Friday, April 22, 2016

இராவண காவியம் - முன்னுரை


இராவண காவியம் புலவர் குழந்தை அவர்களால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்தப்பட்டக் காப்பியம். 1946 இல் வெளிவந்த இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம்,பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு படைக்கப்பட்டது. அறிஞர் அண்ணா இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதியுள்ளார். அது எப்பிடி இராமயணத்திற்கு எதிராக இராவணனைத் தலைவனாகக் கொண்டு காப்பியம் படைக்கலாம் என்று சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியால் 1948 ஜூன் 2 - ஆம் தேதி விற்கவோ, வாங்கவோ, IPC 153 A & 295 A ஆகிய பிரிவுகளின்படி ஆட்சேபகர மான அம்சங்கள் இருப்பதாகத் தடை செய்ததது. பிரதிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.  
IPC 153A- மதம்,இனம்,பிறந்த இடம்,வாழுமிடம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பட்ட குழுக் களிடையே பகையை வளர்ப்பது. தண்டனை=3 ஆண்டுகள் சிறை. 
295ஏ- எந்த ஒரு பிரிவு மக்களின் மதத் தையோ, மத நம்பிக்கை களையோ இழிவுபடுத்தி, அவர்களின் மத உணர்வு களைப் புண்படுத்துவது. தண்டனை=3 ஆண்டுகள் சிறை.
பின் 1971-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் இத்தடை நீக்கப்பட்டு புதிய பதிப்பு வெளியாகியது.

எதற்கு இந்த 'இராவண காவியம்' என அண்ணா தன் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார். "இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது. இராமதாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது. சுருங்கக் கூறுமிடத்து இந்நூல், பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு;"

இராவண காவியத்தை புலவர் குழந்தை கம்ப இராமாயண அமைப்பிலேயே (காண்டம்/படலம்) எழுதியிருக்கார்.  








வெண்பாவிற்கு புகழேந்தி ; விருத்தத்திற்கு கம்பன் எனக் கூறுவார்களே, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலவர் குழந்தையும் பாடியுள்ளார்.

இராவண காவியத்தில் விருத்தம்: அறுசீர் விருத்தம் அறுசீர்க் கட்டளை விருத்தம் எழுசீர் விருத்தம் எண்சீர் விருத்தம் கலி விருத்தம் வஞ்சி விருத்தம் பாயிரம் - இரண்டிலும் உண்டு. 

கம்பன் பாயிரம் பாடும் போது "உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்" எனக் கடவுளை வாழ்த்தித் தொடங்க.. குழந்தையோ 
"உலகம் ஊமையாய் உள்ள அக்காலையே 
பலகலைப் பயன் பாங்குறத் தங்கியே
இலகி இன்றுநான் எ. மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ்த் தாயை வாழ்த்துவாம்எனத் தமிழ்த் தாயை வாழ்த்தித் தொடங்குகிறார்.
கம்பன் நூல் கம்ப இராமாயணத்தின் நூல் வரலாறு சொல்லும் போது,

தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில் இந்த இராம கதையை இயற்றிய வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள் முதன்மையாராகியவரும் வாக்கிற் சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே தமிழ்ப் பாடல்களால் இந்த இராமாவதாரத்தை நான் சொல்கிறேன் எனக் கூற,

புலவரும் "காவியத் தோற்றம்" பகுதியில் ஏன் இராவண காவியம் எனக் கூறுகிறார். தமிழ் மக்களை தீக்குண அரக்கரென்றும், குரங்கென்றும் கூறிய வால்மீகி பொய்க் கதையை கம்பன் பரப்பியதால் நம் தமிழ் மக்கள் தன் பழம்பெருந்தாய்க்குல மக்களை பகையாய் எண்ணினர். அந்த மயக்கத்திலிருந்து நீக்கி நம்மினத் தலைவர் பெருமையை தெளிவு படுத்திக் காட்டவே இக்காப்பியம் என்கிறார்.

(தொடரும்)

2 comments: