Sunday, December 14, 2014

ஏவினை நேர்விழி மாதர் - திருப்புகழ்

வணக்கம் !!
நண்பர்கள் சிலர் காவியத் தலைவன் படம் பார்த்துட்டு அதுல வர திருப்புகழ் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு ஆனா பொருள் புரியலன்னு சொன்னங்க. அட நம்மதான் வலைப் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சே, ஆடின காலும், டைப் பண்ணின கையும் சும்மா இருக்குமா ? உடனே started the 2nd blog on meaning of that திருப்புகழ் பாட்டு.

அதுக்கு முன்னாடி ; திருப்புகழ் பாடினது = அருணகிரிநாதர். திருவண்ணாமலை ஊர்காரர். சின்ன வயசுல ரொம்ப சேட்டை (எல்லா சேட்டையும்தான்) செஞ்சுடுட்டு அதன் பலனை (!!??) அனுபவித்துக்
கொண்டு இருக்கும்போது முருகனின் அருள் பெற்று அப்பால ஊர் ஊரா போய் முருகன் புகழ் பாடினார். அதுதான் திருப்புகழ். மொத்தாம 16௦௦௦ பாட்டு பாடினாருன்னு சொல்லுறாங்க but we only have 1334. அனைத்து பாடல்களும் இசையோடு பாடக் கூடியவை. சந்தப் பாடல்கள். பாடிப் பாருங்க. அருமையா இருக்கும். சும்மாவா சொன்னங்கா "திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்"னு. இதுக்கு நம்ம வாரியார் அய்யா நல்ல உரை ஒண்ணு எழுதிருக்காரு. வா.தா. சுப்ரமணிய பிள்ளை ஒண்ணு எழுதிருக்காரு. எது கிடைக்குதோ வாங்கி படிச்சுப் பாருங்கோ. சரி நம்ம பாட்டுக்கு வருவோம் இப்ப.



ஏவினை நேர்விழி மாதர் - இந்தப் பாட்டு, திருச்செந்தூர்ல இருக்க முருகக் கடவுளின் மேல் பாடப்பட்டது. பாட்ட ரெண்டா பிரிச்சுக்கலாம் ; முதல்ல தனக்கு உள்ள குறைகளை சொல்லுறாரு ; அப்புறம் முருகனின் பெருமையைச் சொல்லி இப்பிடி குறை இருக்க என்னை ஆட்ட்கொள்ள வேணுமுன்னு வேண்டிக்கிறார்.

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா


ஏ = கணை (அம்பு) ; இப்ப trendல சொல்லனும்னா ஏவுகணை ; ஏவுகணை மாறி கண் இருக்குற பெண்.
(அம்பு நெஞ்சைத் துளைப்பது போல் பெண்ணின் பார்வையே நெஞ்சைத் துளைக்குது. )

ஏதம் = குற்றம் ; அந்த மாதிரி பெண்ணை விரும்பும் குற்றம் செய்பவனை (= மூடன்னு சொல்லுறாரு )

நெறி பேணா ஈனனை = ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை ;
ஈனம்=குறைவு, இதுல உடல், கை, கால்ல இருக்ககுறையைசொல்லலை.
ஆன்மா ஈடேற்றத்திற்கு உரிய நெறியை விரும்பாத குறைபாடு உடையவன் அப்பிடின்னு சொல்லுறார்.

வீணனை= வீண் காரியங்களைச் செய்து வீண்பொழுது போக்குபவனை. (நாமதான் அது :) )

ஏடெழுதா முழு ஏழை = அறிவில்லாதவன் / படிக்காதவன்

மோழையை = மடையனை

அகலா நீள் மாவினை மூடிய = என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள

நோய்பிணி யாளனை = நோயும் பிணியும் கொண்டவனை,

வாய்மையிலாதனை =உண்மை இல்லாதவானை,

இகழாதே =இகழ்ந்து ஒதுக்காமல்

மாமணி நூபுர சேதள தாள் = சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, (முருகனின் பாதங்கள்)

தனி வாழ்வுற = ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற

ஈவதும் ஒருநாளே = தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் = புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்.
(அவர் நாராயணா நாராயணா மட்டும் சொல்லுவாருனு நினைக்காதிங்க நல்லா பாடுவாராம் ).

புகல் குற மாதை =முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

நாடியெ கானிடை கூடிய சேவக =விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே

நாயக மாமயில் உடையோனே = தலைவனே சிறந்த மயில் வாகனனே

தேவி மநோமணி ஆயிப ராபரை = தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை,

தேன்மொழி யாள்தரு சிறியோனே = தேன் மொழியாள் உமையின் சிறுமகனே (பார்வதியின் இளைய மகனே )

சேணுயர் சோலையின் = விண்வரை உயர்ந்த சோலைகளின்

நீழலி லேதிகழ்= நிழலினிலே வளங்கும் (நீழல்-னு நீடுறார் பாருங்க சந்தம் சரியா வர :))

சீரலை வாய் வரு பெருமாளே. = திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

Summary:

புலவர்கள் பாடிய நூல்களை இசையினால் பாடிப் பரப்பிவருகின்ற நாரத முனிவர் அறிவித்த வள்ளி பிராட்டியை நாடிக் கானகஞ் சென்று அவரை மருவிய வீரரே! தனிப்பெருந் தலைவரே! சிறந்த மயில் வாகனரே! ஒளியுருவமானவரும் மனத்தில் மணியாக இருப்பவரும், எல்லா வுலகங்கட்கும் அன்னையும், பெரும் பொருளும், தேன் போன்ற சொற்களையுடையவரும் ஆகிய உமையம்மையார் பெற்ற இளம் புதல்வரே! விண்ணளவாக உயர்ந்து சோலையின் நிழலிலே விளங்குகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! கணைபோன்ற கூரிய கண்களையுடைய பெண்களை விரும்பி குற்றமுடையவனும், மூடனும், நன்னெறியை விரும்பாத குறைபாடுடையவனும், வீண் பொழுது போக்குபவனும், கல்வியறிவே யில்லாத பாமரனும், மடையனும், விட்டு நீங்காது நீண்டுள்ள பெருவினைகள் மூடிய நோய்களால் கட்டுண்டவனும், உண்மையில்லாதவனும் ஆகிய அடியேனை இகழ்ந்து தள்ளிவிடாமல், உயர்ந்த இரத்தின மணிகள் பதித்த சிலம்பணிந்த குளிர்ந்த திருவடியை, அடியேன் ஒப்பில்லாத உயர்ந்த வாழ்வைப் பெறுமாறு தருகின்ற நாள் என்று உண்டாகுமோ?

இப்ப  மறுபடியும் பாட்டை கேட்டுப் பாருங்க. அருணகிரிநாதர் பாட்டு , வாணி ஜெயராம் குரல் , ரகுமான் இசை ; திருச்செந்தூர்ல இருக்க மாதிரியே இருக்கும்.

ஆசிப் 

1 comment: