Tuesday, December 30, 2014

முக்கூடற்பள்ளு - I - ஊதாக் கலரு ரிப்பன்

வணக்கம் நண்பர்களே !!

கடந்த வாரம் ஒரு நான்கு நாட்கள் விடுமுறை..தாவீது குமாரனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு புதுசாப் படிக்க எதுனா இருக்கா இருக்கானு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேடியதில் கிடைத்தது "முக்கூடற்பள்ளு". நான் இதுவரை இதைப் படித்ததில்லை. சங்க இலக்கியத்தில் இது வராது , ஏனோ தெரியல இக்கால இலக்கியத்திலும் இத நான் படிக்கல ; சரி விடுங்க ; இப்பவாது படிக்க வாய்ப்பு கிடைச்சுதே.. பள்ளு 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒண்ணு ; "ஆடுவோமே , பள்ளு பாடுவோமேனு" நம்ம பாரதி பாடினது இந்தப் பள்ளுவத்தான்.. எனக்கு முக்கூடற் பள்ளு ஒண்ணுதான் தெரியும் ; ஆனா ஏகப்பட்ட பள்ளுப் பாடல்கள் இருக்கு ;

திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, திருமலைப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப் பள்ளு, வடகரைப் பள்ளு, உரிமைநகர்ப் பள்ளு, சீகாழிப் பள்ளு, தில்லைப் பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, சேற்றூர்ப் பள்ளு, திருவிடைமருதூர்ப் பள்ளு, மாந்தைப் பள்ளு, கூடற் பள்ளு, தஞ்சைப் பள்ளு, தென்காசைப் பள்ளு, கொடுமளூர்ப் பள்ளு, இராசைப் பள்ளு, புதுவைப் பள்ளு, முக்கூட்டுப் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு, சண்பகராமன் பள்ளு, வையாபுரிப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு இப்பிடிச் சொல்லிட்டே போகலாம் ;

முக்கூடற் பள்ளுதான் முதல் பள்ளு இலக்கியமாகவும் , ஆகச் சிறந்தப் பள்ளு இலக்கியமாகவும் இருக்குதுன்னு படிச்சவங்க சொல்லுறாங்க ;

அதுலாம் சரிதான்ப்பா ? அது என்ன பள்ளு ? அப்பிடினுதானே கேக்குறிங்க ? வரேன், வரேன் ; பள்ளன், பள்ளத்தி பாடுறதுதான் பள்ளு ;

என்னடா இவன் தீடீர்னு சாதியப் பத்தி பேசுறான்னு பாக்குறிங்கள ? என்ன பண்ணுறது ? நம்ம அந்த மாதிரி ஆக்கி வைச்சுருக்காங்க ;

இது விவசாயி பாடுற பாட்டுங்க ;

உழவன் & உழத்தி ; பள்ளம் = பள்ளு ; பள்ளத்தில் வேலை செய்யும் உழவன் & உழத்தி = பள்ளன் & பள்ளத்தி ; that's all ;

ஆழமா உழுதுட்டே இருந்தா நிலம் பள்ளமாத்தானே ஆகும் ; வரப்புதான் மேடா இருக்கும் ; விவசாய வேலை செய்யற இடம் பள்ளமாத்தான் இருக்கும் ; இப்பப் புரியுதுல ;  அப்பிடி பள்ளமான விவசாய நிலத்துல உழவனும், உழத்தியும் சந்தம் போட்டு இசையோட பாடுற பாட்டுதான் பள்ளு ; இதத்தான் ரொம்பக் காலமா பாடுறாங்களே , ஆனா ஏன் முக்கூடற் பள்ளுதான் முதல் பள்ளுனு சொல்லுறோம் ? பாடுறாங்க ; ஆனா யாரும் எழுதி வைக்கலையே ; 16௦௦+ ஆண்டுகளில் மூவேந்தர்களின் ஆதிக்கம் குறைந்தது போய்டுச்சு ; சங்கம் வைச்சு தமிழ் வளர்க்கலாம் ஆளும் இல்ல இடமும் இல்ல ; அதுவுமில்லாம பிற மொழிக் கலப்பு வேற ; காப்பியம் , பெருங் காவியம் எழுதுற மாதிரி சூழலும் இல்ல ; அப்பத்தான் இந்த மாதிரி  சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டன ; இது மாதிரி ஏகப்பட்ட இலக்கியங்கள் காணாமப் போய்டுச்சு ;

சரிப்பா ; இதுல என்ன விசேசம் ? அப்பிடி தேடித் போய் படிக்குறதுல என்ன இருக்குது  ?

1. ரொம்ப ரொம்ப எளிமையான பாடல்கள் ; விளக்கமே வேண்டாம் ;
2. இசை ; முழுக்க முழுக்க இசையோட இருக்கும் பாடல்கள் ; சந்தம்லாம் யோசிக்க வேணாம் ; பாடுனா அதுவா வந்துரும் ;
3. ஒரு அருமையானக் குட்டி கதை ;
4. வேளாண்மைப் பத்தித் தெரியனுமா , இது முழுவதும் அது பத்திதான் ;
5. ஒன்பதுவகை உணர்வுகளால் பிறக்கும் கவிதைகளின் ஒரு பேரின்பத்தை முற்றுந் தருகிறது; அதப் கொஞ்சம் பின்னால பாப்போம் ;

one mark question: முக்கூடற் பள்ளு ஆசிரியர் யார்? ஒரு பய இதுக்கு விடை எழுத முடியாது ; ஏன்னா யாருக்கும் தெரியாது ;  இவ்வளவு அருமையாப் பாட்டு எழுதிட்டு பேரு சொல்லாமப் போய்ட்டான் :(((

அருமையானக் குட்டி கதைனு சொன்னேன்ல ; அத இப்பவே பாத்துருவோம் ; overview மாதிரி ;

கதை நடக்கும் இடம்: முக்கூடல் ; திருநெல்வேலிக்குப் பக்கத்துல ; இன்னும் ரெண்டு ஊர் தெரியனும் நமக்கு : திருநெல்வேலில ஓடுற பொருநை ஆற்றின் வடக்கோட்டுல இருக்க ஊரு ஆசூர் வடகரை ; தெக்கொட்டுல இருக்க ஊரு சீவலமங்கைத் தென்கரைநாடு. சீவல்லபன்’ என்ற பாண்டியனால் வெட்டப் பெற்ற ஏரி = ‘சீ வல்லபன் பேரேரி’ ==> சீவலப்பேரி == இதுதான் முக்கூடலின் இப்போதைய பெயர் ;

கதைல வர நாயகன் = வடிவழகன் (அழகன்) ; ஒரு உழவன் ; அந்த ஊரு பண்ணையார் நிலத்துல வேளாண்மை பண்ணுறதுதான் அவனோட வேல ;

நாயகி = முக்கூடற்பள்ளி , ஆசூர் வடகரை ஊர்க்காரி ; ஆனாப் பாருங்க நம்ம அழகன் ரெண்டு பொண்டாட்டிக்காரன் :))

மூத்தபள்ளி முக்கூடற்பள்ளி இருக்கும் போதே ஒரு இளையபள்ளி = மருதூர்ப்பள்ளியைக் கட்டிக்குறான் ; இவ ஊரு = சீவலமங்கைத் தென்கரைநாடு. கட்டினவன் புது பொண்டாட்டி மோகத்துலேயே மருதூர்ப்பள்ளி வீட்டுலேயே இருந்துறான் ; மூத்தபள்ளி வந்து வந்து கூப்பிட்டுப் பாக்குறா ; அவன் வருவனான்னு இளையபள்ளி கூடவே இருக்கிறான் ;

மழை காலம் வரப் போகுது ; பண்ணியார் நிலத்துலத் தண்ணி ஊத்தி வேளாண்மை பண்னுடானா , இவன் இளையபள்ளி கூட ...... சரி விடுங்க :))))

பொறுத்து பொறுத்துப் பாத்த மூத்தபள்ளி பண்ணையார்ட்ட போய் புகார் சொல்லுறா ; பண்ணையாரும் சரி நான் போய்க் கேக்குறேன்னு இளையபள்ளி வீட்டுக்கு வந்து வடிவழகன கூப்பிடுகிறார்; அழகன வீட்டுக்குள்ள ஒளிச்சு வைச்சுட்டு அவன் போய்ட்டான் இங்க வரவே இல்லன்னு சொல்லுறா இளையபள்ளி ; பண்ணையார் அழகனைக் கண்டிச்சு ஒழுக்கமா அவர் நிலத்துல(யும்) கொஞ்சம்  வேளாண்மை பண்ணச் சொல்லுறார் ;


இதுல இன்னொரு பிரச்சனை என்னான ? இளையபள்ளி = சைவ சமயம் ;  மூத்தபள்ளி = வைணவம் ; இது போதாதா ? ஒரு பெரிய தசாவாதாரப் போரே நடக்குது :)

அழகன் பண்ணியார் சொன்ன வேலையை செய்யல ; கோவக்காரப் பண்ணையார் அவனுக்கு தண்டனை கொடுக்க மூத்தபள்ளி வந்து அவனைக் காப்பாற்றுகிறாள் ; அதுல இருந்து இளையபள்ளி/மூத்தபள்ளி ரெண்டு பேரும் ஒற்றுமையாகி பள்ளனோட சந்தோசமா இருக்காங்க !!!!!!!!!!!!!(????)

இன்னிலேஇருந்தது "முக்கூடற் பள்ளு"தான் ; எனக்குப் பிடிச்ச பாட்டா போட்டுத் தாக்கப் போறேன் ;

இன்னிக்கு நிறைய introduction கொடுத்ததால கொஞ்சம் பின்னால போய் ஒரு பாட்டைப் பாக்கலாம் ; என்னோட ஆசைக்கு  :))

நிலத்த நல்லா உழுது, தண்ணி விட்டாச்சு ; நாத்து நடத்தனும் ; நாத்து நட நிறைய பள்ளியர் வாரங்க ;

பள்ளியர் வருகை:

"சின்னி குருந்தி அருதி மருதி
செல்லி இருவி எல்லி கலிச்சி
திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி
செம்பி வம்பி தம்பிச்சாள்
நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி
நல்லி பூலி ஆலி வேலி
நாச்சி பேச்சி சுந்தி எழுவி
நாகி போகி லாள்
பொன்னி அழகி நூவி சேவி
பூவி சாத்தி காத்தி அம்மச்சி
பூமி காமி வேம்பி கரும்பி
புலிச்சி அங்காளி
கன்னி பொதுவி அன்னம் பாலி
கள்ளியுங் கலந் தொருவர்க் கொருவர்
கைவிரசலாய் நடுகைச் சமர்த்தைக்
காட்டும் பள்ளீரே."

நாத்து நட்டு பாத்து இருக்கிங்களா ? ஒரு leader இருப்பாரு ; அவர் சொல்லுர மாதிரி மத்தவங்க follow பண்ணுவாங்க ; இங்கேயும் அதேதான் ; இதுலாம் நாத்து நட வந்திருக்குற பள்ளியர்களோட பேரு ; அவங்கப் பாத்து நடுகைத் தலைவி எல்லாரும் உங்க கைவரிசையை காட்டுங்கன்னு சொல்லுறா ;

சின்னியும் குருந்தியும் அருதியும் மருதியும் செல்லியும் இருவியும் எல்லியும் கலிச்சியும் திருவியும் அணைஞ்சியும் வெழுதியும் பெரிச்சியும் செம்பியும், வம்பியும் தம்பிச் சாளும் நன்னியும் உடைச்சியும் சடைச்சியும் மூக்கியும், நல்லியும், பூலியும், ஆலியும் வேலியும் நாச்சியும் பேச்சியும் சுந்தியும் எழுவியும் நாகியும் போகிலாளும், பொன்னியும் அழகியும் நூவியும் சேவியும் பூவியும் சாத்தியும், காத்தியும் அம்மச்சியும் பூமியும் காமியும், வேம்பியும் கரும்பியும் புலிச்சியும் அங்காளியும் கன்னியும் பொதுவியும் அன்னம் பாலியும் கள்ளியும் ஆகிய எல்லீருங்கூடி ஒருவர்க் கொருவர் கைவிரசலாய் நீங்கள் நடுகை நடுகின்ற திறமையைக் காட்டுங்கள் பள்ளியர்களே..

இதுல "குருந்தி" ஒரு பேரு சொல்லி இருக்கேன் பாருங்க ; அவளைப் பத்தித்தான் அடுத்த பாட்டு ; in fact இந்தப் பாட்டைச் சொல்லத்தான் மேல இருக்கும் பாட்டைச் சொன்னேன்;

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படம் பாத்து இருக்கிங்களா ? அத கொஞ்சம் நியாபகம் பண்ணிக்கங்க ; அதுல லதாபாண்டி uniform போட்டுட்டு school போகும் போதெலாம் போஸ் பாண்டி கண்டுக்கவே மாட்டாரு ; ஆனா அப்புறாம ஒரு changeover வரும்; அதுதான் இங்கயும் ; (அப்பாட பதிவுக்கு தலைப்பு கிடைச்சாச்சு )

படம் பாக்காதவங்க இந்தப் படக் காட்சியைப் பாருங்க ;



இந்தப் பொண்ணு குருந்தி போன வருசம் கூட நாத்து நட வந்துச்சு ; ஆனா அப்பா சின்னப் பொண்ணு; யாருமே கண்டுக்கல ; ஆனா பாருங்க இந்த வருசம் பெரிய பொண்ணா இருக்கு ;பாக்குறவன்லாம் அட நம்ம "குருந்தி"யா இதுன்னு வாயைத் துறக்குறான் :))

"படைகொண் டேவருங் கரனையும்-பொரு
விடையஞ்சேர் திரி சிரனையும்
பண்டு முடித்த கணையினார்-குகன்
கண்டு பிடித்த துணைவனார்
குடைகுன் றாய்ப்பசுக் கிடைநின்றார்-முக்
கூடலழகர் வயலுள்ளே
கொண்டாடிக் கொண்டு நடச்செய்தே-  இன்று


கண்டோ மிதென்ன புதுமையோ
தொடையென் றால்வாழைத் தண்டைப்போல்-விழிக்
கடையென் றால்கணை ரெண்டைப் போல்
சொருக்கென் றால்மேக படத்தைப்போல்-முலை
நெருக்கென் றால்இணைக் குடத்தைப்போல்
இடையென் றால்வஞ்சிக் கொடியைப் போல்-வரும்
நடையென் றால்இளம் பிடியைப் போல்
இருந்த சாயலுக் கிப்பாற்-குருந்தி
திருந்தி னாளடி பள்ளீரே."


முதல் பகுதி ஒன்னுமே இல்ல ; பாட்டு பாடிட்டே நாத்து நட்டோம் ; என்ன பாட்டு ? திருமாலப் பத்தி ;

படைதிரட்டிக் கொண்டு வந்த கரன் என்பவனையும், போர் செய்யுந் தொழிற்றிறம் மிகுந்த திரிசிரன் என்பவனையும் முன்பு எய்து கொன்ற அம்பு உடையவரும், குகன் தனக்குப் பற்றுகோடாக ஆராய்ந்து பற்றிக் கொள்ளப்பட்ட தோழரும், மலையைத் தூக்கிக் குடையாய்ப் பிடித்துக்கொண்டு பசுக்கிடையின் கூட்டங்களுக்கு இடையில் நின்ற கல் மழையைத் தடுத்துக் காத்தவரும் ஆகிய அழகரைக் கொண்டாடி வழிபாடு செய்துகொண்டு நடுகை நடும்போது..

அடுத்த வரிகள்தான் "குருந்தி" எப்பிடி மாறி போயிட்டான்னு சொல்லுறாரு:

என்னடா இது "குருந்தி" இன்னிக்கு ரொம்ப புதுசாத் தெரியுறாலே ; அவளோட தொடை ரெண்டும் வாழைத் தண்டுகள் போலிருக்கின்றன ; ரெண்டு கண்ணும் ரெண்டு அம்பு மாதிரி இருக்கு ; அடர்த்தியா இருக்கும் அவளோட கூந்தல் மேகக் கூட்டம் மாதிரி இருக்கு ; ஒன்றோடொன்று நெருக்கிக் கொண்டிருக்கின்ற மார்புகள் இணையா (ஒரே அளவான ) ரெண்டு குடம் மாதிரி இருக்கு ; இடுப்பப் பாரு,  வஞ்சிக் கொடியைப்போல் இருக்கு ; அவள் நடந்து வரும் நடையப் பாத்தா, இளம் பெண் யானையின் நடையைப் போலிருக்கின்றது;முன்ன ரொம்ப மென்மையாக இருந்தா ; இப்ப ஆளே மாறிட்டா ;

இப்பிடிலாம் சொன்னது யாரு ? கூட நாத்து நட்ட பொண்ணுங்கதான் ; (கண்ணு வைக்கதீங்காமா :)) )

இப்போதைக்கு இங்க நிறுத்திக்குவோம் ; முதல இருந்தது நல்ல நல்ல பாட்டாப் பாத்துட்டு வருவோம் ; உங்களுக்கு பிடிச்சுருந்தா கருத்து சொல்லிட்டுப் போங்க :)


நன்றி
ஆசிப்

2 comments:

  1. சிறப்பு .தமிழின் இனிமையை ருசித்தேன்

    ReplyDelete