Tuesday, December 23, 2014

சங்க கால Horror Story - Part II

வணக்கம் நண்பர்களே !!

நேற்று "போர் பாடியது" பார்த்தோம் ; இன்னிக்கு "களம் பாடியது".. நேத்து நீ கொடுத்த "ஓவர் பில்ட்-அப்க்கு" ஒன்னும் worth இல்லையே இந்த கலிங்கத்துப் பரணி அப்பிடினுதானே கேக்குறிங்க ; இன்னிக்குப்  பாக்கலாம் :) 

களம் பாடியது: 
போரைப் பற்றிச் சொல்லி முடித்த கூளிப் பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. போர் முடிந்து போச்சு ; முடித்த பின்னால அந்த இடம் எப்பிடி இருக்குனு பாக்க வாரங்க ; கொஞ்சம் பாட்டுக்களை மட்டும் பாத்தா நமக்கு புரியும் போரின் வீரியம் ;

போர்க்களப் பெருமை: 

"தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று
ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே."

கருணாகரன் வெற்றிகண்ட அந்தக் களம்,  தேவாசுரம்=சூரபதுமன் (காவியத்தலைவன் ராஜபார்ட் நியாபகம் இருக்குல ?), ராமாயணம்  மாபாரதம் போர்கள் நடைப்பெற்ற களம் போல இருக்குது.

காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது:

"என்னேஒரு செருவெங்களம்
எனவேயதி சயமுற்று
அந்நேரிழை அலகைக்கண
மவைகண்டிட மொழியும்."

(நேரிழை=காளி ; அலகை= பேய் ; கணம்=கூட்டம்).. பாட்டை பிரிச்சு படிச்சு பாத்திங்கனா எளிமையாப் புரியும் ; 
"என்னே ஒரு செரு வெங்களம்
எனவே அதிசயமுற்று
அந்நேரிழை அலகைக்
கணமவை கண்டிட மொழியும்."

பேய்களும் , காளியும் என்ன ஒரு போர்க்களம் , எப்பிடியான போர் இங்க நடந்து இருக்கு அப்பிடின்னு அதிசியப்பட்டு பாத்தார்கள்.

குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்றமை: 

"உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்"

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதுல போரில் இறந்து போன யானைகள் மிதந்து கொண்டு வந்தன ;அது எது மாதிரி இருந்துச்சுனா , கடல்ல போற படகுகள் கவிழ்ந்து போய் ஒன்றன் பின் ஒன்றாகப் போவது போல இருந்தது; 

குதிரைகள் அடிபெயர்க்கலாற்றாது நின்றமை:

"நெடுங்குதிரை மிசைக் கலணை சரியப் பாய்ந்து
நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த
பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின்."

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதோட இறந்தவர்களின் கொழுப்பு அங்க அங்க குருதில கலந்தது இருக்கு. குதிரைகளாம் அந்த கொழ்ப்பில் கால் வைத்து மாட்டிக் கொண்டு நகர முடியாம நிக்குது ;
அதப் பாத்தா வெள்ளத்திற்கு போட்ட மரத் தடுப்பு மாதிரி இருக்கு ;

வீரர் முகமலர்ந்து கிடந்தமை:

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்
பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்."

இந்தப் பாட்டை பாருங்க ; செமையா இருக்கு ; இறந்து கிடந்த வீரர்களாம் முக மலர்ச்சியோடு (சிரிச்சுட்டே) செத்துப் போய்இருக்காங்கா. வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தாவோ , இல்ல ஏழை வந்தாவோ எப்பிடி நல்ல படியா சாப்பாடு போட்டு அவங்க சாப்பிடறதப் பாத்து சந்தோச படுவமோ ; அந்த மாதிரி சந்தோசத்தோடு செத்து போயிருக்கன் !!!!

குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை:

"சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்."

கொஞ்சம் வீரர்கள் சாகாம குற்றுயிராய்க் கிடக்காங்க ; அவங்க எப்ப சாவாங்கனு நரிக் கூட்டம் பக்கத்துலயேசுத்திட்டு இருக்குங்க.

களத்தே வீழ்ந்து கிடக்கும் யானை இயல்பு:

"மாமழைபோல் பொழிகின்ற தானவாரி
மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைமேல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின்."

போர் முடிஞ்சுருச்சு ; நல்லா சண்டை போட்டிங்க ; வீர சொர்க்கம் வருகன்னு மேல உள்ள தேவர்கள் எல்லாம் பூத் தூவறாங்க ; உயிரோடு இருக்கும் வரை மத நீர் கொட்ட சண்டை போட்ட யானைகளின் மத நீர் குடிக்க சுத்திட்டு இருந்த வண்டுகள் எல்லாம் யானைகள் இறந்த பிறகு அந்த மத நீரை விட்டு தேவர்க்க தூவும் பூவில் உள்ள தேனைக் குடிக்க செல்வதை பாருங்க !! பாருங்க !! (காண்மின் காண்மின்)

மத நீர். அப்பிடினா என்ன? 
மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்று கூறுவார்கள். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.


கணவரைத் தேடிய மனைவியர் செயல்: 

"தங்கணவ ருடன்தாமும் போக வென்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று
இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்."

போர் முடிஞ்சு போசுசுனு தகவல் ஊருக்குள்ள போய்டுச்சு ; மனைவியர் எல்லாம் என்னோட கணவர் இன்னும் வரலையே ; என்ன ஆச்சோனு போர்க்களம் வந்து தேடுறாங்க; சாதகர் = காளியின் மெய்காப்பாளர் ; இடாகினி = பிணம்  தின்னும்  பேய். தன் கணவன் எங்கே என்று சாதகர், இடாகினி இடம் 
கேட்க்கும் மனைவியரைப் பாருங்கள் !! பாருங்கள் !!


கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு: 

"தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்
தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்."

தனது கணவனின் இறந்த உடலை நிலமகள் தாங்க அனுமதிக்காமல், தன் கரத்தால் தாங்கி, உயிர் விட்ட கணவன் உயிரைத் தேவ மகளிர் புணர்வதற்கு முன்பே, தன் உயிரையும் உடனே விடும் மனையாளைக் காண்மின், காண்மின்! 


கணவன் தலை பெற்ற மனைவியின் செயல்:

"பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்."

போர்க்களத்தில் வீர மரணமுற்றுக் கிடக்கிறான் வீரன். அவனைத் தேடி வருகிறாள் மனையாள். தலை மட்டும் கிடக்கிறது. பைரவி எனும் பெண் தெய்வம் ஒன்று போர்க்களத்தில் இருந்தது. அவளைப் பார்த்து மனைவி கேட்கிறாள்...பொரு தடக்கை (போர்செய்கின்ற  நீண்ட  கை) வாள் எங்கே? அழகிய மார்பு எங்கே? போர் முகத்தில் எவர் வரினும் புறம் கொடாத பருவயிரத் தோள் எங்கே? அதாவது அவனது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது :((

காகங்களின் இயல்பு:

"நெருங்குஆக வச்செங்க ளத்தேத
யங்குந்நி ணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
வாமுன்பு காணாத காண்மின்களோ." 

குருதி ஆற்று வெள்ளம் மாதிரி ஓடுது ; அதுல கிடக்கும் வீரர்களின் உடலை காகங்கள் கொத்தி கொத்தி தின்கின்றன ; அப்பிடி பண்ணும் போது வரும் கொழுப்பு அதன் மேல முழுக்க பட்டு வெள்ளை காகமாக மாறி இருக்கிறது :((

வேல் தைத்து நிலத்துவிழா வீரர்நிலை:

"வெயில்தாரை வேல்சூழ வும்தைக்க
மண்மேல் விழாவீரர் வேழம்பர்தங்
கயிற்றா லிழுப்புண்டு சாயாது
நிற்கும் கழாய்ஒத்தல் காண்மின்களோ."

கூரிய வேல் ஒரு வீரனின் உடலில் புகுந்து மறு பக்கம் வந்து நிலத்தில் குத்தி நிற்க , அந்த வீரன் கயிற்றைக் கட்டிக் கொண்டு நிலத்தில் நில்லாமல் இருக்கும் கழைக் கூத்தர் போல நிலத்தில் வீழாமல் நின்றவாறே இறந்துபட்டு இருக்கிறான்.

இதுக்கு மேல வர பாட்டு எல்லாம் இன்னும் ரொம்ப கொடுமையா இருக்கும் ; அதனால இங்க நாம நின்னுருவோம்..கலிங்கத்துப்பரணி - புலியூர் கேசிகன் உரை கிடைச்சா வாங்கி படிங்க ; இத எப்பிடி நீங்க படிக்கனும்னா , காட்ச்சிகளை கற்பனை செய்து கொண்டே படியுங்கள் ; அப்பத்தான் அந்த பீலிங்ஸ் வரும்.

நாளை கடைசி பகுதியைப் பாக்கலாம்.

நன்றி !!

ஆசிப் 


No comments:

Post a Comment