Monday, December 22, 2014

சங்க கால Horror Story - Part I

வணக்கம் !!

நீங்க பாத்ததிலேயே ரொம்ப பயங்கரமான பேய் படம் எது ? இல்ல, படித்ததிலேயே ரொம்ப ரொம்ப பயந்து போன திகில் கதை எது ? உங்க நினைவுக்கு எதுனா வந்துச்சுனா அத அப்பிடியே தூக்கி போட்டுருங்க ; கலிங்கத்துப்பரணினு ஒண்ணு கேள்விப்பட்டதுண்டா ?? அட தெரியுமே ; எதோ ஒரு கலிங்க நாட்டு ராசாவ நம்ம குலோத்துங்கச் சோழன் படையெடுத்துச் சென்று வென்றதைப் பத்தி பாடினது ; எனக்குத்தான் தெரியுமே ; அப்பிடினா நான் முதல கேட்ட கேள்விக்கு அதுதான் சரியான பதில் ; எனக்கு தெரிந்து அப்பிடி ஒரு கொடூரமான , பயங்கரமான வர்ணனைகள் நிறைந்த கதையே கிடையாது ; (அப்பிடி எதுனா இருந்தா படிச்சவங்க சொல்லுங்க please) ; என்னடா எது நான் பத்தாவது படிக்கும் போது இது இருந்துச்சே ஆனா அப்பிடி ஒண்ணும் பயந்த மாதிரி இல்லையே ??? இப்ப கொஞ்சமா பாக்கலாம் ; எனக்கும் night ரொம்ப late ஆகிடுச்சு..பயமா இருக்கு  :)

first things first ; பரணி = போரில் ஆயிரம் யானைகளைக் கொண்ட எதிரியை வீழ்த்திய மன்னனை வாழ்த்துப் பாடுவது. (ஆயிரம் யானைகளைக் கொன்றவன் இல்லை ; ஒருத்தனே ஆயிரம் யானைகளைலாம் கொல்ல முடியாது ). அதே மாதிரி தோத்துப் போன மன்னனின் பேரில்தான் பேர் வைக்கணும் ; So கலிங்கத்து பரணினா , கலிங்க நாட்டு மன்னன் இங்க தோத்துப் போய்டானு அர்த்தம் ; பாடினது ஜெயங்கொண்டார் ; போரில் வென்றது (முதலாம்) குலோத்துங்கச் சோழன் ; அவனோட படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் ; அவர்தான் படை எடுத்துட்டு போனது (சோழன் இல்ல). இவங்களத் தவிர இன்னும் கொஞ்சம் முக்கியப் பாத்திரங்கள் இருக்காங்க ; 1. காளி தேவி 2. பேய்கள் (நிறைய) 3. கூளி (கலிங்க நாட்டு பேய்) ;
இந்தக் கதைல  இத்தன part இருக்கு

கடை திறப்பு   == கடைசில சொல்லுறேன் ;

காடு பாடியது  == காளி தேவியின் இடமாகிய பாலை நிலத்தைச் சார்ந்த காட்டின் இயல்பைப் பற்றியது
ஒரு sample:

தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூர, வாய் வெந்து உலர்ந்து செந்
நாயின் வாயின் நீர் தன்னை, நீர் எனா
நக்கி நாவினால் நக்கி விக்குமே

மான், செந் நாய் (wolf like); காட்டுல ரொம்ப பயங்கரமான வெப்பம் ; தீயின் வாயில் இருந்து நீர் இருந்தாக்கூட குடிச்சுரனும்னு நினைக்குது மான். அவ்வளவு கொடுந் தாகம். அந்நிலையில், வாய் வெப்பத்தினால் வெந்து, உலர்ந்த செந்நாயின் வாயில் இருந்து வடியும் எச்சிலை, நீர் என எண்ணி, மான் நாக்கினால் நக்கி பாக்கும்.


கோயில் பாடியது  == காளி தேவியின் கோவில் பற்றியது ;
ஒரு sample :

கொள்ளி வாய்ப் பேய் காக்கும்
கோபுரமும் நெடுமதிலும்
வெள்ளியால் சமைத்த தென்
வெள்ளெலும்பினால் சமைத்தே!

புரியுதா ? கோவிலோட காவல் தெய்வம் = கொள்ளி வாய்ப் பேய். கோபுரமும், பெரிய சுவரும் வெள்ளியால் செஞ்ச மாதிரிஇருக்கு. ஆனா அது போரில் இறந்தவர்களின் எலும்புல செஞ்சது



தேவியைப் பாடியது == காளி தேவியின் சிறப்புகள், ஆற்றல், அணிகள் பற்றிய பாடல்கள்

பேய்களைப் பாடியது == பேய்களின் உருவம், ஆற்றொணாப் பசி, பேய்களின் வகைகள் (நொண்டிப் பேய், கை ஒடிந்த பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், செவிட்டுப் பேய், கூன்பேய் ) பற்றிய பாடல்கள்

இந்திரசாலம் == இதில் காளி வழிபாடு, பேய்கள் காளிக்குச் செய்யும் சேவைகள் விவரிக்கப்படுகின்றன.

இராசபாரம்பரியம் == இதில் சோழர்களின் குலவரலாறு பாடப் படுகிறது

பேய் முறைப்பாடு == காளியிடம் பேய்கள், பசியில் வாடும் எங்களை யார் காப்பார் என முறையிடுதல், சங்கடம் உரைத்தல். எங்கள் பசி போக்கிக் கொலை இறங்க வேண்டும் என இரத்தல். (கொஞ்சம் ஓவர்தான் இல்ல ?)



அவதாரம் == All About குலோத்துங்கச் சோழன் ; கண்ணனே குலோத்துங்கனாய் பிறந்தான் என விவரிப்பது

காளிக்குக்கூளி கூறியது == கலிங்க நாட்டில் இருந்து வந்த கூளிப்பேய், போரின் கொடுமையைக் காளி தேவிக்குக் கூறுவதான பாடல்கள்

போர் பாடியது == யானைப் படை, குதிரைப் படை, விற்போர், இரத்த ஆறு, யானைப் போர், என்பன குறித்தது.

களம் பாடியது. == காளி தேவி போர்க்களத்தைப் பார்வை இடுதல்.

கூழ் அடுதல் == பேய்கள் காளிக்கு கூழிட்டுப் படைத்து வழிபடுதல்.

நமக்கு இப்ப last 3 பகுதிதான் வேணும் ; கொஞ்சமா sample பாக்கலாம் ;


போர் பாடியது: 



இருபடைகளும் கைகலந்தமை:

"எறிகட லொடுகடல் கிடைத்தபோல்
இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
வருபரி யொடுபரி மலைக்கவே."

இரு நாட்டுப் படைகளும் கடலும் கடலும் மோதுவது போலவும் , இரு நாட்டு குதிரைப் படைகளும் அலையோடு , அலை மோதுவது போல மோதிக் கொள்கின்றன ; (மலைக்கவே = போர் செய்தல் )

"கனவரை யொடுவரை முனைத்தபோல்
கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல்
இரதமொ டிரதமும் எதிர்க்கவே."

யானையும் , யானையும் இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொள்கின்றன ; தேரோடு , தேர் மேகங்கள் முட்டிக் கொள்ளவது (இடி இடிப்பது போல) மோதிக் கொள்கின்றன ;

"பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியினம் அடர்ப்பபோல்
அரசரும் அரசரும் அடர்க்கவே."

யானைப் படை , குதிரைப் படை , தேர்ப் படை சொல்லியாச்சு ; கடைசில தரைப் படை ; போர் வீரர்கள் புலியோடு புலி மோதுவது போல சண்டை இடுகின்றனர் ; அரசரோடு அரசர் சிங்கம் போல சண்டை இடுகின்றனர் ;

மலைத்த, முனைத்த, எதிர்த்த, சிலைத்த, அடர்ப்ப ==> சண்டை / போர் புரிதல் ; ஒரு பொருள் ; எத்தனை விதமான சொற்கள்; சூப்பர்ல :))

"விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினலொளி கனலிடை எறிக்கவே
வளைசிலை யுருமென இடிக்கவே
வடிகணை நெடுமழை படைக்கவே."

வீர்களின் கண்ணில் கோபத்தீ மின்னல் மாதிரி மின்னுது ; அதே கோவத்தோட வில்லை வளைத்து அம்பு விடுறான் ;எப்பிடி இடி இடிச்சு மழை பேயிற மாதிரி அம்பு மழை பொழியுறான் ;

"குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
கரைஎன இருபுடை கிடக்கவே."

இவ்வளவு நேரம் சண்டை போட்டு ரத்தம் பாக்காம இருந்தா எப்பிடி ? கலிங்கப் போரில் குருதி ஆறுபோல் வெளி பரந்து பாய்ந்தது. பகையரசர்களின் குடைகள் வெண்மையான நுரைகள் போல் மிதந்தன. வெட்டுப்பட்ட யானைகளின் உடல்கள், குருதியாற்றின் கரைகள் போலக் கிடந்தன.

try to imagine these scenes ....

"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை
எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி
தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே."

நீங்களே மெதுவா படிங்க புரியும் ;
மருப்பு = யானைத்தந்தம் ; பொருப்பு=மலை ; கரி= யானை. கொடி = கொடிச்சீலைகள் ; தழல்-தீ ; கதுவ= பற்றிக்கொள்ள

குருதி தோய்ந்த தந்தங்களை உடைய மலை போன்ற யானைகள் தந்தத்தோடு தந்தம் மோதிக் கொள்ளுவதால் ஏற்படும் தீப் பொறி பட்டு கொடிச்சீலைகள் எரிந்தன..

"இடத்திடை வலத்திடை இருத்திய
துணைக்கரம் நிகர்த்தன அடுத்த கரியின்
கடத்தெழு மதத்திடை மடுத்தன
சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே."

அந்த யானைகள் எப்பிடி இருந்துச்சுனா ரெண்டு தந்தமும் மத நீர் வடிந்து வடிந்து கருப்பாக ரெண்டு கை மாதிரி இருந்துச்சாம்.


சரி ; யானை சண்டை போதும் ; குதிரைக்கு வருவோம் ..

"முடுகிய பவனப தத்திலு கக்கடை
முடிவினில் உலகமு ணச்சுடர் விட்டெழு
கடுகிய வடஅன லத்தினை வைத்தது
களமுறு துரகக ணத்தின்மு கத்திலே."

இதுல எங்கடா குதிரை வருதுன்னு கேக்குறிங்களா ? துரகம்= குதிரை ; கணம் = கூட்டம் துரகக ணத்தின் = குதிரைக் கூட்டம் ; காற்றைப் போல் வேகமாய் பாயும் குதிரைகளின் கண்ணில் கனலை வைத்து கட்டியது போல் இருந்தன ;

குதிரைவீரர் யானைப்படையை அழித்தமை:

"சயமகள் களபமு லைக்கணி யத்தகு
தனிவடம் இவையென மத்தக முத்தினை
அயம்எதிர் கடவிம தக்கரி வெட்டினர்
அலைபடை திரைகள்க ளத்துநி ரைக்கவே."

வெற்றி தேவி மார்பில் அணிந்துருக்கும் முத்து மாலையைப் போல,  குதிரையை வேகமாகச் செலுத்தி யானையின் மத்தகத்தினை வெட்டி வரிசையாக போட்டனர். அந்த வரிசையைப் பாக்கும் போது முத்து மாலை மாதிரி இருந்துச்சு.

போர்க்களம் தீயில் மூழ்கியது:

"அலைபடை நிரைகணி ரைத்தசெ ருக்களம்
அழல்புரி களமென ஒப்பில விற்படை
தலைபொர எரியநெ ருப்பினின் மற்றது
தழல்படு கழைவனம் ஒக்கினு மொக்குமே."

அம்பு எய்து எதிரியின் தலையை கொய்ய , அப்ப வந்த நெருப்பால் தலைகள் எரிய , போர்களமே பத்தி எரியுது, அது தீப்பற்றிய மூங்கிற்காடு மாதிரி இருந்துச்சு.

விற்போர்:

"அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும்
அளவினில் அயமெதிர் விட்டவர் வெட்டின
உடல்சில இருதுணி பட்டன பட்டபின்
ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே."

வில் வீரன் ஒருவன் அம்பை விடுகிறான் எதிரியை நோக்கி ; அதற்குள் இன்னொரு எதிரி அவன் அவன் கையை வெட்டி விடுகிறான். ஆனாலும் அவன் அம்பு யாரை நோக்கி விட்டானோ அவனை குறி தவறாது வீழ்த்தி விடுகிறது.

"ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன
உருவிய பிறைமுக அப்பக ழித்தலை
அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர்
அடியொடு முடிகள் துணித்துவி ழுத்துமே."

இவன் அம்பு விடுகிரான் ; அதற்க்குள் ஒரு குதிரை வீரன் இவனை வெட்டி விடுகிறான் ; ஆனாலும் அந்த குதிரை வீரனின் கால்களையும்  தலைகளையும் வெட்டி விடுகிறது இவன் எய்த பிறை போன்ற அம்பு.

இப்பிடியே போய்டே இருக்கு இந்த சண்டை ; அது தீவிரமாகும்போது கவிதையின் சந்தமும் மாறுது...பாட்டு மாதிரி பாடிப் பாருங்க .. பொருள் புரியலனா commentல சொல்லுங்கோ .. சொல்லுறேன் ...

"இட்ட வட்டணங்கள் மேல் 
எறிந்த வேல் திறந்த வாய் 
வட்டம் இட்ட நீள் மதிற்கு 
வைத்த பூழை ஒக்குமே! 

கலக்கம் அற்ற வீரர் வாள் 
கலந்த சூரர் கைத்தலத்து 
உலக்கை உச்சி தைத்த போது 
உழும் கலப்பை ஒக்குமே!

மத்த யானையின் கரம் 
சுருண்டு வீழ, வன்சரம் 
தைத்த போழ்தின், அக்கரங்கள் 
சக்கரங்கள் ஒக்குமே! 

வெங்களிற்றின் மத்தகத்தின் 
வீழும் முது, வீரமா 
மன்கயர்க்கு மங்கலப் 
பொறி சொரிந்தது ஒக்குமே! "


கடைசில கலிங்க மன்னன் ஈடு கொடுக்க முடியாம ஓடி ஒளிஞ்சுக்குறான்.. அவன் வீரர்கள் மாறு வேடம் அணிந்து கொண்டு ஒளிஞ்சுகுறாங்க.. நம்ம hero கருணாகரன் அத்தனை பேரையும் வென்று கலிங்க மன்னன் அனந்த வர்மனை கொன்று நாடு திரும்புகிறான் !!!

நாளைக்கு நெக்ஸ்ட் பார்ட் "களம் பாடியது" பாக்கலாம் !!

நன்றி.
ஆசிப் 

7 comments:

  1. எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன் .. கலிங்கத்துப் பரணி மூலம் மட்டும்தான் என்கிட்ட இருக்கு..எந்த உரையும் இல்ல ... நான் கொடுத்து இருக்க பொருள் என் சிறு அறிவுக்கு தெரிஞ்சது.. எதுனா தப்புனா ரொம்ப திட்டாதிங்க .. இங்க சொல்லுங்க சரி பண்ணிக்கலாம் :))

    ReplyDelete
  2. அழகுதான், புரியாத வரிகளை இன்றைய தமிழில் நல்ல பதிவு செய்யறீங்க, ஆனா நீங்க ஒரு புது விதமான முறைல இந்த பரணிய அணுகறீங்க, ( அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ) ,, ஏன் பேய் பாத்திரத்தின் மூலமா இதை சொல்லவரீங்க,

    ReplyDelete
    Replies
    1. கலிங்கத்துப் பரணியை நகர்த்துவதே இந்த பேய்கள்தான்.. கடை திறப்பு , அவதாரம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பேய்களுடனோ இல்லை காளி தெய்வம் பற்றி கூறுவதாகவே வருகிறது.. முதல் பத்து பகுதிகளும் buildup மட்டுமே ; போர் பாடியது , களம் பாடியது மற்றும் கூழ் அடுக்குதல் இவை மூன்றும்தான் "Core"..

      Delete
  3. கலிங்கத்துப்பரணி பற்றிய சிறிய பகிர்வே இது ; செயங்கொண்டார் இதை எப்பிடி பாடியிருக்கிறார் என்பதைக் காட்டவே இதை எழுதினேன்.. இரண்டு அரசர்கள் ; ஒருவன் பெரிய அரசனுக்கு திறை கட்டவில்லை ; அதனால் கோவம் கொண்டு அந்த நாட்டின் மீது படை எடுத்து சென்று அவனைக் கொல்கிறான்.. இதுதான் மையக் கருத்து ;

    ReplyDelete
  4. அனால் செயங்கொண்டார் அதை அப்பிடியே காட்டவில்லை ; என்னுடைய தமிழாசிரியர் பரணி எழுதுவது பற்றி கூறியிருக்கிறார் ; போர் நடைபெறும் இடத்திற்கு அருகில் பெரிய மேடை அமைத்து போர்க் காட்சிகளை நேரில் பார்த்து எழுதுவார்களாம் ; ஆனால் இது போர் நடைபெறும் போது notes எடுத்து அப்புறம் எழுதினது போலத்தான் இருக்கிறது ; பத்தாவது பகுதி , கூளி காளிக்கு கூறியது ; கூளி என்பது கலிங்க நாட்டுப் பேய்.. அதுதான் போரைப் பார்த்துவிட்டு வந்து காளிக்கு அதுபற்றி கூறுகிறது ;

    ReplyDelete
  5. அதன் பிறகுதான் போர் பாடியது, களம் பாடியது வருகிறது ; நமக்கு என்ன தெரிய்துனா 1. பரணிப் போர் ஒரு மிகப் பெரிய போராக நடந்துள்ளது ; 2. ஒரு போரை மையமாகக் கொண்ட ஒரு இலக்கியத்தை இப்பிடியும் எழுதலாம்..இன்னும் சில பரணிகள் இருக்கு ஆனா அது எதுவும் கலிங்கத்துப்பரணி அளவு சிறப்பா இல்ல ;

    ReplyDelete
  6. எளிமையாய் புரியும்படி எழுதியிருக்கீங்க. நன்றி.

    ReplyDelete