Tuesday, December 16, 2014

அங்கவை - சங்கவை

வணக்கம் !!

வரலாறு எத்தனையோ விசயங்களை நமக்குச் சொல்லுகிறது. நாம் நாயகர்களாகப் பார்க்கும் எத்தனையோ பேருக்கு முகத்தில் அறையும் ஒரு கருப்பு சரித்திரம் உண்டு. நம்மால் கொண்டாப்படுகிற மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்) எப்பிடி ஒரு குறு நில மன்னனின் முதுகில் குத்தினர் என்பது பற்றிய கதையே இது.

அது மூவேந்தர்கள் கொடி கட்டிப் பறந்த காலம். தென் தமிழ்நாடு முழுக்க அவர்கள் வைத்ததே சட்டம். அவர்களுக்கே முதல் மரியாதை. அப்போது பறம்பு நாட்டை ஆண்டவன் பாரி. வேளிர் குலத்தவன். மூவேந்தர்கள் போலவே சங்க காலம் முதலாக ஆட்சி செய்யும் குலம்தான். ஆனாலும் மூவேந்தர்களுக்கு பாரியின் மீது ஒரு பொறமை. அவன் கடையேழு 
வள்ளல்களில் ஒருவனாகப் பாடப்பட்டவன். எல்லாப் புலவர்களும் அவனைப் பற்றியே பாடிக் கொண்டு இருந்தனர். இது போதாதா பகைமைத் தீயை வளர்க்க ? மூவேந்தர்கள் நாடு முழுக்க ஆண்டவர்கள். பாரி 3௦௦ கிராமங்களை கொண்ட நாடான பறம்பு நாட்டு மன்னன். அவனுக்கு இவ்வளவு புகழா?? 

தமக்குள் அடித்துக் கொண்டிருந்த மூவேந்தர்கள் பாரியை ஒழிக்க ஒன்று சேர்ந்தனர். பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அவனை அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பாரிக்கு இரண்டு மகள்கள். அங்கவை, சங்கவை. அழகும், அறிவும் நிரம்பப் பெற்றவர்கள். பாரியைப் போன்றே ஈகை குணம் கொண்டவர்கள். மூவேந்தர்கள் மூவரும் பாரியிடம் சென்று பெண் கேட்டனர். அவர்கள் மூவர், பட்டத்து ராணிகளும் உண்டு. இருந்தாலும் அந்த இரண்டு பெண்களைக் கேட்டனர். பாரி மறுத்தான். இதற்காகவே காத்து இருந்த மூவேந்தர்கள் பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்தனர். கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டனர். நாட்கள்தான் போனதே தவிர கோட்டையை பிடிக்க முடியவில்லை. ஆனால் நாட்டு மக்கள் அவதிப்பட ஆரம்பித்தினர்.

சங்கப் புலவர் கபிலர் பாரியின் உற்ற நண்பர். அவர் பாரியின் சார்பாக மூவேந்தர்களை சந்தித்து போரை நிறுத்தும்மாறு கேட்டு கொண்டார். பாரியின் பெருமையை எடுத்துக் கூறினார். அப்பிடிக் கூறும் போது பாரி புலவர்கள் கேட்டால் நாட்டையே கொடுத்து விடுவான் என்று ஒரு வார்த்தை சொல்லுகிறார். பொறி தட்டியது மூவேந்தர்களுக்கு , புலவர்கள் போல வேடம் இட்டுக் கொண்டு பாரியின் கோட்டைக்குள் சென்று பாரியைச் சூழ்ந்து கொன்று விடுகின்றனர். நாட்டை எடுத்துக் கொண்டு பாரி மகளிரை அரசவையில் வைத்து அவமானப்படுத்தி வெளியே துரத்தி விட்டனர். கபிலர் மனமுடைந்து போகிறார்.பாரி மகளிரை மனதில் கொண்டு அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். 

அடுத்து நடந்ததுதான் இன்னும் கொடுமை. மூவேந்தர்களுக்கு பயந்து எந்த குறு நில மன்னர்களும் பாரி மகளிரை மணம் புரிய முன் வரவில்லை , பாரியின் நண்பர்களே எந்த உதவியும் செய்யவில்லை. அந்த அளவிற்கு மூவேந்தர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு சங்கத் தமிழ்க் கவிஞன், நாடு நாடாகப் போய், பாரி மகளிருக்காக, கையேந்தினார்.

கடைசியில் திருக்கோயிலூர் மலையமான், காரி துணிஞ்சி முன் வந்து அங்கவையை மணம் புரிந்தான்!மீண்டும் வந்த மூவேந்தர்கள் அவனைச் சூழ்ந்து கொன்னாங்க! அங்கவை தீக்குளித்து இறந்து போகிறாள். சங்கவையைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைச்சிட்டு, அதே திருக்கோயிலூரில், கபிலர் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார். இன்றும் தென்பெண்ணை ஆற்றில், கபிலர் குன்றைக் காணலாம். 

கபிலர் குன்று

இந்த கதை தெரிந்தால்தான் பாரி மகளிர் பாடிய இந்த புறநானூறு பாட்டின் அர்த்தம் விளங்கும். இதோ அந்த பாடல்:

"அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்,

இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"

நூல்: புறநானூறு (#112)
பாடியவர்: பாரி மகளிர்
சூழல்: பொதுவியல் திணை, கையறு நிலை.

ஐந்தே வரிகள்தான். அன்னிக்கு வந்ததும் இதே நிலாதான், ஆனால் அப்போது எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார், எங்கள் குன்றிலும் பிறர் ஆக்கிரமிக்கவில்லை. இன்னிக்கு வந்திருப்பதும் அதே நிலாதான். இப்போது, வெற்றி ஒலி செய்யும் முரசைக் கொண்ட மூவேந்தர்கள் எங்கள் குன்றைக் கைப்பற்றிக்கொண்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம்.

மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமான பாடல்தான். ஆனால் ’அற்றைத் திங்கள்’, ‘இற்றைத் திங்கள்’ என்று இரண்டு ராப்பொழுதுகளுக்கு  நடுவே தங்கள் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுவிட்ட நிலைமையை 
ஐந்தே வரிகளில் எத்தனை அழகாக சொல்லி விடுகிறார்கள் பாருங்கள். 

அங்கவை , சங்கவை கேலிப் பெயர்கள் அல்ல. அவர்கள் அறிவும் , மானமும் மிக்க சங்கப் புலவர்கள் என்பதை நினைவில் கொள்க..

ஆசிப் 

4 comments:

  1. நன்றி ஆசிப்

    ReplyDelete
  2. Thanks for the info. Looking forward for more. Narumugaiye song la அற்றைத் திங்கள் அவ்நிலவில் nu Vairamuthu potathuku root intha song ah...

    ReplyDelete
  3. கிருஷ்ணா ,

    "அற்றைத் திங்கள் அந்நிலவில்
    நெற்றித் தரள நீர் வடிய
    கொற்றப் பொய்கை ஆடியவள் - நீயா?"
    இருக்கலாம்.. ஆனா "அற்றைத் திங்கள்" ரொம்பவும் பொதுவான வார்த்தை சங்கப் பாடல்களில்

    ReplyDelete
  4. நன்றி ஆசிப்

    ReplyDelete