Wednesday, December 31, 2014

முக்கூடற் பள்ளு - II

வணக்கம் நண்பர்களே !!

இந்த ஆண்டின் (2014) கடைசி பதிவு ; விளையாட்டாய் ஒரு கேள்விக் கேட்டு அதுக்கு கொஞ்சம் விரிவா பதில் கொடுக்க முதல் பதிவு எழுதினேன் ; அப்பிடியே பழகிட்டேன் ; இப்ப விட முடியல :) தினமும் பதிவு எழுத தோணுது ; நீங்க கொடுத்த ஊக்கமும் , பதிந்த கருத்துக்களும் இன்னும் எழுதத் தூண்டுது ; அதுக்கு ஒரு நன்றி ;

நேத்து "முக்கூடற்பள்ளு" பத்தின ஒரு பதிவுப் பார்த்தோம் ; பள்ளு பாடவும் ஒரு அமைப்பு முறை இருக்கு ; முதல்ல கடவுள் வாழ்த்து போல காப்புச் செய்யுள் பாடனும் ; இதிலும் பூ மேவு’ என்று காப்புச்செய்யுள் தொடங்கி திருமால் மேல வாழ்த்துப் பாடுறாங்க ; அப்புறம் த்து ஆழ்வார்களும் பாவலரும் நாவலரும் பத்தர்களும் காப்பாம்’ என்று  சொல்லி கருடாழ்வர், சேனைமுதலியார், நம்மாழ்வார் ஆகிய இவர்களுக்கு வணக்கம் கூறுகின்றது.

இருப்பா !! இங்க எங்கயா திருமால் வந்தாரு ?? பள்ளு உழவன் பாட்டுன்னு நேத்து சொன்ன ; வயல்ல வேலை செய்யும் பொது பாடுற பாட்டுன்னு வேற சொன்ன ; வயலும் வயல் சார்ந்த பகுதியும் = மருத நிலம் ; As per தொல்காப்பியம் மருத நிலத்துல திருமால் வரக் கூடாதே ;

"மாயோன் மேய காடு உறை உலகமும்,   == திருமாலுக்கு முல்லை நிலம்
சேயோன் மேய மை வரை உலகமும்,       == முருகனுக்கு குறிஞ்சி நிலம் (குன்று கண்ட இடமெல்லாம் முருகன் :))
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,          == வேந்தன் (அரசன்) மருத நிலம்
வருணன் மேய பெரு மணல் உலகமும்,  == வருணனுக்கு (பெரு மணல் = நீண்ட மணலை உடைய கடற்க்கரை) நெய்தல் நிலம்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே" (தொல் = அகத்திணையியல் 5)

இதுதான் தொல்காப்பிய formula ; so இங்க இருக்குற மருத நிலத்துக்கு வேந்தன்தானே வரணும் ? ஏன் திருமால் ?

தமிழ் ஆதி குடிகள் எடுத்தவுடன் விவசாயம் பாக்கல ; முதல அவங்க காடு, மலைலதான் (முல்லை & குறிஞ்சி ) வாழ்ந்தாங்க ; அப்புறம் நாகரிகம் மாற மாற விவசாயம் செய்ய ஆரம்பிக்க காட்டை அழித்து விவசாய நிலமா மாத்தி சமவெளிக்கு வந்தாங்க ; ஊர்கள் , நகரங்கள் இப்பிடித்தான் வந்துச்சு ; அப்பிடி காட்டுல இருந்தும் மலைல இருந்ததும் வரும் பொது அவங்க மட்டும் வரல ;
அவங்க பழக்கத்தையும் கொண்டுவந்தாங்க ; திருமாலையும் அப்பிடியே கூட்டிட்டு வந்துட்டாங்க ; அடே அடே வேற எங்கயோ போய்டோம் ; lets get back to முக்கூடற்பள்ளு.

காப்புச் செய்யுள் முடிந்ததும் கதை மாந்தர் அறிமுகம் ; மூத்தபள்ளி , இளையபள்ளி , பள்ளன் அறிமுகம் ; இதுதான் இன்னிக்கு நாம பாக்கப்போறோம் ;

"காவலராந் தேவரைமுன் கைதொழுது பின்னருமென் 
ஆவலினா லேயழகர் ஆசூர் வளநாடு
சீவலநன் னாடுமிசை தேர்ந்துரைக்கப் பண்ணைதனில் 
ஏவலுறும் பள்ளியர்வந் தெய்தியது சொல்வேனே."

எம்மைக் காப்போராகிய விளங்குந் தேவர்களை முதலில் கைகுவித்து வணங்கி, மேலும் என் ஆவலால் முக்கூடலழகரின் ஆசூர் வளநாடாகிய வடகரை நாட்டைப் பற்றியும், சீவலமங்கை நன்னாடாகிய தென்கரை நாட்டைப் பற்றியும், இசைத் தமிழ் ஆராய்ந்து உரைப்பதற்கு, முதற்கண் முக்கூடல் நகர்ப் பண்ணைகளில் பயிரிடுவதற்குக் கட்டளை பெற்றுள்ள பள்ளியர்கள் வந்து சேர்ந்ததைப் பற்றிச் சொல்லுவேன்; எதுக்கு இந்த பள்ளு பாடராருனு சொல்லுறாரு ;

முக்கூடற் பள்ளி (மூத்த பள்ளி ) அறிமுகம் :

"நெற்றியி லிடும் மஞ்சணைப் பொட்டும்
மற்றொரு திருநாமப் பொட்டும்
நெகிழ்ந்த கருங் கொண்டையும் ரெண்டாய்
வகிர்ந்த வகுப்பும்
பற்றிய கரும்பொற் காப்பும் கையில் 
வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய
பாக்கும்ஒரு சுருளுக் கொருக்கால்
நீக்கும் இதழும்
வெற்றிவிழிக் கெதிர் கொண் டிருகோ
டுற்ற கருப் பின்னு மெதிர்ந்தால்
விரிந் திடுமென் றெண்ணிச் சற்றே 
சரிந்த தனமும்
சிற்றிடையும் செம்பொ னிடைக்கிடை
பெற்றிடும் பட்டாங்கு மிலங்கத் 
திரு முக்கூடல் வாய்த்த பள்ளி
தோன்றினாளே. "

இலக்கியத்தில கேசாதிபாதம் , பாததிகேசம் அப்பிடின்னு பாடுவாங்க ; அதவாது தலைல இருந்தது பாதம் வரை வர்நிச்சுப் பாடுறது ; reverseல பாதமல இருந்தது தலை வர பாடுறது ; இந்தப் பாட்டு முதல் வகை ; முக்கூடற் பள்ளி நடந்தது வரா ; அவ நெற்றில இருந்தது ஆரம்பிக்குறார் கவிஞர் ; நெத்தில மஞ்சணைப் பொட்டு +  திருநாமப் பொட்டு ; மஞ்சள் பொட்டு வச்சு
அதுக்குமேல பெரிய சந்தனப் பொட்டு வைச்சுருக்கா ; சந்தனப் பொட்டுல இருந்தது அப்பிடியே நடுவுல வகுடு எடுத்து சீவின பெரிய கொண்டை போட்டுருக்கா ; முடி கரும் மேகம் போல கருப்பா இருக்கு ; கைல காப்பு போட்டுருக்கா ; கரும்பொற் காப்புன்னு சொல்லுறாரு ; இரும்பால செஞ்ச காப்பு போட்டு இருக்கா... கைல வெற்றிலை வைச்சுருக்கா ; வாயில் பாக்கு போட்டு மென்னுட்டு இருக்கா ; வெற்றிலையைச் சுருட்டி சுருட்டி வாயில் போடுறா ; வாயில் மடித்து வைக்கும் ஒவ்வொரு வெற்றிலைச் சுருளுக்கும் ஒவ்வொரு முறை நெளிந்து ஒதுங்கி விலகும் வாய் இதழ்கள் ;
அடுத்த வரி : சற்றே சரிந்த தனமும் ; வயசு ஆகிடுச்சு அதுனால அப்பிடின்னு சொல்லல ; இரண்டு மார்புகளும் நிமிர்ந்து நின்னு பாக்கும் போது அவளோட வெற்றி தரும் வேல் போன்ற கூர்மையான் கரிய கண்ணைப் பார்த்துப் பயந்ததுனால சரிஞ்சு போச்சாம்... இதுக்குப் பேருதான் தற்குறிப்பேற்ற அணி...ஒடுங்கிய இடையும், அந்த இடையில் உடுத்த, எடைக்கெடை தங்கத்தின் விலைபெறும் பொற்பட்டு போட்டுட்டு வருகிறாள் ;எடைக்கெடை தங்கத்தின் = இடை இடையே தங்க சரிகை இருக்க பட்டுச் சேலை ;

கொஞ்சம் கண்ணை மூடிட்டு இதப் படிச்சா முக்கூடற் பள்ளி தெரிவா ; பாத்துகோங்க :))

மருதூர்ப் பள்ளி அறிமுகம் :

"செஞ்சரணப் படமிடுங் கொச்சியின்
மஞ்சளும்பூம் பச்சையும் மணக்கச்
சிறியநுதற் பிறை வெண்ணீற்றுக் 
குறி யொளி வீசப்
பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே
அஞ்சனந்தோய் கண்கள் இரண்டும்
பக்கக் கொண்டையினும் குழையினுந் 
தைக்கக் குதிக்க
நெஞ்சுகவர் கனதன மாமதக் 
குஞ்சரவிணைக் கோடுகள் அசைய
நீலவடக் கல்லுடன் கோவைத்
தாலியும் இலங்க
வஞ்சிமருங்கி லணிதரும் பட்டும்
பஞ்சவணத் தழகுந் துலங்க
மருதூர்க்கு வாய்த்த பள்ளி
தோன்றி னாளே."

அடுத்து இளையபள்ளி , கால்ல ஆரம்பிக்குறார் ; சிவந்த கால்களில் அழகாகப் பூசப்பட்ட கொச்சி மஞ்சளும், பூம்பச்சை இலையோட வாசனையும் அந்த இடம் பூரா மணக்குது. சின்ன நெற்றி அவளுக்கு அதுல பிறைக் குறியிட்ட திருநீறு வைத்து இருக்கிறாள் ; இரண்டு கண்களிலும் மை பூசி இருக்கிறாள் ; அந்த கண்கள் இரண்டும் கெண்டை மீன் மாதிரி இருக்கு ; பாத்ததும் கவர்ந்து இழுக்கற மாதிரி பெரிய மத யானை மாதிரி இருக்க மார்புகளின் இணை கோடுகள் அசைய (எப்பிடி சொல்லுறது இத? He is talking about cleavage); அது மேல நீலக்கல் வடத்துடன் கோவையாகக் கோத்த தாலியும் தொங்குது ; வஞ்சிக்கொடி போன்ற இடையில் அணிந்த பட்டும் அதினுள்ள ஐந்துவகை வண்ணத்தின் அழகும் தெரியுற மாதிரி மருதூர்லையே இவதான் அழகுன்னு சொல்லுற மாதிரி வந்தாள் ;

இப்ப சொல்லுங்க .. ஏன் நம்ம அழகன் விழுந்திருக்க மாட்டான் ??

பள்ளன் அறிமுகம் :

"கறுக்குங் கடாய் மருப்பின்
முறுக்கு மீசையும்--சித்ரக்
கத்தரிகை யிட்ட வண்ணக்
கன்னப் பரிசும்
குறுக்கில் வழுதடி சேர்த்
திருக்குங் கச்சையும்--செம்பொற்
கோலப் புள்ளி் யுருமாலும்
நீலக் கொண்டையும்
சறுக்குந் தொறுங் குதிப்பும்
சுறுக்குந் தலை--யசைப்பும்
தடிசுற்றி ஏப்ப மிட்டே
அடிவைப் பதும் 
மறுக்கும் மதுவெறிகொண்
டுறுக்குஞ் சிரிப்புந் தோன்ற
வடிவழகக் குடும்பன்வந்து
தோன்றினானே."

சீற்றங் கொள்ளும் ஆட்டுக்கடாயின் கொம்பு போன்ற முறுக்கு மீசையும், அழகிய கத்தரிக்கோலால் வெட்டிவிட்ட அழகான கன்னத்துப் பக்கத்தின் எழிலும், இடுப்பில் வழுதடி என்ற ஒருவகைப் படைக்கலத்துடன் சேர்த்து இறுக்கிக் கட்டிய கச்சையும், பொன்னாலாகிய அழகிய புள்ளியுள்ள உருமால் என்ற அணியும், நீலநிறக்கொண்டையும், காலில் ஏதேனும் இடறிச் சறுக்குந்தோறும் குதித்தலும், சுறுக்கென்று ஏதேனுந் தைக்குந் தோறும் தலையசைத்தலும் உடையவனாகித் தடியைச் சுற்றி ஏப்பமிட்டுக்கொண்டு மெல்ல அடிவைப்பதும், அறிவை மறுதலைப் படுத்தும் கள்வெறி கொண்டு
காரணமின்றி சிரிப்புந் தோன்ற வடிவழகக் குடும்பன் வந்து நாடக மன்றத்தில் தோன்றினான்.


சரி , மூணு பேரும் வந்தாச்சு ; என்ன பண்ணுறாங்கனு அப்பால பாப்போம் ;

நன்றி,
ஆசிப்


No comments:

Post a Comment