Wednesday, April 27, 2016

இராவண காவியம் - 1 - பாயிரம்:

இராவண காவியம் - 1 - பாயிரம்:

கமபனைப் போல் கடவுள் வாழ்த்துப் பாடாமல் தமிழ்த் தாயையும், தமிழகத்தையும், தமிழரையும், தமிழ் மொழிக்கு அரும் பணி செய்த புலவர்களையும்,வாழ்த்திவிட்டு காவியத் தோற்றம் பாடுகிறார் புலவர் குழந்தை. எந்த ஒரு காப்பியமும் உலகம் என்று தொடங்குவதே மரபு. அதன் படியே

"உலகம் ஊமையாய் உள்ள அக்காலையே 
பலகலைப் பயன் பாங்குறத் தங்கியே
இலகி இன்றுநான் எ. மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயை வாழ்த்துவாம்"

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்த பேச்சு மொழியில்லாமல் சைகை மொழியால் பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே பலவேறு கலைச் செல்வங்களோடு விளங்கி, இன்று பேசப்படும் மொழிகளுக்கெல்லாம் தலைமையாய் இருக்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

யாரும் வந்தேறிகள் இல்லை. திராவிட மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து பிறந்தவையே.

"கன்னடந் தெலுங்கந் துளுவம் புயல்
மன்னி மேவு மணிமலை யாளமாம்
பொன்னின் மேனி திரிந்து பொலிவறு
தன்னை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்."

பெண் ஒருத்தி நான்கு குழந்தைகளைப் பெற்ற பின்னும் அழகு குன்றாமல் இருப்பது போல தன்னிலிருந்து கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் எனப் பல மொழிகள் பிரிந்து வளர்ந்தாலும் தன் பொழிவு குறையாமல், தனக்குத் தானே நிகர் என விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

"இனித்த பாலினுந் தேனினும் இன்சுவைக்
கனித் தொகையினுங் கட்டிங் கரும்பினும் 
நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் 
தனித் தமிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்."

ஜாமூனை சக்கரைப் பாகில் போட்டப் பின்தான் இனிப்புச் சுவை வரும். அது போல பால், தேன், பழங்களைக் கலந்து சுவைதால்த்தான் இனிக்கும். ஆனால் தமிழை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும், பேசினாலே வாய் இனிக்கும். அந்தச் சிறப்பு வாய்ந்த தமிழன்னையைப் போற்றுவோம்.

அடுத்தப்படியாக தமிழகத்தை வாழ்த்தும் போது:

பண்டு நம்மவர் பாத்துப் பலவளங்
கண்டு சுற்றங் கலந்து கரவிலாது
உண்டு வாழ வுதவி யுலகவாந்
தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம்.

அன்றையத் தமிழகம் வடக்கே விந்திய மலையையும், தெற்கே இன்றுள்ள குமரிமுனையிலிருந்து 1000 கல் தொலைவு நீண்டும், கிழக்கில் வங்கக் கடலும்,சாவக முதலய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாயிருந்தது. தென்னிலத்தில் குமரிமலையும், பனி மலையும் ஓங்கி உயர்ந்திருந்தது. குமரி மலையில் குமரியாறும், பனி மலையில் பஃறுளியாரும் ஓடி அந்நிலத்தை வளமாக்கிக் கொண்டிருந்தன. குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட நிலம் பெறுவள நாடு.பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலி நாடு. பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. இக்குமரிக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதியே திராவிடம் எனப்பட்டது.

இவ்வளமான நாட்டில் பழந்த்தமிழர் ஒற்றுமையாய் சுற்றத்தோடு, பகுந்துண்டு, ஒளிவு மறைவு இல்லாமல் தாமும் இன்புற்று வாழ்ந்து பிறர் வாழவும் உதவி, உலக மக்கள் அனைவரும் தம்மை விரும்பும் வண்ணம் வாழ்ந்து வந்தனர். அந்தத் தண்டமிழகத்தை வாழ்த்துவோம்.

"நினைத்த நெஞ்சு நெகிழநந் தாயகம்
அனைத்தும் உண்டுநீ யாழியோ டாரியம்
இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள
தனித் தமிழகந் தாயினைப் போற்றுவாம்."

அத்துனை பெரிய தமிழகத்தை கொடிய கடல் உண்டது போல் ஆரியம் சூழ்ந்து விட்ட போதும், இப்போது இருக்கும் தனித் தமிழகத்தையும் வாழ்த்துவோம்.

தமிழ் மக்களை வாழ்த்துவோம்:

ஆரியம் புகுந்து தமிழர்களைத் தாழ்த்தி அடிமைப் படுத்திய போதும் தம் உரிமையை விடாமல் ஆரியத்தை எதிர்த்துப் போரிடும் தமிழரைப் போற்றுவோம் எனப் பாடுகிறார்.

"ஒழுக்க மென்பது உயிரினு மேலதன்
இழுக்கம் போல் இழிவில்லை யெனுஞ்சொலைப்
பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்
வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்."

ஒழுக்கம் உயிரினும் மேல். அதைத் தவறுவது போல் வேறு இழிவு ஏதுமில்லை என்னும் வள்ளுவன் வாக்கினையே வாழ்வின் வழக்கமாக்கிக் கொண்ட தமிழரைப் போற்றுவோம்.

"குன்றும் ஆரியக் கொள்கை மறுத்தெதிர்
நின்று தாழ்ந்த நிலையினை எய்தியும்
குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா
வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம்."

இழிந்த ஆரியக் கோட்பாட்டை ஏற்க மறுத்து ஆரியர் சூழ்ச்சியால் தம் நிலை தாழ்ந்து நின்றாலும் ஆரிய எதிர்ப்புக் கொள்கையை சிறிதும் கைவிட்டு விடாத
தமிழ் மறவர்களை வாழ்த்துவோம்.

"கள்ள ரென்று மறவரென் றெள்ளுறு
பள்ள ரென்றும் பறைய ரென்றும்பழித்
தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா
மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம்."

ஆரியப் பார்ப்பனர்களால் கள்ளர், மறவர், பள்ளர், பறையர் என்று தமிழர்கள் பழிக்கப்பட்டு உள்ளம் நொந்து இருந்தாலும் தனக்கே உள்ள சிறப்பியல்புகளை விட்டு விடாமல் வாழ்கின்ற வீரர்களாகிய தமிழர்களை வாழ்த்துவோம்.

புலவரை வாழ்த்துமிடத்து தொல்காப்பியரையும் வள்ளுவரையும் வாழ்த்துகிறார்.

"கள்ளு கப்பக் கமழ்நறும் பூவினைப்
புள்ளு வக்குறல் போலமுப் பாலினை
உள்ளு வக்குற வொண்குறள் வாக்குறு
வள்ளு வப்பெரி யாரை வழுத்துவாம்."

தேனை விரும்பி மணம் கமழும் பூவினை தேனீக்கள் விரும்பி மகிழ்வது போல, அறம், பொருள், காமம் என்னும் முப்பாலினை, உள்ளம் உவக்கும் வகையில் ஒளி பொருந்திய குறள் வெண்பாவால் மொழிந்த திருவள்ளுவ பெரியாரை போற்றுவோம்.

காவியத் தோற்றம் : 

ஏன் இராவண காவியம் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக:

திருக்கு லாந்தமிழ் மக்களைத் தீக்குண
அரக்க ரென்றும் அஃறிணை யல்லவோர்
குரக்கி னமென்றுங் கூறிவான் மீகியும்
பரக்க நாத்தழும் பேறப் பழித்தனன்.

தமிழரை தீக் குணம் கொண்ட அரக்கரென்றும், குரங்கென்றும் என்று பரப்பி பழி உரைத்த ஆரியக் கூட்டம்.

"தம்மி னப்பகை சார்தமிழ்க் கம்பனும்
அம் முழுப்பொய் அதைஎந் தமிழர்கள்
மெய்ம்மை யான விழுக்கதை யாம்என
அம்மவோ நம்பிடச் செய்து விட்டனன்."

தமிழனப் பகைவனான வால்மீகி  சொன்ன முழுப் பொய்யை, உண்மையான உயர்வான கதை என சிலர் நம்பும்படி காவியம் செய்து விட்டான் கம்பன்.

"கம்பன் செய்பொய்க் கவியினை மெய்யென 
நம்பி அய்யகோ நந்தமிழ் மக்களும்
தம் பழம்பெருந் தாய்க்குல மக்களை
வெம் பகைபோல் வெறுத்திட லாயினர்."

கம்பன் செய்த பொய்க் காவியத்தை மெய் என நம்பிய நம் தமிழர்கள், பெருமைக்குரிய நம் பழந்த்தமிழ் மறக்குடி மக்களை கொடிய பகைவர் போல எண்ணி வெறுத்தனர்.

"அம் மயக்கம் அகன்று தமிழர்கள் 
தம்மி னத்துத் தலைவர் பெருமையைச்
செம்ம னத்துத் தெளிந்திடச் செய்குதல்
எம் இனத்தி னிருங்கட னாகுமால்."

அந்த மயக்கத்தை நீக்குவதொடு தமிழன தலைவனாகிய இராவணனின் பெருமையை உணரச் செய்து தமிழரின் நல்ல உள்ளத்தினை தெளிவடையச் செய்வதுமே நம் கடமையாகும்.

"கரும்பை வேம்பென வேம்பைக் கரும்பென 
விரும்பி வாழுமெய் யாமை வெருவுற
அரும்பி யுண்மை யருந்தமிழ் மக்கள்முன்
திரும்பி வாழ்ந்திடச் செய்யுமிக் காவியம்."

இனிக்கும் கரும்பை கசக்கும் வேம்பாகவும், வேம்பை கரும்பாகவும் விரும்பி வாழும் தமிழரை அறியாமை விலக்கி தமிழர்கள் உண்மை அறிந்து மான வாழ்வு  வாழச் செய்வதே இக்காவியத்தின் நோக்கமாகும்.

(தொடரும்) 












No comments:

Post a Comment