Monday, December 15, 2014

சார் இங்க கட் பண்ணினா !!

சார் நம்ம படத்தோட opening சீன் மரினா பீச்ல. அங்க 6 வயசு ஹீரோயின காட்டுறோம். அவளும் அவ தோழியும் மணல்ல வீடு கட்டி விளையாடுறாங்க. அப்ப அங்க 8 வயசு ஹீரோ வாராரு. அங்க ஹீரோயின் கட்டிட்டு இருந்த வீட்டை காலால உதைச்சுட்டு ஓடி போயிடறாரு.


அப்பிடியே கட் பண்ணினா சார், இப்ப ஹீரோயின்க்கு 8 வயசு. அவளும் அவ தோழியும் அந்த ஊர் கடை வீதில தலை நிறைய பூ வைச்சுட்டு நடந்து போறாங்க. அங்க வர ஹீரோ அவங்கள கிண்டல் பண்ணி பூ பறிச்சுட்டு ஓடி போயிடறாரு.


அப்பிடியே கட் பண்ணினா சார், இப்ப ஹீரோயின்க்கு 14 வயசு. அவளும் அவ தோழியும் வாலிபால் விளையாடுறாங்க. இப்ப நம்ம ஹீரோயின் பாக்க செம அழகா இருக்கா. அங்க வர நம்ம ஹீரோ அவள பாத்துட்டு அப்பிடியே நின்னுறான். பழைய குரும்புலாம் நியாபகம் வருது. அதே மாதிரியே அவள பாத்து சிரிச்சிட்டே பந்த தூக்கிட்டு ஓடிறான். நம்ம ஹீரோயினும் சிரிச்சிட்டே வந்துரா.


அப்பிடியே கட் பண்ணினா சார், இப்ப ஹீரோயின்க்கு 16 வயசு. அவளும் அவ அம்மாவும் மட்டும் வீட்டுல தனியா இருக்காங்க. அப்ப ஒரு ஹீரோ என்ட்ரி சாங் இருக்கு சார் இங்க. பாட்டு முடிஞ்சு அந்த வழியா வர ஹீரோ, அவ தனியா இருக்குறத பாத்துட்டு அவ வீடு கதவைத் தட்டி குடிக்க தண்ணி கேக்குறான். அவ அம்மாவும் ஹீரோயின கூப்பிட்டு கொஞ்சம் தண்ணி கொடுமானு சொல்லுறாங்க. அவளும் தண்ணி கொண்டு வந்து கொடுக்குறா. அவளப் பாத்த ஹீரோ அப்பிடியே stun ஆகி நிக்குறான். தண்ணி வாங்கற மாதிரி வளையல் போட்டுறுக்குற அவ கையை பிடிச்சு இழுக்குறான்.

அத எதிர்பாக்காத நம்ம ஹீரோயின் அம்மா-னு கத்த , அவ அம்மா வெளிய ஓடி வந்து என்ன ஆச்சுனு கேக்க, கையைப் பிடித்த வெட்கம் ஒரு பக்கம், அவன் மாட்டி கொள்ள கூடாதுன்னு பயம் ஒரு பக்கம் , அதுல அவ சொல்லுறா, இல்லமா தண்ணி குடிக்கும் போது இவனுக்கு விக்கல் வந்துருச்சு நான் பயந்துட்டன். அப்ப ஹீரோ அவள ஒரு பார்வை பாக்குறான் சார் அவள வெட்கத்துல சாகடிக்குறமாதிரி. போடா திருட்டுப் பயலேனு சொல்லி அனுபிடுறா அவனை.

இதாலம் ஹீரோயின் அவ தோழிகிட்ட சொல்லுர மாதிரி இந்த ஸ்டோரி-ய வைச்சா செம ஹிட் சார் படம்.

இருங்க இருங்க !! என்ன இதுலாம்னுதானே கேக்க வாரிங்க? இதுதான் சங்க பாட்டு. கலித்தொகை-ல குறிஞ்சித் திணைல நம்ம கபிலர் பாடி இருக்காரு.

இப்ப பாட்ட படிங்க ஈசியா புரியும்.

"
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி

நோ தக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே,

உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை

‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய்

உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள், என யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனோ

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்

உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்."


ஆசிப் 

3 comments:

  1. நன்றி அருண் :))

    ReplyDelete
  2. அழகான விரிவாக்கம் கொண்ட பதிவு. சிறப்பு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete