Thursday, December 25, 2014

சங்க கால Horror Story - Part III

வணக்கம் நண்பர்களே !!

போர் பாடியது , களம் பாடியது பார்த்தோம் ; களம் பாடியதில் கடைசி பகுதி கூழ் அடுதல் == பேய்கள் காளிக்குக் கூழிட்டுப் படைத்து வழிபடுதல். Part Iல கலிங்கத்துப்பரணில இருக்குற வெவேறு பகுதிகளின் பெயர்களைப் பார்த்தோம்ல ; அதுல ஒண்ணு, பேய் முறைப்பாடு == காளியிடம் பேய்கள், பசியில் வாடும் எங்களை யார் காப்பார் என முறையிடுதல், சங்கடம் உரைத்தல். எங்கள் பசி போக்கிக் கொலை இறங்க வேண்டும் என இரத்தல்.
So, காளி இங்க ஒரு பெரிய போர் நடக்கப் போகுது , அங்க போனா நமக்கு நேரிய சாப்பாடு கிடைக்கும்னு சொல்லித்தான் பேய்களைக் கூட்டிட்டு வந்து போர், களம்லாம் காட்டுறாங்க ; அடுத்து என்ன ?? சாப்பாடுதான் ;


காளி பேய்களைக் கூழடுமாறு மொழிந்தது: 

"களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று
கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக்
குளமடைபட் டதுபோலும் குருதி யாடிக்
கூழடுமின் என்றருளக் கும்பிட் டாங்கே."

காளி பேய்களைப் பார்த்து , இந்தக் களம் முழவதும் பார்ப்பது என்பது முடியாத காரியம் ; இங்கு இறந்தது கிடக்கும் யானைகளின் குருதி ஆறு போல ஓடுகிறது ; அந்தக் குருதியில் குளித்து , கும்பிட்டு, சமைக்க ஆரம்பியுங்கள் என்று கூறியது.

பேய்கள் ஒன்றனை ஒன்று அழைத்தல்:

"குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூர்எயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே."

மோடீ,  நிணமாலாய்,  கலதீ,  கூர்எயிறீ,  நீலி,  மறிமாடீ, குதிர்வயிறீ == வேறு வேறு பேய்களின் பெயர்கள் ; சமைக்க வாருங்கள் ,  சமைக்க வாருங்கள் என்று அப்பேய்களை கூப்பிட்டன.

பேய்கள் பல் துலக்கம்: 

என்னதான் பேய் என்றாலும் பல் விளக்கிடுத்தான் சாப்பிடும் போல :)))

"பறிந்த மருப்பின் வெண்கோலால்
பல்லை விளக்கிக் கொள்ளீரே 
மறிந்த களிற்றின் பழுஎலும்பை 
வாங்கி நாக்கை வழியீரே."

மருப்பு = தந்தம் ; பழுஎலும்பு = விலா எலும்பு ; தந்ததைப் பறித்து பல்லை விளக்கிக் கொள்ளுங்கள் ; யானையின் விலா எலும்பை எடுத்து நாக்கு வழித்துக் கொள்ளுங்கள் !! வாட்டே மனேர்ஸ் :))

நகம் திருத்தலும் எண்ணெய் இடலும்:

"வாயம் புகளாம் உகிர்கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
பாயுங் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே."

கூரிய அம்புகளைக் கொண்டு நகம் களைந்து கொள்ளுங்கள் ; வழிந்து ஓடும் யானையின் மத நீரை எண்ணெய்யாகக் கொண்டு தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். (Oil Bath)

எண்ணெய் தேய்த்தபின் முழுகல்:

"எண்ணெய்போக வெண்மூளை
என்னுங் களியான் மயிர் குழப்பிப்
பண்ணையாகக் குருதிமடுப்
பாய்ந்து நீந்தி யாடீரே."

எண்ணெய் தெய்ச்சாச்சு , குளிக்க shampoo வேணுமே ; எண்ணெய் போக, வெண்மையான மூளையை எடுத்து சேறு குழப்பி அதைத் தேய்த்து ஆறாக ஓடும் குருதியினுள் கூட்டமாக நீந்தி குளியுங்கள்.

"குருதிக் குட்ட மித்தனையுங் கோலும் வேலும் குந்தமுமே
கருவிக்கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே."

ஒரு warning கொடுக்குது ; ஆறு மாதிரி குருதி ஓடுது , ஆனா ஈட்டியும், எறிகோலும் நிரம்ப மூழ்கிக் கிடக்கும் ; அது தெரியாமல் அதில் அகப்பட்டுக் கொள்ளாதீர்.. கரையில் இருந்தே குளியுங்கள்...

உடை உடுத்தல்: 

"ஆழ்ந்த குருதி மடுநீந்தி
அங்கே இனையா திங்கேறி
வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம்
விரித்து விரித்துப் புனையீரே."

குளிச்சாச்சு ; புது உடை வேணுமே ; பேய்க்கு என்ன உடை ? கொழுப்புதான்.. நல்லக் குளிச்சுட்டு, போரில் வீழ்ந்தது இறந்தது கிடக்கும் கலிங்க நாட்டு வீர்களின் கொழுப்பை விரித்து விரித்து (பெரியதாக்கி) அணிந்தது கொள்ளுங்கள் ;

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போய்டல ; பிடிக்காதவர்கள் இங்கயே நிறுத்துக் கொள்ளுங்கள் ; மேலும் படிக்க வேண்டாம்.

கைவளையும் காலணியும் புனைதல்:

"மதங்கொள் கரியின் கோளகையை
மணிச்சூ டகமாச் செறியீரே
பதங்கொள் புரவிப் படிதரளப்
பொற்பா டகமாப் புனையீரே."

மத யானையின் கோளகை (தந்ததில் அணிவிக்கப்படும் ஆபரணம்) எடுத்து கைவளையாக அணிந்தது கொள்ளுங்கள் ;குதிரை வீரர்கள் குதிரை மீது சேணம் இட்டு அதில் அமர்ந்தது வருவர் ; கால் வைப்பதற்கு இரண்டு புறமும் ஒரு வளையம் மாதிரி இருக்கும்ல அதுதான் (பதங்கொள் புரவிப் படி) காலணி ; அணிந்தது கொள்ளுங்கள். 

காதணி புனைதல்:

"பணைத்த பனைவெங் கரிக்கரத்தால்
பரிய கருநாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள்காம்பிட்
டிரட்டை வாளி ஏற்றீரே."

பருத்த யானையின் துதிக்கைகளை வெட்டி ஒன்று சேர்த்து பெரிய நாண் கொண்டு கட்டி அதில் முரசை (போர் முரசு) பூட்டி காதணியாக அணிந்தது கொள்ளுங்கள்.

இது இப்பிடியே கொஞ்சம் போகுது ; makeup பண்ணுறத இதோட நிறுத்திட்டு மேல போலாம் ;

அடுக்களை அமைத்தல்:

"மாகாய மதமலையின் பிணமலைமேல்
வன்கழுகின் சிறகால் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே
அடுக்களைகொண்டு அடுமி னம்மா."

காயம் = உடல் ; மதமலை = யானை ; மலை போன்று குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றி யானையின் உடல் ,கழுகின் சிறகு கொண்டு கழுகு , பருந்த்தின் இடையூறு இல்லாமல் நெருக்கமாக பந்தல் அமைத்து சமையல் அறை கட்டியாச்சு..

பானையை அடுப்பேற்றுதல்:

"கொற்றவாள் மறவர் ஓச்சக் குடரோடு தலையுங் காலும்
அற்றுவீழ் ஆனைப் பானை அடுப்பினில் ஏற்று மம்மா."

அடுப்பு ready, சமைக்கப் பானை ?? தலையும் , காலும் இல்லமால் இறந்தது கிடக்கும் யானையின் உடல்தான் அந்தப் பானை ; 
(கொஞ்சம் கற்பனை செய்தது பாருங்கள் இதை !!!)

உலைவைத்தல்:

"கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக்
குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ"

பானையை அடுப்புல வைச்சு உலை வைக்கணும் ; உலை வைக்க தண்ணி ?? யானை/குதிரை குருதிதான்.

காயமும் உப்பும் இடுதல்: (காயம் = வெங்காயம்)

"துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும்
உள்ளியுங் கிள்ளியிட் டுகிரினுப்பு இடுமினோ."

உலை கொதிக்க ஆரம்பிக்குது , வெங்காயம், உப்பு சேக்கணும் அடுத்து ; வெங்காயம்=குதிரையின் பற்கள் , உப்பு = நகங்கள் ;

அடுத்து விறகு நிறையக் கொண்டு வந்து நெருப்பை அதிகமாக்குகிறார்கள் ; 

அரிசி கொணர்தல்:

"கல்லைக் கறித்துப் பல்முறிந்து
தவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
பல்லைத் தகர்த்துப் பழஅரிசி
ஆகப் பண்ணிக் கொள்ளீரே."

அடுத்து அரிசி போடனும்ல ; சோழ வீரர்களின் தாக்குதலால் ஓடிப் போய் குப்புற விழுந்து அடிப்பட்டு உடைந்து போய்கிடக்கும் கலிங்க வீர்களின் பற்களை பழைய அரிசியாக எடுத்து வாருங்கள். 

அரிசி குற்றும் உரல்:

"சுவைக்கும் முடிவில் கூழினுக்குச்
சொரியும் அரிசி வரிஎயிறா
அவைக்கும் உரல்கள் எனக்குரல்கள் 
அவிந்த முரசம் கொள்ளீரே."

போர்களத்தில்   தோல்கள்   கிழிந்து   சிதைந்து கிடக்கும்  முரசங்கள் அதுதான் உரல் ; அதுல அந்த கலிங்க வீர்களின் பற்களை போட்டு குத்துறாங்க ; குத்த உலக்கை வேணும்ல ; அது என்னனு அடுத்த பாட்டு சொல்லுவார்; நான் இங்கயே சொல்லிறன் . யானை தந்தம்தான் அது ; சும்மா ஒன்னும் குத்தல ; குத்தும் போது காளியையும் , குலோத்துங்கச் சோழனையும் வாழ்த்திப் பாடிட்டே அரசி குத்துதுங்க அந்தப் பேய்கள்; அதுலேயே ஒரு 25 பாட்டு அடுத்து வரிசையா வருது ; அதுலாம் நாம விட்டுரலாம் ;

அடுத்து குத்திய அரிசியை புடைத்து , அதை அளந்து (நான்கு மரக்கால் கொண்ட பெரிய படி) உலையில் போடுதுங்க பேய்கள்.

உலையிலிட்ட அரசிக்குத் துடுப்பும் அகப்பையும்: 

"களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமல் கைதுடுப்பா
அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாக் கொள்ளீரே."

உலையில் போட்டு கொதிக்கும் அரிசியைக் கிண்ட துடுப்பு, அகப்பை வேணுமே ; அது  வீரர்களின் "கை", குதிரையின் கால்

அடுத்து , அதை பதம் பார்த்து, இறக்கி , சுவை பார்த்து வைச்சாச்சு ; சாப்பிட வேணுமே, அதுக்கு யானை வாலைக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்கின்றன ; உணவு பரிமாற தட்டு வேணும்.. வீரர்களின் தலை/மண்டை உண்கலமாயிற்று ;இன்னும் கொஞ்சம் வேணும் ; தட்டு பத்தல ; கேடயம், வெண்கொற்றக் குடை இதுலாம் தட்டாகிடுச்சு ; பரிமாற கரண்டி ??இருக்கவே இருக்கு யானையோட காது ; 

யானை, குதிரை, வீரர் பிணங்கள், மூளை, குடல், குருதி, பற்கள, நகங்கள்… கலிங்க வீரர்களுடைய பற்களைத் தகர்த்து எடுத்ததுதான் பழைய அரிசி. கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்கள் உலக்கை. வீரர்களின் மூளை குளிர்ந்த தயிர் இதுலாம் போட்டு பண்ணிய அந்த சாப்பாட்டை சாப்பிட பேய்களை கூப்பிடுது அந்த சமையல்காரப் பேய் :) 

பார்ப்பனப் பேய், சமணப் பேய், புத்தப் பேய், கங்காணிப் பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், கருவுற்ற பேய், மூடப் பேய், நோக்கப் பேய், கூத்திப் பேய், விருந்துப் பேய், ஊர்ப் பேய், கனாக்கண்டு உரைத்த பேய், கணக்குப் பேய் 
அப்பிடின்னு ஏகப்பட்ட பேய்களுக்கு பந்தி பரிமாறப் படுகிறது ; 

என்னடா தீடீர்னு உரைநடைக்கு போயுட்டானுதானே கேக்க வாரிங்க ; பாட்டப் படிச்சு அத விளங்கிக் கொண்டு அப்புறம் எழுதும் போது எனக்கு அது கற்பனைல வரது ; அதுதான் நேர உரைநடைக்குப் போய்டேன் ; 

கூழ் உண்டு முடிந்தபின் வெற்றிலை போடுகின்றன பேய்கள். குதிரைகளின் காதுகள் வெற்றிலை, கணைக்கால் குளம்பு பாக்கு, கலிங்க வீரர் கண்கள் சுண்ணாம்பு.

அப்பிடி செம சாப்பாட்டு சாப்பிட்டு , வெற்றிலை போட்டுட்டு சந்தோசத்துல dance ஆடுதுங்க பேய்கலெல்லாம். கொஞ்சம் dance ஓவராப் போய் அணிந்து இருந்த ஆடைகளைக் கழற்றி வீசி விட்டு ஆடுதுங்க :))

கடைசியா ஒரு பாட்டு.

"பெருக்கத் தின்றீர் தாம்பூலம்
பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின்
சிரத்தின் மயிரை மோவீரே."

சாப்பிட்டு உடனே இப்பிடி ஆடுனா புரை ஏறுமா ? புறையேறினால் பூதத்தின் சிரசு மயிரை மோந்து பாருங்க சரி ஆகிடும் :))

இப்பிடிலாம் பண்ணிட்டு மறுபடியும் சோழ மன்னனுக்கு நன்றி சொல்லிட்டு முடிகிறார் செயங்கொண்டார்..நானும் முடிச்சுக்குறேன்..

இந்த மூணு பார்ட்ல நான் சொன்னது கலிங்கத்துப்பரணியின் கடைசி மூணு பகுதிதான்.. அதுவும் தமிழ் இலக்கியத்தில் இது போல  ஆகச்சிறந்த அருவருப்பும் அருசியும் அதிபயங்கரமும் நிறைந்த இலக்கியம் தமிழில் வேறு இல்லை என்று நான் கருதியதால் அந்தக் கருத்தோடு இணைத்து எழுதப்பட்டது . 

நான் முன்பே கூறியது போல இதில் நிறைய குற்றங்கள் இருக்கலாம்.. என்னைப் பொருத்தவரை இது உங்களுக்கான ஒரு அறிமுகமேத் தவிர பொருளுறையோ / விளக்க உரையோ கிடையாது.. பரணிக்கு உரை எழுதும் அளவிற்கு எனக்கு அறிவும் இல்லை..

part-I ல ; கடை திறப்புனா என்னன்னு கடைசில சொல்லுரனு சொல்லி இருந்தேன் ; இத்தனை வன்முறையை சொல்லப் போவதால், முதல் பகுதியான் கடைத்திறப்பு முழுக்க அகம் பேசுகிறார் செயங்கொண்டார் ; மொத்தம் 54 பாடல்கள் ; அத்தனை பாட்டுகளும் "adults Only".. பெருமை மிகு சோழன் வீதியில் போகிறான் கதவைத் திறந்து பாருங்கள் என்பது போன்ற பாடல்கள் ; தமிழ் இலக்கிய வளங்களின் உச்சங்களில் ஒன்று கடை திறப்பு. போருக்குச் சென்று, வெற்றிக் களிப்பில் வீடு திரும்புவர் வீரர்கள். நாட்டு மக்கள் வழி நெடுக அவ்வீரர்களைக் கொண்டாடுவர். ஆனால் பிரிவுத் துயர் உழன்ற இல்லக் கிழத்திகள், உள்ளே ஆர்வத்தோடும் வெளியே சினத்தோடும் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் ஊடலைத் தீர்க்கவும் அடித்த கதவங்களைத் திறக்க வேண்டுவதுமான பாடல்கள் கொண்ட பகுதிதான் கடை திறப்பு.

நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ் படிக்கும் போது சிற்றிலக்கியங்கள் ஒரு தாள் ; அதுல கலிங்கத்துப் பரணி முழுக்க இருந்தது ;
போர் பாடியது / களம் பாடியது எப்பப் படிச்சாலும் நேரா கடைத் திறக்க போய்டுவேன் ; இல்லைனா மனசு பூர பேய்கள் ஓடிட்டு இருக்கும் :)) ;

இதலாம் சொல்லுறியே , நீ அதைத்தானே முதல இங்க எழுதிருக்கணும் ?? கூடிய விரைவில் கொஞ்சம் விளக்கமாகவே எழுதுறேன்..

மறுமடியும் நன்றி நண்பர்களே ; படிச்சுட்டு எப்பிடி இருந்த்துசுனு commentsல சொல்லுங்க.. கேள்விகள் , குறைகள் , குற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.


நன்றி,
ஆசிப் 

2 comments:

  1. Forget to mention:
    உசாத் துணை: (References)
    1. தமிழ் இணையக் கல்விக்கழகம்
    2. Project Madurai - மூல நூல் முழுவதும் pdfஆக கிடைக்கிறது
    3. நாஞ்சில் நாடன் அவர்களின் கட்டுரை - சொல்வனம்

    ReplyDelete