்மோட கொஞ்சம்தான் ஒட்டும்..சிலம்பும் & மணிமேகலை = இரட்டைக் காப்பியங்கள் ; இதுலாம் இருந்தாலும் சிலப்பதிகாரம்தான் தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த காப்பியம் ; இது ராமாயணம் போலவோ மகாபாரதம் போலவோ கடவுள் மீது பாடப்பட்டவை இல்லை ; மன்னர் மீது பாடப்பட்டவை இல்லை ; சாதாரண குடிமகன் மீது பாடப்பட்டது ; காப்பியத்தின் நாயகன் ஒரு சாதாரண குடிமகன் ; அதுனாலதான் சிலம்புக்கு இன்னொரு பெயர் குடிமக்கள் காப்பியம் ;

என்னோட வரலாறைப் புரட்டினா இதுல வர "தேரா மன்னா"தான் பாடத்துக்கு வெளிய நான் படித்த முதல் பாட்டு ; எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியர்தினக் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னே நான் மனப்பாடம் செய்து பொருள் புரியாமல் உளறியப் பாடல் :) கிடைத்ததென்னமோ ஆறுதல் பரிசுதான் ; அனால் ஒரு சிறு பொறி கிளம்பியது  அதில் இருந்து ; அடுத்த ஆண்டு தமிழ்ப் பாடத்தில் சிலப்பதிகாரம் இருந்தது ;
அதே தேரா மன்னா மனப்பாடப் பகுதி ; கொஞ்சம் புரிய ஆரம்பித்தது ; அதன் பின் வகுப்பில் , மேடையில் பேச நிறைய வாய்ப்புகள் ; கிடைக்கும் போதெல்லாம் சிலம்பு, கண்ணகி, கோவலன் என மேற்கோள் காட்ட ஆரம்பித்தேன் ; கல்லூரி வாழ்கை இலக்கியத்தின் மேலே ஒரு புதிய பார்வையைக் காட்டியது ; தமிழ் ஆசிரியர் இரகுபதி அவர்கள் ஓரு நாள் வகுப்பில் இருந்த தமிழ் மாணவர்களை (கொஞ்சம் பேர் french, sanskirt) இரண்டாகப் பிரித்து "கற்ப்பில் சிறந்தவள் சிலம்பு காட்டும் கண்ணகியா , கம்பன் காட்டும் சீதையா" அப்பிடினு ஒரு விவாதம் வைத்தார் ; நான் அப்போது சிலம்பின் எல்லைகளைத் தொட்டு இருந்தேன் ; நான் கண்ணகி அணி ; மூன்று பேர் பேசிய பிறகு நான் பேச வேண்டும் ; கண்ணகியும் இல்லை ; சீதையும் இல்லை ; மாதவியே அப்பிடின்னு பேசிட்டேன் ; சுமார் 2௦ நிமிடங்கள் :) பசங்க கொஞ்சம் பேருக்கு சுத்தமாப் புரியல :) ;அதே தமிழ் ஆசிரியர்தான் எனக்கு விடுதிக் காப்பாளர் ; பார்க்கும்போதெல்லாம் அதை குறிப்பிடுவார் ;

சரி விடுங்க ; என் கதை இப்போ எதுக்கு ? ரொம்ப நாளாக அந்த வழக்குரை காதையை ஒரு பதிவா எழுதனும்னு ஒரு ஆசை ; அதைத்தான் இப்ப செய்யப் போறேன் :) அதுக்கு முன்னாடி வழக்கம் போல சிலம்பு - ஒரு அறிமுகம் ; எழுதினது = இளங்கோவடிகள் ; இது கற்பனைக் கதை இல்லை ; தயைகூர்ந்து யார்னேனும் அப்பிடிக் கூறினால் திருப்பிச் சொல்லுங்கள் ; கண்ணகி, கோவலன், மாதவி வாழ்ந்ததிற்கு நிறைய தரவுகள் இருக்கு ;

சிலம்பு = 3 காண்டங்கள் புகார் , மதுரை , வஞ்சி ;

புகார்க் காண்டத்தில் கண்ணகி , கோவலன் திருமணம் , மாதவி அரங்கேற்றம் , கோவலன் மாதவியுடன் கூடல் , இந்திர விழா , கோவலன் - மாதவி பிரிவு ,கோவலன் கண்ணகியிடம் திரும்புதல் , இருவரும் புகாரை விட்டு மதுரை செல்ல தீர்மானித்தல் ; இதுலாம்தான் புகார்க் காண்டம் ;

மதுரைக் காண்டம் முழுக்க மதுரைக்கு வருவது மற்றும் மதுரையில் நடப்பது ; கண்ணகியும் கோவலனும் மதுரை செல்லுதல், ஊர் கானல் , அடைக்கலக் காதை , ஆய்ச்சியர் குரவை , கோவலன் கொலைப்படல் , கண்ணகி வழக்குரைத்தல் , வஞ்சின மாலை இதுலாம்

வஞ்சிக் காண்டம் => சேரன் கண்ணகி பற்றி அறிந்து கொள்ளுதல், கண்ணகிக்கு நடுகல் வைக்கும் காதை, கண்ணகி வாழ்த்துக் காதை , வரந்தரு காதை..



நான் சொல்ல வருவது கண்ணகி வழக்குரைத்தல் காதை in மதுரைக் காண்டம்.. கண்ணகி கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டு ஒற்றைச் சிலம்பை கையில் ஏந்தி மதுரை நகர் புகுந்து அரசனைச் சந்தித்து கோவலன் குற்றமற்றவன் என நிறுவுவதே  வழக்குரை காதை..

மதுரைக்கு வந்த பின் கண்ணகியின் சிலம்பை விற்று வரச் செல்கிறான் கோவலன் ; கடைத் தெருவில் போர்க்கொல்லனைப் பார்த்து சிலம்பைக் காட்டி விற்கச் சொல்ல்கிறான் ; அவனோ இது சிறப்புடைய சிலம்பு அரசர் குல மகளிர் அணிவது ; நான் சென்று அவர்களிடம் காட்டி வருகிறேன் என்று கூறிவிட்டு சிலம்புடன் செல்ல்கிறான் ; அங்க அரண்மனையில் மன்னன், பட்டத்து இராணியுடன் "ஆடலும் பாடலும்" :) பார்த்துக் கொண்டிருக்கிறான்.. தாம் உடன் இருக்கும் போதே ஆடல் மகளிரை அரசன் ரசிப்பதாகக் கருதி அரசி கோவித்துக் கொண்டு சென்று விடுகிறாள் ; அவள் கோவம் தணிக்க வேண்டும் என்ற கவலையில் மன்னன் செல்ல அந்நேரம் அங்க வந்த பொற்கொல்லன் சிலம்பைத் திருடிய கள்வன் கிடைத்து விட்டான் எனக் கூற , அவன் அருகே இருந்த காவலனை அழைத்து "கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்" அப்பிடின்னு சொல்லிட்டான் ; அதாவது சிலம்போடு அவனைக் கொண்டு வருக என்பதற்கு பதில் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக அப்பிடின்னு சொல்லிட்டான்  ; காவலனும் அங்கே போய் கோவலனைப் பார்த்து அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவந்து விடுகிறான் ; செய்தி கண்ணகிக்குப் போகிறது .. கண்ணகித் துடித்துப்  போய் மதுரை மாநகர் புகுகிறாள் .. இனி .........


ஆங்கு,
‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென்-காண், எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென்-காண், எல்லா!
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்: இவை காண்பென்-காண், எல்லா!’

கண்ணகி அங்கே வரும் போது அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீக் கனவை அவள் தோழிக்குச் சொல்கிறாள் ; தோழீ நம் மன்னனது வெண் கொற்றக் குடையும் செங்கோலும் கீழே விழ வாயிலிடத்து நிலைபெற்று அசையும் மணியின் ஓசையை நான் கனவில் கண்டேன் ; திசை இரு-நான்கும் = எட்டுத் திசையும் அதிரக் கண்டேன் ; அது மட்டும் இல்லை ; கதிரவனை இருள் விழுங்கக் கண்டேன் ; இரவில் வானவில் தோன்றும் , பகலில் மிக்க ஒளியினையுடைய மீன்கள் எரிந்து கீழே விழும் ; இது போன்ற தீய சகுனங்கள் தோன்றும்மாறு கனவு கண்டதாக தேவி தன் தோழியிடம் கூறினாள் ;

கருப்பம
செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன்-தன் கொற்ற வாயில்
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-

செங்கோலும், வெண் கொற்றக் குடையும் முறிந்து நிலத்தில் விழ , மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுக்குறும் வண்ணம் அசையும் ; இரவில் வானவில் தோன்றவும், பகலில் எரி நட்ச்சித்திரம் விழுமாறும், எட்டுத் திசையும் அதிர ஒரு துன்பம் வருவதாக நான் கானாக் கண்டேன் ; இதை நான் மன்னனுக்கு சொல்ல வேண்டும் ;

கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்: 

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,

வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்:
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;

ஒளியிட்டு விளங்குகின்ற அழகிய கலன்களை ,கண்ணாடியையும் அணிகலன்களையும், புதிய நூலாடையையும் பட்டாடையையும், கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தியும் ,பல்வகை நிறங்களையும் பொற்பொடி முதலிய பொடிகளையும், கத்தூரிக் குழம்பினையும் , மாலையினையும், கவரியினையும் அகிற்புகையினையும் தாங்கினராய் குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ அரண்மனைக்குள் நுழைகிறாள் தேவி..


நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;

கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே- இப்பால்,

இது உள்ளே வரும் தேவியை வாழ்த்தி கட்டியங் கூறுவது (ராஜாதி ராஜ .....).. நரை கலந்த நல்ல கூந்தலையுடைய முதுமகளிர் (அறிவு மிகுந்த பெண்கள் not aged women) பலர் இருக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தினைக் காக்கும் பாண்டிய னுடைய பெருந்தேவி நீடு வாழ்க என தேவியை பின் தொடர்ந்து வரும் தோழியரும், காவல் பெண்களும் வாழ்த்துகிறார்கள் ;

திருமகள் விரும்பும் மார்பினை யுடைய பாண்டியர் தலைவனான நெடுஞ்செழியன் சிங்கஞ் சுமந்த அரியணையின் மீது அமர்ந்து இருக்க , அங்க சென்ற தேவி தான் கண்ட தீக்கனாவைக் கூறுகிறாள்..

"கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல" (கண்ணகி entry)

‘வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என-

ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் ; அது மாதிரி ஒரே அடி அடிக்குறா
 "அறிவு அறைபோகிய பொறி யறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே"...அறிவு கீழிறங்கி போன , நெஞ்சத்தில் அறமே இல்லாத, அரச நீதியற்ற அரசனின் அரண்மனை வாயில் காப்பவனே :)) உள்ளே போய் கணவனை இழந்த பெண்ணொருத்தி கற்களை உடைய இரண்டு சிலம்பில் ஒன்றைக் கையில் கொண்டு வந்து இருக்கிறாள் என்று கூறு ... (இணை அரிச் சிலம்பு = ஒரு சிலம்பை நீ கோவலன்கிட்ட இருந்து வாங்கிகிட்ட அதற்க்கு இணையான இன்னொரு சிலம்பு )

அவன் பயந்து போய்ட்டான் ; யார்துடா இது ? நம்ம பாண்டிய மன்னனை இப்பிடி சொல்லுறதுன்னு யோசிச்சிட்டே உள்ள போறான் ;

"கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்"

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!

நேராப் போய் மன்னனைப் பார்த்தவன் அப்பிடியே எதையும் சொல்ல முடியாதது ; அவனை முதலில் வாழ்த்துறான் ; மன்னா நீ வாழ்க , கொற்கை நகரத்து அரசனே நீ வாழ்க , தென் எல்லையாக பொதிகை மலையை உடையவனே நீ வாழ்க , செழியனே வாழ்க, பாண்டியனே வாழ்க , மன்னன்.. போதும்யா.. வந்த விசயத்தைச் சொல்லு என்க ..

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

அரசே ஒரு பொண்ணு வந்து இருக்கா , அவளைப் பார்த்தா அப்பதான் வெட்டி குருதி கொட்டும் தலையை கையில் பிடித்துக் கொண்டு, பெரிய பிடரியுடன் கூடிய சிங்கத்தின் மேல் அமர்ந்து வெற்றி தரும் வேலினைக் கொண்டு இருக்கும் கொற்றவை தேவி மாதிரியும் இல்ல.. கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரி, இறைவனை நடனமாடச் செய்த பத்திரகாளியும், அச்சம் விளைக்கும் காட்டினை தனக்கு இடமாக விரும்பிய காளி, தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை இவிங்கள மாதிரியும் இல்ல , வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு பொற்சிலம்பை கையினில் கொண்டு உள்ளத்தில் கறுவு கொண்டு, மிகுந்த சினம் கொண்டு கணவனை இழந்த பெண்ணொருத்தி நம் அரண்மனை வாயிலில் நிற்கிறாள்..


‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
 
அதைக் கேட்ட மன்னன், சரிப்பா அவளை உள்ள கூட்டிட்டு வா !! கண்ணகியும் உள்ளே வந்து மன்னனைப் பார்க்கிறாள்

"பாண்டியன் வினா"

‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’ என-

மன்னன் மு வந்து நிற்கும் கண்ணகியைப் பார்க்கிறான் , அவள் கண்களில் நீர், கையில் சிலம்பு , மன்னன்னுக்கு ஒன்றும் புரியல.. இப்பிடி அழுதுகொண்டு என் முன் வந்து நிக்குறியே யாருமா நீ அப்பிடின்னு கேக்குறான் .. அவ்வளவுதான் சும்மா
பொரிஞ்சு தள்ளிட்டா !!

"கண்ணகியின் மறுமொழி"


‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே!

மறுபடியும் ஓங்கி ஒரு அடி !! தேரா மன்னா - எதையும் ஆய்ந்து பாராமல் அவசரப்பட்டு முடிவெடுக்கும் மன்னனனே , நான் சொல்லுறதக் கேளு !! இமையவர் = தேவர்கள் ; எந்த விதமான குற்றமும் சொல்ல முடியாத தேவர்கள் வியக்குமாறு ஆட்சி செய்து ஒரு புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த (சிபி), அத்தோடு வாயிலில் கட்டப்பட்டு இருந்த ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் புத்திர சோகத்தை போக்க தான் பெற்ற மகனைத் தேர்க் காலில் இட்ட (மனுநீதிச் சோழன்) சோழனும் ஆண்டு பெரும்
பெயர் பெற்ற புகார் என்னும் ஊரைச் சேர்ந்தவள் நான் ; அந்த ஊரில் இருந்த குற்றமே கூற முடியாதவாறு வணிகம் செய்து வந்த மாசாத்துவான் என்னும் பெரிய வணிகனின் மகனைத் திருமணம் புரிந்து வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்த, முன் ஜென்ம தீவினைத் துரத்த உன்னுடைய மதுரை மாநகர் வந்து , என்னுடைய கால் சிலம்பை விற்க முயலும் போது உன்னால் கொலை செய்யப்பட கோவலனின் மனைவி நான் ;
கண்ணகி என்பது என் பெயர் ;

"மன்னவன் உரைத்த விடை"

கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,

ஒருத்தி மூச்சு விடாம இப்பிடி பேசும் போதே அவன் உசார் ஆகிருக்க வேணும் ; ஆனா அத விட்டுட்டு , கள்வனைத்தான் தண்டித்தேன் ; அது கொடுங்கோல் ஆட்சி இல்லை ; அதுவே அரச நீதி ; அப்பிடின்னு சொல்ல.


"கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்"

நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-

அற வழியில் செல்லாத கொற்கை நகர மன்னனே..என் கணவன் கள்வன் அல்ல ; என் சிலம்பை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு வணிகம் துவங்கவே என் சிலம்பை விற்க வந்தான்  , என் கால் சிலம்பில் இருப்பவை மாணிக்கப் பரல்கள்.. அத நீ பாத்தியான்னு கண்ணகி கேக்குறா


தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-

உடனே மன்னன் , நல்லாச் சொன்னமா , இத இப்பயே பாத்துரலாம் ; என்னுடைய அரசியின் சிலம்பில் இருப்பவை முத்து பரல்கள் அப்பிடின்னு சொல்லி கோவலன்கிட்ட இருந்த வாங்கின சிலம்பை காவலனக் கொண்டுவந்து வைக்கச் சொன்னான் ;
 

கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,

கண்ணகி சிலம்பை எடுத்து உடைக்க, மன்னவன் முகத்தில் மாணிக்க மணி தெறித்து விழுந்தது !!
 

"மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்"

தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்..

என்னதான் பெரிய அரசனா இருந்தாலும் அவன் நீதி தவறா பாண்டிய மன்னன் ; மாணிக்க பரலைப் பார்த்ததும் குற்ற உணர்வு அவனைக் கொல்கிறது.
என் பொற்கொடை சாய்ந்து போயிற்று ; என் செங்கோல் தளர்ந்து போயிற்று ; ஆராய்ந்தது பாராமல் ஒரு பொற்கொல்லனின் சொல் கேட்ட நானா அரசன் ?
நான்தான் கள்வன்..பாண்டிய நாட்டின் பெருமையே என்னால் போயிற்று ; என் ஆயுள் இன்றோடு முடிந்தது போகட்டும் எனக் தன்னைத்தானே சபித்துக் கொண்டு
மயங்கி விழுந்தது தன் உயிரை மாய்த்துக் கொண்டான் !!

"கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்"

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.

பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும்..ஆனால் கணவனை இழ்ந்தோர்க்கு  அப்பிடி காட்டும் முறை ஏதும் இல்லை ; நானும் அவருடனே செல்கிறேன் எனச் சொல்லி பாண்டியனின் பாதம் தொட்டு வணங்கி
தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் !!


வழக்குரை காதை இத்துடன் முடிகிறது ; அப்புறம் கண்ணகி மதுரையை எரித்து விட்டு தானும் மேலுலகம் சென்று கோவலனுடன் சேர்கிறாள் ; இதை பின்னாளில் சேரன் செங்குட்டுவன் கதையாய்க் கேட்டு கண்ணகிக்கு கோவில் காட்டுகிறான் ;


நன்றி !! வழக்கம் போல கருத்துகள் இட்டுவிட்டுச் செல்லவும் !!

5 comments:

  1. Good one aasif!! Hats off for taking the time and effort to write this up!! I have been in love and awe about Kannagi from childhood. Read this book in prose format, but your post inspires me to read it in poetry format too. This one which starts with தேரா மன்னா is my dad's favorite too.
    P.S. Typing in தமிழ் in phone is pretty difficult, hence commented in English ☺️

    ReplyDelete
    Replies
    1. Shalini, நன்றி. தமிழோ ஆங்கிலமோ படித்துவிட்டு கருத்து எழுதியதற்கு நன்றி :) சிலம்பு மூன்று pdf documentஆக project Madurai வலைப் பக்கத்தில் உள்ளது. படித்துப் பாருங்கள்

      Delete
  2. கண்ணகி மதுரை எரித்தததை ஒரு வரியிலே சொல்லிட்டீங்க, அவ்வளவு தானா?

    ReplyDelete
  3. Joan, வழக்குரை காதை மட்டும் எழுதியதால் ஒரு முடிவரைகாகச் சொன்னேன்.

    ReplyDelete
  4. சீனாவின் - கொரனா - வைரஸ் பற்றி செய்தி - உள்ளது - எந்த பாகம்

    ReplyDelete