Sunday, December 28, 2014

எப்பிடி இருக்கா புதுப் பொண்ணு ??

வணக்கம் நண்பர்களே !!

மருதம், குறிஞ்சித் திணைப் பாடல்கள் கொஞ்சம் பார்த்தோம். இன்றைக்கு முல்லைத் திணைல ஒரு பாட்டு பார்க்கலாம். இன்னிக்கும் குறுந்தொகைல இருந்ததுதான் இந்த பாட்ட எடுத்துட்டு வரேன் ; குறுந்தொகை மட்டுமில்லை எந்த சங்க இலக்கியம் படித்தாலும் அதிலுள்ள கதை மாந்தர்கள் நம் கண் முன் வந்து போவர்கள் ; அதாவது பாட்டில் கூறப்படும் ஒரு நிகழ்வையும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் ; யதார்த்தமில்லாத எந்த நிகழ்வையும் சங்கப் பாடல்கள் கூறுவதில்லை ;

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழன், தோழி, பாணன் போன்ற கதை மாந்தர்கள் வருவார்கள் ; உங்களுக்கும் இவர்கள் யார் என்று எளிதாகப் புரிந்ததுவிடும்.. செவிலித்தாய், நற்றாய் அப்பிடின்னு இரண்டு கதை மாந்தர்கள் அடிக்கடி வருவார்கள் ; யார் இவர்கள்? ஒரு வீட்டில் அப்பா, அம்மா, ஒரு பொண்ணு , பக்கத்து வீட்டுல அந்த பொண்ணோட தோழி அவளோட அம்மா இருக்காங்கனு கற்பனை பண்ணிக்கங்க ;

பொண்ணு = தலைவி ; பக்கத்து வீடு பெண் =தோழி ;
அம்மா =  நற்றாய் ; தோழியின் தாய் = செவிலித்தாய் ;

ஏன் செவிலித்தாய் ? இவதான் தலைவியை வளர்ப்பா; அதவாது செவிலித்தாய் = தலைவியின் வளர்ப்புத் தாய் ; நற்றாய் = தலைவியின் பெற்ற தாய் ;

தலைவியின் காதல் , திருமணம் இரண்டிலும் தோழி & செவிலித்தாயின் பங்கு மிகப் பெரியது ; இவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது ; சரி ; இதலாம் இங்கயே விட்டுட்டு நம்ம பாட்டுக்கு வருவோம் ;

சூழல் :
தலைவி திருமணம் முடித்து தலைவன் வீட்டுக்கு சென்று விடுகிறாள். அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் ;புகுந்த வீட்டில் என்ன செய்கிறாளோ என நற்றாய்க்கு ஒரே கவலை; போய் பார்த்துட்டு வரவும் முடியல ?? (புகுந்த வீட்டுக்காரங்க கூட எதுவும் பிரச்சனையான்னு தெரியல).. அப்ப, செவிலித்தாய், நீ ஏன்மா கவலைப்படுற ? அவ நான் வளர்த்த பொண்ணு ? அருமையா குடும்பம் நடத்துவா ; நானே நேர்ல போய் பார்த்துட்டு வந்து உனக்கு சொல்லுரேனு சொல்லிட்டு தலைவி வீட்டுக்குப் போய் அவளைக் கண்டுவந்து சொல்லவதாக இந்தப் பாடல் உள்ளது.

பாடல்: 

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்    
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்     
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்     
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின்     
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே."

குறுந்தொகை (#167)
பாடியவர் : கூடலூர் கிழார்
கடிநகர்ச் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது
திணை : முல்லை
(கடிநகர் = தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் வீடு)

ரொம்ப எளிமையான பாட்டுதான். என்ன சொல்லுறாரு ? தலைவி தலைவனுக்கு சோறு, புளிக்குழம்பு  சமைத்துப் பரிமாறுகிறாள் ;
அவன் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லுறான் ; அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது ; இதுதான் பாட்டு சொல்லுது;

முளிதயிர் பிசைந்த= முற்றிய தயிரைப் பிசைந்த ; கழுவுறு கலிங்கம் = துடைத்துக் கொண்ட ஆடையை ; கழாஅது உடீஇ= துவையாமல் உடுத்துக் கொண்டு;குய் புகை கமழ=தாளிப்பினது புகை மணப்ப ;
தான் துழந்து அட்ட=தானே துழாவிச் சமைத்த; தீ புளி பாகர் = இனிய புளிப்பையுடைய குழம்பை.

கொஞ்சம் விரிவாப் பாக்கலாம் : 

தலைவி வீட்டுல தயிர் கடைஞ்சுட்டு இருக்கா ; கடையிர அவ விரல் எப்பிடி இருக்குனா , காந்தள் மலர் மாதிரி இருக்குதாம். வெளிய போய்ட்டு தலைவன் நல்ல பசியோட வீட்டுக்கு வரான் ; வீட்டுக்குள்ள வரும்போதே தாளிச்ச வாசனை பசியைக் கிளப்புது ; தலைவியோட கண்ணு குவளை மலர் மாதிரி இருக்கு , அதுல கண் மை வேற போட்டு இருக்கா ; அவளப் பார்த்து போதும் தயிர் கடைஞ்சது ; சாப்பிடலாம்னு சொல்லுறான் ; இவ தயிர் கடைஞ்சுடே சமையல் பண்ணிருக்கா ; அப்ப தயிர் கொஞ்சம் கைல படும்போதுலாம் அவளோட சேலைலத் துடைச்சுடே வேலையப் பாத்திருக்கா ; இப்ப இவன் பசிக்குதுன்னு சொல்லும் போது சேலையை மாத்திட்டு வாரேன்னு சொல்ல முடியுமா ? அதே தயிர் துடைத்த ஆடையுடன் தான் சமைத்த புளிக் குழம்பை
பரிமாருகிறாள் ; அவன் சாப்பிட்டுட்டு , சும்மா சொல்லக் கூடாது ; சாப்பாடு அருமைனு சொல்ல, அவ முகம் சந்தோசத்துல அப்பிடியே மலருது ;



நம்ம செவிலித்தாயை விட்டுட்டோமே ; அவ தலைவியைப் பார்க்க வந்தாள்ல , வந்து சமையல் அறைல இருந்தது மேல சொன்ன காட்சியைலாம் பாக்குறா ; அட அட , நம்ம பொண்ணா இதுன்னு சந்தோசமா கிளம்பி நற்றாய்க்கு வந்து சொல்லுறா ; நீ என்னமோ நினைச்சியே , என் பொண்ணு என்னமா குடும்பம் நடுத்துறா தெரியுமா ? வீட்டை நல்லாப் பாத்துக்குரா , விட்டுக்காரருக்கு என்ன வேணுமோ அத அவன் சந்தோசப்ப்படும்படி செய்ய்கிறாள் ; அதுனால அவளைப் பத்தின கவலையை நீ விட்டுறு.

இது நம் எல்லோர் வாழ்விலும் நடக்கும் / நடந்து இருக்கும் ; திருமணம் முடிந்த பிறகு மனைவியின் சித்தியோ, அத்தையோ நம் வீட்டிற்கு வந்து போவார்கள் ; நிறைய விசாரணைகள் நடக்கும் ; status report தாயிடம் சேர்க்கப்படும் :)) இதுதான் மேல கூடலூர் கிழார் பாடியுள்ள காட்சி..


ஒரு படக் காட்சியை இணைத்துள்ளேன் ; இதில் வரும் ஜெய் கணேசு கதாப்பாத்திரம்தான் செவிலித்தாய் எனக் கொண்டால் இப்பாடல் இன்னும் இலகுவாகப் புரியும்.



நன்றி
ஆசிப் 

1 comment:

  1. பாடலும் அதற்கேற்ற படக்காட்சியும் அருமை!

    ReplyDelete